Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்துறவிகளுக்கென ஒரு நெறி உண்டு. அவர்கள் தம் பயணத்தில் அடுத்த வேளைக்கென எதையும் சேமித்துக்கொண்டு சுமந்து செல்வதில்லை. கிட்டுமோ கிடைக்காதோ என நினைத்து அச்சம் கொள்வதுமில்லை. அந்தந்த வேளையில் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்குரிய உணவு. அதற்கு சற்றும் குறைவில்லாத நெறிகளைக் கொண்டவர்கள் கவிஞர்கள். அவர்களும் தம் எழுத்துப் பயணத்தில் எதையும் சுமந்துகொண்டு செல்வதில்லை. தம் கண்ணில் தென்படும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களால் ஏதோ ஒன்றை புதுமையாகப் பார்க்கமுடிகிறது. அவர்கள் காதில் விழும் ஒவ்வொரு ஓசைத்துணுக்கிலும் அவர்களால் ஏதோ ஒன்றை புதுமையாகக் கேட்கமுடிகிறது. அந்தத் தரிசனங்களே அவர்களுடைய ஆக்கங்கள். காற்றைப்போல, வெளிச்சத்தைப்போல அவர்கள் அத்தரிசனங்களை உணர்ந்துகொள்கிறார்கள். அந்தத் தரிசனம் என்பது பயிற்சியின் வழியாக அடையும் வெறும் திறமையல்ல. அது அவர்களிடம் தானாகவே நிகழ்கிறது. அப்படி தானாக நிகழும் வகையில் ஏதோ ஒன்று அவர்களுடைய ஆளுமையில் படிந்துள்ளது. அந்த ஆளுமையைக் கொண்டிருப்பதால்தான் அவர்கள் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள்.

பிறிதொரு முறை அமையவே அமையாத ஒரு சின்னஞ்சிறிய தருணத்தில் ஒரு காட்சிக்குள் இன்னொரு காட்சியைக் கண்டடைகிறான் கவிஞன். அவன் யார் என்பதை நமக்குப் புரியவைக்கக் கூடியது அக்காட்சி. அவனுடைய இன்பமென்ன, துன்பமென்ன, ஆசையென்ன, கனவென்ன என எல்லாவற்றையும் முன்வைக்கிறது அக்காட்சி. அது அவனுடைய இன்னொரு அடையாளம். தன் முதல் கவிதைத் தொகுதியிலேயே தான் கண்டடைந்த தரிசனங்களை எவ்விதமான சிக்கலுமில்லாத மொழியில் அழகாக முன்வைக்கத் தெரிந்த கவிஞர் மதாருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.பலூன் இளைக்கும்போது கேட்கிறது
அகக்காற்றை அழைத்துப் போகும்
புறக்காற்றின் அவசரம்

நேரிடையாக எந்தப் பொருளையும் இந்த வரிகள் கொடுக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்த பரவசத்தைப் பகிர்ந்துகொள்கிறது. அந்தக் காட்சியனுபவமே அவர் பெற்ற தரிசனம். அது அவருடைய நெஞ்சை நிறைத்துவிட்டது. அந்த அனுபவத்தை ஒரு மூன்று வரிகளில் சொல்லிப் பார்க்க முயற்சி செய்கிறார்.

உண்மையில் அக்கணத்தில் ஒரு நாடகத்தின் மாபெரும் காட்சியொன்றை கவிஞர் கண்கள் பார்த்துவிடுகின்றன. வெகுநேரமாக பலூனுக்குள் இறுக்கமாக அடைக்கப்பட்டிருந்த காற்று வெளியேறும் வழி கிடைத்ததும் மெல்ல மெல்ல வெளியேற முயற்சி செய்கிறது. அடைபட்டிருந்த காற்றுக்கு விடுதலை கிடைத்ததை எப்படியோ அறிந்துகொண்ட புறக்காற்று வேகமாக பலூனை நெருங்கி வருகிறது. வெளியேறும் காற்றின் கைகளைப் பற்றி அவசரமாக அங்கிருந்து தொலைவாக அழைத்துச் செல்கிறது.

இந்த நேரடிப் பொருளைக் கடந்து காதல் கொண்ட இருவரின் வேகத்தை ஒரு வாசகன் இந்த வரிகளில் உணர்ந்துகொள்ளலாம். காற்றை காதலர்களாக்கி, ஒரு காதல் நாடகத்தை அரங்கேற்றுகிறது கவிஞரின் கவித்துவம். ’காயமே இது பொய்யடா இது காற்றடைத்த பையடா’ என்னும் பழைய வரியை நினைவில் வைத்திருப்பவர்கள் இந்தக் காற்றை உயிராகவும் பலூனை உடலாகவும் விரிவாக்கி வாசிக்கும் வாய்ப்பையும் இக்கவிதை வழங்குகிறது.மழை
குடையில்லை
மரம்
ஒதுங்கினேன்
குளிர்
குளிர்
இரு குயில் மரக்கிளையில்
இட்டுக்கொண்ட முத்தம்
இதமான சூடு
வெயில்
வெயில்
வெயில் பறந்தது
குக்கூ என்றபடி வானில்

பலூனிலிருந்து காற்று வெளியேறும் தருணம் போலவே, இதுவும் ஓர் அற்புதத்தருணம். காதல் தருணம். காதலைப் பெற்ற பரவசத்தால் பறக்கும் தருணம். குயில்களென்றாலும் காதல் முத்தத்தின் விசையால் அவை குளிரை மறந்துவிடுகின்றன. மழையையும் மறந்துவிடுகின்றன. அவற்றின் நினைவிலும் உடலிலும் பரவிய வெப்பத்தால், வானெங்கும் வெப்பமும் வெயிலும் நிறைந்துவிட்டதாகவே நினைத்துவிடுகின்றன. வெயிலாகவே மாறி பறந்துசெல்கின்றன. மழைக்கும் குளிருக்கும் ஒதுங்கி மரத்தடியில் நின்றிருக்கும் மனிதன் வெயில் பறந்துசெல்வதையும் பார்க்கிறான். ’காதலினால் சாகாமல் இருத்தல் கூடும், கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்’ என எழுதிய பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வெயில் பறந்தது என்னும் சொல்லாட்சி கவித்துவம் நிறைந்தது. குயில்களுக்குக் கிடைத்த காதலும் முத்தமும் மனிதனுக்குக் கிட்டாமல் போனது ஏன் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டால், கவிதை இன்னும் விரிந்து செல்ல வாய்ப்பிருக்கிறது.

இளமையில் எங்கள் கணக்காசிரியர் சொன்ன ஒரு குட்டிக்கதை அதன் அபூர்வத்தன்மையாலேயே இன்னும் நினைவில் பதிந்திருக்கிறது. ஒன்று என்னும் எண் தனித்திருக்கையில் அது மட்டுமே இந்த உலகில் எங்கெங்கும் பரவியிருக்கிறது. அதன் இருப்பும் மதிப்பும் மிகப்பெரியது. ஒன்றுமுதல் பத்து வரையிலான எண்களின் வரிசையில் ஒன்று என்னும் இடம் பத்தில் ஒரு பகுதியாகிறது. ஒன்றுமுதல் நூறு வரையிலான வரிசையில் அதன் இடம் இன்னும் மிகச்சிறியதாக, நூறில் ஒரு பகுதியாகிறது. ஒரு எண்ணின் மதிப்பு என்பது எப்போதும் அது எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்னும் தன்மையால் மட்டுமே அமைகிறது என்று சொல்லிவிட்டு மனிதனும் அப்படித்தான் மதிக்கப்படுகிறான் என்று அவர் உதிர்த்த புன்னகையை ஒருபோது மறக்கமுடியாது.
மதாரின் ஒரு கவிதை அந்த இளமைக்காலத்துப் புன்னகையை நினைவுபடுத்துகிறது.ஒரு பூக்கடையை
முகப்பெனக் கொண்டு
இந்த ஊர்
திறந்துகிடக்கிறது

பூக்கடைக்காரி
எப்போதும்போல வருகிறாள்
பூக்களைப் பின்னுகிறாள்
கடையைத் திறப்பதாகவும்
கடையை மூடுவதாகவும்
சொல்லிக்கொண்டு
ஊரையே திறக்கிறாள்
ஊரையே மூடுகிறாள்.

