மஞ்சள் கவர்..!  – தேடன்மஞ்சள் பிளாஸ்டிக் கவருக்குள்
ஒளிந்திருக்கும் சிறுமுகம்.
தூக்கிப் பார்த்தும் கீழிறக்கியும்
பயமுறுத்துவதாக
வேடிக்கை செய்கிறது எலும்பொட்டிய கைகள் இரண்டு.
ஓடி ஓடி ஒளிகிறது மூன்று சிறுசுகள்.

கொஞ்சம் கழித்து
மஞ்சள் கவர் தனக்கு வேண்டுமென
அதிலொரு சிறுசு வாங்கி
தன் தலையில் மாட்டிக் கொண்டது;
அடைகிற ஆசையில்.

குப்பையில் கிடந்த கவரை தலையில் பார்த்த அவன் அப்பா
ரெண்டு அடி போட்டு தூக்கி எறிந்து விட்டார்;
சிறுசுகள் சிதறிவிட்டன.

எலும்பொட்டிய கைகள்
மஞ்சள் கவரை எடுத்துக் கொண்டு வீடு சென்றது
இவன் அப்பாவை பயமுறுத்திட!