வேசம்! சிறுகதை – வேலுச்சாமி
உண்மையாக ஆண்,பெண் இருவரும் மனதளவில் விரும்பி திருமணம் செய்வதும் உண்டு. ஒருவரை ஏமாற்றி, பொய்யுரைத்து அழகுக்காகவோ, சொத்துக்காகவோ, பழிவாங்கவோ காதல் திருமணங்கள் அபூர்வமாக சில நடப்பதும் உண்டு. இந்த இரண்டாவது வகையான காதலில் மாட்டித்தவிப்பவள் தான் மீரா!

மீரா எம்.எஸ்ஸி., படித்து விட்டு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். பள்ளிக்கு தன் அக்கா குழந்தையை விட்டுச்செல்ல, திரும்ப கூட்டிச்செல்ல தினமும் வந்த கருண் அடிக்கடி பேச்சு கொடுப்பதும், நடந்து வருபவளை தன் பைக்கில் அழைத்து வருவதுமென நெருங்கிப்பழக, விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா ஸ்தலங்களில் சுற்ற ஆரம்பித்து விட்டனர்.

“இத பாரு அரசி, உம் பொண்ணுக்கு கண்ணால ஆச வந்திருச்சுன்னு நெனைக்கிறேன். படிக்காம, வேலைக்கும் போகாம, அப்பா, அம்மாவ மிரட்டி சொத்த எழுதி வாங்கி வித்து குடிச்சே அழிச்சிட்டு, ஊர் பூராம் கடன் வாங்கிட்டு சுத்தற கண்ணாம் பையன் கூட உம் பொண்ணு சுத்தறான்னு கேள்விப்பட்டேன். பையன் நமக்கு பழைய சொந்தம்னாலும் ஒழுக்கமில்லியே…?!”
என சலித்துக்கொண்டவர் தொடர்ந்து அக்கரையாக பேசினார்!

“நாலுபேரு நாலு விதமா பேசறாங்க. எம் பையன் கந்துவுக்கு என்ன கொறைச்சல்? வருசத்துக்கு மூணு பட்டம் முழுசா எடுக்கறான். படிக்காட்டியும் ஒழுக்கமா இருக்கான். கடன் கிடையாது. பண்பா, அன்பா நடந்துக்குவான். ஊன்னு சொல்லு உடனே கண்ணாலத்த முடிச்சிடலாம். அம்பது ஏக்கரா இருக்கு அம்மணி. யோசன பண்ணிட்டு சொல்லியனுப்பு. பரிசம் போட வாரேன்” என சொல்லி விட்டு புல்லட்டில் புழுதி பறக்க சென்றார் மீராவின் மாமன் செல்லதுரை.

“லுங்கி கட்டி, மங்கி கணக்கா முடிவிட்டுட்டு சுத்தற மாமா பையன் கந்து வை என்னோட புருசனா நெனைச்சு பார்க்கவே முடியலை. கருணோட கருணையான மனசும், ஒரு போனடிச்சா சொன்னதச்செய்யற வேலைக்காரனா உடனே வந்து நிக்கறதும், யோசிக்காம கேட்டதை வாங்கிக்கொடுக்கிறதும், முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கிறதும் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போச்சு. அதுவும் உன் அம்மாவோட பழைய சொந்தம், முறைப்பையன் முறைதான்னு சொன்னான். கருண் இல்லாம இனி மீரா இல்லை”என்றாள் தாயிடம் மிகவும் உறுதியுடன் மீரா!

“முறைப்பையனா இருந்தாலும், முறையானா பையனா இருக்கோணும்னு தான் பெத்தவங்க நாங்க நெனைப்போம். நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கறேன்னா அவன் சூனியக்காரன் கிட்டப்போய் மை வாங்கி உம்மேல தடவியிருப்பான். இல்லேன்னா மந்திரிச்சு விட்ட கோழி மயக்கத்துல சுத்தி சுத்தி வாரமாதிரி நீ இருந்திருப்பியா..‌? எங்கண்ணஞ்சொல்லாமிருந்தா எனக்கெங்க போய் இதெல்லாந்தெரியப்போகுது?” சொல்லி பெருமூச்சு விட்ட தாய் அரசியால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை. கண்ணீரை மட்டுமே பதிலுக்கு சிந்தினாள்.

‘முழுக்க நனைந்த பின் முக்காடு எதுக்கு? ‘என நினைத்த மீரா, கருணின் பெற்றோரை சந்திச்சு திருமணம் பற்றி பேச எண்ணியவளாய் அவன் வீட்டுக்கே சென்றவள் கருணின் கணீர் குரலைக்கேட்டு நெலவோரம் ஒதுங்கி நின்றாள்.

“மாப்ளே இந்த டைம் எனக்கு சுக்கிரன் உச்சத்துல நின்னு வேலை செய்யறான். மீரா நான் விரிச்ச வலைல கச்சிதமா மாட்டிட்டா. ஒரே பொண்ணு, படிச்ச பொண்ணு, அதுவும் வசதியான பொண்ணு. பத்தனப்பு வருசம் பூரா வெளைஞ்சேருக்கும். பணங்காசுக்கு பஞ்சமிருக்காது. அவள கல்யாணம் பண்ணிட்டா காலத்துக்கும் இப்படியே மனம்போல வாழ்ந்துக்கலாம். ஒரு கொழந்தீன்னு பொறந்துட்டா நாம சொல்லறத அவளக்கேக்க வப்போம். அது வரைக்கும் நன்றியுள்ள நாயா நடிப்போம்”என்ற கருணின் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்த மீராவுக்கு உடம்பு நடுங்கியது. அவன் தம்மை திட்டமிட்டு ஏமாற்றுவதாக புரிந்து கொண்டாள்!

அடுத்த நொடியே டெண்டுல்கர் அடிச்ச சிக்சர் பந்தாக வீடு வந்தவள், தன் தாயிடம் சென்று பாசமாக கட்டியணைத்தவாறு, தன் தாய் மாமன் மகன் கந்துவை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட போதும் தாயின் கண்களில் கண்ணீர் வந்தது….! இப்போது வந்தது ஆனந்தக்கண்ணீர்!

அன்னூர் K.R.வேலுச்சாமி
[email protected]
செல்:9842236995

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.