நவீன இலக்கியத்தின்
கால்தடங்களை அதிகம் அறிந்திராத ஒரு அடர்வனத்துள் நுழைந்து
தன் கூர்மையான ரசனையாலும் துல்லியமான மொழியாலும்
வேட்டையாடி விருந்து வைக்கிறார்
கவிஞர் மௌனன் யாத்ரிகா
பசியோடிருக்கும்
வாசகனுக்கு
நூறு சுவையில்
நூறு கவிதைகளில்
வயிறுமுட்ட பரிமாறுகிறார்
தமிழ்க்கவிதைகளின்
சொர்க்கவாசலை
மீண்டும் திறந்துவிட்டு புதிய அத்தியாயத்தை
வேட்டை அம்பால்
எழுதியிருக்கிறது
வேட்டுவம் நூறு
தொல்குடியின் அன்னையான வேட்டைக்காட்டிடம்
குடித்த தாய்ப்பாலை
நூறு மேகங்களால்
பொழிந்து நன்றிகளால் நனைக்கிறது
ராமனின் பாதத்திற்கு காத்துக்கிடந்த
அகலிகையைப்போல் ஆண்டாண்டு காலங்களாக சமைந்துகிடந்த
வேட்டைக்காட்டின் நீண்ட மௌனம்,
மௌனனால் மொழிபெயர்க்கப்பட்டு்
உயிர் கொடுக்கப்படிருக்கிறது
எந்த கவிதைக்கு தெளிவான அறுதியிட்ட
விளக்கம் சொல்லிவிட முடியாதோ,
எந்த கவிதையில் வாசகன் தன் ரசனையின்
உயரத்தை சார்ந்து புரிந்து கொள்ளும் கூறுகள் இருக்கிறதோ
அதுவே சிறந்த கவிதை என்று நினைக்கிறேன்
அந்த கூறுகள் இந்த தொகுப்பு நெடுகிலும் விரவிக்கிடக்கிறது
தமிழைத்தவிர வேறு எந்த மொழியிலும் எழுதிவிட முடியாத
இந்த காவியத்தை
மௌனனைத்தவிர
வேறு ஒருவரால்
இத்தனை சிறப்பாக எழுதியிருக்க முடியுமா
என்பது சந்தேகம்தான்
வேட்டையாடி வென்ற
ஈட்டிகளின் முனைகளில்
உதிரம் சொட்டவில்லை
அன்பும் கருணையுமே
கசிந்து வழிகிறது
சேரனும்
சோழனும்
பாண்டியனும்
தன் கொடிகளில் வைத்து கொண்டாடிய
புலியையும் வில்லையும் மீனையும்
தன் கவிதைகளில் ஏற்றி கௌரவப்படுத்துகிறார் மௌனன்
பீட்சாவிலும் கோக்கிலும் மரத்துப்போய் கிடக்கிற நாவில்
மலைத்தேனாய்
நகர இரைச்சலில்
அடைந்துகிடக்கிற செவிகளுக்கு
சில்வண்டின் ரீங்காரமாய் சிறு ஓடையின் சலசலப்பாய்
வாசனைத்திரவியங்களால் நுட்பமிழந்த நாசிகளுக்கு
காட்டுப்பூக்களின் தூக்கலான வாசமாய்
கவிதைகளின் பெருவிருந்து
ஆதிமனிதன்
கொழுத்த விருந்துண்டு கொம்புத்தேன்குடித்து
போதையேறிய சுகத்தில் பாறைகளிலும் குகைகளிலும்
தீட்டிவிட்டுப்போன சித்திரங்களைப்போன்ற கோட்டோவியங்களால்
கண்களுக்கும் கருத்திற்கும் விருந்து வைக்கிறார்
ஓவியக்கவிஞர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
நூறு கவிதைகளையும்
நூறு குழந்தைகளைப்போல் உச்சிமோர்ந்து வாசித்து மகிழ்ந்தேன்
அதனால் சிறந்த கவிதைகள் என்று தனியாக எதையும் மேற்கோள் காட்டவில்லை
கரும்பின் எல்லா பக்கமும் இனிமைதான் !
வேட்டுவம் நூறு
மௌனன் யாத்ரிகா
லாடம் பதிப்பகம்
8344434403
- வீரமணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.