விடை தேடும் அறிவியல் (Vidai Thedum Ariviyal)
எழுத்தாளர், அறிவியல் மீது ஆர்வம் கொண்டவர், கிழக்கு பதிப்பகத்தின் துணை ஆசிரியராக பணியாற்றுபவர், உயிர் எலான் மஸ்க், சிதிலங்களின் தேசம், மிரட்டும் மர்மங்கள் ஆகிய நூல்களை எழுதியவர், இந்து தமிழ் திசையில் மாயாபஜார் பகுதியில் எழுதிய அறிவியல் கேள்வி பதில் பகுதிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் நூல் இது.
அறிவியலை மிக எளிய மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் எழுதியிருக்கிறார். இதைப் படித்தவுடன் மாணவர்களின் அறிவியல் தேடல் அறிவு அதிகமாகும் என்பது உறுதி. ஆசிரியர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல் என்று தனது வாழ்த்துரையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வாழ்த்தியிருக்கிறார்.
அறிவியல் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. உயிரினங்களின் செயல்பாடுகள் அனைத்திலும் நிறைந்து இருக்கிறது அறிவியல். ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களுக்கு முழுமையான பதிலைத் தேட வைப்பது அறிவியல். உலகம் தோன்றியதில் இருந்து உயிரினங்கள் வளர்வது வரை, பூச்சிகள் வாழ் நிலையில் தொடங்கி பூகம்பம் நேர்வது வரை என பிரபஞ்சத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் ஒளிந்து இருக்கிறது அறிவியல்.
நம் மனதிற்குள் எழும் எண்ணற்ற வினாக்களுக்கு விடை தேட வைப்பதும் அறிவியலே அத்தகு அறிவியலில் 25 தலைப்புகளில் ஏன் எதற்கு என்ற வினாக்களுக்கான விடையை அறிவியலின் துணை கொண்டு எளிய மொழியில் மிகத் தெளிவான விளக்கங்களுடன் வாசிப்போருக்கு விளக்கி இருக்கிறது இந்த நூல்.
ஓரறிவு உயிரிகள் முதல் ஆறறிவு உயிரிகளான மனிதர்கள் வரை இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த பூமியையும் அதன் இயற்கை வளங்களையும் தனக்கென பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் ஒரு கட்டத்தில் தனது பேராசையின் உச்சத்தில் இயற்கையை அழிக்கத் தொடங்குகிறான். அத்தகு நிலையில் இந்த உலகில் நம் இடம் என்ன என்பதை உணரும் போது சக உயிரிகள் மீதான கரிசனமும் பேரன்பும் மனிதனுக்குள் உருவாக ஆரம்பிக்கிறது. அத்தகு விதைகளை ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் விதைப்பதற்கு அறிவியல் துணை செய்கிறது.
மனிதர்கள் தங்களது சமூக வாழ்வில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். அதேசமயம் தங்களது தனி மனித நிலையில் பல்வேறு விதமான மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு தமது அறிவு நிலையை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகு சூழலில் அவர்களது உள்ளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவியல் முதன்மையான கருவியாகத் துணை நிற்கிறது.
ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் அறிவியல் தொடர்பான காணொளிகள், கதைகள், விளக்கங்கள் எளிதில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அறிவியல் தொடர்பான கட்டுரைகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன. அந்த வகையில் மாணவர்களின் உள்ளங்களில் அறிவியலை முழுமையாக புகுத்துவதற்கும் அதன் வழியே அவர்கள் தங்கள் வாழ்வில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்கும் இந்த நூல் உதவி செய்கிறது.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது ஒற்றை உயிரியிலிருந்து கிடைத்த அடுத்தடுத்த உயிரிகளின் இனப்பெருக்கம் என்பதை அறியத் தரும் முதல் கட்டுரை உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் உறவினரே என்பதை நிறுவுகிறது. மரபியல் மாற்றங்களும் டிஎன்ஏ அமைப்பின் சிற்சில வேறுபாடுகளுமே விலங்கினங்களின் வகைகளைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் ஆதி ஒரே ஒரு ஒற்றை உயிரி என்பதை உணரும்போது உயிரினங்களுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் பேதம் என்பதை எண்ணிப் பார்க்க கூட மனம் வராது.
சூரியனை மையமாக வைத்து இயங்கும் சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பூமியில் காற்றும் நீரும் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன. அந்த வகையில் பூமியில் நீர் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் பனிக்கட்டியால் ஆன வால்மீன்கள் பூமியின் மீது மோதியதால் பூமியில் நீர் தோன்றி இருக்கலாம் என்றும் நீர் வளம் கொண்ட கனிமப் பொருட்கள் பூமிக்கு அடியில் பூமியின் மையத்தில் ஏற்படும் அழுத்தத்தால் சுருங்கி அதிலிருந்து நீர் வெளி வந்திருக்கலாம் என்ற விளக்கமும் அருமையானதொன்று.
