இரா. இரமணன்
இந்த மாதம் (ஜூன் 2021) 18ஆம் தேதி வெளியாகியுள்ள இந்திப் படம் ‘பெண் புலி’. மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும் ஒரு பெண் புலியை உயிரோடு பிடித்து காட்டுக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், அதில் குறுக்கிடும் அரசியல்வாதிகள், பாதிக்கப்படும் கிராம மக்கள் என ஒரு முக்கியமான நடப்புப் பிரச்சினையை சினிமாத்தனங்கள் அதிகம் இல்லாமல் எடுத்துள்ளனர்.
அமித் மசூர்க்கர் இயக்கியுள்ள படத்தில் வித்யா பாலன், முகுல் சட்டா, விஜய் ராஸ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த இயக்குனர் எடுத்துள்ள நியூட்டன், சுலேமனி கீடா ஆகிய படங்களும் சிறப்பானவை என்கிறார் ஒரு விமர்சகர்.(Sherni: A Bollywood film that knows its environmentalism well (downtoearth.org.in).
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு காடுகளுக்கு இடையேயுள்ள ஒரு கிராமம். விவசாயமும் கால்நடை வளர்ப்புமே அவர்களின் தொழில். அந்தப் பகுதியில் புலிகள் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கு இந்த கிராமத்தைக் கடந்து செல்வது வழக்கம்.
கிராமத்து மக்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்கின்றனர். திடீரென ஒரு புலி கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கத் தொடங்குகிறது. அது டி12 எனப் பெயரிடப்பட்ட பெண்புலி. வனத்துறையினர் அதைக் கண்காணிக்க கேமிராக்களைப் பொருத்துவதும் கூண்டு வைப்பதுமான நடைமுறைகளை செய்கின்றனர். அந்தப் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் புலி தாக்குதலை அரசியலாக்குகின்றனர். வனத்துறை அதிகாரி அதிகம் அலட்டிக் கொள்ளாத ஞானம் இல்லாத கோமாளித்தனமானவர்.

அங்கு புதிதாக மாற்றலாகி வரும் பெண் அதிகாரி புலியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். கிராமத்து மக்களின் உதவியையும் நாடுகிறார். தன்னை இயற்கைப் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்கிற, ரிசார்ட் நடத்துகிற ஒரு வேட்டைக்காரர் புலியை பிடிக்க உதவுவதாக சொல்கிறார். ஆனால் அவர் இதற்கு முன் பல விலங்குகளை சுட்டுக் கொன்றவர்.
பிரச்சினை பெரிதாகி பெரிய அதிகாரிகள், மந்திரி ஆகியோர் தலையிட்டு புலியை விரைவாக பிடிக்க உத்தரவிடுகின்றனர். இறுதியில் அந்த வேட்டைக்காரர் புலியை சுட்டுக் கொன்றுவிடுகிறார். ஆனால் மயக்க மருந்து செலுத்தியபின் இறந்ததாக கூறிவிடுகிறார். மேல் அதிகாரிகளும் அவரைப் பாதுகாக்க அதை ஏற்றுக்கொள்கின்றனர். விரக்தியின் விளிம்பிற்கே செல்லும் பெண் அதிகாரி வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறார்.
ஆனால் அந்தப் பெண் புலியின் குட்டிகள் இரண்டும் உயிரோடு இருப்பதைப் பார்த்த பின் மனம் மாறுகிறார். மேல் அதிகாரியை கோழை என்று இகழ்ந்ததால் அவர் விலங்குகள் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படுகிறார். அவருடைய இடத்திற்கு வரும் புதிய அதிகாரி அலுவலகம் புதிப்பிக்கப்படுவதையே முதல் வேலையாக எடுத்துக் கொள்கிறார். காட்டில் விலங்குகள் குடிக்கும் நீர்நிலைகளை பராமரிக்காமல் அலட்சியமாக இருக்கும் ஒப்பந்தகாரரை கடிந்துகொள்ளும் பழைய பெண் அதிகாரியையும் இவரையும் ஒப்பிட வைக்கிறார் இயக்குனர்.
‘காடுகளின் காவலர்கள்’ என்றழைக்கப்படும் கிராமத்து மனிதர் ஒருவர் ‘புலியால் தான் காடு இருக்கிறது; காட்டினால் மழை; மழையினால் தண்ணீர்; தண்ணீரினால் நாம் பிழைக்கிறோம்’ என்று கூறுவதும் வன அலுவலர் ஒருவர் ‘நீங்கள் காட்டிற்குள் நூறு முறை போனால் ஒரு முறை புலியைப் பார்க்கலாம்.

ஆனால் புலி உங்களை 99 தடவை பார்த்துக் கொண்டிருக்கும்’ என்று கூறுவதிலிருந்து யார் யாருடைய வசிப்பிடதிற்குள் அத்து மீறுகிறோம் என்பது தெளிவாகிறது என்கிறார் ஒரு விமர்சகர். வன அலுவலர்களின் கடினமான பணி, உயர் அதிகாரிகளின் அலட்சியம், அரசியல்வாதிகளுடன் அவர்களுக்குள்ள கூட்டு,வனத்தைப் புரிந்து கொண்ட கிராமத்து மக்கள், அவர்களை திசை திருப்பும் அரசியல்வாதிகள் ஆகியவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளன.
இவற்றிற்கு ஊடாக பெண் அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுவது, அலட்சியப்படுத்தப்படுவது சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் அலங்காரப் பொருளாகப் பார்ப்பது போன்றவற்றையும் இயக்குனர் வெளிப்படுத்துகிறார். தாமிர ஆலைக்காக காட்டினூடே பாதை அமைக்கப்படுவது, அரசாங்கம் மரம் நட சொன்னதற்காக மேய்ச்சல் நிலத்தில் தேக்கு மரங்களை நட்டு கிராமத்து மக்கள் கால்நடைகளை காட்டிற்குள் மேய்க்க செல்ல வேண்டியதிருப்பது என கூர்மையான விமர்சனப் பார்வையும் உள்ளது. நல்ல நடிப்பு; சிறப்பான ஒளிப்பதிவு.
வழமையான தமிழ்ப்படங்களின் நினைப்பில் பார்த்தீர்களானால் உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். காடுகள், சுற்று சூழல், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியவற்றை எதார்த்தமாக பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இதை கண்டிப்பாகப் பார்க்கவும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

