விடுதலை
****************
ஒரு விவசாயியின் அரிசியில்
கடவுளின் கையெழுத்து இருக்கிறது
சாத்தான்களால் படிக்க முடிவதில்லை.
மண் மாளிகையானது
மல்லாட்டைச் சரித்திரம்!
வயக்காட்டின் சேற்றில்
விவசாயிகளின் வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.
அவர்கள் குடிக்கும் கூழ்
உங்கள் மதுக்கோப்பைகளில்
போதையைத் தருவதில்லை.
குருவிக்காரப் பெண்மணிகள்
மார்பில் குழந்தைகளைக் கட்டி வருவதுபோல
உழைத்துக் களைத்த விவசாயப் பெண்கள்
மடி நிறைய கீரைக் குழந்தைகளைக்
கிடத்தி வருகிறார்கள்.
இரவு எட்டு மணிக்கு மேல்தான்
அவர்கள் அடுப்பு புகைய ஆரம்பிக்கிறது.
அப்போதெல்லாம் உங்கள்
மதுச் சாலைகளில்
கோப்பைகளின் கிண்கிணியோசைகள்.
அவர்களின் நெற்றிப் பட்டைகள்
தேசியக் கொடிகள்
அவர்களின் வயிற்றுச் சுருக்கங்கள்
தேச வரைபடம்.
அவர்களின் மூக்குக்கு
உங்கள் மூக்கணாங்கயிறுகள் சரிப்பட்டு வராது.
அவர்கள் காளைகளைச் சவாரிக்குப் பழக்குபவர்கள்
உங்கள் சாரட்டுகளுக்குச் சரிப்பட்டு வராது.
உங்கள் காதுகளில் அடைத்திருக்கும்
பஞ்சினை அகற்றித்தான்
அவர்களின் காயங்களுக்குக் கட்டுப்போட முடியும்.
முன்னோர்களின் ரத்தக்கறை படிந்த
விடுதலை மண்ணை விழுங்கிச் செரிக்க
சட்டங்களின் கறுப்பு எழுத்துகள் திணறுகின்றன.
உயிரை நீக்கியபின்
உடலுக்கு மருத்துவம் பார்க்கிற
உங்கள் விசித்திரங்கள்
புதிய வேளாண் சட்டங்கள்!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
அவர்களின் டிராக்டர்கள்
உங்கள் ‘குடி’யரசை நசுக்கிக் கொன்றுவிடக் கூடும்!!
..நா.வே.அருள்