உலகில் சுமார் 87 லட்சம் உயிரினங்கள் காணப்படுகின்றன. அதில் 15 சதவீத உயிரினங்களுக்கு விஷத்தன்மை உள்ளன. நச்சுகளில் பலவிதமான நச்சுகள் காணப்படுகின்றன. சில நச்சுகள் ரத்தத்தை உறைய வைப்பது சில நச்சுகள் மூளை நரம்புகளை பாதித்து செயல் இழக்க வைப்பது சில நச்சுகள் தசைகளை பாதிப்படைய வைத்து கொல்லக் கூடியவை. எனவே விஷம் என்ற அடிப்படையில் அது உயிரைக் கொல்லும் என்று அர்த்தம் செய்து கொள்ளுதல் தவறு என்ற அறிவியல் விளக்கம் உயிரினங்களின் விஷத்தன்மை பற்றி முழுமையாக அறியத் தருகிறது.
மனிதர்கள் பாம்பைக் கண்டால் ஏன் பயக்கிறார்கள் என்பதற்கான அறிவியல் விளக்கமும் இந்தக் கட்டுரையில் தெளிவுற விளக்கப்படுகிறது.
உயிரினங்களின் தூக்கம் பசி வளர்சிதை மாற்றம் இனப்பெருக்கம் போன்றவை உயிரியல் கடிகாரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. நில ஒளியில் ஏற்படும் மாற்றம் உயிரினங்களின் இனப்பெருக்கம் இரைதேடல் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மாற்றி அமைக்கிறது. அந்த அடிப்படையில் உயிரினங்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் தன்மை நிலவொளிக்கு உண்டு என்பது அறிவியல் தரும் ஆச்சரியமான தகவல்.
வண்ணங்களில் நீலம் பச்சை சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களே அடிப்படையானவை. இந்த வண்ணங்களை அடிப்படையாக வைத்து பிற வண்ணங்கள் உருவாகின்றன. ஆனால் நாம் காணும் அனைத்துப் பொருட்களிலும் காணப்படும் வண்ணங்கள் என்பது முழுமையான வண்ணங்கள் அல்ல. நமது விழியில் ஏற்படும் மாறுபாடுகளும் விழி உணரும் தன்மையுமே நாம் பார்க்கும் வண்ணங்களின் நிறத்தை அறியத் தருகின்றன.
விலங்குகள் மரணத்தை எண்ணி வருந்துமா?
தாவரங்கள் பேசிக் கொள்ளுமா?
நாம் ஏன் கனவு காண்கிறோம்?
பேய்களும் பிசாசுகளும் ஏன் எல்லோருக்கும் தெரிவதில்லை? உங்களின் உண்மையான எடை எவ்வளவு? மனிதர்கள் அழுவது எதற்காக?
தங்கம் எங்கிருந்து வந்தது?
வெப்பமின்றி வாழ முடியுமா? தாவரங்களுக்கு அறிவாற்றல் உண்டா? நுண்ணுயிரிகள் நம் எதிரியா?
காற்று எப்படி உருவாகி வீசுகிறது?
ஏன் செல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்? ஏன் சில உயிரினங்கள் தங்கள் குட்டிகளையே உண்கின்றன?
என பல்வேறு தலைப்பிட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் அறிவியல் ரீதியாகவும் உண்மையின் அடிப்படையிலும் அமைந்து நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கின்றன.
இந்தப் புத்தகத்தின் வழியே நமக்குள்ளும் நிறைய வினாக்கள் எழும்படியான சிந்தனையைத் தூண்டி இருப்பது ஆசிரியரின் கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம். ஒவ்வொரு மனங்களிலும் ஏற்படும் சந்தேகங்கள் அறிவியல் ரீதியாக விளக்கப்படுகையில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிதாக அமைகிறது. பயம் என்ற நிலையிலிருந்து விடுபட முடிகிறது. துணிச்சலும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. அந்த அடிப்படையில் விடை தேடும் அறிவியல் (Vidai Thedum Ariviyal) நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய ஆற்றலை விதைத்து செல்கிறது. அதன் வழியே அறிவியலின் துணை கொண்டு அருமையானதொரு வாழ்வை கட்டமைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
ஆறறிவு பெற்ற மனித குலமே இந்த உலகத்தில் மிகப்பெரிய பலம் என்பதை உணர்ந்து கொள்ளும் அதே வேளையில் நாம் ஒவ்வொருவரும் இயற்கையைச் சார்ந்து வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே நாம் வாழும் பூமியை நமது சுற்றுப்புறத்தை பாதுகாத்து எதிர்வரும் தலைமுறைக்கு சிறப்பானதொரு வாழ்வை அமைத்துத் தர உதவ முடியும் என்பதையும் இந்த நூல் விளக்கிச் செல்கிறது.
நூலின் தகவல்கள்:
நூல் : விடை தேடும் அறிவியல் (Vidai Thedum Ariviyal)
ஆசிரியர் : நன்மாறன் திருநாவுக்கரசு (Nanmaran Thirunavukkarasu)
பதிப்பகம் : இந்து தமிழ் திசை
பக்கங்கள் : 112
விலை : ₹120.00
முதல் பதிப்பு ஜூலை 2024
நூல் அறிமுகம் எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Can I get a hard copy of this book? Where to buy this book?
அறிவியல் தேடலை படிக்க வேண்டிய நூல். நூல் ஆசிரியருக்கும் நூல் அறிமுகம் செய்த ஆசிரியரும் மனமார்ந்த நன்றிகள்