வியட்நாம் ஒரு வளர்முக நாடு. சீனத்துடன் நீண்ட நெடிய எல்லையைக் கொண்டதும், 9 கோடியே 70 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டதுமான ஒரு நாடு. இந்நாட்டில் எவரொருவரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக இறந்ததாக செய்தி எதுவும் கிடையாது. ஏப்ரல் 21 அன்று, வியட்நாமில் கோவிட்-19 தொற்றுக்கு 268 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இவர்களில் 140 பேர் முழுமையாகக் குணம் அடைந்துவிட்டார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வியட்நாம், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக மும்முனையில் நடவடிக்கைகள் எடுத்ததே, நோயாளிகள் எவரும் மரணத்தை நோக்கிச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டதற்குக் காரணங்களாகும். தொற்றைப் பரவாமல் தடுத்திட அவை அவசியமானவை என்பதை மெய்ப்பித்துள்ளன.
உடல் வெப்பமும், சோதனையும்
இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே, வியட்நாம் தலைநகரில் பெரிய விமானத்திலிருந்து இறங்கும் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் கட்டாயமாக உடலின் வெப்ப நிலை சோதனை செய்யப்பட்டதுடன், அவர்களுடைய உடல்நலம் குறித்து அவர்களிடம் விசாரித்துப் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்கள் சமீபத்தில் தொடர்புகொண்டவர்களின் விவரங்கள், பயணம் மற்றும் உடல்நலம் குறித்த வரலாற்றையும் பதிவு செய்தனர். பெரிய நகரங்களுக்குள் நுழையும் எவராக இருந்தாலும் இவ்விவரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. சில மாகாணங்களிலும் அரசாங்க அலுவலகங்கள் அல்லது மருத்தவமனைக்குள் வருவோருக்கும் இவை கட்டாயமாக்கப்பட்டன.
உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருக்கும் எவராக இருந்தாலும், அவர் பக்கத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மேலும் முழுமையாக சோதனை செய்யப்படுவார். அவர்கள் தாங்கள் அளித்திருந்த சுய விவரங்களில் ஏதேனும் பொய் சொல்லியிருந்தாலோ அல்லது ஏதேனும் விவரங்களைக் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ, அவர்மீது குற்றவியல் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
வங்கிகள், உணவு விடுதிகள் மற்றும் அபார்ட்மெண்ட் வளாகங்கள் தங்களுக்கு என்று சொந்தமான நடைமுறைகள் மூலமாக இவற்றை அமல்படுத்தின.
இவற்றுடன் நாடு முழுதும் தீவிரமான முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அனைத்துக் குடிமக்களும் பங்கேற்கும்படி, அனைத்து நகரங்களிலும் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் எவராவது அருகில் இருந்தார் என்று உறுதிப்படுத்தப்பட்டால், பின் அவர் இருந்த தெரு முழுவதும் அல்லது கிராமம் முழுவதும் சமூக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அந்தத் தெருவில் இருந்தவர்கள் அல்லது கிராமத்தில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மார்ச் 5 வாக்கில் வியட்நாம் மூன்று வெவ்வேறான சோதனைக் கருவிகளைப் பரிசீலனை செய்து, சட்டப்படி செல்லத்தக்கதாக்கியது. இவை ஒவ்வொன்றில் விலை 25 அமெரிக்க டாலருக்கும் குறைவாகும். இவற்றின்மூலம் 90 நிமிடங்களுக்குள் சோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தும் வியட்நாமிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு கட்டுப்படியாகக்கூடிய விலையில் சோதனைக் கருவிகள் கிடைத்ததென்பது, அரசாங்கம் தீவிரமானமுறையில் சோதனைகளை மேற்கொள்வதற்கு உதவியாக இருந்தது.
ஒரு சில இடங்களில் மட்டும் சமூக முடக்கம்
வியட்நாம் அரசின் இரண்டாவது அணுகுமுறை, சமூகமுடக்கத்தை அறிவித்து, மக்களைத் தனிமைப்படுத்தியதாகும். பிப்ரவரி 14 மத்தியவாக்கிலிருந்தே, வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வியட்நாம் மக்கள் அனைவரும், கட்டாயமானமுறையில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்கள் மற்றும் கோவிட்-19 தொற்று குறித்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இதே தனிமைப்படுத்தப்படும் கொள்கை, வியட்நாமிற்கு வரும் அந்நியர்களுக்கும் பிரயோகிக்கப்பட்டது. இவர்களில் எவருக்காவது தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவர் குறித்த விவரங்கள் பிரசுரிக்கப்பட்டு, அவர் தனிமையில் இருப்பதற்காக வருமாறு ஊக்கப்படுத்தப்பட்டார்கள். கொரானா வைரஸ் தொற்று இருப்பதை வேறெவராக கண்டுபிடித்துச் சொன்னார்கள் என்றால், எவரேனும், எவருடனாவது தொடர்பு ஏற்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு ‘பாசிடிவ்’ என்று சோதனையில் தெரியவந்தால், அவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
மார்ச்சில், வியட்நாமில் ஒட்டுமொத்த நகரங்களும் முழுமையாக சமூக முடக்கத்திற்கும், நகரத்தின் ஒருசில பகுதிகளும் அவ்வாறே சமூக முடக்கத்திற்கும் உள்ளாக்கப்பட்டன. நகரங்களுக்கு இடையே பயணம் செய்வது இப்போது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டன. மத்திய வியட்நாமில் தனாங் நகருக்கு எவரேனும் வரவிரும்பினால், அவர் அவ்வூரில் பதிவு செய்யப்படாத குடியிருப்புவாசியாக இருந்தார் என்றால், அவர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையத்தில் 14 நாட்களுக்கு இருப்பதற்கு சம்மதிப்பதாக எழுதிக்கொடுக்க வேண்டும். இதற்காகும் செலவினை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு நபருக்கு பாதிப்பு இருப்பதாகத் தெரிந்தாலும்கூட, பத்தாயிரம் பேர் வாழும் கிராமங்களும் முற்றிலுமாக வேலி வைத்து அடைக்கப்பட்டன. ஹனாயில் உள்ள பாச் மை என்னும் 3200 பேர் சிகிச்சை பெறும் வசதிகள் கொண்ட, கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளித்துவரும் மையமாகவும் விளங்கும் புகழ்பெற்ற மருத்துவமனையில், மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு ‘பாசிடிவ்’ என்று சோதனை மூலம் தெரிய வந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மருத்துவமனையே சமூக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. சுற்றுலாத்துறையும், விமானப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து பிரச்சாரம்
ஜனவரி தொடக்கத்திலிருந்தே, வியட்நாம் அரசாங்கம் மிகவும் விரிவான அளவில், கொரானா வைரஸ் தொற்று குறித்தும் அதன் ஆபத்து குறித்தும் குடிமக்களுக்குத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது. பிரச்சாரத்தில், மிகவும் தெளிவாகவே, கோவிட்-19 தொற்று, ஃப்ளூ போன்ற ஒன்று அல்ல என்றும், மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு நோய் என்றும், எனவே மக்கள் தங்களையோ அல்லது பிறரையோ இடருக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தார்கள்.
வியட்நாம் அரசாங்கம், இது தொடர்பாக பிரச்சாரம் செய்வதிலும்கூட, மக்களைக் கவரும் விதத்தில் எண்ணற்ற முறைகளைப் பின்பற்றின. ஒவ்வொரு நாளும், வியட்நாம் அரசாங்கத்தின் பல பகுதிகள் – பிரதமரிலிருந்து, சுகாதார அமைச்சர் வரை, தகவல் தொடர்பு அமைச்சகத்திலிலுந்து மாகாண அரசாங்கங்கள் வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
நோய்த் தொற்றின் அடையாளங்களும் அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் மொபைல் போன்களில் அளிக்கப்படும் செய்திகள் வழியாக நாடு முழுதும் எடுத்துச் செல்லப்பட்டன. அரசாங்கமே சாலோ (Zalo) என்னும் தகவல் மேடைகளைப் பயன்படுத்தி வந்தது. இத்துடன் நாடு முழுதும் எண்ணற்ற வடிவங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து புதிய வடிவ அஞ்சல்வில்லைகள் வெளியிடப்பட்டன. கொரானா வைரஸ் தொற்று பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் செய்திகள் பரப்பப்பட்டன.
வியட்நாம் நகரங்களின் பிரதான இடங்களில் போஸ்டர்கள் வைக்கப்பட்டன. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, குடிமக்களுக்கு உள்ள கடமைகள் குறித்தும் அவற்றில் விளக்கப்பட்டன. அதேசமயத்தில், அரசாங்கம், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. சில சமயங்களில் எவரேனும் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் பயண விவரங்களைத் தராமல் மறைத்திருந்தால், அவர்களின் பெயர்களைத் தெரிவிக்காமல் அந்த சம்பவங்களை மட்டும் தெரிவிக்கும் விளம்பரங்களும் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, இரு நோயாளிகள் மறைத்திட்ட பயண விவரங்களை வெளியிடப்பட்டன.
இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும், ஒருசில வழக்குகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் கூட, வியட்நாம் அணுகுமுறை தொற்று பரவுவதைக் குறைப்பதில் வலுவாக செயல்பட்டது என்பதில் ஐயமில்லை.
இவற்றின் விளைவாகமட்டமல்லாமல், பொதுவாகவே வியட்நாம் பெரிய அளவில் எவ்விதமான தொற்றாலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹோசிமின் மாநகரம், மிகச் சிறந்த பொது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறையைப் பெற்றிருப்பதுமாகும்.
இவ்வாறு வியட்நாம், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக மும்முனையிலும் போராடிக்கொண்டிருப்பதன் விளைவாகவும், அங்கே மிகச்சிறந்த முறையில் பொது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறை இருப்பதாலும், அதன்மூலம் அனைவரையுமே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதன் மூலமாகவும்தான் கோவிட்-19 தொற்று காரணமாக எவரொருவரும் இறக்காமல் இருக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறது. வியட்நாம், கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் எப்படிப் போராட வேண்டும் என்பதற்கு வளர்முக நாடுகள் அனைத்திற்கும் ஒரு முக்கிய எடுத்தக்காட்டாக விளங்குகிறது.
நன்றி: தி கான்வெர்ஷேசன் இணைய இதழ்