வெய்யோன் வெயில் – கோவை சதாசிவம்
” வெயிலோடு வருகிறாய் …
வியர்க்கிறது எனக்கு …
புனைவோடு ஒரு கவிதையை எழுதுவது எளிது. புறயுலகில் வெயிலோடு வாழ்வது கடினம்.
திரையிசைப்பாடலொன்றில் ” காலங்களில் அவள் வசந்தம் ” என்று பெண்ணை இளவேனில் காலத்தோடு ஒப்பிடுகிறார் கண்ணதாசன். எல்லாவற்றுக்கும் மேலாக மகாகவி பாரதி ” வெயிலைக்காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை! ” என்கிறார்.
கவிஞர்கள் வெயிலைக் கொண்டாடுகிறார்கள். பொது சமூகம் வெயிலை வெறுக்கிறது! வெறுக்கும் அளவிற்கு வெயில் கொடுமையானதா..?
குளிருக்கும், கோடைக்கும் இடையே வரும் இளவேனில் காலம் இயற்கை தரும் பெருங்கொடை. இந்தப் பருவத்தில்தான் தாவரங்கள் பூக்கின்றன. காய்கள் கனிகின்றன.உயிர்கள் பசியாற உணவு விளையும் காலம் இளவேனில் என்பதால் பாரதி வெயிலை உணவோடு உருவகப்படுத்துகிறார். மிதவெப்ப நிலங்களில் வாழும் மனிதர்களுக்கு ஓர் ஆண்டுக்குத்தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை இளவேனில் பருவம் வழங்குகிறது.
” என்பிலதனை வெயில் போலக்காயுமே அன்பிலதனை அறம்”
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் சிற்றுயிர்களை கடும் வெயில் காய்ந்து வருத்துமே என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சின்னஞ்சிறிய உயிர்களின் வாழ்வு குறித்து சிந்தித்துள்ளது வள்ளுவம்.
கடந்த பத்தாண்டுகளாக இளவேனில் பருவம் மேலதிக வெப்பத்தில் தடுமாறுகிறது! மாமழை போற்றி, வெயிலோடு விளையாடி, பருவங்களை எதிர்கொண்ட மக்கள் வெயில் கண்டு, மழை கண்டு, கலக்கமடைகிறார்கள்!
இளவேனில் காலம் பல தாவரங்களைப் பூக்க வைக்கின்றன. பூக்கும் தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடத்த பூச்சிகளும்,பூச்சிகளை உணவாக்க பறவைகளும் தாவரத்தை மொய்க்கும் இளவேனில் காலம் நெருக்க முடியாதபடி சூடேறி வருகிறது!
கோடை காலங்களின் இயல்பிற்கு மீறிய வெப்பம் கொளுத்துவதால் பூப்பதை தவிர்த்து விடுகின்றன தாவரங்கள். பூக்களைத்தேடி வரும் பூச்சிகளும், பூச்சிகளைத்தேடி வரும் பறவைகளும் ஏமாற்றமடைகின்றன! இது பூச்சிகளுக்கும் பறவைகளுக்குமான ஏமாற்றமன்று. உணவு வலையிலுள்ள பல்லுயிர்களுக்குமான ஏமாற்றம் என்பதை மனித குலம் உணர வேண்டும்!
சுட்டெரிக்கும் கோடை வெயிலை எதிர் கொள்ள முடியாமல். தொழில் நுட்பம் கையளித்த குளிர்பதனப்பெட்டி, குளிரூட்டிகளைப் பயன் படுத்தி கடந்து விடலாம் என்று மனிதர்கள் போடும் தப்புக்கணக்கில் பூமி மேலும் வெப்பமயமாகிறது. செயற்கை குளிரூட்டும் கருவிகளில் இருந்து வெளியேறும் நச்சுக்கள்தான் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமிக்குள் அனுமதித்தன என்பதை வெகு மக்கள் அறிந்து கொள்ளவில்லை ..!
நாட்டில் இதுவரை கண்டிராத அளவில் 127- டிகிரி பாரன் ஹீட் தலைநகரம் டெல்லியில் பதிவாகியுள்ளது வெயிலின் தாக்கத்தை நமக்கு உணர்த்துகிறது! வெப்ப அலை பாதிப்பில் ஒரே வாரத்தில் ஆயிரத்திற்கும் மேலான மக்கள் மடிந்து போனார்கள் என்பதை வெறுமனே செய்தியாக கேட்டு நகர்ந்து போகும் மனநிலையில் நாமில்லை!
இந்தியா உட்பட கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வெப்ப அலை அடுத்தடுத்த ஆண்டுகளில் வீசக்கூடும். அதில் பெரியவர்களை விடவும், குழந்தைகளே அதிகம் பாதிப்படைவார்கள். கடந்த இரண்டாண்டு கால வெப்ப அலை வீச்சால் சுமார் 24- கோடி குழந்தைகள் குருதிநாளப்பாதிப்பால் துயரப்பட்டார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
நகரமயமாக்கலும், பசுமைப்பரப்பு குறைதலும் இந்தியாவின் இன்றைய வெப்பநிலை உயர்விற்கு காரணமாக உள்ளன. காலநிலை மாற்றத்தை நினையூட்டிக்கொண்டே இருந்தார்கள் சூழலாளர்கள். அதனை பொருட்படுத்தவேயில்லை அதிகார வர்க்கம். நிரந்தரமற்ற வளர்ச்சிக்கு இயற்கையை பலி கொடுப்பதில் காட்டும் வேகத்தை பாதுகாப்பதில் காட்டவில்லை என்பதே உண்மை!
இன்றைய முதலாளித்துவ உற்பத்தி இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பணம் பெற எதனையும் ஈவுஇரக்கம் பாராது செய்து கொண்டேயிருக்கும்.
பல நூறு ஆண்டுகள் சீராக இருந்த கரிக்காற்றின் அளவான 300- பி.பி.எம் (பார்ட்ஸ் பெர் மில்லியன்) கடந்த முப்பதாண்டுகளில் 410- பி.பி.எம் அளவில் உயர்த்தி சீரான வெப்பப் பதிவை சீரழித்த தொழிற்புரட்சி இந்தியா போன்ற நாடுகளில் அதிக பட்சமாக 320- வரை இருக்க வேண்டிய கரிக்காற்று உமிழ்வை அதிகரித்ததின் விளைவே பருவம் தவறிய மழை. புயல், நிலச்சரிவு இன்ன பிற இடர்பாடுகள் .
கேட்கும் திறனைப்போலவே மனிதர்களுக்கு வெப்பம் தாங்கும் திறனும் உள்ளது. 37- டிகிரி பாரன் ஹீட் வெப்பத்தை இருபது வயதிலிருந்து நாற்பது வயது உள்ளவர்களால் தாங்க முடியும். குழந்தைகள், நோயர்கள், முதியவர்கள், கருவுற்றவர்கள் இந்த வெப்பத்தை எதிர் கொள்வது ரொம்பவும் சிரமம். அடுத்தடுத்த ஆண்டுகளில் 42- டிகிரி பாரன் ஹீட் வரையிலும் வெப்பம் இந்தியாவில் பதிவாகும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
பன்னெடுங்காலம் பூமியில் சீராகப் பதிவான வெப்பத்தால் பல்லுயிர்களும் வாழ்ந்தன. மனிதர்கள் தொடங்கி … மரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், கடல்வாழ் உயிரிகள் அனைத்தும் செழித்தன. அறுபது ஆண்டுகளில் படிப்படியாக நவீனம் பெற்ற தொழில் வளர்ச்சி இயற்கை கட்டமைத்திருந்த கனிமங்கள் வெகுவாகச்சுரண்டித் தீர்த்தன. அதன் விளைவாக பருவங்கள் திசைமாறின.
மழைக்காலங்களில் நீர்த்தேவையை நிறைவு செய்து கொள்ளும் பறவைகள், விலங்குகள் நீர்நிலைகள் வறண்ட பிறகு … தாகம் தணிக்க அல்லாடுகின்றன. வெப்பமயமாகுதலின் பாதிப்பு இரண்டு மாதங்களில் முடிந்து போவதன்று! நீர்நிலைகள் விரைவாக ஆவியாகுதலின் பொருட்டு ஐந்தாறு மாதங்கள் வரையிலும் நீர் அருந்தும் பறவைகள், விலங்குகள் நீரின்றி நகர்ப்புறங்களை நாடி வரும் நிலை ஏற்படுகிறது .விளையும் நிலங்கள் தரிசாகப்போகிறது ,குடிநீர் பற்றாக்குறை நீடிக்கிறது . இவற்றோடு நீர் நிலைகளை நம்பி வாழும் எண்ணற்ற சிற்றுயிர்கள்அழிந்து போகின்றன!
தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையால் தொழில் முடங்கிப்போகுதல் ,வேளாண் உற்பத்தி குறைவதால் விலைவாசி உயர்தல் போன்ற நடைமுறைச்சிக்கல்களையும் வெப்பமயம் ஏற்படுத்துகிறது!
இன்று பூமி இவ்வளவு கொதித்துக்கொண்டிருப்பதிற்கு ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பாளியாக வேண்டும். மட்டுமீறிய நுகர்வுப்பண்பாட்டு அடிமைகளாக மக்கள் மாறி வருவதை உணர்ந்து ,தேவைக்கேற்ப வாழும் அறத்தை கடைபிடிக்க வேண்டும். கோடைகாலங்களில் உயரும் மின்சாரத்தேவையை நிலக்கரி எரிப்பில் மூலமாகவே பெறுகிறது. வாகனப்பெருக்கமும் தொழிற்சாலை புகையும் பூமிக்கு பெரும் பகையாக மாறி வருகிறது. புதிப்பிக்கத்தக்க வளங்களை கையாளும் நுட்பத்தை மனிதர்கள் கண்டறிய வேண்டும்.
நிரந்தரவளர்ச்சி ,நீடித்த வாழ்வு, நோயற்ற சமூகம் என்று உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் அனைத்து நாட்டுத் தலைவர்களும் அவரவர் நாட்டுக்குள் நுழைந்ததும் அதனை மறந்து விடுகிறார்கள். உலகளாவிய உற்பத்திப்பண்பாட்டில் ஒரு மாற்றத்தைகொண்டு வராவிடில் பூவுலகில் உயிர்களின் வாழ்வு நிலை அற்றுப்போகும்! இன்னும் பத்தாண்டுகளில் மேலும் பல பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியது வருமென்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இன்னும் பிறவா தலைமுறையிடம் மாசில்லா பூமியை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களின் கையில் உள்ளது.
கட்டுரையாளர் :
– கோவை சதாசிவம் (சூழலியல் செயற்பாட்டாளர்)
(பிறப்பு: செப்டம்பர் 23, 1961) , எழுத்தாளர், கதைசொல்லி, ஆவணப்பட இயக்குனர், சூழலியல் செயற்பாட்டாளர், பேச்சாளர் என பன்முக ஆளுமையாளராக உள்ளார். பொருளாதார பின்புலம் அற்ற குடும்ப சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளி கல்வியை முடித்து கொண்டு, கடைசல் எந்திரம் என சொல்லப்படும் லேத் பட்டறையில் வேலை பார்த்தார். பள்ளிக்குச் சென்று கற்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்துகொண்டே இருந்ததால் அதை ஈடு செய்ய சிறு சிறு புத்தகங்கள், மாத, வார சஞ்சிகைகளை வாங்கி வாசிக்க ஆரம்பித்தார். அந்த தொடர் வாசிப்பு தான் அவருள் இருந்த எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்தது என்று கூறுகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதியவர் 1982-ல் கோவையில் இருந்து திருப்பூருக்கு இடம் பெயர்ந்தார்.
அவரது முதல் கவிதை நூல் சுவடுகள் என்ற பெயரில் 1983-ல் வெளியானது. 30 சிறு கவிதைகள் கொண்ட தொகுப்புக்கு விலை 75 பைசா. ஆரம்ப காலத்தில் இவர் எழுதியவை அனைத்தும் வாழ்வியல் மற்றும் சமூகம் சார்ந்த கவிதைகள். இவர் திருப்பூர் வந்த போது, அது அழகிய கிராமமாக இருந்து, பெரிய ஏற்றுமதி தொழில் நகரமாக உருமாறியதை உடன் இருந்து பார்த்தவர். ஒரு கட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை வேலையிலிருந்து விலகி சைக்கிள் கடை வைக்கிறார்.
ஆனால் முதல் நாள் பார்த்த இயற்கை அடுத்த நாள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் செயற்கையாக உருமாற்றம் அடைந்ததையும், அதன் காரணமாக காஞ்சிமாநதி என்று சங்ககாலத்தில் பெயர் பெற்ற நொய்யலாறு சாயப்பட்டறை கழிவுகளால் பொலிவு இழந்ததையும் பார்த்து இந்த நகரை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று அவர் சிந்தித்ததன் விளைவுதான் ”பின்னல் நகரம்” என்ற கவிதைத் தொகுப்பு. 1990- களின் இறுதியில் நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாதலின் விளைவாக சுற்றுச்சூழல் வீழ்ச்சியை தமிழில் முதலில் பேசிய நூல் இதுதான். கடந்த 20 வருடங்களாக பள்ளி கல்லூரிகளில் குழந்தைகள் மாணவ மாணவியருக்கு இயற்கை சார்ந்த புரிதலை கொண்டு சேர்த்துக் கொண்டுள்ளார். பசுமை இலக்கியம் எனப்படும் இயற்கை சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளது. ஐந்து ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களையும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலான போது, ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கோவை சதாசிவம் அவர்களின் “பறவைகள் பலவிதம்” என்னும் கட்டுரை முதல்பாடமாக அமைந்திருந்தது.1978-ஆம் வருடம் முதற்கொண்டு தமுஎகசவின் உறுப்பினராகத் தொடரும் கோவை சதாசிவம் அவர்கள், தமுஎகச மட்டுமல்லாமல் பல பசுமை இயக்கங்கள் சூழல் சார்ந்த சிந்திப்பும், பங்களிப்பும், அது சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர். இவரது பூச்சிகளின் தேசம், ஆதியில் யானைகள் இருந்தன, உயிர்ப்புதையல், சில்லுக்கோடு, தவளை (நெறிக்கப்பட்ட குரல்), நம்ம கழுதை நல்ல கழுதை போன்ற நூல்கள் தனித்த கவனம் பெற்று பள்ளி, கல்லூரி பாடங்களிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.