நூல் அறிமுகம்: வீடியோ மாரியம்மன்- சுபாஷ் | இந்திய மாணவர் சங்கம். 

 

“வலிகளிலிருந்துதான் வார்த்தைகள் பிறக்கின்றன”.. அப்படி எவர் குரலற்றவர்களின் வலிகளுக்கு குரலாய் ஒலிக்கிறாரோ அவரே மக்களின் மனங்களை வெல்கிறார்… நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் வளர்நது இலக்கியங்கள் மீது கோலோச்சினாலும், சொடுக்கும் நேரத்தில் உலக தரவுகள் வரலாற்று இலக்கியங்கள் கண்முன் காட்சியளித்தாலும் , வறண்ட மண் வானத்தின்பால் கொண்ட காதலைப்போல், புத்தகங்களுக்கும் வாசகனுக்குமான தீராக்காதல் முடிவிலியாய் நீலுகிறது..
பெரும்பாலும் நான் படித்த இமயத்தின் கதைகள் யாவும் கிராமப்புற குடும்பங்களை சார்ந்து எழுதப் பட்டிருந்தாலும் சமூகத்தின் அங்கமாக விளங்கும் குடும்பங்களின் கதைகள் யாவும் அந்த சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும், நிலவியல் தன்மைகளையும் செவ்வனே எடுத்துரைக்கிறது.. 2008 ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வந்த “வீடியோ மாரியம்மன்” முதலில் நான் வாசித்த இமயத்தின் படைப்பு.. “யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும்” என்ற தார்மீக கடமையின் அடிப்படையில் இவ்விமர்சனத்தை எழுதுகிறேன்..
11 சிறுகதைகளை உள்ளடக்கிய சிறுகதை தொகுப்பில் முதல்கதையே அட்டைப் பெயரை தாங்கி நிற்கின்றது..  கிராம குடும்ப வாழ்க்கையை அச்சுபிசகாமல் கண்முன்னே எழுத்துக்களால் காட்சிப்படுத்தும் இமையம் சாதிய அழுக்குகளையும், ஆணாதிக்க அறுவெறுப்புகளையும் காட்சிப்படுத்த தவறவில்லை.. கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் குறிப்பிட்ட தெருவுக்கு மட்டும் வராத சாமியை மடக்கி ” என் ஊட்டு வாசகடக்கி வராத சாமி என்ன மசுரு சாமிடா? என்று கேட்கும்போது மயிலாப்பூர் மாடவீதிகளில் உலாவரும் பெருமாள் சேரிவீதிகளில் கடைக்கண் பார்வையை கூட காட்டாமல் போவது நினைவுக்கு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் கிராமத்து கூத்துக்கலைகளை காவுக்கொண்டதை மறைமுகமாக திருவிழா அன்று இரவு வீடியோ போட வரும் வீடியோக்காரன் வாயிலாக எடுத்துரைக்க விளைகிறார். இறுதியாக காதலனுடன் அண்ணனிடம் அகப்பட்டுக்கொண்ட தங்கையை “வூட்டுக்கு வா, பேசிக்கிறேன்” என அண்ணன் பூபாலன் அதட்டவும் காதலன் கணேசனோ ஊருக்குள் ஓட, தங்கை இராணி அரளிச் செடியை நோக்கி ஓடும் காலடித்தடங்கள் கண்முன்னே அழியா தடங்களை பதிக்கிறது.. ஓரிரவு திருவிழாவில் குடும்பம் துவங்கி ஊர் வரை நடைபெறும் ஆதிக்க சண்டைகளையும் ஆணாதிக்க அற்பத்தனங்களையும் காட்சிப்படுத்துகிறார்.
குசலாம்பாளின் காதல்விஷயம் தெரிந்து புருஷன் தூக்குமாட்டிக்குறான் !?காலம்காலமாக இவர்களின் சாதி கௌரவத்தையும் குடும்ப மானத்தையும் பெண்களின் யோனிகளில் ஏன் புதைத்து வைத்திருக்கிறார்கள்  . ஒரு ஆண் எத்தனை பெண்ணை மணந்தாலும் “ஆம்பள அப்படித்தான்” என்ற அடைப்புக்குறிக்குள்ளும் ஒரு பெண் தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட்டால் ” வேசி” என்ற கேள்விக்குறிக்குள்ளும் அடைக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி நல்லசாவு கதையை படித்தால் இயல்பாகவே எழுகிறது. உடையார் சாதியை சேர்ந்த அருணாச்சலத்தின் மனைவி குசலாம்பாள், சின்னசாமி ஆசிரியரை காதலிக்க அவர்களை கட்டிவைத்து கூட்டம் வசைமாரி பொழிந்தது.. “போயிம் போயி செக்கார பயக்கூடப் போயிருக்காளே, ஆசிரியராயிட்டா செக்கான் இல்லனு ஆயிடுமா?! ” என்றெல்லாம் சாதிய வக்கிரங்களை கொட்டித்தீர்த்தனர். ஒருவேளை உடையார் சமூகத்தை சார்ந்த நபரையே காதலித்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்றெல்லாம் எண்ண தோன்றுகிறது. என்ன கொன்றுவிட்டு சாமியாக்கியிருப்பார்கள் இதைத்தான் அடுத்த கதை சத்தியக்கட்டு பேசுகிறது..
Amazon.in: Buy Video Mariamman Book Online at Low Prices in India ...
ஊரில் பேச்சியம்மன், கண்ணாத்தா, பொட்டம்மன், அழகுநாச்சி,மானம்காத்தம்மன் என பல பெண் தெய்வங்களை வழிபடுகிறோம்.. இவர்கள் வேறு யாருமில்லை. வேறுவேறு காலக்கட்டங்களில் வாழ்ந்து சாதி பெருமைக்காகவும், குடும்ப மானத்திற்காகவும், வேற்றுசாதி துணையை காதல் செய்து கரம் பிடித்தற்காகவும் தற்கொலை செய்து அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாமியாக்கப்பட்டவர்கள். அப்படி ஒருவள்தான் இக்கதையின் பொண்ணருவி உயர்சாதி ஆணின் உறவால் உருவான ஆறுமாத கருவை பற்றி ஊருக்கு தெரியவர ஊரே போர்க்கோலம் பூண்டு காலனிகாரர்களும் குடியானவர்களும் சண்டையிட பிரச்சினையை முடிக்க குடியானவர்கள் திட்டம் தீட்டி பொன்னருவியின் தாய் நாகம்மாளை ஏமாற்றி பொன்னருவியை இரவோடு இரவாக கூட்டிச்சென்று கொன்று குடியானவர்கள் பயன்படுத்தும் குளத்தில் வீசுகிறார்கள். அடுத்தநாள் ஒரு “காலனி பெண்” எப்படி குடியானவர்கள் குளத்தில் இறங்கலாம் என்று பிரச்சினையை திசைதிருப்பி காலனிகாரர்களை பணிய வைத்தனர். “இருந்தும் கெடுத்தா வேசி , செத்தும் கெடுத்தா வேசி ” என காலனிகாரர்களே அவளை வசைபாடிச்சென்றனர். பின் நடந்த தற்செயலான துர்சம்பவங்களால் பொன்னருவியை தெய்வமாய் வழிபடத்தொடங்கினர்.. மறந்துவிட்டதா என்ன? அரியலூர் நந்தினியை காதல் என்ற பெயரில் உயர்சாதி ஆண்கள் கூட்டம் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று கிணற்றுக்குள் வீசியதை??
“ஆணவசாதி குறிகள் ஒடுக்கப்பட்ட யோனிகளை தீண்டும்போது மட்டும் இவர்களின் தீட்டுக்கு விடுமுறை போல!?”..
எட்டுவழிச்சாலையை மறந்திருப்போமா என்ன?  இயற்கை வளங்களை ஜிண்டாலுக்கு தூக்கி கொடுக்க விவசாயமக்களின் நிலங்களை புடுங்கியதையும், நிலத்தில் விழுந்து விவசாயிகள் மாண்டதையும் அவ்வளவு எளிதில் மறப்போமா!? அதைத்தான் நினைவுப்படுத்துகிறது “உயிர்நாடி” கதையும்.. நகரமயமாதல் தாக்கத்தால் கிராமத்து விளைநிலங்களை வாங்கும் கம்பெனிக்கு ஊர் மக்கள் எல்லோர் போலவும் நிலத்தை விற்றுவிடலாம் என மகனுக்கும், ” நா செத்ததுக்கு அப்புறம் வித்துக்கோ” என விளைநிலத்தை விற்க மனதில்லாத தந்தை கிழவர்க்கும் நடக்கும் சண்டைகளை காட்சிப்படுத்துகிறது உயிர்நாடி… சண்டையில் தோற்க மனமில்லாமல் திரித்த கயிறுடன் தன் நிலத்துக்கே செல்கிறார் கிழவர் என்பதோடு கதை முடிகிறது…
பயணங்களின் போது எத்தனையோ முகங்களை கடந்திருப்போம் அதில் பல முகங்களின் கதைதான் “பயணம்”.. புருஷன் இல்லாமல் இருபுள்ளைகளை கரைசேர்க்க துடிக்கும் ஓய்வறியா பயணக்காரி இக்கதையின் நாயகி லோகாம்பாள். அவள்படும்பாடும் பெரும்கவலைகளும், சிறுசந்தோசங்களும் அவளுடையது மட்டுமல்ல, அவளும் அவளை போன்ற ஆயிரம் பயணிகளின் ஒரு பிரிதிநிதிதான் என்பதை உணர்த்திக்கொண்டே கதை முடிகிறது.
பெரும்பாலும் இந்த கதைகளின் மையங்கள் பெண்களை சுற்றியே சுழல்கிறது. ஆனால், அப்பெண்கள் பெண்ணுரிமை பேசுபவர்களோ, புரட்சிக்காரிகளோ, சாகசக்காரிகளாகவோ இல்லை.. ஏதோ இந்த குடும்ப அமைப்பு முறையை காப்பாற்ற வேண்டியது பெண்களுக்கே உரித்தான தார்மீக கடமை போல் கிடைக்கப்பெற்ற வாழ்க்கையை தனக்கே உரித்தான பானியில் வாழ்பவளாய் சமூக நீரோடையின் ஓட்டத்தில் ஓடி கரைந்துக்கொண்டே இருப்பவர்களாக உள்ளனர் .. இதற்கான முடிவுகளை கண்டறியுங்கள் மகாஜனங்களே என்று கதைகளின் இறுதிகளனைத்திலும் வாசகரிடமே பொறுப்பு ஒப்படைக்க படுகிறது…
புத்தகம் பெயர் : வீடியோ மாரியம்மன் 
ஆசிரியர் பெயர்: இமையம்
வெளியீடு : கிரியா பதிப்பகம் 
முதற்பதிப்பு : 2008
விலை : 195