நூல் அறிமுகம்: எழுத்தாளர்  பாலு மணிவண்ணனின் ”வெத்தல”  நாவல் – கி.ரமேஷ்

 

 

வெற்றிலை – நம் தமிழ்ச் சமுதாயத்தின் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்த ஒன்று.  எந்த ஒரு பண்டிகையோ, விழாவோ, சடங்கோ வெற்றிலை பாக்கு இல்லாமல் நாம் கடந்து செல்ல முடியாது.  முன்பெல்லாம் பெரியவர்கள் எப்போதும் வெற்றிலை பாக்கு டப்பாவுடன் திரிவதையும், அதற்குச் செல்லப்பெட்டி என்ற பெயர் இருப்பதும் கூட நமது பண்பாடுதான்.  இன்றும் கூட கிராமங்களில் பாட்டிகள், தாத்தாக்கள் பொழுது போகப் பேசிக் கொண்டே வெற்றிலை பாக்கை ஒரு கல்லில் போட்டு இடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.  அதை வைத்து இளையராஜா இசையே அமைத்து விட்டார் (மீண்டும் கோகிலா படத்தில் சின்னஞ்சிறு வயதில் பாட்டு).  ஆனால் நாம் இந்த வெற்றிலை எப்படி உற்பத்தியாகிறது, எப்படி சந்தைக்கு வருகிறது, அந்த வெற்றிலை விவசாயிகளின் லாப நஷ்டம் என்ன என்பதையெல்லாம் சிந்தித்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.  அங்குதான் தோழர் பாலு மணிவண்ணன் தனது முதல் நாவல் மூலம் கால் பதிக்கிறார்.  எழுத்தாளராகவும், சினிமா கதாசிரியராகவும், இயக்குனராகவும் விளங்கும் தோழர் பாலு மணிவண்ணனின் முதல் நாவல் இது.

இது வெற்றிலை பற்றிய நாவலாக இருந்தாலும் தற்போது சமகாலத்தில் நடைபெறும் மறுபுலம்பெயர்தலில் தொடங்குகிறது.  அதாவது தமது வாழ்க்கையை கிராமத்தில் தொலைத்த விவசாயிகள் நகரங்களை நோக்கிப் புலம் பெயர்ந்தனர்.  இப்போதோ, நகரங்கள் அவர்களது  உழைப்பை, வியர்வையை உறிஞ்சிக் கொண்டு கைவிட்ட நிலையில், கையறு நிலையில் மீண்டும் கிராமங்களை நோக்கிப் பயணிக்கின்றனர்.  இப்படியாக திருப்பூர் நகரம் கைவிட்ட நிலையில் தனது கிராமத்துக்குத் திரும்புகிறார் நாவலின் மையப் பாத்திரமான வீராச்சாமி.  எப்போதும் வெற்றிலை வாசம் வீசும், கொடிகள் அடர்ந்து கிடக்கும் ஊர் வற்றிப் போயிருப்பதைக் கண்டு பதைத்துப் போகிறார்.  அங்கு அவரது வாழ்க்கை தொடங்குகிறது.

கொரோனாக்கு எதிரான போரில் ...

வெற்றிலை எப்படிப் பயிரிடுவது என்பது முதல் நாவலாசிரியரின் ஆழ்ந்த அறிவு நாவலில் வெளிப்படுகிறது.  அவர்கள் எப்படி வேலை செய்யாமலேயே நிலத்தைக் குத்தகைக்கு விட்டு உட்கார்ந்து தின்னும் நிலப்பிரபுக்களிடம் சிக்கிச் சீரழிகிறார்கள், விவசாயிகள் தமது கூட்டுறவு சங்கத்தைத் தொடங்க முற்படும்போது எப்படிக் குறுக்கே புகுந்து அதைக் கெடுக்கிறார்கள், அதிலும் விவசாயிகள் போராடிப் பெறும் கடனை வைத்து விவசாயம் செய்ய, அது பொய்த்துப் போய் ஜப்தி நடவடிக்கையில் மாட்டிக் கொள்வது, அவர்கள் பறிக்கும் வெற்றிலையை விற்க விடாமல் அழிப்பது என்ற அனைத்து சதிச் செயல்களையும் சந்திக்கின்றனர்.  இந்தப் பிரச்சனைகளிலெல்லாம் கைகொடுக்கிறது தோழமை என்ற சொல்லுக்கு பொருளாக விளங்கும் விவசாய சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும்.  பிற கட்சிகள் தமது சுயநலனுக்கு மட்டுமே இவர்களைப் பயன்படுத்த முயல, கம்யூனிஸ்ட் கட்சியோ அவர்களுக்காகப் போராடுகிறது, உரிமைகளைப் பெற்றுத் தருகிறது.  அப்படியும் கடனைக் கட்ட முடியாமல் வீராச்சாமி போன்றோர் வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.  எனினும் நாம் மக்களின் மனதில் சரியான அரசியலை விதைக்க வேண்டும், அப்போது மக்கள் விழித்தெழுவார்கள் என்ற செய்தியுடன் நாவல் நிறைவடைகிறது.

நாவலில் ஊடாடிச் செல்லும் ஒரு விஷயம் குடும்பம், குறிப்பாக மனைவியரின் ஆதரவு.  எப்போதெல்லாம் குடும்பத்தின் ‘ஆம்பள’ உடைந்து போகிறாரோ, அப்போதெல்லாம் இதோ நான் இருக்கிறேன் என்று தூக்கி நிறுத்தும் மனைவிமார்கள் நாவலெங்கும் நிறைந்து நிற்கிறார்கள்.  இந்த நிதர்சனத்தை நான் இன்னொரு நாவலிலும் முழுதுமாகப் படித்திருக்கிறேன்.  நான் மொழிபெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘கோபத்தின் கனிகள்’ நாவலிலும், அனைத்தும் தொலைத்த பருத்தி விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருக்க, அவர்களைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள்து வீட்டுப் பெண்கள்.  அவர்கள் உடைந்து போகவில்லை என்பதைப் பார்த்ததும்தான் அவர்கள் நிம்மதி அடைவார்கள்.  அந்த நாவலை முழுவதுமாக ஒரு தாயின் பாத்திரம் கடைசி வரை குடும்பத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் சென்று கொண்டே இருக்கும்.  அதே போன்ற ஒரு உணர்வை எனக்குள் இந்த நாவலும் கிளறி விட்டது.  இது நம்மில் பலருக்கும் நேரடி அனுபவமாகவே இருக்கும்.

152 பக்கம் மட்டுமே கொண்ட நாவல்தான்.  ஆனால் அது செல்லும் வேகம் அசாத்தியமானது.  தொடங்கினால் பிடித்து இழுத்துச் சென்று முடிவுக்குக் கொண்டு சென்று விடும் வேகம்.  நலிந்து போன நாட்டுப் புறக் கலைஞர்களையும், அவர்தம் குடும்பங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தோழர் காளீஸ்வரன் தமது மாற்று ஊடக மையத்தின் மூலம் இந்த நாவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நாவலைப் படிப்பது ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்பதுடன், நாம் அளிக்கும் ஆதரவு மேலும் நாவல்களை எழுத தோழர் பாலு மணிவண்ணனுக்கு உத்வேகத்தையும், மாற்று ஊடக மையத்துக்கு நல்லாதரவையும் நல்கும்.

வெத்தலை – நாவல்

ஆசிரியர்: பாலு மணிவண்ணன்

வெளியீடு: மாற்று ஊடக மையம்

விலை: 150. பக்கம்: 152

-கி.ரமேஷ்