நூல்: வேட்டுவம் நூறு 144
ஆசிரியர்: மெளனன் யாத்ரிகா
வெளியீடு: லாடம்

வேட்டையும் வேட்டை நிமித்தமுமான காடறிதலாக கண்ணுக்குள் நிறைந்து கருத்துக்குள் விரியும் பெரும் வனத்தின் கருவறையாகக் கதவு திறக்கிறது… இயற்கையின் அறம் போற்றும் இந்த..
“வேட்டுவம் நூறு”.. கவிதை நூல்.

சந்தோஷ் நாராயணன் அவர்களின் தனித்துவமான, மிக நேர்த்தியான அட்டைப்பட வடிவமைப்பும், ஒவ்வொரு கவிதையின் சாரத்தையும் துளிபிசகாது பிசைந்தெடுத்த காரசாரமான ருசியில் கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களின் கோட்டோவியமுமாக அட்டை டூ அட்டை தொடர்கிறது வேட்டுவத்தின் அதிர்வலைகள்.

இயற்கையைப் போற்றும் வேட்டையும், அவ் வேட்டைக்குள் புதைந்திருக்கும் இயற்கையின் அறம் போற்றுதலுமாக… கானகத்தின் கருணை மொத்தமுமாக விழுங்கிச் செரித்திருக்கும் ஆயிரமாயிரம் மர்மங்களைத் திறந்து கொண்டே செல்லும் வேட்டைச்சொற்களை நுகர நுகர… இதுவரைக்குமான வேட்டை குறித்த நமது புரிதல்களெல்லாம் சுக்கு நூறாக உடைந்து மடிகின்றன.

//குருதி வீச்சம் மூக்கில் ஏறக்
கறியைத் தீயில் வாட்ட வேண்டும்
எலும்புச்சூடு நாக்கைச் சுடச்சுடக்
கவ்வி இழுத்து விழுங்க வேண்டும்
மேலிருக்கும் ஆகாயம் இருண்டு வரும்போது
கீழிருக்கும் பூமிக்கு முத்தமிட வேண்டும்
ஓங்குமரத்தை ஆரத்தழுவி பாதிவரைக்கும் ஏறவேண்டும்
தொடையைத் தட்டிச் சிலுப்பிக்கொண்டு
விலங்குகள் நடுங்கக் குதிக்க வேண்டும்
வெக்கையும் தாகமும் கூடும்போது
காட்டோடையில் இறங்கி நிற்கவேண்டும்
கவுட்டியைக் கடிக்கும் மீன்களைக்
கொஞ்சம் கவிச்சையாய்த் திட்டிக் களிக்க வேண்டும்
நாக்கும் செத்துப் போச்சு
உடம்பிலும் உப்புச் சப்பில்லை
என்னடா கொடுமை இது,
இப்படியா வாழும் நம் குடி?
படுத்துக் கிடக்காதே எழுடா என் அங்காளி
வேட்டைக் கருவியைத் தூக்குடா என் பங்காளி
காட்டில் கொட்டிக் கிடக்குது வாழ்க்கை//

…..ஆரம்பமே அதிரடியாய்…
இதுதான் வேட்டையடா என் பங்காளி என்று நம் தோளணைத்துக் கூவுகையில்,
தீயில் வாட்டும் கறியின் குருதிவீச்சம்
நமது மூக்கைத் துளைக்க..
எலும்புச்சூடு நாக்கைச் சுட்டுப் பொசுக்க … அந்தக்கணமே வேட்டைக் கருவியைத் தூக்கிக் கொண்டு ஆசிரியரோடு பயணிக்கத் தயாராகிவிடுகிறது நம் மனது.

பத்துப் பணிரெண்டு வரிகளுக்குள்ளாக… இயற்கையின்
பேரதிசயங்களையும் வனத்தின் ஒவ்வொரு துளியிலும் ஒளிந்திருக்கும் நுணுக்கங்களையும்
ஒரு ஆகச்சிறந்த வேட்டுவனாக நமக்குள் பதியம் போட்டவாறே.. வெகு இயல்பாக
“எலே பங்காளி” யென்ற தோழமையோடு அடுத்தடுத்த வரிகளில் காட்டையும் வேட்டையையும் அணுகும் முறைகளை அழகாய்ச் சொல்லித்தருவது போலான எழுத்து நடையில்… வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நிகழ்வு மறந்து …
சட்டென்று ஆயுதமேந்தி அவருடனான வேட்டைக்கு அத்தனை இலகுவாக வசியப்பட்டு விடுகிறோம்
நாம்.

அந்த பங்காளி வார்த்தைக்குள்
சிலிர்த்துக் கொண்டெழும் ஒரு அங்காளியின் அவதாரமாய் அந்தக் கணமே உருமாறிக் கொள்கிறது… காடறிதலின் நாற்றம் நுகரக் கிடைத்த வாசகனின் தேடல்.

நெய்தல் நீங்கலாக மற்ற நான்கு திணைகளையும் பேசும் இந்தப் புத்தகம்… வேட்டைக்கான களமாக எந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியையும் எடுத்துரைக்காது… வேட்டையை பொதுவாக அணுகியிருக்கும் விதம்
வேட்டுவத்தின் மற்றுமொரு சிறப்பு.

விலங்குத் தனி வாசனை, கிழங்குக்குத் தனி வாசனை, பூச்சி புழுக்களுக்குத் தனி வாசனை, காமுறும் விலங்குக்குத் தனி வாசனை, பயமூறித் தப்பிப் பிழைக்கும் விலங்குக்கு தனி வாசனை, பறவைகள், மீன், தேன் என்று காட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அறிந்துகொள்ளக் கூடிய அதன் நாடித்துடிப்பு… கானகத்தின் நாற்றத்தை நுகர்தலிலும் உணர்தலிலும் தான் இருக்கிறது என்று நாற்றமறிதலை வேட்டையின் முதல் பாடமாக்கியிருக்கிறது வேட்டுவம்.



//பசியில் செத்துப்போக நாமென்ன
அரசை நம்பிப் பிறந்த குடியா?//

//புழுத்த அரிசியைத் தரும் அரசின் முத்திரையை விளக்குமாற்றால்
அடித்துவிட்டு நீ குழவிக்கல்லை அம்மியேற்றி மிளகாய் மல்லி வறுத்தெடு
நான் வேட்டை முடித்து வருவதற்குள்//

//மரங்களைத் தின்றுவிட்டவர்களின்
வயிற்றில் இந்தக் காட்டின் எலும்புகள் செரித்திருக்குமோ?//

//சுட்டகறி ருசி நாக்கில் ஏறும்போது
கைகளால் நாம் இறுக்கிப் பிடித்திருப்பது வெறும் எலும்புகளை அல்ல கானகத்தின் கதைகளையும் நினைவுகளையும்//

//களைப்பைப் பார்க்காதே
தொடர்ந்து நடப்போம்
காட்டுக்கு நம் வயிற்றின் சுருக்கம் தெரியும்//

// குடல்கள் சொல்வதைக் குளம்படிகள் கேட்கும்
எங்கோ இருக்கும் இரையின் பெயரை அது சொல்லிக்கொண்டே போகிறது//

// காய்ந்த புற்களைக் குறைத்து மதிப்பிடாதே அதில் ஆயிரம் மர்மங்கள் புதைந்திருக்கும்//

// ஈச்சங்கிழங்கின் மீது கள்ளை ஊற்றி ஊற வைத்ததைப் போல் இருக்கிறது மடிச்சுமை நீங்கிய விலங்கின் குடல்//

// தீயில் வாட்டிய தொடைக்கறியைப்
போல் தேன்கூட எச்சிலில் கரையாது
வேட்டையைச் சற்று நேரம் காமுறுவோம்//

//விலங்குகள் மட்டுமே வேட்டையின் குறியன்று
கள்ளிப் பழங்களும் காட்டில் உணவுதான்//

இப்படியாக வரிகளெங்கும் கானகத்தின் கருணையினைக் கதைகதையாகப் பேசும் வேட்டுவத்தில் ஈச்சங்கிழங்கு, பனங்கிழங்கு, அல்லிக் கிழங்கு என கிழங்கு வகைகளும், கள்ளிப்பழம், பனம்பழம், முட்டை, சுட்டகறி, மிளகு மல்லி அரைத்தெடுத்த சாந்து மணக்கும் வேட்டைக்குத் தப்பாத இரையுணவு என்று வகைப்படுத்தும் காட்டுணவு மொத்தமுமாய்… வாசிக்க வாசிக்க… நாசியைச் சுட்டுப் பொசுக்கி நாக்கைப் பதம் பார்க்கிறது.




//முயங்கிக் களைத்த விலங்கொன்று
அருகில் இருக்கிறதென்று நினைக்கிறேன்
நாம் வேட்டைக்காரர்கள் என்பதைச் சிறிது நேரம் மறந்துவிடுவோம்
வில்லை வளைத்து யாழ்போல்
மீட்டுவோம்
காட்டுயிர்களின் காமம் போற்றுதல் வேடர்க்கு அறம்//

வேட்டை மட்டுமே குறிக்கோளாயல்லாது, காட்டுயிர்களின் காமம் போற்றுதலாய்… அறம் தாங்கி நிற்கும் ஆதி வேட்டுவனுக்குள் உறைந்திருக்கும் அன்பையும், இயற்கையின் மீதான வேட்டுவனின் தீரா நேசத்தையும் தீரத்தீரப் பேசுகின்றன… வேட்டுவத்தின் பக்கங்கள்.




// நிலத்தில் இருக்கும் குழிகளையெல்லாம் நுகர்ந்து பார்க்கும் வேட்டை நாய் இங்கிருந்து போகலாம் எனக் கால்களை நக்கி ஈரப்படுத்துகிறது//

// வேட்டை நாய் மேல்நோக்கி நுகர்கிறது. நமக்கான இரை மரத்தில் ஒளிந்துள்ளது//

// விரட்டிப் பிடிக்கும் இரைகளைக் காயப் படுத்தாமல் கவ்வி வந்து நம்மிடம் தந்துவிட்டு கைகளை நக்கிக் கொடுக்கும் வேட்டை நாய்களின் நெற்றியில் மலர்ந்திருப்பது நம் மூதாதையர்களின் கருணை மலர்கள்//

வேட்டைக்கும் வேட்டுவனுக்கும் முழுமுதல் துணைவனான
வேட்டை நாய்களின் உடல்மொழியாகக் கூறப்படும் நுண்ணறிவும், திறனும்
அசாத்தியமானவை. இவற்றின் மீதான கருணையும் நேயமும் வேட்டை தர்மத்தின் ஒரு அங்கமெனப் பறைசாற்றுகிறது வேட்டுவம்.

உவமைகள் ஒவ்வொன்றையும் கோர்த்திருக்கும் விதத்தில்
ஒவ்வொரு பாடலையும் அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியாத வகையில் அங்கேயே கட்டிப்போட்டு விடுகிறது நம்மை.

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்ற விதத்தில்
பாடல்கள் மொத்தமுமே..
நம்மை முழுவதுவமாகக் காட்டுக்குள்
வேட்டைக்குள் அரவணைத்துக் கொள்கின்றன.




//வேட்டையென்பது தொழிலல்ல..
வாழ்வென்று பாடு//

// காட்டை அழித்துத் தின்போர்
காலனொடு பகை பெறுவர்
வேரொடு கெடுவர்; அழிவர்;
வேட்டுவம் நிலைக்கும்;//

என்ற இறுதிவரிகளில் ..
காடதிர… நிலமதிர…
இதயம் அதிர்கிறது. விழிகள் பனிக்கிறன.

நூறு பாடல்களைக் கொண்ட வேட்டுவத்தின் பக்கங்களில் முதல் பாடலில் தொடங்கி இறுதிவரைக்கும் நம்மை முழுவதுமாய் உள்ளிழுத்துக் கொண்டு… நம் இதயத்தை வேட்டையாடித் தீர்த்துவிடுதலில்
முற்றிலுமாய் வித்தியாசமானதொரு அனுபவம் இது.

குறிக்குத் தப்பாத வேட்டுவத்தின் அம்பில் சிக்கிக்கொண்ட வாசகனின் மனது… அதிலிருந்து
தப்பிப்பது என்பது அத்தனை எளிதல்ல…
என்னும் உண்மையை வாசித்த பின் உணரலாம்.

அன்பூ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *