Vettai Book Review | வேட்டை கவிதை நூல் 

‘வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு’
என்பது குறள். அதற்கேற்ப இந்நூலாசிரியர் தான் கேட்டவற்றை, தன் கண் முன்னே கண்டவற்றை, தான் அனுபவித்தவற்றை,
கவிதைகளாய் யாத்திருக்கின்றார். ஒவ்வொரு குடிமகனும் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற பொதுநல நோக்கில் இக்கவிதை நூல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல் கொண்டாட்டத்தினை
அப்படியே தோலுரித்துக் காட்டி
மக்களின் யதார்த்த நிலையினை
எடுத்தியம்புகிறது.

இன்றைய காலத்தில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை தான் உயர்ந்து கொண்டிருக்கிறதே தவிர,எழுத்துகளின் தரமோ தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனை
‘ஏடுகளோ பலவுண்டு
எழுத்தாளர் பலருண்டு
ஏட்டினிலே தமிழில்லை
எல்லாமும் கலப்படமாய்’ என்ற
வரிகள் உணர்த்துகிறது.
பாலியல் வன்கொடுமை எங்கும்
மலிந்து விட்ட இத்தேசத்தில்
அதன் தன்மையினை மீன்கள், புறாக்கள்,கிளிகள்,மான்கள்
என வகைப்படுத்தி விளக்கியிருக்கும் பாங்கு அருமை.

இந்த நாட்டினை ஆள்பவர் எவராக இருப்பினும்,
அடிப்படை வாழ்வியலுக்குக் கூட
அல்லல்ப்படும் சாதாரண மனிதனின் பொருளாதார நிலையில் எந்த‌வித மாற்றமும் இல்லை என்பதை ‘மனிதன்’
கவிதை கவனிக்க வைக்கின்றது.

குட்டியாய் இருக்கும் போது கட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியினை வளர்ந்த பின்னும் தன்னால் அதிலிருந்து விடுவித்துக் கொள்ளமுடியுமென்றாலும்,
அதனைச் செய்யாமல் இருக்கின்ற பலம் மிக்க யானை போல் இருக்கும் மக்களை நோக்கி,விழித்துக்கொள்ளச்
சொல்கிற வரிகள் நெஞ்சில் உரமூட்டிச் செல்கிறது.
இந்திய நாட்டை இந்த
அடிமைகளால் எப்படி ஆள முடியும்?என்று எள்ளிய
அந்நியரின் முன்பு, அவர்களே வியக்கும் வண்ணம் நம் நாட்டிற்கென சட்டம் வகுத்து,
எளியோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்த சட்ட மேதை
அம்பேத்கரைப் போற்றும்
கவிதை, இனிவரும் தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதாய் இருக்கின்றது.

சமூகத்தின் சீர் கேடுகளை
வேட்டையாடச் சொன்னாலும்
குழந்தைகளைக் கொண்டாடச்
சொல்கிறது.
‘குழந்தைகள் தினத்தை
விடுத்து
எப்போது நாம்
குழந்தைகளைக்
கொண்டாடுவோம்!’ என்று.

கொரானா காலத்தில் ஊரே அடங்கிப்போய் வீட்டினுள்ளே முடங்கிக் கிடந்த நிலையில் எல்லோரையும் ஆட்டிப் படைத்த தீ நுண்மியினை கடவுளுக்கும் மேல் என்று சொல்லும் கவிதை சிந்திக்கத் தூண்டுகிறது.

மக்களின் அறியாமையினைப் போக்கி, பெண் கல்வியினை முதன்மையாக்கி, மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து, சாதி மத வேறுபாட்டினைக் களையப்
பாடுபட்ட பெரியாரை ‘இவர் தான் பெரியார்’என எடுத்துரைத்திருப்பது சிறப்பு.

மனிதர்களின் சுயநலப்போக்கால் இயற்கை அன்னை நம்மை இடுகாட்டுக்கு அழைத்துச் செல்லும் காலம் தூரமில்லை என எச்சரிக்கை விடுக்கும் வரிகள் நெஞ்சுக் குழிக்குள் அச்சத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது.

உண்மை பேசும் கவிஞர்களுக்குப் பரிசாய்
கிடைத்ததென்னவோ வறுமை நிலை தான் என்பதனை
விரக்தியாய் உதிர்க்கின்றது
‘உன்னையே நீ அறிவாய்’ என்னும் கவிதை. இவ்வுலகில்
உதவும் மனம் படைத்தோரெல்லாம் ஏற்றி விட்ட
ஏணியெனவே இருந்திடவே,
ஒரு ஞானி போல் அவர்களது
வாழ்வும் ஆகி விடுகிறது.

காட்டுத் தீயின் வெம்மையென
வலம் வரும் வரிகளுடனே
இளந் தென்றலாய் வருடும் ‘என்தோழி’.கவிதை.
‘எனக்குள்ளும்
என் அறைக்குள்ளும்
நிரம்பி வழிகிறது
அவளது கூந்தல்
சுமக்கும் பூக்களின் மணம்’ இறுதியில் தன் வீட்டு வேப்பமரத்தினைத் தோழியாக்கி
அழகுபட உரைத்திருக்கின்றார் நூலாசிரியர்.

இந்நூலானது சமுதாயத்தில், நடைமுறை வாழ்க்கையில், மக்களின் மனோபாவங்களை அப்படியே எடுத்துக் காட்டி நம்மை நிமிர்ந்து பார்க்கச் செய்கிறது. வேட்டை நம் மன அழுக்கினை வேட்டையாடி சுத்தப்படுத்துகிறது.

 

நூலின் தகவல்கள் 

நூல் : வேட்டை… கவிதை நூல் 

ஆசிரியர் : புலவர்.ச.ந.இளங்குமரன்

வெளியீடு :  வையைப் பதிப்பகம், தேனி

பக்கங்கள் :  102

விலை :  ரூ.120

 

எழுதியவர் 

இலட்சிய ஆசிரியர் அ.லட்சுமி குமரேசன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “வேட்டை… கவிதை நூல் அறிமுகம்”
 1. வேட்டை நூல் குறித்து நல்லதொரு மதிப்புரை வழங்கிய எழுத்தாளர் லட்சுமி குமரேசன் அவர்களுக்கும் சிறந்த முறையில் வெளியிட்ட புக் குழுமத்திற்கும் நன்றியும் பேரன்பும்.

  நாடு என ஒன்று இருக்கும் வரை அரசியலும் இருக்கும்
  அரசியல் என்ற ஒன்று இருக்கும் வரை தேர்தல் இருக்கும்
  தேர்தல் என்ற ஒன்று நடக்கும் வரை அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்குமான பல்வேறு வேட்டைகளும் இருக்கும், நடக்கும் .

  இவை அனைத்தும் இருக்கும் வரைக்கும் எனது வேட்டை நூலின் கருத்தியல் நிலைக்கும் தொடரும்.

  இனிய அன்புடன்
  புலவர் ச.ந.இளங்குமரன்
  வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *