நூல் அறிமுகம்: ‘விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5’ பேரா.மு.இராமசுவாமியின் ஐந்து வீரியமிக்க நாடகங்களின் தொகுப்பு – பெ.விஜயகுமார்நூல்: ” விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5 “
ஆசிரியர்: மு.இராமசுவாமி
வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் 
விலை: ₹190

இன்றைக்கு சனாதன இந்து மதத்தின் கைகள் ஓங்கியுள்ள சூழலில் தந்தை பெரியாரின் தேவை முன்னெப்போதையும் விட அதிகம் தேவைப்படுகின்றது. ஒரு நூறாண்டு காலம் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த பகுத்தறிவுப் பகலவனின் கோட்பாடுகளை நாடகங்கள் வடிவிலே இன்னுமொரு நூறாண்டு காலம் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் வகையில் பேரா.மு.ராமசுவாமி சொல்லியுள்ளார். பட்டேல், விவேகானந்தர், பாரதியார், தாகூர், சுபாஷ் சந்திர போஸ் என்று இந்தியாவின் மிகப் பெரிய ஆளுமைகளை எல்லாம் தனக்குச் சாதகமானவர்களாக வளைத்தெடுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோற்றுப் போயிருப்பது பெரியாரிடம் மட்டும்தான். பெரியாரின் தடி அவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.

இறந்து பல்லாண்டுகள் ஆன பிறகும் தமிழகத்தின் ஊர்கள்தோறும் வெறுமனே கற்சிலையாக மட்டும் நிற்காமல் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் நீங்கா நினைவாக பெரியார் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். தமிழர்கள் அவரை நாத்திகவாதியாக மட்டுமே பார்க்காமல் சமூகப்போராளியாக, பெண்ணியவாதியாக, தன்மானத்தின் அடையாளமாகவே பார்த்து வருகின்றனர். அவருக்குப் பிறகு அமைப்புரீதியாக திராவிட கழகம் பிரிந்து செயல்பட்டாலும் அதன் வீரியம் குறைந்து விடவில்லை. தமிழகத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் தோன்றினாலும் அவற்றின் உட்கூறு பெயரளவிலாவது திராவிடம் என்பதாகவே இருக்கின்றது. தொடர்ந்து பல வழிகளிலும் பெரியாரியச் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி கலைவடிவில் நிலைபெறச் செய்துள்ளார் திரைப்படக்கலைஞர் ஞானசேகரன். பேராசிரியர் மு.ராமசுவாமியின் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் மற்றுமொரு கலைவடிவமாக தமிழகமெங்கும் அரங்கேறி வெற்றி பெற்றது. நாடகவெளியில் அயராது உழைத்து வருகின்ற பேரா.முரா பெரியாரியத்தை மக்களிடத்திலே தொடர்ந்து எடுத்துச் செல்லும் அரிய பணியை மேற்கொண்டு வருவது பாராட்டுதலுக்குரியது. முரா எழுதியுள்ள ‘கலகக்காரர் தோழர் பெரியார்’, ‘தோழர்கள்’, ‘ஏகன் –அநேகன்’, ‘….விடாது கருப்பு’, ‘வகுப்‘பறை’’ ஆகிய ஐந்து நாடகங்களையும் ஒவ்வொரு தமிழனும் படித்துப் பயனடைவதோடு முடிந்த இடங்களில் எல்லாம் அவற்றை அரங்கேற்றிடவும் முயல வேண்டும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் இந்த ஐந்து நாடகங்களின்  தொகுப்பை ’விடாது கருப்பு; பெரியாரிய நாடகங்கள்-5’ என்ற தலைப்பில் பாங்குடன் வெளிக்கொணர்ந்துள்ளது.

C:\Users\Chandraguru\Desktop\6-3.jpg

கலகக்காரர் தோழர் பெரியார்

வாசகர்கள் கைகளில் பனுவலாகப் படிக்கக் கிடைப்பதோடு அரங்கில் அமர்ந்து பார்த்து மகிழ்வதற்கும் ஏதுவான இலக்கிய வகையாக  நாடகம் இருக்கின்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மதுரைக் கிளை சார்பில் 2004ஆம் ஆண்டு ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் அரங்கேற்றப்பட்டது. அப்போது அரங்கப் பொறுப்பில் இருந்த காரணத்தால் நாடகத்தை முழுவதும் பார்த்து மகிழ்வதற்கான வாய்ப்பு கிட்டாமல் போனது. அன்றைய தினம் நான் எவ்வளவு இழந்துள்ளேன் என்பதை இப்போது நாடகத்தைப் படித்து முடிந்த போது உணர்ந்தேன்.

‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் அதற்குரிய நேர எல்லைக்குள் பெரியாரைப் பற்றிய முழுமையான பரிமாணத்தைக் கொடுக்கிறது. நாடகத்தில் முரா கையாண்டுள்ள உத்தி தமிழ் நாடகவெளியில் புதுமையானது. ‘அமைதி! கோர்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ (Silence! The Court is in Session) என்ற நாடகத்தில் மராத்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் அந்த நாடகத்தின் ஒத்திகைக் காட்சிகளையே நாடகமாகப் படைத்திருப்பார். அதே போன்று நடிகர்களின் ஒத்திகைக் காட்சிகளே நாடகமாகப் பரிணமிக்கின்ற அற்புதமாக ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகமும் இருக்கின்றது. ஒத்திகை என்பதால் சாதாரணமாக நாடகங்களில் இருக்கின்ற அங்கம், காட்சி போன்ற பிரிவுகள் எதுவும் இல்லை. ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தின் தொடக்கக் காட்சி சேக்ஸ்பியர் நாடகங்களின் தொடக்கக் காட்சிகளுக்கு இணையாக இருப்பதைக் காண்கின்றோம். பொதுவாக நாடகம் தொடங்கும்போது பார்வையாளர்கள் அரங்கினுள் நுழைந்து இருக்கைகளில் அமரும் நேரம் என்பதால் அரங்கம் இரைச்சலும், சலசலப்பும் நிறைந்ததாக இருக்கும். எனவே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நாடகத்தின் தொடக்கக் காட்சி பரபரப்பாகவும், விறுவிறுப்புடனும் இருந்திட வேண்டும். அவ்வகையில் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகமும் ஒத்திகைக்காக கூடுகின்ற நடிகர்களின் காரசாரமான விவாதங்களுடன் தொடங்குவதால் அரங்கத்தில் அமைதியை நிலவச் செய்து பார்வையாளர்களின் கவனத்தை அது தன்வசம் ஈர்த்து விடுகிறது.

நாடகத்தின் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் நடிகர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. யார் பெரியார் கதாபாத்திரத்தை ஏற்பது? நாடகத்தின் நோக்கம் என்ன, வரையறை என்ன என்பது பற்றியெல்லாம் நடிகர்கள் உரத்த குரலில் விவாதிக்கிறார்கள். அது நாடக ஒத்திகை என்பதால் அங்கே கூடியிருக்கும் பதினோரு நடிகர்களும் வெறும் நம்பர்களாலேயே அறியப்படுகிறார்கள். நடிகர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து கொண்டே நடத்தவிருக்கும் நாடகத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஒத்திகையின் இறுதியில் நாடகத்தின் நெறியாளருடன் பத்திரிக்கையாளர்களின் நேர்காணல் அமைவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

C:\Users\Chandraguru\Desktop\Periyar Thozhar.jpg

சிறிய சர்ச்சைக்குப் பிறகு பதினோராம் நம்பர் நடிகர் பெரியார் பாத்திரம் ஏற்று நடிப்பது என்று முடிவாகிறது. பெரியாரைப் போல் நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் பெரியவர் என்பதால் அவர் பெரியார் வேடம் போடுவதற்கு அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். அடுத்து நாடகத்தின் தலைப்பு குறித்து சண்டை நடக்கிறது. நாடகத்தின் பெயர் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்றதும் ”அது என்ன கலகக்காரர்; பெரியார்? ’தந்தை பெரியார்’ என்று சொல்லுங்கள். கலகக்காரர் என்று எப்படி சொல்லலாம்” என்கிறார் ஒருவர். ”அது என்ன  பெரியாரை ’பெரியார்’ என்றழைக்காமல் ‘தோழர். என்றழைப்பது” என்று மற்றொருவர் சண்டைக்கு வருகிறார். பெரியாராக நடிக்கவிருக்கும் பதினோராம் நம்பர் நடிகர் பொறுமையுடன் விளக்கம் சொல்லி அனைவரையும் அமைதிப்படுத்துகிறார். நாடகத்தின் நோக்கம் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே மேடையில் ஏற்றுவதாக இல்லை என்பதை தொடக்கத்திலேயே விளக்கி விடுகிறார்கள். 95 ஆண்டுகாலம் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை 95 நிமிட நாடகத்தில் நடித்துக் காட்டிட முடியாது என்ற சிரமத்தையும் அவர்கள் எடுத்துச் சொல்கிறார்கள்.

அடுத்து பெரியாராக நடிப்பவர் தான் சிகப்புக் கலர் சட்டை அணிந்து கொள்வேன் என்றதும் மீண்டும் சர்ச்சை கிளம்புகிறது. பெரியாரின் அடையாளம் கருப்புச் சட்டையும், கைத்தடியும், கண்ணாடியும் தானே! பெரியாருக்கு சிகப்புச் சட்டை எவ்வளவு பொருத்தமானது என்பதற்கான விளக்கம் அவருடைய வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளிலிருந்தே அளிக்கப்படுகிறது. மார்க்சின் பொதுவுடைமைக் கட்சியின் அறிக்கையை தமிழில் முதலில் வெளியிட்டதே பெரியாரின் ’குடியரசு’ பத்திரிக்கைதானே. சமநீதி, சமவுடைமை இரண்டையும் மார்க்ஸ் வலியுறுத்தியதைப் போலவே பெரியாரும் வலியுறுத்தியுள்ளாரே. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று நம்பிய தோழர்கள் தானே இருவரும். இவ்வாறாக நாடகத்தின் தலைப்பு பற்றியும், நோக்கங்கள் பற்றியும் விவாதங்கள் முடிந்ததும் நாடகத்தின் ஒத்திகை விறுவிறுப்புடன் நடக்கிறது.

வைக்கம் போராட்டக் காட்சிகளை ஒத்திகை பார்க்கிறார்கள். அடுத்து பெரியார் ஒரு சிறுமியுடன் கடவுள் நம்பிக்கை குறித்து விவாதம் நடத்தும் காட்சி! பெரியாரின் விவாதத்தை சிறுமி ஏற்றுக் கொள்வதைப் போல் பெரியாரும் அந்தச் சிறுமியின் அறிவுரையைக் கேட்டு குளித்து சுத்தமாக இருப்பேன் என்கிறார். சேரான்மாதேவி குருகுலத்தில் வ.வே.சு.அய்யர் கடைப்பிடித்த சாதிய பாகுபாடு பற்றிய காட்சியும் அரங்கேறுகிறது. பெரியாருக்கும், ஒரு சாமியாருக்கும் இடையில் சுவாரசியமான தர்க்கம் அடுத்து நடக்கிறது. தர்க்கத்தில் தோற்று சாமியார் இடையில் ஓடிவிடுகிறார்.

C:\Users\Chandraguru\Desktop\download.jpg

நாடக மேடையின் ஒரு பகுதியில் தீண்டாமைக் கொடுமையின் குறியீட்டுக் காட்சி திரையில் காட்டப்படுகிறது. “குளித்து முழுகிவிட்டு, விபூதி பூச்சோ, பட்டை நாமமோ விதிப்படி அணிந்து, வைதீர்களைப் போல வேஷமணிந்து மாமிசம் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் தங்கள் நிலை உயர்ந்துவிடும் என்று தீண்டாப்படாதவர்களில் சிலர் எண்ணிக் கொள்கிறர்கள். இது மற்றவர்களை ஏமாற்ற நினைத்து தங்களையே ஏமாற்றிக் கொள்கின்ற பைத்திக்காரத்தனமாகும்” என்று திரையில் வருகின்ற காட்சிக்குப் பொருத்தமான விளக்கத்தை பெரியார் அளிக்கிறார்.

அடுத்து திரையில் பெண்ணடிமைக் கொடுமையின் குறியீட்டுக் காட்சி ஒளிப்படமாகக் காட்டப்படுகிறது. பெரியார், “பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்குரியவர்கள் என்கின்ற எண்ணமே  தோன்றவில்லை. பெண்களை கடவுள் ஆண்களுக்கு அடிமையாக இருந்திடவே படைத்திருப்பதாகவும்; அதுவே இயற்கை விதி எனவும் கருதிக் கொள்கிறார்கள்” என்று ஆதங்கப்படுகிறார்.

இறுதியில் பத்திரிக்கை நிருபர்களுடான நேர்காணலில் நாடகத்தின் நெறியாளுநர் பெரியாருக்கு ஏன் நாடகத்தில் சிகப்புச் சட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான விளக்கத்தை தருகிறார். “பெரியார் ஒரு கம்யூனிஸ்ட்டுன்னு வெறும் வார்த்தைகள்லெ சொல்லியிருந்தா அது காத்துலெ கரைந்து போயிருக்கும். நாடகம் ஒரு பார்வை வடிவ ஊடகம். சிகப்புச் சட்டை பார்வை வடிவமா உங்களுக்குள்ளெ ஒரு கேள்வியை எழுப்பிக்கிட்டே இருக்கணும். அதுக்குத்தான் சிகப்புச் சட்டை. பெரியார் சட்டை தான் கருப்பு… சட்டைக்குள்ளிருந்த மனசெல்லாம் சிகப்பு தாங்க”  என்று முடிக்கிறார். மேடையில் பெரியாராக நடிப்பவர் சிகப்புச் சட்டையுடன் நடுவில் நிற்க மற்ற நடிகர்கள் கருப்புச் சட்டையில் அவரைச் சுற்றி நிற்கிறார்கள். பெரியார் உருவாக்கின கருப்புக் கொடியின் நடுவில் சிகப்பு வட்டம் தெளிவாக மேடையில் தெரிகிறது. சிகப்புங்கற புரட்சி வளர வளர கருப்புங்கற இழிவு மறையும் என்று நாடகத்தின் நெறியாளுநர் சொன்னதும் திரை விழுகிறது.

தோழர்கள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேரா.முரா தோற்றுவித்த நந்தனார் திறந்தவெளி அரங்கில் 2009ஆம் ஆண்டு ‘தோழர்கள்’ குறுநாடகம் அரங்கேற்றப்பட்டது. உலகெங்கிலும் உரிமைக்கான போரில் இன்னுயிர் ஈந்த தியாகிகளை அந்த நாடகம் அறிமுகப்படுத்துகிறது. நாடகத்தின் தொடக்கக் காட்சியே பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வெடிகுண்டுகளின் வெடிச் சத்தத்தைத் தொடர்ந்து ஒரு மெல்லிய சோக ஒலி கேட்கிறது. அத்துடன் மங்கலான ஒளி பரவுகிறது. மேடையின் நடுவில் முட்டியை மடித்து உயர்த்திய கை ஒன்று பிரம்மாண்ட அளவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அரங்கம் முழுவதும் முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகள் தென்படுகின்றன. புல்லாங்குழல் ஒலி இயைய சோக இசையின் பின்னணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கையின் பின்பக்கத்திலிருந்து ஓர் உருவம் வெளிவந்து உயர்ந்து நிற்கும் கையின் முன் நின்று வீர வணக்கம் செய்கிறது. ஆம்; அந்தக் கை வீரத்தின், தீரத்தின், தியாகத்தின், போர்க் குணத்தின் அடையாளமாகும். “ஒடுக்கப்பட்ட இனத்திற்கான விடுதலைப் போரில் உதிர விதையாய்ப் புதைக்கப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்” என்று அந்த உருவம் உரக்கக் குரல் கொடுக்கிறது. திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம்! அந்த உருவம் அலறியபடி கீழே விழுகிறது. ஒரு பாடல் மெல்லியதாகக் கேட்கிறது. ”அன்பே சிவம் என்றால்/ அணுகுண்டுகள் எதற்காக? ஏசுவின் வேதம் அன்பென்றால்/ ஏவுகணைகள் எதற்காக? அல்லா சொன்னது நேசமென்றால் எல்லாச் சண்டையும் எதற்காக? பௌத்தம் விதைத்தது அமைதியென்றால்/ கிளஸ்டர் குண்டுகள் எதற்காக? என்ற பாடல் கேட்கிறது. கீழே விழுந்த உருவம் மீண்டெழுந்து “நான் திரும்பி வருவேன்/ லட்சலட்சமாய்க் கோடி கோடியாய்ப் பெருகி நான் திரும்பி வருவேன்” என்று சொன்னதும் அரங்கின் பல்வேறு திக்குகளிலிருந்தும் அதே வசனத்தைக் கூறியபடி நடிகர்கள் மேடைக்குள் வருகிறார்கள். மேடையில் கேட்ட குரல் யாருடையது? வீர முழக்கமிட்டது யார்? என்று அந்த உருவத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து நடிகர்களும் கேட்கிறார்கள்.

“நீங்கள் கேட்பது மாபெரும் வீரத்தோடும் மானம் காக்கும் தீரத்தோடும் தோழமை உணர்வை நமக்குள் பாய்ச்சிய நம் முன்னோரின் குரல். பயத்தைச் சுட்டெரிக்கும் மீட்பனின் குரல். பயத்தால் எதிரியை உறைய வைக்கும் கலகக் குரல்” என்கிறது அந்த உருவம். “அப்படியென்றால் நீ கலகக்காரனா?” என்று நடிகர்களில் ஒருவன் கேட்டதும் உருவம், “ஆம்! கலகக்காரன் தான். கலகக்காரன் தானே நியாயக்காரனாக இருக்க முடியும்; நியாயம் கேட்பவன் கலகக்காரனாகத்தானே இருக்க முடியும்” என்கிறது. தன்னைச் சுற்றி நிற்கும் நடிகர்கள். ஒவ்வொருவர் பெயருக்குப் பின்னாலும் ஒரு வீரக் கதை, தீரக் கதை, தியாக வரலாறு இருப்பதை உருவம் சுட்டிக் காட்டுகிறது. பகத்சிங், பூலித்தேவன், அழகுமுத்து, கட்டபொம்மு, சின்ன மருது, தீரன் சின்னமலை, திப்பு சுல்தான், ஸ்பார்ட்டகஸ், நேதாஜி, கீழ்த்தஞ்சையில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடிய வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், தோழர் சீனிவாசராவ், களப்பால் குப்பு என்று  தியாகிகளின் பெயர்களை நடிகர்கள் சொல்லச் சொல்ல உருவம் அவர்களின்  வீரஞ்செறிந்த வரலாற்றை விவரிக்கிறது. போராளிகளின்  வரலாற்றை உருவம் உணர்ச்சிமிகு மொழியில் சொல்லி முடித்ததும் நடிகர்கள் மேடையில் நிற்கும் உயர்ந்த ’கை’யின் முன் நின்று உறுதிமொழி ஏற்கிறார்கள். கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளான “விழவிழ எழுவோம்! விழவிழ எழுவோம்! ஒன்றுவிழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!” என்று முழக்கத்துடன் நாடகம் முடிகிறது.

கீழ்த்தஞ்சையில் சாணிப்பால், சவுக்கடிக்கு எதிரான களப்போராட்ட நிகழ்வுகளை நினைவுகூரும் உருவம் கீழ்வெண்மணியில் 44 தலித் உழைப்பாளிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் குறிப்பிடாமல் மறந்து விட்டது ஏனோ? இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கார்ப்பரேட் கழுகுகள் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொண்டு இந்திய வளங்களைச் சூறையாடுவதையும், அதற்கு எதிராகப் போராடும் தோழர்களையும் ’உருவம்’ குறிப்பிட்டிருப்பின் ‘தோழர்கள்’ வரலாறு நிச்சயம் முழுமை அடைந்திருக்கும்.விடாது கருப்பு

ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் மதவெறியும், காவி அரசியலும் தலைவிரித்தாடும் இன்றைய இந்திய அரசியல் சூழலில் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம் ஆகிய சித்தாந்தங்களே பாதுகாப்பு அரணாக நிற்கின்றன. காவியை எதிர்கொள்ள சிகப்பு, கருப்பு, நீலம் வண்ணங்களின் சங்கமம் தேவையாகிறது. ‘விடாது கருப்பு’ குறுநாடகம் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வாக 2016 டிசம்பர் மாதம் காவிக்கு எதிரான கருப்பு என்பதாய் அரங்கேறியது. சம்பவங்கள் ஏதுமின்றி கருத்தியல் விவாதங்களாக மட்டுமே நகர்ந்து செல்லும் நாடகம் என்றாலும் ’விடாது கருப்பு’ வாசகர் மனதைக் கட்டிப் போடுகிறது. மேடையிலே ”கதை வேணுமா! கதை!” என்று கூவி விற்றுக் கொண்டு வருகின்ற விற்பனையாளனைக் கண்டு கட்டியங்காரன் ஆச்சரியம் மேலிடப் பார்க்கிறான். ”கதையும் விற்பனைக்கு வந்தாச்சா”, என்று கட்டியங்காரன் கேட்டதும் விற்பனையாளன் ”ஆம்; எல்லாம் விற்பனைக்கு வந்தாச்சு” என்கிறான். “தோழர்! எல்லாம் சந்தைமயம் என்றாச்சு. அனைத்தும் வணிகப் பொருட்களே! தண்ணீர், காற்று, அன்பு, பாசம், காதல், நேசம், பக்தி எல்லாமே விற்பனைப் பொருட்களே!”. என்று விவாதத்தில் மற்றொருவன் குறுக்கிட, அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக விவாதத்திற்குள் வந்து சேருகின்றனர்.

’தோழர்’! என்று ஒருவர் அழைத்ததும் தோழமை எனும் மந்திரச் சொல் குறித்துப் பேசுகிறார்கள். “உலகில் எங்கோ ஓரிடத்தில் நடக்கும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பாய் எனில் நீயும் என் தோழனே!” என்ற புரட்சியாளன் சேகுவாராவின் கூற்றிற்கு இணங்க புரட்சியின், நீதியின், நேர்மையின் அடையாளமாய் ’தோழமை’ விளங்குகிறது. தோழமைக்கு வயதில்லை, பாலியல் பாகுபாடில்லை, போர்க்குணம் மட்டுமே அதன் அடையாளமாக  இருக்கிறது. ”தோழர் என்பது சமத்துவம் பேசுகிற அரசியல் சொல்” என்றதும் உரையாடல் அடுத்து அரசியல் குறித்து நகர்கிறது. அரசியலா! வேண்டாம்! என்று ஒதுங்குவது எவ்வளவு அர்த்தமற்றது. அரசியல் இல்லாதது எது? ’அறம் செய்ய விரும்பு” என்பதிலுங்கூட அரசியல் இருக்கு. அரசியல் வேண்டாம் என்று கூறுவதிலும் அரசியல் இருக்கு. விற்பனையாளனின் மூட்டைக்குள் இருக்கும் கருப்புச் சட்டையைப் பார்த்து அனைவரும் வியக்கின்றனர். கருப்புச் சட்டைக்கும் ஒரு கதையிருக்கு என்று விற்பனையாளன் சொன்னதும் விவாதம் கருப்பு நிறம் குறித்தாகிறது. கூட்டம் நிறையச் சேர்ந்ததும் கட்டியங்காரன் எல்லோரையும் அருகிலிருக்கும் பூங்காவுக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கிருக்கும் கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டு நாடகத்தைத் தொடங்குகிறான். ”கதை சொல்லப் போறேன்; கருப்புச் சட்ட கதை சொல்லப் போறேன்! சுய மரியாதை, சமதர்மம் பேசுகின்ற கதை சொல்லப் போறேன்! ஆதிக் கதை, எங்கதெ, உங்கதெ, வாச்சாத்தி, வெண்மணி, திண்ணியம், உனா, டெல்லி வரைக்கும் கதையிருக்கு! சொந்த இனத்தின் சோகம் துடைக்க வந்த சட்டைதான் கருப்புச் சட்டை” என்று பாடியதும் பெருங்கூட்டம் சேருகிறது.

C:\Users\Chandraguru\Desktop\Mu Ramasamy.jpg

கருப்பு என்பது வெறும் நிறமல்ல… அது எதிர்ப்பு! கொண்ட கொள்கையில் உறுதி என்பதைக் குறிக்கும் நெருப்பு! சிகப்பு என்பதும் வெறும் நிறமல்ல… அது புரட்சி! எதையும் கேள்வி கேட்கக் கூடாது என்பது மனுநீதி! எதையும் கேள்வி கேட்கணுங்கற சமூகநீதியைச்  சொல்லிக் கொடுக்கிறது கருப்புச் சட்டை. இல்லாத கடவுள மற; இருக்குற மனுசனெ நினைன்னு கத்துக் கொடுக்கறது இந்தக் கருப்புச் சட்டைதான்! கருப்புச் சட்ட விழிப்பா இருக்கணும்! ஒழிஞ்சு போச்சுனு நினைச்ச குலக்கல்வி மீண்டும் வருது; கல்விக் கொள்கையா வேஷம் கட்டிக் கொண்டு! காவி மயமா நீங்க விரிஞ்சா, அதுக்கு மேலெ கருப்பு மயமா நாங்களும் விரிவோம்ல… கருப்புன்னா ஒடுக்கப்பட்டவரோட கோபம்! கருப்புன்னா ஒடுக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பு! சொந்த இனத்தின் சோகம் துடைக்க வந்த கருப்புச் சட்டையின் பெருமை குறித்தும், காவியின் ஆபத்து குறித்தும், அதை வெல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பாடிச் செல்கின்றனர் அனைவரும்! ஆம்: “தொடர்ந்த விழிப்புணர்வே விடுதலை பெறுவதற்கு நாம் கொடுக்கவிருக்கும் விலை” என்று ஆங்கிலக் கவிஞன் மில்டன் சொல்வது போல் தொடர்ந்த விழிப்புணர்வினால் மட்டுமே காவியை எதிர்த்த போராட்டத்தில் நாம் வெல்ல முடியும். கருப்பும், சிகப்பும், நீலமும் இணைந்தால் மட்டுமே இது சாத்தியம். ’விடாது கருப்பு’ என்று உரக்கச் சொல்வோம்!

வகுப்’பறை’ 

வகுப்’பறை’ நாடகம் மதுரை டோக்பெருமாட்டி கல்லூரி தமிழ் உயராய்வு நடுவத்தின் ‘வேயா முற்ற’த்தில் 2020 பிப்ரவரி மாதம் 16-18 ஆகிய மூன்று நாட்கள் மொத்தம் ஆறு முறை அரங்கேற்றப்பட்டது. டோக்பெருமாட்டி கல்லூரி ஆசிரியர்களும் மாணவிகளும் இணைந்து ஒரு வெற்றிகரமான வகுப்பறை எப்படி இருந்திட வேண்டும் என்பதை அந்த நாடகத்தில் காட்சிப்படுத்துகின்றனர். மறைந்த சஃப்தர் ஹஷ்மி தன்னுடைய ’ஜன நாட்டிய மன்ச்’ எனும் தெரு நாடக இயக்கத்தில் பல புது முயற்சிகளைச் செய்து வெற்றி கண்டவர். 1970களில் தில்லி தெருக்களில் அரசியல் நாடகங்களை நிகழ்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்திரா காந்தி கொணர்ந்த நெருக்கடி நிலையை விமர்சித்து அவர் நிகழ்த்திய நாடகம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ’உரக்கப் பேசு’ (Hulla Bhol) எனும் நாடகம் தில்லி மக்கள் மனதில் உருவாக்கிய மாற்றத்தைக் கண்டு காங்கிரஸ் கட்சியினர் கதிகலங்கினர். நாடகம் எவ்வளவு வலுவான கலை வடிவம் என்பதை உலகுக்கு உணர்த்திய நாடகமது. அச்சத்தின் உச்சத்திலிருந்த காங்கிரஸ் குண்டர்கள் 1989 ஜனவரி மாதம் முதல் நாள் தில்லியில் தெருநாடகம் நடத்திக் கொண்டிருந்த சஃப்தர் ஹஷ்மியை  கொடூரமாகத் தாக்கிக் கொன்றனர். இன்றும் ஜன நாட்டிய மன்ச் அமைப்பு சிறப்புடன் செயல்பட்டு நாடகத்துறையில் சாதனைகளைப் புரிந்து வருகிறது. ஜன நாட்டிய மன்ச் நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன் அதன் நெறியாளரும், நடிகர்களும் வட்டமாக உட்கார்ந்து நாடகத்தின் கருப்பொருள், கதை, வசனம் குறித்து விவாதிப்பார்கள். அவர்களின் மனந்திறந்த உரையாடலில் இருந்தே நாடகம் பிறக்கும். வகுப்’பறை’ நாடகமும் டோக்பெருமாட்டி கல்லூரி ஆசிரியைகளும், மாணவிகளும் நாடக நெறியாளர் முராவுடன் கொண்ட உரையாடல் வழி உருவானதே!

வகுப்’பறை’ நாடகம் ’ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி’ நூலினை எழுதிய பாவ்லோ ஃபிரேயர்; ‘எனக்குரிய இடம் எங்கே?” நூலினை எழுதிய பேரா.ச.மாடசாமி; ’இது யாருக்கான வகுப்பறை?’ நூலினை எழுதிய ஆயிஷா நடராஜன் ஆகியோர் முன்வைக்கும் கல்வியியல் சிந்தனைகள் வழிநின்று எழுதப்பட்ட நாடகமாகும். உரையாடல் வழியிலான கல்வியே சிறந்த கல்வி முறையாகும் என்கிறார் பாவ்லோ ஃபிரேயர். வகுப்பறைகளில் ஜனநாயகம் நிலவிட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார் பேரா.ச.மாடசாமி. ஆசிரியர் மாணவர் உறவின் உன்னதத்தை உணர்த்துகிறார் ஆயிஷா நடராஜன்.  முதலாண்டு பி.ஏ. வகுப்பில் நடக்கும் இரண்டு மணி நேர வகுப்பறைக் காட்சிகளையே வகுப்’பறை’ நாடகம் காட்சிப்படுத்துகிறது. மாணவிகள் இரண்டு தமிழ் ஆசிரியைகளுடன் நடந்த உரையாடலின் வழி கல்வி பெறுகிறார்கள். ஆசிரியைகள் இருவரும் வகுப்பறை ஜனநாயகத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஆசிரியர்-மாணவர் இடையே காணப்படும் தோழமை உறவு அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும் விளங்குகிறது.

அக்கல்லூரியில் ஐம்பதாண்டுகளுக்கு முன் படித்த கேதரின் என்ற மாணவி ஒருவர் ஆசிரியரின் அனுமதியுடன் இன்றைய மாணவிகளுடன் அமர்ந்து மன அமைதி பெற வருகிறார். பழைய நினைவுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த வயதான பெண்மணிக்கு தான் படித்த காலத்தில் இருந்தது போலவே இன்றைய வகுப்பறை இருப்பது கண்டு வியக்கிறார். சாதி,மத பாகுபாடுகளின்றி கேதரின், ராஜலெட்சுமி, மும்தாஜ் பேகம் எனும் மூன்று மாணவிகள் பாசத்துடனும் நேசத்துடனும் பழகுவது தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை அவருக்கு நினைவூட்டுகிறது. வகுப்பறையில் ஏகலைவன் நாடகத்தை நடத்தி மாணவிகள் அசத்துகிறார்கள். துரோணச்சாரியார் குருதட்சணையாக ஏகலைவனிடம் அவனுடைய கட்டை விரலைப் பெறுகிறார். துரோணரின் சாதுரியத்தை “அந்தணரே! நீட்டாக முடித்துவிட்டீர்கள்! நீட்டாக!”, என்று அர்ஜுனன் அவரைப் பாராட்டுகிறான். ‘நீட்’ என்று அவன் சொல்வது இன்றைய NEET தேர்வைக் குறிப்பதாகும் என்பது எளிதில் புரிந்து விடுகிறது. ஆம்; நீட் தேர்வு இன்றைய ஏகலைவர்களிடமிருந்து கல்வியைப் பறிப்பது தானே! மனு(அ)தர்மத்தை மீட்டுருவாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். சதி அம்பலமாவதுடன் நாடகம் முடிகிறது.

ஏகன் அநேகன்

’ஏகன் அநேகன்- ஒரு கலாச்சார அரசியல் பாலபாடம்’ கொரோனா தொற்றுநோய் காலத்தில் எழுதப்பட்டு கணையாழி நவம்பர்-2020 இதழில்  வெளியாகி இன்னமும் மேடையில் அரங்கேற்றப்படாத நாடகம். பேரா.முத்துமோகனின் வேதங்கள் பற்றிய விமர்சன நூல்களையும், பெரியாரின் சித்தாந்தங்களையும் வாசித்திருந்த பின்னணியில் இந்த நாடகத்திற்கான கரு உருவானது என்று பேரா.முரா குறிப்பிடுகிறார். நூலின் முன்னுரையில் இந்நாடகம் பற்றி புக் டே இணைய இதழ் வெளியிட்டுள்ள என்னுடைய  விமர்சனக் கட்டுரை இணக்கப்பட்டுள்ளது. “வைதீகக் கலாச்சார அரசியலின் ஒரு பால பாடம்” என்ற பிரகடனத்துடன் எழுதப்பட்டுள்ள இக்குறு நாடகம் சமகால மதவெறி அரசியலையும், சித்தாந்த மோதலையும் வெளிப்படையாகப் பேசிடும் அரசியல் விவரண நாடகம் (A Political Extravaganza). இந்திய ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் பாஜக தன்னுடைய எஜமானரான ஆர்எஸ்எஸ் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி இந்திய சமூகப் பொருளாதார அரசியல் சூழலைச் சீரழித்து வருவதன் சிரமங்களை நாள்தோறும் அனுபவித்து வருகிறோம். இந்தியாவின் பெருமையான பன்முகக் கலாச்சாரத்தை புறந்தள்ளிவிட்டு ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் அராஜகத்தைப் பார்க்கிறோம். இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், ஒரே கல்விக் கொள்கை என்று ஒற்றைத்தன்மையைப் புகுத்தி வருவதை நாம் காண்கிறோம். ”ஆட்சியாளர்களின் தாரகை மந்திரமாக ‘ஏகம், புனிதம், ஒற்றை’ என்பன ஓங்கி ஒலிக்கக் கேட்கிறோம். அவற்றையே தனது நாடகத்தின் கருப்பொருளாக்கியுள்ளார் மு.ரா.

C:\Users\Chandraguru\Desktop\download (1).jpg

‘ஏகன் – அநேகன்’ நாடகம் ’தொல்குடி’, ’மூப்பர்’, ’வேதக்குடி’ என்ற மூன்றே கதாபாத்திரங்கள் வழி அரிய செய்திகளை எளிய முறையில் சேர்க்கிறது. கிரேக்க நாடகங்களில் மேடையின் ஓரத்தில் நின்று  கதாபாத்திரங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து நாடகத்தை நகர்த்திச் செல்லும் ’கோரஸ்’ (Chorus) எனும் உத்தியை சிறப்புடன் இந்நாடகத்தில் முரா பயன்படுத்தியுள்ளார். கதாபாத்திரங்களின் உரையாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே கதையின் போக்கைச் சொல்லிச் செல்லும் ‘குரல்’ ஒன்று உறுத்தல் ஏதுமின்றி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுவே நாடகத்தின் கருப்பொருளை அறிமுகப்படுத்தி வாசகர்களின் ஆர்வத்தைத்  தூண்டி விடுகிறது. மூப்பரை நோக்கி பெருங்கூட்டமாக தொல்குடியினர் ஓடோடி வருவதை அறிவிக்கிறது. சனாதன மதத்தின் வன்முறையில்  பாதிக்கப்பட்ட தொல்குடியினர் வலி பொறுக்காமல் தங்களின்   குறைகளை முறையிட்டு மூப்பனிடம் ஆறுதல் பெறுவதற்கு ஓடோடி வருவதைப் பறைசாற்றுகிறது.

தொல்குடியினர் தங்கள் குலத்தின் ஆதிக் குடும்பனை, பெரியவரை முக்காலத்தையும் அறிந்த பெரியாரை வணங்கி நிற்கின்றனர். (நாடக ஆசிரியர் குறிப்பிடுவது தந்தை பெரியார் என்பதை வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம்) தம் குலக்கொழுந்துகள் குறை தீர்க்க, வலிக்கு மருந்திட்டு ஆற்றிட மனமுவந்து “உங்கள் குறையென்ன குழந்தைகாள்?” என்று மூப்பன் வினவுகிறார். “எங்கள் மொழியே சிறைப்பட்டுள்ளது தலைவா! என் செய்வோம்? வைதீகக் கலாச்சார அரசியலின் மேலாதிக்கம் எங்களை விளிம்பிற்கும் வெளியே தள்ளியுள்ளது. மனவேதனையில் நொந்து போயுள்ளோம்” என்று அழாத குறையாகச் சொல்லி நிற்கின்றனர். ஏகம், புனிதம், ஒற்றை என்று பசப்பி எம்மை ஒதுக்கவும் ஒடுக்கவும் செய்கின்றனர்” என்று அவர்கள் முறையிட்டதும், மூப்பன் அவர்களைச் சாந்தப்படுத்தி அமரச் செய்து, ”அநேகராய் சிதறிக்கிடக்கும் நீங்கள் ஒன்றுபட்டு நின்று அவர்களின் அதிகார அரசியலை எதிர்கொள்ளுங்கள்.  பிறப்பொக்கும் என்பது நம் கணக்கு. அவர்கள் அரசியல் முரண்வயப்பட்டது. புனிதம் – அபுனிதம், சுத்தம் – அசுத்தம். என்று சொல்லி தீண்டாமைத் தீயை வளர்ப்பதாகும். அவர்களின் மநு தர்மசாஸ்திரம் ஒழுக்கமென்பதும் இதைத்தான்” என்று விளக்கம் அளிக்கிறார்.

தொல்குடியினர் தங்களின் மூத்தகுடியின் முன்பாக முறையிட்டு நிற்கும் அந்த நேரத்தில் சும்மா இருக்குமா வேதக்குடி. கைபர்- போலன் கணவாய் வழிவந்த வேதக்குடி காலங்காலமாய் கோலோச்சிய இம்மண்ணின் அனைத்துப் பூர்வகுடிகளையும் ஓரங்கட்டும் அரசியலை முன்னெடுக்கிறது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டும் கதையானது. வேதங்கள் எனும் புதுமைகள் பேசி தொல்குடிகளை மட்டம் தட்டி ஒதுக்க நினைக்குது வேதக்குடி. ”வேதங்கள் சாஸ்வதமானவை என்கின்றனரே, வேதக்குடிகள்!” என்கிறது ’குரல்’. ”எது சாஸ்வதம்? மாற்றம்தானே நிரந்தரம். மாற்றத்தை நோக்கி நகருங்கள்! கேள்வி கேளுங்கள்! கேள்விகளே பூட்டிய கதவுகளைத் திறக்கும் திறவுகோல்கள். ’எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதை நமக்கு அய்யன் சொல்லிக் கொடுத்த மந்திர பாடம் உள்ளதே! நம்முடைய மரபு மண்ணைக் கொண்டாடுவது. அவர்களின் கடவுள் வானத்தில் இருக்கிறார். ஓரிடத்தில் நிலையாய் தங்கி வாழும் தொல்குடிகள் கொண்டாடுவது அவர்கள் வாழும் நிலம், காடு, மலை ஆகியனவே. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அடிப்படையில் அதற்கேற்ற மரம், செடி, கொடி, பறவை, விலங்கு இவைகளைப் போற்றிப் பாதுகாத்து நிலத்தில் காலூன்றி வாழும் வாழ்வே தொல்குடிகளின் வாழ்வாகும்” என்கிறார் மூப்பன். ”அப்படியென்றால் வேதக் குடிகளுக்கு நிலம் இல்லையா?”  என்று வியப்புடன் கேட்கின்றனர் தொல்குடிகள். “நாடோடி மக்களுக்கு ஏது இடம்? ஆதிக்குடியினரைப் போல் ஓரிடத்தில் வாழாதவர்கள் அவர்கள். ஆதிக்குடி மனிதர்களிடமிருந்து தங்களைத் தனிப்படுத்தி மனதளவில் வேறுபட்டவர்களாக காட்டிக் கொண்டார்கள். தங்களை அவதாரிகள் என்று சொல்லிக் கொண்டார்கள்” என்று மூப்பன் உரையை முடிக்கும்முன் “கபடதாரிகளா? அவதாரிகளா?” என்று தொல்குடிகள் கோபத்துடன் கேட்கின்றனர். ஆதிக்குடியினரிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை நிலைநிறுத்தவே ‘புனிதம்’ பற்றிப் பேசுகிறார்கள். தமது அடையாளங்கள் பிறமக்களோடு கலந்து போய்விடக் கூடாது என்பதில் ஆரியர்கள் கவனமாய் இருந்தனர். தீட்டு, புனிதம் என்று கூறி தள்ளி நின்றனர். ஆதிக்குடியினரைத் தள்ளி வைத்தனர்.

இவர்களின் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் ஆரியர்களுக்கும், பூர்வீக ஆதிக்குடிகளுக்கும் இடையிலான மோதல்களைச் சித்தரிக்கும் காவியங்களே. அவர்களின் புனித நூலாம் பகவத்கீதை புரோகிதத்தைப் பேணிப் பாதுகாக்கும் அரசியல் கடமையையும், பண்பாட்டுக் கடமையையும், பொருளாதாரக் கடமையையும் சத்திரியர்களுக்கு உணர்த்துகிறது. பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் பணிக்கிறது. இதுபோன்று ஏராளமான கலாச்சாரக் கடமைகள் சத்திரியர்களைச் சேர்ந்தவை என்று சாதுர்யமாகப் பேசி நம்ப வைத்தது. இப்போதும் ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற சத்திரியர்கள் இதைத்தானே சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். சமஸ்கிருதமயமாக்குவதைத்தானே செய்கின்றனர்.

சமணம், பௌத்தம் எனும் இரண்டு சத்திரிய தத்துவங்கள் தோன்றி வணிகம், அறவியல் மற்றும் கல்வி அடிப்படையிலான சான்றோர் வர்க்கம் உருவாகி வளர்ந்ததை தடுத்து நிறுத்தியதும் இந்த சனாதன அரசியல்தானே” என்று ’குரல்’ நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்ததும், மூப்பன், “ஆகா! என்னவொரு அழகான தர்க்கம்” என்று அசரிரியாக கேட்கும் ‘குரலை’ மனமாறப் பாராட்டுகிறார். மூப்பனின் பாராட்டு மழையில் நனைந்த ‘குரல்’ மேலும் உற்சாகம் கொண்டு, “மகேசனின் ஏகத்திற்கு எதிரானது அநேகத்தின் அதிகாரம்! பிரம்மத்தின் புனிதத்திற்கு எதிரானது அபுனிதத்தின் அதிகாரம்! வேதத்தின் ஒற்றைக்கு எதிரானது பன்முகத்தின் அதிகாரம்!” என்று உணர்ச்சி மேலிடச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறது. ”ஆம்; அனைத்து அதிகாரமும் மக்களுக்கே! உழைக்கும் மக்களுக்கான அதிகாரம்! ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம்! மக்கள் ஜனநாயகம் என்பதும் அதுவே” என்று மூப்பன் வழிமொழிகின்றான். மூப்பனின் அறிவுரை, அறவுரை கேட்டுத் தெளிவு பெற்ற தொல்குடியினர் மகிழ்ச்சியுடன் மக்கள் அதிகாரம் பிறக்கட்டும்! மக்கள் ஜனநாயகம் மலரட்டும்! என்று முழுக்கமிடுகிறார்கள். திரை கீழே விழுகிறது.

C:\Users\Chandraguru\Desktop\3-5.jpg

பேராசிரியர் மு.ரா.வின் கற்பனையில் உதயமாகும் இந்த உரையாடல் சமகால அரசியலின் அச்செடுத்த நகலாக விளங்குவதில் ஐயமில்லை. இன்றைய கலாச்சார அரசியலின் முரண்பாட்டை, மோதலை கலை வடிவமாக்கித் தந்துள்ளார். சம்பவங்கள் ஏதுமின்றி உரையாடலால் மட்டுமே நகர்ந்து செல்லும் இந்நாடகத்தை அரங்கேற்றுவதில் சிரமம் இருக்கலாம். ஆனாலும் சமகால வைதீக சனாதன அரசியலை மிக நுணுக்கமாகவும், எளிதாகவும் பாலபாடம் போல் எழுதி வெற்றியடைந்துள்ளார். தேர்ந்தெடுத்த நாடக உத்திகள் கொண்டு இதனை மு.ரா. அரங்கேற்றுவார். பொறுத்திருப்போம்!

பேராசிரியர் மு.ராமசுவாமியின் ஐந்து பெரியாரியல் நாடகங்களும் தமிழகம்தோறும் குறிப்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயம் அரங்கேற்றிட வேண்டும். இந்துத்துவம் எனும் மதவெறி அரசியலை எதிர்கொள்ள இதைவிடச் சிறந்த கருத்தாயுதம் கிடையாது.  இந்துத்துவம் திணிக்க முயலும் ஒற்றைக் கலாச்சாரம் எனும் ஏகத்தை பெரியாரியம் துணை கொண்டு வீழ்த்துவோம்! பன்முகத்துவத்தை நிலைநாட்டுவோம்! பெரியார் தோன்றிய மண் என்பதாலேயே தமிழக எல்லைக்குள் நுழைந்திட இந்துத்துவம் திணறுகிறது. தமிழக இளைய தலைமுறையினரிடம் பெரியாரியத்தின் மாண்புகளை எடுத்துச் செல்ல நாடகம் எனும் கலை வடிவமே சாலச் சிறந்தது. டோக்பெருமாட்டி கல்லூரியில் வகுப்’பறை’ நாடகம் சாத்தியமாகி இருக்கிறது என்றால் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த நாடகங்கள் அனைத்தும் சாத்தியமாகும் தானே!

—பெ.விஜயகுமார்