Kalyaṇji (கல்யாண்ஜி) வெயிலில் பறக்கும் வெயில் (Veyilil Parakkum Veyil)
 இந்தத் தொகுப்புக்கு “நவம்பரில் எழுதியவை” என்று ஒரு ஸ்டைலான தலைப்பு வைத்தால் என்ன? என்று எண்ணத் தோன்றியது. இருப்பினும் நிறைவு வரிக் கவிதை தந்த ஈர்ப்பு “வெயிலில் பறக்கும் வெயில்” என்று வைத்திட தோன்றியது என தன்னுரையில் தந்திருக்கின்றார் கல்யாண்ஜி.
   சிறிது காலம் முடக்கப்பட்ட முகநூல் கணக்கு நல்லதாய் போயிற்று என்று எழுத, இன்னும் இன்னும் தொகுக்க, இன்னும் இன்னும் தூண்டியது என்கிறார்  இதேபோன்று “டாஸ்மார்க் கடைகளும் மூடிவிடும்” எனில் வேட்டி விலக குடிச்சாலையில் விழுந்து கிடக்க நேராது அல்லவா! என்பதில் சமூகத்தின் மீது கொண்ட  அக்கறை மட்டுமல்ல அந்த வருத்தமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
   மொழிபெயர்ப்பு  கவிதைகள் பல ஈர்த்திருக்கின்ற போதும் இக்கவிதைகளும் அதுபோன்று உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது உண்மை. இந்த தொகுப்பை சாம்ஸன் எனும் அற்புதனுக்கும், சத்யன் எனும் இசைக்கும் சமர்ப்பிக்கிறேன் என்பதில் தன்னுடைய தோழமை படைப்பாளிகள் மீது கொண்ட அன்பின் பரிமணமாகவே எண்ணத் தோன்றுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என்பது மெய்மைதானே.
மழை மீது கொண்ட கரிசனம் மழையின்றி எதுவும் இல்லை என்ற நிதர்சனம் பின் வருகின்ற கவிதை வரிகளில் வெளிப்படுவதை நாம் உணர இயலும்
“மீண்டும் அந்தக் கோவிலுக்குப் போ என்றார்கள்.
மீண்டும் அந்த நாகலிங்க மரத்தைப் பார் என்றார்கள். மீண்டும் அதன் பூவைக் 
கண்ணில் ஒற்றிக் கொள்ளச் சொன்னார்கள் 
எல்லாம் செய்தேன். 
என்னிடம் சொன்னது போல அவர்கள் மழையிடம் சொல்லவில்லை போல. 
மீண்டும் மழை மட்டும் பெய்யவில்லை”
   முதுமையும் இளமையும் சந்திக்கின்ற ஒரு இடம் பார்க்க பார்க்க அளவிட இயலாத இன்பம் தருவது.  இதை நாம் நம் வீடுகளில் கண்டிருக்கின்றோம். நம் தாய் தந்தையர் நம் பிள்ளைகளிடையே கொண்டுள்ள வாஞ்சையில் இதனை நாம் உணர்ந்திருக்கின்றோம். அதனை மெய்ப்பிக்கின்றன இந்த வரிகள்.
“தான் ஒரு முறை குச்சி ஐஸைச் சப்பி கொள்கிறார். 
மடியில் இருக்கும் பேரனுக்கு ருசிக்கக் கொடுக்கிறார்.
பேரன் அதைத் தாத்தாவின் உதட்டுக்கு 
நகர்த்துகிறான். 
சிரிக்கிற தாத்தா வாய் அகலத் திறக்கிறது 
இப்போது பேரன் மடியில் 
தாத்தா இருக்கிறார்”.
ஆம் .அவர் மடியில் நாம் இருப்பதைப் போல.
  வெயிலில் பறக்கும் வெயில் - வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம் | panuval.com
வெள்ளம் வரும் தாமிரபரணி ஆற்றுக் கரையில் கண்ட காட்சி இதுவாக இருக்கும் என எண்ணுகின்றேன். நீச்சல் தெரியாதவன் எவ்வாறு அந்த ஆனந்தத்தை கொண்டாடுகின்றான் என்பதனை இந்த வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.
|அவனுக்கு நீச்சல் தெரியாது வெள்ளம் வரும் ஆற்றை ரொம்பப் பிடித்திருக்கிறது 
பார்க்க ஆரம்பத்ததில் இருந்து இப்போது வரை 
போய்விட்டு வந்தாயிற்று அக்கரைக்கும் இக்கரைக்கும் 
நூறு தடவை.
இப்போதும் கூட அந்த சோப்பு நுரைக் குமிழிகளை ஊதும் மழலைகளைக் காணும் போதெல்லாம் நாமும் நமது சிறு பிராயத்தில் அவ்வாறு ஊதிய நினைவுகள் நம்மை புகுந்து ஒருவித ஆனந்தத்தை தரும். மீண்டும் அவ்வாறு நாம் ஊதிக்கொள்வோமா  என்ற ஒருவித வாஞ்சையினை நமக்குத் தூண்டிவிடும்.இதனை,
“குமிழிகளை ஊத யாரும் கற்றுத் தருவதில்லை 
அது ஒரு விளையாட்டுக்கு கூட அல்ல 
அது ஒரு வித தனிமையின் வாத்தியம்.
பெரிய குமிழிகள் முதலில் உடைவதை 
சிறிய குமிழிகள் வெகு தூரம் நகர்ந்து 
செல்வதை 
ஒரு வானவில் தன் நிறங்களை முறிப்பதை 
ஆனந்தம் என்ற சொல்லை வாசிப்பது போல” என்ற சொற்றொடர்களால் நம்முள் கடத்திவிடுகின்றார் கல்யாண்ஜி.
“பாலின் நீல நீள்திரிச்சுடர்” , 
“நிறை நாழி நெல் கூம்பில் ஒரே ஒரு தானியத்தில் அவள் முளை விட்டிருந்ததை”. இதுபோன்று ஆங்காங்கே தெரிகின்ற சொற்றொடர்கள் புழக்கத்தில் மறைந்து போன சொற்களை மீட்டுத் தருவதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இதுபோன்று சொற்றொடர்களை உருவாக்கம் செய்ய அவரால் மட்டுமே இயலும் என்பதனையும் நமக்கு நிருபிக்கிறது.
   53 கவிதைக்குள் அதற்குள் முடிந்து விட்டனவே என்கிற இந்த தொகுப்பு என்ற ஏக்கத்தினை “வெயிலில் பறக்கும் வெயில்” தருவது உண்மை. அடிக்கடி இந்த தொகுப்பின் வரிகளை நாம் சுவாசித்துக் கொண்டே  நகர்த்துவோம் வரும் நாட்களை.

நூலின் தகவல்கள்: 

நூல்: வெயிலில் பறக்கும் வெயில்
ஆசிரியர்: கல்யாண்ஜி
விலை: ₹.75
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

அறிமுகம் எழுதியவர்:

 

ப. தாணப்பன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “கல்யாண்ஜி எழுதிய “வெயிலில் பறக்கும் வெயில்” நூல் அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *