விடியலில் ஓர் அஸ்தமனம்
– பேரா. சோ. மோகனா
மார்கழி மாதத்து பின்னிலவு பால் போல் காய்ந்து இரவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. விடிகாலை மணி நாலரை. அர்ச்சனாவுக்கு லேசாக விழிப்பு தட்டியது கட்டிப் பிடித்துக் கொண்டு கால்களை மேலே போட்டுக் கொண்டு தூங்கும் நிவேதனாவைப் பார்க்கிறாள். மனதிற்குள் சிரிக்கிறாள் பக்கத்தில் தொட்டிலில் குழந்தை ரமேஷ். பூப்போல மெல்ல நிவேதனாவை எடுத்து திருப்பி படுக்க வைக்கிறாள். ஜன்னல் வழியே சிலுசிலுவென்ற காற்றுடன் மரமல்லியின் மணமும், பிச்சியின் மணமும் மூக்கைத் துளைக்கிறது. ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்க்கிறாள். தென்னங்கீற்றுக்கிடையே தெரிந்த பாதி நிலாவும் தெள்ளிக் கொழித்தாற்போல் மிதந்த மேகத்திட்டுகளும், மனதுக்கு ரம்மியமாய் இருந்தன. வானம் பளிச்சென துடைத்துவிட்டாற் போலிருந்தது. விடிகாலைக் குளிரும், பின்னிலவும், தெளிந்த வானமும், சோலையும் என அவளுக்குப் பிடித்த விஷயங்கள் ஏகப்பட்டவை. இந்த சுகமான அனுபவங்களை ரசித்தப்படி கொஞ்ச நேரம் படுத்திருக்க நினைத்தாள் அர்ச்சனா.
அதற்குள் ‘‘அர்ச்சனா! ஏய் அர்ச்சனா! எழுந்திரு என்ன இன்னும் ராணியம்மாவுக்கு தூக்கம் கலையலியா? எழுந்திருக்க மனசு வரலியாக்கும். அங்க பாரு பக்கத்து வீட்டுல எல்லாம் எழுந்து கோலம் போட்டாச்சு. அவங்களும் ஒன்ன மாதிரி பொம்பளங்கதானே! இந்நேரம் எங்கம்மா இருந்திருந்தா இந்த வீடும் வாசலும் எப்படி லட்சுமிகரமா பளிச்சினு இருக்கும் தெரியுமா? அது தான் ஒனக்கும் கிடையாது; ஒங்க பரம்பரைக்கும் கிடையாதே’’ வார்த்தைகளை விஷமாக்கிக் கொட்டினான் ராமனாதன்.
வார்த்தைகள் நெஞ்சில் ஈட்டியாய் இறங்க, மற்ற நினைவுகளை உதறிவிட்டு வாசல் தெளிக்க எழுந்து சென்றாள் அர்ச்சனா. ராமனாதன் சொன்னதுபோல் அப்படியொன்றும் பக்கத்து வீடுகளில் வாசல் தெளித்துக் கோலம் போட்டிருக்கவில்லை. அர்ச்சனா, வாசலில் சாணநீர் தெளித்து பெருக்கித் தள்ளினாள் ராமநாதன் பேசியதையும் சேர்த்து. பின்னர் வாசலை அடைத்து அழகாக கோலம் போட்டாள். அவள் போட்ட கோலத்தை, கொஞ்சம் ஒதுங்கி நின்று, அவளே ரசித்தாள். அதற்குள் பக்கத்து வீடுகளில் பெண்கள் கோலம் போட ஆரம்பித்தனர். அதனையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள். குழந்தை ரமேஷின் அழுகுரல் கேட்டது. கூடவே ‘‘அர்ச்சனா! ஏய் அர்ச்சனா! என்ன பண்ணிகிட்டுருக்கே அங்கே? குழந்தை அழறது காதில விழலே? இந்த நேரத்தில் யாரைடி பாத்துகிட்டு அங்க நிக்கிற? திரும்பவும் ஒரு லட்கார்ச்சனை ஈட்டிகள் நெஞ்சில் சரமாக இறங்கின.’’
வேகமாய் உள்ளே வந்து குழந்தை ரமேஷை தூக்கிக் கொண்டு அடுக்களைக்குள் நுழைகிறாள். கூடவே நிவேதனாவும் அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டே வந்தது. ரமேஷைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டே, ஸ்டவ்வை பற்ற வைத்து பால் காய்ச்சுகிறாள். ‘‘அம்மா பசிக்கு’’ ரமேஷ் சிணுங்க,” தங்கத்துக்குப் பால் ரெடியாயிடுத்தே’’ சொல்லிக் கொண்டே, இன்னொரு ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி போடுகிறாள். ரமேஷுக்கு பால் கொடுக்கிறாள் அர்ச்சனா. இப்போது ஹாலிலுள்ள சுவர்க்கடிகாரம் ‘‘பிப்பீப்’’ என ஆறுமுறை கத்தி ஓய்ந்தது.
‘‘நிவாக்குட்டி! போய் அப்பாவை காபி குடிக்க எழுப்புடா,” நிவா வேகமாக ரூமுக்கு ஓடி, “அப்பா எழுந்திருங்கப்பா! அம்மா காபி போட்டாச்சு.’’
‘‘சரி! சரி! நீ நான் வர்றேன்”னு சொல்லிவிட்டு புரண்டுபடுத்த ராமனாதன் திரும்பவும் தூங்கிவிட்டான்.’’
பத்து நிமிடம் ராமனாதனை எதிர்பார்த்த அர்ச்சனா, அவன் உள்ளே, வராததால் காபியுடன் அவன் அறைக்குள் நுழைகிறாள் அர்ச்சனா,
‘‘என்னங்க எழுந்திருங்க, காபி ஆறிடப்போகுது.’’ காலையில் வாய் கொப்புளிக்கும் பழக்கமெல்லாம் கிடையாது ராமநாதனுக்கு. நெஜமாவே பெட் காபி தான்.
‘‘காபியை கையில் வாங்கியவன் முகத்தில் கோபம் ருத்ர தாண்டமாடியது ஏய், நீ மனசில என்னதான் நெனச்சி கிட்டிருக்க? மனுஷன் குடிப்பானா இதை?’ சூடோடு கொடுப்பதற்கென்னா?” வார்த்தைகள் சுடு நெருப்பாய்க் கொட்டின.
‘‘நான் முன்னமயே நிவாவைவிட்டு உங்களை எழுப்பச் சொன்னேன். நீங்க தான் எழுந்திருக்கல. நான் என்ன செய்யறது. குழந்தை வேற கத்தினான். மார்கழிக் குளிர்லே ஆறாம என்ன செய்யும்?’’
‘‘என்னடி வாய் நீளுது’’.
‘‘சரி குடுங்க, வேற காபி போட்டுத்தர்றேன்’’
‘‘நீ இன்னமே வேற காபி போட்டு பாலை வேற வேஸ்ட் ஆக்க வேண்டாம். இதையே குடிச்சுத் தொலைக்கிறேன்.’’
இவர்கள் பேச்சைக் கேட்ட ஊரியிருந்து வந்திருந்த அத்தை ‘‘ஏண்டா விடிஞ்சதும் விடியாததுமா இந்த பொண்ணுகிட்டே சத்தம் போடறே? அவ கைபுள்ளக்காரி. மார்கழி குளிர் வேற. நீயே அடுக்களைக்கு வந்து காபி குடிச்ச என்ன? அல்லது நிவா எழுப்பினப்பவே வர்றதுக் கென்ன?’’ என்றார்.
