வியட்நாமும் இந்திய கேரள மாநிலமும் கோவிட்-19 நோய் தொற்று பரவலை எளிமையாக கட்டுப்படுத்தியுள்ளன.
அதன் ரகசியம் என்பது விரைந்த திறமையான பொது சுகாதார அமைப்பில் உள்ளது.
டெலிபோன் மணி ஒலிக்கையில் போன் எடுக்கிறார் டாக்டர். “வெண்டிலேட்டர்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது, இன்னும் அதிகம் நோயாளிகள் வந்தால் என்ன செய்வது” என எதிர் தரப்ப்பில் குரல் கேட்கிறது. இருளடைந்த முகத்தோடு அந்த டாக்டர் இந்த நோய் தொற்று தாக்குதலுக்கு உள்ளானவர்களில் நால்வரில் மூவர் இறக்கும் சாத்தியம் உள்ளது என சொல்கிறார். இந்நோய்க்கு மருந்தோ சிகிச்சையோ இல்லை என்றும் சொல்கிறார்.
மேற்கண்ட வசனங்கள் கோவிட்-19 காலத்தில் உலகெங்கும் சாதாரணமாக இடம் பெறும் ஒன்று. ஆனால், உண்மையில் இவை இந்திய தேசத்தில் கேரள மாநிலத்தில் மாலிவுட் என அழைக்கப்படும் மலையாள சினிமாக்களில் ஒன்றான சிறப்பு கவனத்தினைப் பெற்ற “வைரஸ்” என்னும் திரைப்படத்தில் வரும் வசனமே. திரில்லர் பட வகையினதாக இருந்தாலும், உண்மையில் 2018இல் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானபோது நிகழ்ந்த உண்மைச் சம்பவமே இத்திரைப்படம்.
வெள்வால்களின் மூலம் பரவிய இந்த நிபா வைரஸ் தொற்று கண்ட 23 பேர்களில் 21 பேர்களை காவு கொண்டது. ஆனாலும், கேரளா மாநிலம் நிபா வைரஸ் தொற்று பரவல் அதிகம் நிகழாமல் ஒரு மாதத்திலேயே கட்டுப்படுத்திக் காட்டியது. மாவட்ட வாரி ஊரடங்கு, தளராத தொற்று தொடர்பாளர்களை தேடித் தேடி கண்டுபிடித்தல் என இவையோடு கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தனிமைப்படுத்துதல் என தன்னாலான எல்லா வகையிலும் முயற்சி செய்து கேரள அரசு இச்சாதனையை செய்து காட்டியது.
கோவிட்-19 நோய் தொற்றினையும் எளிதாக எளிமையான இந்த வழிமுறைகளையே கையாண்டு மீண்டும் மிக சிறப்பானதொரு வெற்றியை பெற்றுள்ளது கேரள அரசு. ஜனவரி 2020ல் சீனாவின் வூஹானில் இருந்து திரும்பிய ஒரு மருத்துவ மாணவரிடம் இருந்து இத்தொற்று கேரள மாநிலத்தில் நுழைந்த போது இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் முதலாவதாக கேரள அரசு தொற்று பாதித்த பகுதி ஆனது.
மார்ச் 24 அன்று பாரத பிரதமர் தேசம் தழுவிய ஊரடங்கு அமல்படுத்திய சமயத்தில், இந்தியாவில் உள்ள மொத்த கோவிட்-19 நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆக இருந்தார். அப்போது கேரள மாநிலம் தான் நோய் தொற்றில் முதல் மாநிலம். ஆனால், ஆறே வாரங்கள் முடிவில் முதல் இடத்திலிருந்து 16வது இடத்திற்கு சென்றது கேரள மாநிலம். இந்தியாவில் நோய் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 71இன் மடங்காக உயர்ந்த நிலையில் கேரள மாநிலம் நோய் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கையை மூன்றில் இரண்டாக குறைத்து நின்றது (பார்க்க வரைபடம்) . கேரள மாநிலத்தில் நோய் தொற்றால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை வெறும் நான்கு.
கேரள மாநிலத்தின் 35 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். கேரள மாநிலத்தில் கோவிட்-19 நோய் தொற்று தாக்கி உயிரழந்தவர்களை காட்டிலும் அதிகமானோர் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக இறந்தது வெளி நாடுகளில் என்ற உண்மையை நாம் காண வேண்டும்.
95மில்லியன் மக்களைக் கொண்ட வியட்நாம் நாடு பெரிய நாடே. சுவாரசியம் என்னவெனில், வியட்நாம் நாடும் இதே போன்ற வழிமுறைகளை கையாண்டு இது போன்ற சிறப்பான பலன்களை பெற்றுள்ளதுதான். கேரள மாநிலத்தைப் போலவே வியட்நாமிலும் நோய் தொற்றுத் தாக்கம் என்பது ஜனவரி மாதத்திலே துவங்கி, மார்ச் மாதத்தில் அதிகரிக்க கண்டது. உயர்ந்து வந்த கோவிட் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது வெறும் 39 என்ற எண்ணிக்கையில் சுருங்கிவிட்டதை நாம் காண முடிகிறது.
வியட்நாமைப் போன்றே சிறியதும் அதே சமயம் கோவிட்-19 நோய் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட தைவானிலும் நியுசிலாந்திலும் உயிரழப்புகள் நிகழ, வியட்நாம் மட்டும் இதுவரை எந்த ஒரு உயிரையும் இழக்காது காத்து விட்டது. வியட்நாமின் அருகில் கிட்டத்தட்ட அதே அளவு எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டிலோ நோய் தொற்று 10000 என்ற எண்ணிக்கையிலும் நோய் தொற்று தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை என்பது 650 என்ற எண்ணிக்கையிலும் இருக்கக் காண்கிறோம்.
கேரளாவைப் போலவே, வியட்நாம் நாடும் 2003இல் சார்ஸ் மற்றும் 2009இல் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுக்களை எதிர்கொண்டுள்ளது. ஏராளமான திறனுள்ள நபர்கள், பொது சுகாதாரம் அதிலும் குறிப்பாக ஆரம்ப சுகாதாரத்தில் நீண்ட கால கவனம் மற்றும் முதலீடுகள், உறுதியான மத்தியப்படுத்தப்பட்ட நிர்வாகம் மற்றும் நகரங்களில் இருந்து கிராமங்கள் வரையிலும் உள்ள சீரான மருத்துவ வசதிகள் என்பனவற்றால் வியட்நாமும் கேரளமும் பெற்ற பலன்கள் மகத்தானவை. தற்செயலானதில்லை, ஆனாலும் எதிர்க்கப்படாத அரசு தத்துவமாக வியட்நாமிலும், 1950கள் தொடங்கி இடதுசாரி கட்சிகளால் ஆதிக்கத்தில் இருந்ததுமான கம்யூனிசத்தின் தாக்கம் என்பது இவ்விரு இடங்களிலும் கவனம் பெறுகிறது.
மொத்த மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை இவ்விரு இடங்களிலும் கணிசமானது என்பது உயிரழப்பு அதிகம் ஏற்படாதிருக்க காரணம் எனவும் சிலர் சொல்லுகிறார்கள். காசநோய் மற்றும் தொழுநோய் ஏற்படாமல் இருக்க குழந்தை பருவத்திலே இடப்படும் BCGஎனப்படும் கட்டாய தடுப்பு ஊசியும் மக்களிடையே கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் குறைத்திருக்கிறது எனவும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். “ஏற்கெனவே நிரூபணமான முறைகளைக் கொண்டு, உறுதியான நடவடிக்கைகளை முன்னரே எடுக்கும் நாடுகள் நோய்த் தொற்றின் பரவலை வெகுவாக குறைத்துள்ளன. சீக்கிரமாக நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் போது, அந்நோய் அதிகரிக்க வாய்ப்பே இல்லை” – என நோய்த் தொற்று மருத்துவத்தில் நிபுணரான வியட்நாமின் டாட் போலாக் (Todd Pollack} தெரிவிக்கிறார்.
சீன நாட்டிற்கு சென்று படிக்கவும் கற்கவும் விருப்பம் உள்ளதும், பாதுகாப்பு முக கவசங்கள் அணிவதில் சுணக்கம் காட்டாத செய்கையும், வீட்டிலிருந்து தனித்து இருக்க மக்கள் முழு சம்மதம் தெரிவிப்பதும், நிபுணர்களின் கருத்தினை மதிப்பதும் ஆகிய கலாச்சார காரணிகள் வியட்நாமிற்கு உதவியிருக்கும் என தாம் நம்புவதாகவும் டாட் போலாக் மேலும் சொல்கிறார். வியட்நாமின் கோவிட் 19 நோய்த் தொற்று கொண்டவர்கள் உலகின் வேறு இடங்களைக் காட்டிலும் வயதில் இளையவர்கள் என்பதும் நோய் தொற்று எதிர்ப்பு அதிகரிக்கவும் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார். ஆனால், சுகாதாரப் பணியாளர்கள் விரைந்து முழுமையாக நோய் தொற்று கொண்டவர்களைத் தனிமைப்படுத்தியதில் தான் வயதில் மூத்தவர்கள் காப்பாற்றப்பட்டதன் காரணம் அடங்கியிருக்கிறது.
ஜனவரி மாதம் முடிவடைதற்கு முன்பாக வியட்நாம் தேசிய அவசரநிலை அறிவித்ததோடு நில்லாமல், துணை பிரதமர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வரும் பிரயாணிகளைச் சோதித்தும் நடமாட்டத்தை மட்டுப்படுத்தவும் செய்தது. நோய்த் தொற்று உள்ளவர்களின் தொடர்புகளை எல்லாம் தேடிக் கண்டுபிடிக்க ராணுவம், அமைச்சக பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என பல தர்ப்பினரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
வியட்நாமின் தலைநகரான ஹனோய் நகரத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இவ்வாறு தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என சுமார் 5000 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர். பிப்ரவரி மாத மத்தியில், எல்லா மாவட்டங்களிலும் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது. சுமார் 10000 பேர் உள்ள கொம்யூன்கள் எல்லாம் கடுமையான போலீஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. சீன நாட்டைப் போலவே, இங்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அவர்கள் குடும்பங்களிலிருந்து தனித்து வைக்கப்பட்டார்கள்.
தகவல் பிரச்சாரம், வலைத்தளங்களில் நிறைய தகவல்கள், தரவிறக்க வேண்டிய தகவல் தரும் மொபைல் ஆப்கள் என இவற்றோடு வியட்நாமில் பிரபலமான 13 இணையவழி செய்தி ஊடகங்கள் வழியே ஒரு நாளைக்கு 127 கட்டுரைகள் என்கிற அளவிற்கு மக்களிடையே விழிப்புணர்வு செய்தது வியட்நாம் அரசு. “இந்த நடவடிக்கைகள் அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துவருவதாக ஒரு நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தது” என்கிறார் திரு டாட் போலக்.
கேரளத்தின் மாநில அரசும் எழுச்சியுடன் முதலமைச்சர் தொடங்கி சுகாதாரத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் வரைக்கும் கிராம அளவிலான கமிட்டிகள் வரை இரவு நேர உரைகள் நடத்தி பொது இடங்களில் கை கழுவும் வசதியினை ஏற்படுத்த உதவினார்கள். ஒரு புறம் நோய்த் தொற்று பரவலைக் கண்காணிப்பதிலும், தன்னுடைய மருத்துவ கட்டமைப்பை உறுதி செய்தும் நம்பிக்கை அளித்த கேரள மாநில அரசு மறுபுறம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் கருணையோடும் புரிந்துணர்வோடும் அணுகியது.
கோவிட்-19 கால் சென்டர்களை கவனித்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சம் மக்களுக்கு உணவும், தரமான மருத்துவமும் உறுதி செய்ய 16000 குழுக்களை அமைத்தது கேரள அரசு. இவர்கள் சில நேரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த மனிதர்கள் பேச பேச்சுத் துணையாகவும் உதவினார்கள். ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களுக்கும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இருப்பிடம் தேடி இலவச உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கேரளா மற்றும் வியட்நாம் ஆகிய இரண்டும் இன்னும் ஆபத்து விலகவில்லை என்பதை நன்கு உணர்நே இருக்கின்றன. நோய்த் தொற்றினை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது உயர் சிகிச்சை கிடைக்கும் வரை வியட்நாம் நாடு உஷார் நிலையிலேயே இருக்கும் எனச் சொல்கிறார் திரு. டாட் போலக். கேரள மாநிலமும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அரபு நாடுகளிலிருந்து திரும்பும் எண்ணற்ற சொந்த நாட்டு மக்களை வரவேற்க தயார் நிலையில் இருக்கிறது.
கிட்டத்தட்ட 3 இலட்சம் பேர் சொந்த நாடு திரும்ப இணையம் மூலம் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே மாநில வருவாய் அருகி இருக்கிற நேரத்தில் இந்த மக்களின் வருகை என்பது மிகப் பெரிய அபாயமும் சுமையும் ஆகும் என்கிறார் கேரளத்தில் நிபா நோய் தொற்று எதிர்ப்பில் முன்னணி பாத்திரம் வகித்த பொது சுகாதார வல்லுநரான ராஜீவ் சதானந்தன். “ஆனால், கேரள அரசும் சமூகமும் எந்த சூழலிலும் என்ன நடந்தாலும் இவர்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என்ற கருத்தில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லாது இருக்கிறார்கள்” என்றும் சொல்கிறார்.
நன்றி : எகனாமிஸ்ட் இதழ், மார்ச் 9, 2020. Bargain abatement என்னும் தலைப்பின் கீழ் வந்த கட்டுரை
மொழிபெயர்ப்பாளர் : ராம்.