வெத்தல – பாலு மணிவண்ணன் | மதிப்புரை கேத்தரின்

தான் பிறந்து, 17 வருடங்களாக படித்து வளர்ந்த ஊரை விட்டுச் செல்லும் ஓர் பள்ளி மாணவியின் ஏக்கத்தோடு துவங்குகிறது நாவல். அதே 17 ஆண்டுகளுக்கு முன் தான் விட்டுப் பிரிந்த ஊருக்குப் போகும் எண்ண அலைகளின் நடுவே செல்வராஜ்.

தோழர் என்றால் என்ன என்று கேட்கும் மகளுக்கு “தோழர்னா எல்லா உறவுகளுக்கும் மேல” என்று சொல்லும் செல்வராஜின் வார்த்தைகளுக்கு உருவம் தந்தவர்களாய் இவர்கள் ஊருக்குள் இறங்கும் போது வந்து நிற்கும் தோழர்களின் அறிமுகம்.

ஊருக்குள் சிற்றிவரச் செல்லும் செல்வராஜின் நினைவுகள் 17 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது. அவை வெறும் நினைவுகள் மட்டுமல்ல, தேனி மாவட்டம் பகுதிகளில் வாழ்ந்த வெத்தலை விவசாயிகளின் வாழ்வும் அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டமும் போராட்டங்களின் வெற்றியுமே.

17 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிக் கிடந்த வராக நதியையும், காய்ந்துபோன வெற்றிலை கொடிக்கால் களையும் பார்த்து செல்வராஜ் அவர்கள் கொள்ளும் வேதனையை இன்று அழிந்து வரும் விவசாயத்தோடு இணைத்துப் பார்க்கும்போது அவரோடு சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் வழிய செய்துள்ளார் நாவலின் ஆசிரியர் பாலு மணிவண்ணன் அவர்கள். “மத்தவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு அப்புறம் வெத்தலை. நமக்கெல்லாம் வெத்தலை தான் சாப்பாடு” எனும் வரிகள் வலிமையானவை.

நாவல் நெடுகிலும் எவ்விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் இன்றும் வாழ்ந்துவரும் தன் சக தோழர்களோடு இணைத்து வாழும் இலக்கியமாக தந்துள்ளார். மிகைப்படுத்துதல் இல்லை என்றாலும் தேவைப்படும் இடங்களில் தேவையான அளவிற்கு வர்ணனைகளை இணைத்துள்ளார். வெற்றிலை நாற்று நடுவது, கொடிகளை மரத்தில் ஏற்றி விடுவது, இலைகளை கிள்ளுவது, அவற்றை தண்ணீரில் அலசி கட்டு கட்டுவது போன்ற கொடிக்கால் வேலைகளை அவர் வர்ணித்து விளக்குமிடங்களில் நாமும் வெற்றிலை விவசாயியாகவே மாறி கொள்கிறோம்.

இவ்விதத்தில் தனது முதல் நாவலில் மிகுந்த வெற்றியை அடைந்துள்ளார் தோழர் பாலு மணிவண்ணன். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளின் வாழ்க்கை வரலாறை ஆவணமாக தாங்கி வரும் இந்த வெத்தலை நாவலை பதிப்பிக்கும் பணியை ஏற்ற மாற்று ஊடக மையத்தின் தோழர் காளீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுதல்களும் பணி தொடர வாழ்த்துக்களும்.

– கேத்தரின்

நூல் : வெத்தல
ஆசிரியர் : பாலு மணிவண்ணன்
பதிப்பகம் : மாற்று ஊடக மையம்
பக்கங்கள் : 152
விலை : ரூபாய் 125