‘‘நீ பேசாம இரு அத்தை. ஒனக்கு இவளப் பற்றி ஒண்ணும் தெரியாது எல்லாம் வேஷம்’’
அர்ச்சனா கண்கள் குளமானாலும் அடக்கிக் கொண்டாள். வேகமாக பாக்கி வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். மணி 7.00. நிவா அர்ச்சனாவிடம் வந்து, காலைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள். கெஞ்சினாள். ‘‘அம்மா இங்க வாம்மா. இந்த கணக்கை கொஞ்சம் சொல்லிக் கொடம்மா’’.
“ஏண்டி எத்தனை தடவ ஒங்கிட்டே சொல்லிட்டேன். இப்படி காலையிலே ஹோம் ஒர்க் செய்யச் சொல்லி உயிரை வாங்காதன்னு. நேத்தியே இதைக் கேக்கறத்தக் கென்ன?’’
‘‘மறந்துட்டேம்மா’’.
‘‘சரி சரி. இங்கயே வா சொல்லித் தர்றேன். அங்க வந்தா இன்னிக்கு சமையல் அம்போதான்: அப்புறம் வேலைக்கு போன மாதிரிதான்.’’
‘‘நீ இங்க வாம்மா’’
‘‘ஏய் ரொம்ப படுத்தாதேடி. இன்னிக்கு ஒங்க அப்பா கிட்டே போய் கேளு’’
நிவா ராமனாதனிடம் போய் கணக்குச் சொல்லித் தர கேட்டாள் குழந்தை. “ஆமா ஒனக்கும், ஒங்க அம்மாவுக்கு வேற வேலையே இல்லே. தெனம் புள்ளையோட படிப்பைக் கூட கவனிக்காம, அவ இங்க என்னா வெட்டி பொரட்டுறா. எனக்கு நெறய வேலை இருக்கு”ன்னு சொல்லிவிட்டு கையிலுள்ள இந்து பேப்பரில் கண்களை ஓட்டுகிறான். அழுது கொண்டு ஓடி வந்த நிவாவைச் சமாதானம் செய்து, கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே சமையல் செய்து முடித்தாள் அர்ச்சனா.
ஹாலில் அப்பாவிடம் விளையாடிக் கொண்டிருந்த ரமேஷ் ஆயி போகிறான். உடனே ராமனாதன் கத்தினான். ‘‘ஏய் அர்ச்சனா இங்க வா. குழந்தையை தூக்கிட்டு போய் கழுவி விடு. காலையிலேயே குழந்தை எழுந்திரிச்சதும் இதையெல்லாம் கவனிச்ச பின்னாடி வெளையாட அனுப்பறதற்கென்ன? இதைக் கூட நான் சொல்லித் தரணுமா? வெவஸ்தை கெட்ட குடும்பம்’’ என அர்ச்சனாவின் பெற்றோரைத் திட்டினான்.
அங்கு வந்த, அத்தை ‘‘ஏண்டா, தொட்டதுக்கெல்லாம் கத்தறே? வேலைக்குப் போற பொண்ணு. அவளும் ஒன்ன மாதிரிதானே, வேலைக்குப் போயி சம்பாதிக்கிறா. அப்புறம் எதுக்கு தொட்டதுக்கும் இப்படி பாயுறே? அர்ச்சனா எந்த வேலையின்று பாத்து பாத்து செய்வா?’’ பாவம் எல்லாம் ஒண்டியாவே பாத்துக்குற. சரி சரி, இதோ நான் வர்றேன் ரமேஷை எடுக்க” என்றார் அத்தை. .
‘‘ஆமா ஒனக்கென்ன அத்தை தெரியும் இவளப்பத்தி? பெரீய்ய்ய ஒலகத்துல இல்லாத வேலை பாக்குறா இவ! ஊரு உலகத்துல வேலைக்கு போற பொம்பளைங்க சமாளிக்காத விஷயத்தையா இவ சமாளிக்கிறா? இவளுக்கு எதுலயும் ஒரு துப்பு கிடையாது; சமத்தும் கிடையாது. ஆனா திமிர் மட்டும் உடம்பு பூரா இருக்கு,’’ பொரிந்து தள்ளினான் ராமநாதன்.
அர்ச்சனாவின் நெஞ்சு பாறாங்கல்லாக கனத்தது அத்தை வந்திருந்தது கொஞ்சம் உதவியாகவும் இருந்தது. இது எத்தனை நாளைக்கு? இரண்டு நாளில் அத்தை புறப்பட்டுப் போன பின் அத்தனைக்கும் ஒண்டியாகவே அல்லாட வேண்டியிருக்கும்.
காலை மணி: 7.30
வாசலில் ராமனாதனைத் தேடி இருவர் வந்தனர்.
இருவரும் கோரஸாக ” சார் சார்!”
‘‘வாங்க வாங்க! என்ன இவ்வளவு தூரம்’’ ராமனாதனின் குரலில் , சந்தோஷம் கொப்பளித்தது.
“சார் நேற்றைக்கு உங்கள் பேச்சு ரொம்ப ரொம்பப் பிரமாதம். ‘இன்றைய சமுதாயமும் பெண்கள் நிலையும்’ என்ற விஷயத்தைப் பற்றி அருமையாய் பேசினீர்கள். சும்மா பிட்டுப் பிட்டு வைத்தீர்கள். இந்த சமூகத்தில் பெண்கள் எவ்வாறு சீரழிக்கப்படுகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் உழைப்பதற்கு நாம் காலமும் முழுவதும் நன்றிக் கடன் செலுத்தினாலும் தீராது, அது போதொன்று வேலைக்குப் போய் பணம் சம்பாதித்து, ஆண்களுக்கு இணையாக குடும்ப பாரத்தை சுமப்பதிலும் சளைக்கவில்லை, அவர்களை நாம் எப்படி மனிதர்கள, உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விளாசித் தள்ளிவிட்டீர்கள். பெண்களின் மனத்தைத் தொட்டு விட்டீர்கள். சார், உங்களுக்கு ஏகோபித்த பாராட்டுகள் வந்து குவிந்துள்ளன”.
“பெண் விடுதலை பற்றி, நம் டி.வி.யில் ஒரு புரோகிராம் தர வேண்டும். நீங்கள்.
‘‘அப்படியா? பாராட்டுக்கு நன்றி சார். புரோகிராம் பற்றி யோசிப்போம் என்ற ராமனாதன் உள் பக்கம் திரும்பி, “அர்ச்சனா ரெண்டு காபி கொண்டு வா,’’ என்றான்.
காபியுடன் அர்ச்சனா வருகிறாள்.
காபியை வந்தவர்களிடம் அர்ச்சனா கொடுத்ததும்,
‘‘உட்கார், உட்கார் அர்ச்சனா. இவர்கள் நான் டி.வியில் புரோக்கிராம் தருவதற்காக ஏற்பாடு செய்ய வந்திருக்கிறார்கள்.’’ என்று கனிவாக கூறினான் ராமனாதன்
ராமநாதன் வந்தவர்கள் பக்கம் திரும்பி, “சார். இது என் ஒய்ப். பேரு அர்ச்சனா. தனியார் கம்பெனி ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக இருக்கிறார். வீட்டிலும் வெளியிலும் நம்ம பாலிஸி ஒன்றுதான் சார். பெண்ணை எந்த இடத்திலும் போற்றி மதிக்க வேண்டும்”.என்றான்.
‘‘சார் உங்களை பற்றி எனக்குத் தெரியாதா’’ என்றார் வந்தவர்.
அர்ச்சனா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். சரி நான் வரேங்க. போய் சமையல் செய்யணும்,. நீங்க உங்க நண்பர்களோட பேசிக்கிட்டு இருங்க” அர்ச்சனா உள்ளே போக புறப்படுகிறாள்.
சும்மா உட்காரு அர்ச்சனா. கூச்சப் படாதே. கொஞ்ச நேரம் இவங்களோட பேசிட்டுப் போ. இன்னிக்கு ஒரு நாளைக்கு நாம வெளியிலே சாப்பிடலாம் ” என்றான்.
அர்ச்சனாவின் மனம் கெக்கெலி கொட்டிச் சிரித்தது. அவள் சிரித்துக்கொண்டே, ” நான் வரேங்க” என்று சமையலறைக்குள் நுழைகிறாள்.
காலை மணி 8.00
‘‘என்னடி சமையல் பண்ணயிருக்கிறே? வாயிலே வைக்க வழங்குதா? மனுஷன் சம்பாரிக்கிறதே ஒரு சாண் வயித்துக்குத் தாண்டி.. இதைக்கூட சரியாச் செய்யத் தெரியலைன்னா, என்னடி பெண்டாட்டி நீ? கேடு கெட்ட ஜென்மம்! எனக்குன்று வந்து வாய்ச்சிருக்கியே’’ சாப்பாட்டுத் தட்டு அர்ச்சனாவின் முகத்துடன் பேசியது.
‘‘ஏதோ இன்னிக்கு ஒரு நாள் சாம்பார்ல உப்பு கொஞ்சம் கூடிடுச்சு. சமையல் பண்ணும்போது குழந்தை அடம்பிடிச்சானா, கைவாகுல கொஞ்சம் கூட்டிப் போட்டுட்டேன் போல இருக்கும். அதுக்கு இந்த சத்தம் போட்டு அமர்க்களம் பண்ணணுமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணக் கூடாதா?’’
‘‘என்னடி வர வர வாய்க் கொழுப்பு அதிகமாவுது, அடுத்த வார்த்தை பேசினே செருப்பு, பிஞ்சிடும் ராஸ்கோல், உனக்கு எது இருக்குதோ இல்லியோ, எதுத்து எதுத்து திமிர் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இதைத்தான் உங்க வீட்டுல கத்துக் கொடுத்திருக்காங்க.’’
‘‘ஏங்க, நான் செய்யறதுக்கு எதுக்காக எங்க வீட்டை இழுக்கறீங்க. சரி சரி எனக்கு நேரமாவுது. நான் பொறப்படணும்.’’
‘‘என்னடி? என்ன சொன்னே? மகாராணிக்கு ஒரு வார்த்தை பதில் பேசாமல் இருக்க முடியாதோ? வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசறே… நாயே..’’
‘‘பளார்!’’
ராமனாதனின் கை ஓங்கி, வேகமாக அர்ச்சனாவின் கன்னத்தில் இறங்கியது . கண்ணுக்குள் ‘பளீர்’ என மின்னலடித்தது அர்ச்சனாவுக்கு. நெஞ்சுக்குள் மின்சாரம் பாய்ந்தது. மூளையின் ஒரு பகுதியில் அமைதி! அமைதி அமைதி என்ற கூக்குரல்.
அர்ச்சனா அதன் பின்னும் அமைதியாக ‘‘சரிங்க! ஏதோ ஆப்ஸுக்குப் புறப்படுகிற அவசரத்துலே சொல்லிவிட்டேன். மன்னிச்சுக்குங்க. சாப்பிடாமல் இருக்காதீங்க.
ஒரு வாய் மோர் சாதமாவது சாப்பிடுங்க.’’
‘‘நீயோ எனக்கு சேர்த்து கொட்டிக்க’’.
அர்ச்சனாவின் கண்களில் நீர் நிரம்பி கீழே வழிந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது.
காலை மணி: 8.30
அவசர அவசரமாய், அர்ச்சனா, நிவாவுக்கு சாப்பாடு போட்டு டிரஸ் செய்து புத்தக மூட்டையை எடுத்து வைத்து ஸ்கூல் பஸ்ஸுக்கு அனுப்புகிறாள். மனசுக்குள் அப்பாடி, இன்னிக்கு ரமேஷை காப்பகத்துக்கு அனுப்ப வேண்டாம். அத்தையம்மாகிட்ட விட்டுட்டு ஆபீஸுக்கு போகலாம்’’. ம்.ம்… நீண்ட பெருமூச்சு ஒன்று வெளியேறியது.
காலை மணி: 8.45
அர்ச்சனா அவசர அவசரமாய் இரண்டு வாய் சோற்றை அள்ளிப் போட்டுவிட்டு, அத்தையையும் சாப்பிடச் சொல்லி ஒரு வழியாய் ஆபீஸுக்கு புறப்பட்டு ‘‘நான் வர்றேன் அத்தே’’ என்று சொல்லிவிட்டு வாசல்படியைக் கடக்கிறாள். .
‘‘உவ்வே…’’ என்று சத்தம். ரமேஷ் வாந்தியெடுக்கிறான். புறப்பட்ட அர்ச்சனா திடுக்கிட்டு நிற்கிறாள். திரும்பி வந்து ரமேஷையும், தரையையும் சுத்தம் செய்கிறாள். பின் ரமேஷ் உடம்பைத் தொட்டுப் பார்க்கிறாள். உடல் தீயாய் கொதிக்கிறது.
அவள் ராமனாதன் பக்கம் திரும்பி,” என்னங்க புள்ளைக்கு காய்ச்சலும் அடிக்குது. என்னங்க ரமேஷை டாக்டர்கிட்டே கொஞ்சம் கூட்டிட்டுப் போறீங்களா? எனக்கு ஏற்கெனவே லேட்டாயிடுச்சு. பஸ் போயிரும். நீங்க பத்தரை மணிக்குத் தானே வெளியிலே போகணும்’’
அவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
‘‘நீயே ஒன் அவர் பர்மிஷன் போட்டுட்டு, ரமேஷை டாக்டர்கிட்டே கொண்டுபோ. நம்மாலே, அந்த கும்பல்லே போய் டாக்டரைப் பார்க்க காத்துக் கிடக்க முடியாது.’’
‘‘நான் நேரமாயிட்டதால தானே உங்களைப் போகச் சொல்றேன் பிள்ளைக்காகப் போய் காத்திருந்தா என்ன? பத்தரை வரைக்கும் சும்மாதானே இங்கே இருக்கப் போறீங்க.’’
‘‘என்னடி! என்னைத் தெண்டச் சோறுன்னா நெனச்சே? நான் என்னா நீ வைச்ச வேலை ஆளா? தொட்டதுக்கெல்லாம் எதுத்து பேசற! கண்டவன் கிட்டே போய் பல்லைக் காட்டறதுக்கு கொஞ்சம் லேட்டாப் போனா என்ன? நானும் காலையிலேயிருந்து பார்க்கிறேன்.’’ என்ற ராமனாதனின் வாய்மட்டுமல்ல, கையும் கூட பலமாய் பேசியது அர்ச்சனாவின் கன்னத்தில், வலியுடன் சேர்ந்து, கண்ணீரையும், வேதனையையும் நெஞ்சுக்குள் விழுங்கிய அர்ச்சனா, மறு பேச்சு பேசாமல் வீட்டுக்குள் நுழைந்து கைப்பையை வைத்துவிட்டு, குழந்தை ரமேஷைத் தூக்கிக்கொண்டு, அத்தையை நோக்கி, அத்தை நான் ரமேஷை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறேன். ”
“என்னங்க. தம்பியை டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துடறேன்.” வாசலில் இறங்கினாள் அர்ச்சனா. .
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அர்ச்சனா அதிகபட்ச பொறுமையாக இருப்பது செயற்கை தனமாக இருக்கிறது. கிராமங்களில் படிக்காத பெண்கள் கூட கணவன் அடித்தால் அழுது கூச்சலிட்டு, அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்து கேட்கும் அளவிற்கு செய்து விடுகிறார்கள்.
அடியை வாங்கி கொண்டாலும் கூட திட்டி கொண்டு கூச்சலிடுவது பெண்களின் இயல்பு.
காலை விடியலின் கற்பனை சிறப்பாக உள்ளது.