தமிழ் இலக்கியம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக இலக்கியமாக மாறி இருக்கிறது. தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழில் படைப்பிலக்கியங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய அறிவியல் காலகட்டத்தில் அது நமக்கு எளிதாக வாய்த்திருக்கிறது.

சங்ககால மரபுகளை தாண்டியும், மரபுகளோடு ஒத்தும் இன்றைக்கு கவிதைகள் பல்வேறு வடிவங்களை எட்டி இருக்கின்றன. அதாவது சங்க காலத்தில் பெரும்பான்மை மரபுக் கவிதைகளாக இருந்தன. அதன் தொடர்வளர்ச்சி சந்தக் கவிதைகளாக உருவெடுத்தது. பின்பு 19 ஆம் நூற்றாண்டில் புதுக்கவிதையாக உருவெடுத்து உலாவந்தது.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் கூற்று மெய்யானது. புதுக்கவிதை நடையை தாண்டி சப்பானிய கவிதையான ஐக்கூ வடிவக் கவிதைகள் தமிழுக்குப் புதிய வரவாகின. மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் வழியில் கவிதையில் தமிழுக்குப் புதிய வகைமைகளைத் தந்தவர் மகாகவி ஈரோடு தமிழன்பன்.
மேலைநாட்டு கவிஞர்களின் படைப்புகள் பலவற்றையும் உள்வாங்கி, மேலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க பல்வேறு புதிய வகைமைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் வரிசையில் ஈரோடு தமிழன்பன் அவர்களே முதன்மையானவர் ஆவர். 
ஈரோடு தமிழன்பன் அவர்கள் காஜல், வினா வகைமைக் கவிதைகள், ஐக்கூ சென்ரியு, லிமரைக்கூ, சின்கொயன் என்னும் வெளிநாட்டுக் கவிதை வகைமைகளையும், பழமொன்ரியு, தத்துபித்துவம், வினா விடை வகைமை, ஆகிய புதிய சங்கங்களையும் நமக்கு அளித்துள்ளார்.
விடியல் புதிது வெளிச்சம் புதிது எனும் இந்நூலில் தொகுப்பாசிரியர் தி.அமிர்த கணேசன் அவர்கள் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களது 16 கவிதை நூல்களை வரிசைப்படுத்தி உள்ளார். அதில் ஒவ்வொரு நூலும் எந்தக் கவிதை வகைமை, என்ன இலக்கணத்தில் அமைந்திருக்கிறது என்பதை மிக அருமையாக ஆய்வோடு தொகுத்திருக்கிறார். மேலும் நூலாசிரியர் பற்றி பல்வேறு படைப்பாளர்கள் கூறிய அரிய செய்திகளையும் மிக அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிற அமிர்த கணேசன் அவர்களது அரும்பணி பாராட்டுவதற்குரியது.
ஐயா அமிர்த கணேசன் அவர்களை உலகத்தமிழ் சங்கம் மதுரையில் நான் உரையாற்றுச் சென்றபோது சந்திக்க நேர்ந்தது. என்னோடு அவரும் உரையாற்றினார். என் உரைக்குப் பின்பாக ஐயா அவர்கள் இந்த நூலை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். நூல் முழுமைக்குமாகப் படித்து முடித்தேன். தொகுப்பாசிரியர் குறித்து என் பார்வை இப்படி நிறைவானது.
மகாகவி பாரதிக்கு ஒரு பாவேந்தர்!
கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு பஞ்சு அருணாசலம்!
கவிஞர் வாலி அவர்களுக்கு நெல்லை ஜெயந்தா!
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு அமிர்த கணேசன்!
இதை நாளைய வரலாறு சொல்லும்.
நூலின் தகவல்கள்
நூல் : “விடியல் புதிது வெளிச்சம் ” புதிது (ஈரோடு தமிழன்பன் படைத்துள்ள புதிய வகைமைகளின் தொகுப்பு)
தொகுப்பும் பதிப்பும் : தி.அமிர்த கணேசன்
வெளியீடு : ஒரு துளிக்கவிதை – புதுச்சேரி
விலை : ரூ.700/-
எழுதியவர்
புலவர் ச.ந.இளங்குமரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