ஒரு கடை என்கிற அளவில் ஒரு பூக்கடைக்கு இருக்கும் மதிப்பு வேறு. கடைத்தெருவில் ஒரு கடை என்கிற அளவில் அதற்கு அமையும் மதிப்பு வேறாகும். ஊரின் தொடக்கத்திலேயே அமைந்திருக்கும் கடை என்ற தோற்றத்தால் அதற்கு அமையும் மதிப்பு வேறு. பூக்காரி தன் கடையைத் திறக்கும்போதெல்லாம் ஊரையே திறக்கிறாள். தன் கடையை மூடும்போதெல்லாம் ஊரையே மூடுகிறாள். கவிஞரின் கண்கள் ஒரு கடையின் கதவை ஊரின் கதவாக ஒரு கணத்தில் மாற்றிவிடுகிறது.

இதே கற்பனையின் நீட்சியாக இன்னொரு கவிதை.

சன்னலைத் திறந்ததும்
ஒரு பெரும் ஆச்சரியம்
ஆகாயத்தின் கதவா
என் எளிய சன்னல்?

ஒரு மரமும் ஒரு சிறுவனும் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு உரையாடிக்கொள்வதுபோன்ற ஒரு கவிதை இத்தொகுதியில் முக்கியமான கவிதைகளில் ஒன்று. ஒரு கற்பனையான தருணத்தை இக்கவிதையில் சித்தரிக்கிறார் மதார். ஒருபுறம் சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள். அச்சிறுவர்கள் விளையாட நிழல் கொடுத்தபடி பக்கத்திலேயே நிற்கின்றன மரங்கள். காலம் வேகவேகமாக மாற சிறுவன் வளர்ந்து பெரியவனாகிவிடுகிறான். அப்போதும் அந்த மரத்தடி இருக்கிறது. அந்த நிழல் இருக்கிறது. அதற்கடியில் சில சிறுவர்கள் விளையாடுகிறார்கள். புதிய சிறுவர்களின் விளையாட்டைப் பார்த்து தன் பால்யகாலத்தை அசைபோட்டபடி நினைவேக்கத்தில் ஆழ்ந்து நிற்கிறான் அவன். அவன் வீட்டில்தான் நவீனப்படுத்தும் வேலை நடக்கிறது. வீட்டு வாசலில் பொருத்துவதற்கென ஒரு புதிய கதவு தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்தக் கதவுக்காக பால்யத்தில் அவன் விளையாட நிழல் கொடுத்த மரங்களில் ஒன்றுதான் வெட்டப்பட்டு பலகைகளாக அறுக்கப்பட்டு இணைக்கப்படுகிறது. பால்யகாலத்தை அசைபோடும் மனிதனைப்போலவே, அதுவும் கடந்துபோன இறந்த காலத்தை நினைத்து ஏக்கத்தில் ஆழ்ந்துபோகிறது. மரமாகவே இருந்திருக்கலாம் என நினைத்து பெருமூச்சுவிடும் அந்தக் கதவுப்பலகை ஏதோ ஒரு கட்டத்தில் தனக்கு அருகில் நின்றிருக்கும் மனிதன் ஒரு காலத்தில் தன் காலடியில் விளையாடிய சிறுவன் என்பதைப் புரிந்துகொள்கிறது. பரவசம் ததும்பத்ததும்ப “ஏ குட்டிப்பயலே” என்று அவனை அழைத்து மகிழ, அக்கணத்திலேயே அந்த மரத்தை அடையாளம் கண்டுபிடித்துவிடும் அவனும் “நீங்க மரம்தானே?” என்று விசாரித்து மகிழ்கிறான்.இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும்
மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும்
நான்காவது பக்கம் நிறைவுற்றபோது
மரம் உறுதி செய்தது
தான் ஒரு கதவென
இந்த வேலை
இந்த மினுமினுப்பு
பயன்பாடு
எதுவுமே கதவுக்கு நிறைவில்லை
எதிரேஎ இருக்கும் மரத்தை
பார்த்தபடி இருப்பதைத் தவிர
நான் கதவைத் திறந்து
மரத்தின் கீழ் விளையாடும்
சிறுவர்களைப் பார்த்தபடி இருப்பேன்
கதவு மரத்தையும்
நான் சிறுவர்களையும்
அப்படி பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள்
காற்றடித்து
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டோம்
ஞாபகப்படுத்திச் சொன்னேன்
“மரம்தானே நீங்க?”
கதவு சொன்னது
“ஏ, குட்டிப் பயலே”

