விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் | வாத்தியார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் - https://bookday.in/

விடுதலை – 2 (Viduthalai 2) திரைப்படம் பேசும் அரசியல்

விடுதலை – 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல்

பெருமாள் – நல்ல மாணவன், கணவன்
வாத்தியார் – நல்ல ஆசிரியர், போராளி

மனிதரே மனிதர் சுரண்டும் போக்கு ஒழிய வேண்டும், ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த சமூகம் மாற வேண்டும் என போராடி மறைந்து போன பல மாவீரர்களின் கதை தான் இது. இதில் பலர் நட்சத்திர வெளிச்சத்திற்கு வராதவர்கள், பலர் அறிய முடியாமல் திசைகள் மறந்து தொலைந்து போனவர்களின் வரலாறு சில புனைவு கலந்து உருவாகி இருக்கிறது விடுதலை பாகம் 2 திரைப்படம். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும் சமூக மாற்றத்திற்காக போரில் தங்களது இன்னுயிர் இழந்து, குடும்பம், தன்னிலை, சுயலாபம் மறந்து போனவர்களில் பலர், இவ்வாறு பொது சமூகத்தால் பாடப்படாதவர்கள், எழுதப்படாதவர்கள் அவர்களின் வரலாறுகள் நல்ல படைப்பாளிகளால் இன்று மெல்ல மெல்ல மேலும்பி வருகிறது. முதலில் அதற்க்கான விதையை தமிழ் அரசியல் திரைப்படங்கள் விதைத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். அதற்க்கு அவரது ஈ, பேராண்மை, புறம்போக்கு என்னும் பொதுவுடைமை, லாபம் திரைப்படங்களே சாட்சி.

சமூகத்தில் நிரம்பி வழியும் ஏற்றத்தாழ்வு அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு கூட்டத்தின் ஏவல ஆட்களாக இன்றைக்கு இருக்கிற அரசு அமைப்பும், அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பி அதை பாதுகாக்க போலீஸ், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்ற கட்டமைப்புகளும் எந்த மாதிரியான வலைப்பின்னலுக்குள் சிக்கியிருக்கிறது. ஒவ்வொரு படிநிலையாக இருக்கும் அந்த அதிகார அமைப்பின் செயல்பாட்டின் தலைமை யார்…? அவருக்கு உத்தரவு எங்கிருந்து பிறப்பிக்கப்படுகிறது. அது எத்தனை படிநிலை கடந்து இறுதியில் ஒரு சாமானிய காவலாளியான குமரேசனை அவ்வுத்தரவு சென்றடைகிறது. அது எத்தனை படிநிலைகளாக மாறி இருக்கிறது..? அவர்களின் ஏவல் ஆட்களாக ஏன் சாமானியர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு கற்பிக்கப்படுவது என்ன.? அவர்கள் ஏன் அந்த மாதிரி மாறி போனார்கள் இப்படி பல கேள்விகளை திரைப்படம் நமக்கு கொடுக்கும்.

விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் | வாத்தியார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் - https://bookday.in/

இப்படியாக காவல்துறை அராஜக போக்கை அத்துமீறலை அடாவடித்தனத்தை ஈவு இரக்கமற்ற தன்மையை விசாரணை படத்தின் மூலம் வெளிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன் இத்திரைப்படத்தில் வாச்சாத்தி, கீழவெண்மணி உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கியமான சில பின்னணிச் சம்பவங்களை தழுவி கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறார்.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சராக வரும் இளவரசு, தலைமை செயலாளராக வரும் ராஜீவ் மேனன் மற்றும் கலெக்டராக வரும் சரவணன் சுப்பையா உள்ளிட்டோரிடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் ஓரளவு நமக்கு புரியும். வனத்துறை, காவல்துறை இன்று காடுகளில் அதன் பூர்வக்குடி மக்களாக மலைவாழ் மக்களையும், அவர்களின் வாழ்வியல் முறைகளையும் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் அணுகுவதும், அவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், ஏதோ ஒரு பின்னணியில் நிகழ்கிறது என நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அப்படியான ஒரு சம்பவத்தை அந்த உரையாடல் நமக்கு உணர்த்தும். அந்த உரையாடலின் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் நிலக்கரி சுரங்க முதலாளியின் பலன் இருக்கும் என்பதும் புரியும்.

இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் கீழத்தஞ்சை அதாவது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மேலும் இன்றைக்கு இருக்கிற மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடந்த விவசாய எழுச்சி போராட்டம் இந்திய அரசியல் வர்க்க போராட்டத்தில் மிக முக்கியமானது. அதில் தோழர் சீனிவாசராவின் பங்கும் இடதுசாரி இயக்கத்தின் பங்கும் அளப்பரியது.

விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் | வாத்தியார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் - https://bookday.in/

 

கீழத்தஞ்சையில் நிலவிய சமூக ஒடுக்குமுறைகளும், பண்ணையார்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகளுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக நிடிக்கும் வர்க்க முரண் உள்ளிட்டவற்றை மிக ஆழமாகவும் அர்த்தத்துடனும் எளிய முறையில் வசனங்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
மேலும் இதில் விவசாயிகள் ஏன் அமைப்பாக திரள வேண்டும், தொழிலாளிகள் தொழிற்சாலைகளில் ஏன் அமைப்பாக திரள வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை குருதி சிவப்பு தெறிக்க தெறிக்க எழுதி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

அதே வகையில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழியர்களாக பயணிக்கும் பல தோழர்கள் அவர்களின் குடும்பங்களில் நிலவும் வறுமை, பிரிவு, உயிரிழப்புகள் உள்ளிட்டவற்றையும் நெஞ்சை தைக்கும் விதவிதமான காட்சிகள் நம் கண்களை குளமாக்கும்.

மேலும் இதில் ஆணாதிக்க வல்லமை கொண்ட ஒரு ஆண் எப்படி இருப்பான் அவனை எதிர்த்து போரிடுகிற பெண் எப்படி இருப்பாள் என்பதற்கு சான்றாக நிற்கிறார்கள் மகாலட்சுமி என்ற மஞ்சுவாரியரும், கருப்பு என்ற கேன் கருணாஸின் மனைவியாக வரும் பெண்ணும், ஒரு முழு நேர இடதுசாரி அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்ட பெண் எத்தகைய மனவலிமை மிக்கவர் என்பதை வாத்தியார் விஜய் சேதுபதியின் அரசியல் ஆசிரியராக கிஷோரின் மனைவி கதாபாத்திரத்தில் வரும் பெண் மூலமும் பேசியிருக்கிறார்.

விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் | வாத்தியார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் - https://bookday.in/

 

இறுதியாக தனிமனித நாயகப் பின்பமும், ஆயுதப் போராட்டமும் எந்த ஒரு நிரந்தர மாற்றத்தையும், எந்த ஒரு நிரந்தர விடுதலையும் இங்கு தராது என்பதை மிக ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதனால் இங்கே நிகழ்ந்த கொடூர மரணங்கள், அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என ஏராளமான சம்பவங்கள் தீவிரவாத குழுக்களை பொது சமூகத்திலிருந்து, அரசியலில் இருந்து அந்நியப்படுத்தியது. இன்றைக்கு பல தீவிரவாத குழுக்களும் ஜனநாயக தேர்தல் பாதைக்கு திரும்பி உள்ளதை அது உணர்த்தும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் இந்தியாவில் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்கிற உன்னத எதிர்கால நோக்கத்தோடு பயணிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நோக்கமே சரியானது என்பதும், அதற்காக மக்களை அரசியல் படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என சொன்னது போல் இருந்தது இறுதிக்காட்சி.

இத்திரைப்படத்தில் கடும் சிரத்தோடு பயணித்த அத்தனை திரை நாயகர்களையும் பாராட்டுவதோடு முக்கியமான அரசியல் விழிப்புணர்வு படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களையும், இசையின் மூலம் மக்களை கட்டி போடும் இசைஞானி இளையராஜா அவர்களையும், தனது கேமராவினால் இயற்கையின் அழகியலை நம் கண்களால் கண்டால் எப்படி இருக்குமோ அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் வேல்ராஜ். மேலும் இதில் நடித்த ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், அனுராக் காய்ஷாப், சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், பாவேல் நவகீதன் காவல்துறை ஆய்வாளராக வரும் தமிழ் உள்ளிட்டு பல நடிகர்கள் இயக்குனர்கள் என்பதும், அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விடுதலை, அதிகார வர்க்கத்தினரின் கட்டமைப்பு வலைப்பின்னலில், அதன் மூளைச்சலவையில் மாட்டிக் கொண்ட குமரேசனின் விடுதலை. முடிவில் குமரேசன் மக்களுக்காக போராடும் தோழரானான்.

விடுதலை – 2 (Viduthalai 2) திரைப்படம் பேசும் அரசியல் 
கட்டுரையை எழுதியவர்:

Vetrimaaran's Left Politics Viduthalai 2 Movie Review By Suresh Esakkipandi

சுரேஷ் இசக்கிபாண்டி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 4 Comments

4 Comments

  1. விகடநாதன்

    தேசிய இன விடுதலை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வை என்னங்க தோழர்…அதை பற்றி கட்சியில் சரியான புரிதல் இல்லை என்று தான அவர் பிரிந்தார்‌‌.தோழர் சுரேஷ் அதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

    • ஈரோடு சுந்தர்

      விமர்சனங்கள் நல்ல தமிழில் வருமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம்.

    • Suresh Esakkipandi

      இந்தியா முழுவதிலும் மொழிவழி தேசிய இனங்களாக உருவாகி இருப்பதை அங்கீகரித்து, அதனடிப்படையில் தேசிய இனங்களின் மாநில எல்லைகளை திருத்தி அமைக்க வேண்டுமென்று கோரினர்.இவ்வாறு திருத்தி அமைத்து, பூரண மாநில சுயாட்சி உரிமையும் வழங்கினால், இந்தியா மத அடிப்படையில் இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று பிரிக்க வேண்டுமென்ற முஸ்லீம் லீக் கிளர்ச்சியை சமாளித்து, இந்திய ஒற்றுமையைப் பாதுகாக்கலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தியது. இந்த அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச வந்த, பிரிட்டிஷ் அரசாங்க மந்திரிசபை தூது கோஷ்டியிடமும் விண்ணப்ப அறிக்கை ஒன்றையும் கம்யூனிஸ்ட் கட்சி அளித்தது. ஆனால் இது ஏற்கப்படவில்லை. மத அடிப்படையில் நாட்டை பிரிவினை செய்ய முடிவு செய்துவிட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இதை மறுத்ததில் ஆச்சர்யமில்லை. மத அடிப்படையில் இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சியையே, இந்தியத் தலைவர்களிடம் சுதந்திர நாட்டின் அதிகாரத்தை ஒப்படைக்கும் சமயத்திலும் பின்பற்றியது. இதன் விளைவே இந்தியா, பாகிஸ்தான் என்று உருவான வரலாறு.

      இவ்வாறு பிரிக்கப்பட்ட பாகிஸ்தானுக்குள்ளும், இந்தியாவுக்குள்ளும் ஒற்றுமை நிலவவில்லை. காரணம், இருநாடுகளிலும் பதவியில் அமர்ந்த காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள், இந்திய வரலாற்றில் நனவாகிவிட்ட தேசிய இனங்களை அங்கீகரிக்க மறுத்தனர். அதன் விளைவாக, இருநாடுகளிலும் ஒற்றுமைக்கு எதிரான பிரிவினைக் கிளர்ச்சிகள் உருவாயின.

      மத அடிப்படையில் உருவான கிழக்குப் பாகிஸ்தான் (பங்களாதேஷ்) மேற்கு பாகிஸ்தானிலிருந்து (பஞ்சாபியர், சிந்தியர், பலுசிஸ்தானியர், பஸ்டு மொழி பேசும் வடமேற்கு எல்லை மாகாணத்தியர் அடங்கியது) பிரிந்தது. தற்போதுள்ள பாகிஸ்தானுக்குள்ளும், இந்த இன வளர்ச்சி உணர்வுக்கு மதிப்பு அளிக்காததினால், அங்கும் பிரிவினைப் போக்குகள் தொடருகின்றன. இதே போன்ற பிரச்சினையையே இன்று நாமும் சந்திக்க வேண்டியதேவையுள்ளது. தேசிய இனப் பிரச்னையை சரியானபடி அணுகாததின் விளைவாகத்தான் காலிஸ்தான், போடோ, ஜார்கண்ட் போன்ற பிரிவினை கிளர்ச்சிகள், இங்கெல்லாம் தோன்றின. சீர்குலைவு சக்திகள் மக்களது நியாயமான பிரதேச சுயாட்சிக் கோரிக்கைகளை, பிரிவினைவாதமாக மாற்ற முயற்சி செய்கின்றன. மக்களிடையே நிலவும் தேசிய இன உணர்வினை இன வெறியாக மாற்றிட முயற்சி செய்கின்றன. இதனை ஏகாதிபத்தியம் ஊக்குவிக்கிறது. இதற்கு முழுமுதற் காரணம் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பின்பற்றும் தவறான கொள்கையே. அவர்கள் பின்பற்றும் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களைப் பாதுகாக்கும் கொள்கையில் மக்களது ஜனநாயகம் காவு கொடுக்கப்படுகிறது. வேட்கைக்காக

      பெரிய நாடுகள் துண்டாடப்படுவது ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு

      ஏற்றது. ஏனெனில் துண்டாடப்பட்ட பகுதிகளை ஏகாதிபத்தியம் சுலபமாக அடிமைப்படுத்திவிடும். ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக இயக்கங்களையும், பாட்டாளி வர்க்க ஒற்றுமையையும் சீர்குலைக்கவாவது, இவை பயன்படும். இதன் மூலம் தன் ஆதிக்கத்தை உருவாக்கிட முடியும் என்றும் ஏகாதிபத்தியங்கள் கணக்கு போடுகின்றன.

      1979-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியிட்டு சி.ஐ.ஏ. ஏஜெண்டுகளுக்கு அமெரிக்காவின் தகவல் நிலையம் “பிரம்மபுத்திரா” என்ற திட்டம் ஒன்றை அனுப்பி அது பற்றி ஆய்வு செய்யுமாறு கூறியது. அந்தச் சுற்றறிக்கையில் ஒரு பகுதி பின்வருமாறு:-

      “சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவின் கிழக்குப்புற மாநிலங்களில் பிற்போக்கு பிரிவினைவாதங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், ஒரு சுதந்திர நாடு வேண்டுமென்ற கிளர்ச்சியைத் துவக்குவதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

      இந்தியாவில் பிரிவினை கோரிக்கை என்பது இன்று ஏகாதிபத்தியவாதிகளின் சூதாட்டப் பொருளாக மாறிவிட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கும், சதிச் செயலல்லவா இது?

      ஆனால், இன்றைய இந்த உண்மைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, சிலர் கூப்பாடு போடுகின்றனர். சோவியத் யூனியனில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கியுள்ள போது, இங்கு மட்டும் மறுப்பது கம்யூனிசமா? சோஷலிஸமா? என்றெல்லாம் யாந்திரீகமான கேள்விகளை எழுப்பி மக்களைக் குழப்ப சீர்குலைவுச் சக்திகள்

      குறிப்பாக, நக்ஸலைட்டுகள் – முயற்சி செய்கின்றனர். அன்று சோவியத் யூனியனில் நிலவியது ஒரு விசேஷமான நிலைமை. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த ஜார் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ரஷ்ய நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் அணி திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. ஜார் ஏகாதிபத்தியம் என்பது “பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்கியது” என்றார் லெனின். ஜாரை வீழ்த்துவதின் மூலம் தங்களுக்கும் விடுதலை உண்டு என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் அந்த தேசிய இனங்களுக்கே பிரிந்துபோகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை உண்டு என்றார் லெனின்.

      சுயநிர்ணய உரிமையை வழங்கிய மாமேதை லெனின், மேற்கூறிய நிலைமை ‘சோவியத் யூனியனில் நிலவிய விசேஷ நிலைமை’ என்றார். அது அன்று, அவசரத் தேவையாயிருந்தது என்பதையும் விளக்கினார். ரோசா லக்சம்பர்க் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுதினார் .

      “தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக ரஷ்யாவிலுள்ள விசேஷ நிலைமைகள் ஆஸ்திரியா நாட்டில் நாம் காண்பதற்கு முற்றிலும் மாறுபட்டது… ரஷ்யாவிலுள்ள தேசியப் பிரச்சினையில் இங்குள்ள விசேஷமான, திட்டவட்டமான, சரித்திர அம்சங்கள்தாம், தற்சமயத்தில் சுயநிர்ணய உரிமை பேசுவதற்கு நாடுகளுக்குள்ள உரிமையை அங்கீகரிப்பது நமது நாட்டின் விசேஷமான அவசரத் தேவையாக்கியுள்ளது.

      (லெனின் தொகுதி நூல்கள் பாகம். 20. பக்கங்கள் 407-408) அதோடு மட்டுமல்லாது 1917-ஆம் ஆண்டு மே மாதத்தில் சுயநிர்ணய உரிமையைப் பற்றி பேசும்போது, லெனின் எச்சரிக்கை ஒன்றும் விடுத்தார். அவர் கூறினார்:

      “சுதந்திரமாக நாடுகளுக்குள்ள பிரிந்து செல்லும் உரிமை என்பதை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறித்த நாட்டிற்கு பிரிவினை தேவை என்று கூறப்படுவதோடு சேர்த்து பார்த்துக் குழப்பம் கொள்ளக்கூடாது. தொழிலாளி வர்க்கக் கட்சியானது ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்னையிலும், முற்றிலும் சுதந்திரமாகத் தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு தீர்மானிக்கும்போது, ஒட்டு மொத்தமாக சமூக வளர்ச்சின் நலன்களையும், சோஷலிஸத்திற்காக தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்ட நலன்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்”

      (லெனின் தொகுதி நூல்கள்: பாகம் 24, பக்கங்கள் 302-303)

