கவிதை: முகங்கள், கதைகள்..! – தேடன்முகங்கள், கதைகள்..! 

பத்து பன்னிரண்டு வயது மகன்
மகனாக தான் இருக்கும்
இல்லாவிட்டால் என்ன?
அவன் அங்கு கலக்கத்துடன்
ஏதும் செய்வதறியாது நிற்பதும்
அவளை பார்க்கும் தொனியும்
அப்படி தான் இருந்தது.
குழந்தைகள் துணிக்கடை முன்
பைக் நிறுத்தும் மேட்டில்
அமர்ந்திருந்தாள் அம்மா.
அம்மாவாக தான் இருக்க முடியும்.
யாருக்கு அம்மாவாக இருந்தால் என்ன?
விரித்து போட்ட தலை மயிரும்
இரவின் சாயம் போகாத நைட்டியும்
கண்ணில் சிறு துளி கண்ணீரும்
வாழ்க்கை வெறுத்து போய் விட்டது
என்பதை ஒரு நொடியில் வெளிப்படுத்திவிட்டன.
கடந்துதான் வந்துவிட்டேன்
ஒரு சில நொடிகளில்,
அந்த முகங்களை;
கலங்காமல் இருக்க முடியவில்லை
அந்த கதைகளை கடந்து.
நானும் ஒரு மகன் தானே!
 – தேடன்