அஃறிணைக்கும் உயர்திணைக்கும் நினைவேக்க எண்ணங்கள் பொதுகுணமாகும்போது உருவாவதற்குச் சாத்தியமான நூற்றுக்கணக்கான தருணங்களில் ஒரு தருணத்தை கவிதையாக்கியிருக்கிறார் மதார். இதை வாசிக்கும்போது நம்மையறியாமல் நம் முகத்தில் தோன்றிப் படியும் புன்னகையே இக்கவிதை உருவாக்கும் பேரனுபவம்.
யாரோ தன்னை
வரைவதாக
அசைவற்று
நிலைகுத்தி நிற்கும்
இரயில் நகரத் தொடங்குகிறது
ஒவ்வொரு நிலையத்திலும்
ஓவியன் வருகிறான்
தூரிகையைத் தூக்கிக்கொண்டு

எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘யாரோ ஒருவனுக்காக’ கவிதைத்தொகுதி மிகமுக்கியமான ஒன்று. அவருடைய ஆக்கங்களைப் படிப்பவன் யாரோ ஒருவன். முகம் தெரியாதவன். அவன் எங்கோ இருக்கிறான். அந்த யாரோ ஒருவனுக்காகவே மனம் சதாகாலமும் கவிதைகளை ஓய்வின்றி எழுதியபடி இருக்கிறது. யாரோ ஒருவன் என்னும் படிமம் எல்லாப் படைப்பாளிகளும் விரும்பும் படிமம். அந்த யாரோ ஒருவனுக்காகவே எல்லாக் கலைகளும் உயிர்வாழ்கின்றன. யாரோ ஒருவன் கவிதையையும் கதையையும் படிக்கிறான். யாரோ ஒருவன் இசை கேட்கிறான். யாரோ ஒருவன் ஓவியன் தீட்டுகிறான். யாரோ ஒருவன் உரைகளைக் கேட்டு மகிழ்கிறான். முகமற்ற அந்த யாரோ ஒருவன் கலைஞர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு முகத்தை அமைத்துக் கொடுக்கிறான்.
அப்படிப்பட்ட யாரோ ஒருவன் மதாரின் கவிதைகளிலும் தென்படுகிறான். ஆனால் அந்த யாரோ ஒருவனை நோக்கி மதார் உரையாடவில்லை. மதாரை நோக்கி அந்த யாரோ ஒருவனும் வரவில்லை. அந்த யாரோ ஒருவன் யாரோ ஓர் ஓவியன். ரயிலடிக்கு வந்து அசையாமல் நிற்கும் ரயிலை ஓவியமாகத் தீட்டுபவன் அவன். எல்லா ஊர்களிலும் அப்படிப்பட்ட ஓவியர்கள் இருக்கிறார்கள். தம் ஊர்கள் வழியாக வந்து நின்று புறப்பட்டுச் செல்லும் ரயில்களை அவர்கள் வரைந்தபடியே இருக்கிறார்கள்.

ரயிலையும் ஓவியனையும் உடனடியாக உருவகமாகவோ படிமமாகவோ மாற்றி பொருளை உருவாக்கிக்கொள்ள அவசரம் தேவையில்லை. ஒரு கவிதையை வாசிக்க அவசரமே இல்லாத, அமைதியும் இனிமையும் ததும்பிய மனநிலையே தேவைப்படுகிறது. வேகமாக ஓடிஓடி வந்த ஒன்று ஒருகணம் அமைதியாக அசைவின்றி ஒரு பதுமைபோல, ஓவியனுக்கான தோற்றப்பொருளாக நின்றுவிட்டு, மறுகணமே மீண்டும் வேகமெடுத்து ஓடிவிடுகிறது ரயில். அசைவும் அசைவின்மையும் இணைந்து அபூர்வமாக ஒரு கண நேரத்தில் உருவாக்கும் காட்சிப்படிமம் அது. நம் கற்பனை வலிமைக்கேற்ற வகையில் அக்காட்சியின் மீது முடிவேயற்ற வகையில் பலவிதமான எண்ணங்களை ஏற்றி வெவ்வேறு விதங்களில் நாம் அதைப் புரிந்துகொள்ளலாம். எதையும் கற்பித்துக்கொள்ள விரும்பாமல் ஒரு கோட்டோவியத்தை ரசிப்பதுபோல கவிதையின் சித்தரிப்பைக் கண்டு பரவசமுறலாம். அந்தப் பரவசமே கூட ஒருவகையில் கவிதையின் தரிசனமே.பிரார்த்திக்கும் அம்மாவின்
முந்தானையைப் பிடித்திழுக்கும் குழந்தை
கண்ணாமூச்சி விளையாட்டின்
மூன்றாம் நபர் போல
கடவுள் உதட்டில் கைவைத்துப் புன்னகைக்கிறார்
குழந்தை புன்னகைத்தபடியே கடவுளைப் பார்க்கிறது

அம்மா கண் திறக்கவும்
கடவுள் விளையாட்டிலிருந்து
காணாமல் போகிறார்.

எந்த விளக்கமும் தேவையில்லாத வகையில் படித்ததுமே புன்னகைக்க வைக்கிறது இக்கவிதை. குழந்தையின் புன்னகையையும் தெய்வத்தின் புன்னகையையும் ஒருசேரக் கண்டுவிட்ட கவிஞனின் தரிசனம் வாசகனையும் புன்னகைக்க வைக்கிறது. கண்மூடி கண் திறப்பதற்குள் ஒரு நாடகம் நடந்து முடிந்துவிடுகிறது.
தமிழ்ச்சூழலில் கவிதையை வாசிப்பது என்பது பெரும்பாலும் அதன் பொருளென்ன, அது எதை உணர்த்துகிறது என்று தேடி அறிந்து நிறைவுகொள்ளும் ஒரு முயற்சியாகவே நிலைத்துவிட்டது. எழுதியெழுதி நிலைகொண்டுவிட்ட தனிமைத்துயர், கசப்பின் துளிகள், அரசியல்குரல்கள், காதல் பரவசங்கள், காதல் வேதனைகள், வறுமைக்காட்சிகள் கொண்ட களங்களைப்போலவே படித்துப்படித்து பயிற்சிபெற்றுவிட்ட களங்களும் இருக்கின்றன. நட்பின் அடிப்படையிலான புன்னகைகளைப்போல இத்தகு கவிதைகளே ஏராளமாக எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வரும் சூழலில் நல்ல கவிதைகள் மறைந்துபோகின்றன.
கவிதையின் பாதை என்பது ஒருபோதும் வண்டித்தடமல்ல. அது வண்ணத்துப்பூச்சியைப் போல, சிட்டுக்குருவியைப்போல விருப்பமான கோணத்தில் விருப்பமான திசையில் திரும்பிச் செல்லும் பாதை. ஒரு நல்ல கவிதையை வாசிப்பது என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை அக்கவிதையில் தேடிக் கண்டடையும் முயற்சியல்ல. மாறாக, அக்கவிதையின் வரிகள் விரியும் திசை வழியாக புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி நம் மனத்தையும் கற்பனையையும் விரிவாக்கிக்கொள்வதாகும். அப்போதும் நம்மால் முழுதாக அறிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவத்துளி அக்கவிதையில் எப்போதும் எஞ்சியே இருக்கும். அடுத்தடுத்த வாசிப்புகள் வழியாக ஒவ்வொரு துளியாக நாம் அதைப் பருகமுடியும். ஆழ்ந்த கவனத்தைக் கோரும் அத்தகு கவிஞர்களின் வரிசையில் மதாரையும் இணைத்துக்கொள்ளலாம். ’வெயில் பறந்தது’ தொகுதி அவருக்கு நல்ல அடித்தளத்தை வழங்கியிருக்கிறது.

(வெயில் பறந்தது – மதார். அழிசி பதிப்பகம், 18/8, சிவலோகநாதன் தெரு, பாளையங்கோட்டை திருநெல்வேலி – 2. விலை.ரூ.100 )Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here