      சுதந்திரத்திற்கு முன்னர், இந்திய மக்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு, பிரிந்து நின்றதை பயன்படுத்தியே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை வளைத்துப் பிடித்தது. இன்று நம் நாட்டில் எழுந்துள்ள தேசிய இன எழுச்சிகளைப் பயன்படுத்தி, பிரிவினையைத் தூண்டி, நமது நாட்டில் நவீன காலனி ஆட்சியாக்கி அடிமைப்படுத்த சதி செய்கிறது. எனவே, பிரிவினை என்பது இன்று ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான கோஷமாகவே, இந்தியாவில் வைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவங்கி, இன்று காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்படும் முதலாளித்துவ பாதையில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

      இதற்கு இங்குள்ள ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை அடக்குவதல்ல காரணம். அப்படிப்பட்ட நிலைமை இங்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கையே காரணம்.

      “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!” என்ற முழக்கத்துடன் திராவிட நாடு பிரிவினை கோஷம் வைக்கப்பட்டது. தெற்கேயுள்ள நான்கு தேசிய இனங்களின் மக்கள் அதனை ஏற்கவில்லை. தங்கள், தங்கள் மொழிவழி மாநில அமைப்புகளையே உருவாக்கக் கோரினர்.

      தங்கள் தொழிலுக்கும், சுரண்டலுக்கும் ஏதுவான பகுதிகளில் வடக்கேயும், தெற்கேயும் உள்ள முதலாளிகள், சாதி,மதம், மொழி, இனம் பார்க்காமல் தொழில்களை உருவாக்குகின்றனர். இதன் விளைவாக, பிரதேச வளர்ச்சிகளில் அசமத்துவம் ஏற்படுவது இயல்பு. முறையான திட்டமிட்ட வளர்ச்சி மூலமே இதை மாற்ற முடியும். எனவே, காங்கிரஸ் ஆட்சியாளரின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கையை மாற்றுவதே இன்றைய பிரதான பிரச்னை.

      இந்தக் குறிக்கோளுடன், இந்திய மக்களது ஜனநாயக ஒற்றுமை என்ற பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. மாநிலங்களுக்கு சுயாட்சி, மொழிகளுக்கு சம அந்தஸ்து என்ற கோரிக்கைகளுடன் தேசிய இனங்களின் ஒற்றுமை என்ற முழக்கத்தை முன் வைக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி! இதுவே தேசிய இனப் பிரச்னை குறித்த தெளிவான அணுகுமுறை. இந்த நாட்டில், இல்லாத தேசிய இன ஒடுக்குமுறை இருப்பதாகக் கூறி தவறு செய்யாமல், இந்திய ஒற்றுமை, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற உண்மையான உணர்வில் தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுகிறது. ஏகபோக முதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, மக்கள் ஜனநாயகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனைக்கு இறுதியான தீர்வு காண முடியும்.

  2. விடுதலை படத்தின் மூலம் தங்கள் கறுத்து நியாயமானது மேலும் இப்படத்தில் வாச்சாத்தி கதையின் மூலம் படத்தை சொல்ல வந்தாலும் ஆங்காங்கே கீழ்வெண்மணி மற்றும் பங்கையில் பல ஊர்களில் நடந்த பண்ணை முதலாளிகளின் புகைப்படம் இலக்கியுள்ளது மேலும் தனிநபரின் போராட்டம் வெறும் மூடநம்பிக்கையே இங்கு அமைப்பாய் திரண்டு தான் மக்களுக்கான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்பது படத்தின் மூலம் நான் நன்றாக கற்றுக் கொண்டேன் மேலும் இதில் வரும் ஒரு சில வசனங்கள் எனக்கு நிறைய அர்த்தங்களை சொல்லி புரிதலை சொல்லிக் கொடுத்திருக்கிறது அது என்னவென்றால் தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டும்தான் உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது அந்தத் தவறை கம்யூனிஸ்டாகிய நாங்கள் உங்களுக்கு செய்யவில்லை என்று நம்புகிறோம் என்று விஜய் சேதுபதி சொல்லும் இப்போது இருக்கிற கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டிகளின் மாற்றிய சித்தாந்தங்கள் இன்று வரை மக்களுக்காக போராடும் ஒரு கம்யூனிஸ்ட்டை உருவாக்கிக் கொண்டே தான் போகும் அதுதான் எப்போதும் நடத்திக் கொண்டிருக்கிறது ( இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் சுரேஷ் அவர்கள் எழுதிய இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாகவும் பிறருக்கு பயன்பெறும் வகையிலும் இருந்தது)
    இதைப் படித்தவுடன் நிறைய சந்தேகங்களும் நிறைய குழப்பங்களும் எனக்கு தீர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *