விஜய் டெண்டுல்கரின் ‘சைலன்ஸ் - தி கோர்ட் இஸ் இன் செஷன்’ புத்தகம் | Vijay Tendulkar's Silence - The Court is in Session Tamil Book Review | பெ.விஜயகுமார் | www.bookday.in

விஜய் டெண்டுல்கரின் ‘சைலன்ஸ் – தி கோர்ட் இஸ் இன் செஷன் (Silence – The Court is in Session)’ – நூல் அறிமுகம்

விளையாட்டு விபரீதமான கதையை அரங்கேற்றும் நாடகம் விஜய் டெண்டுல்கரின் “சைலன்ஸ் – தி கோர்ட் இஸ் இன் செஷன் (Silence – The Court is in Session)”

– பெ.விஜயகுமார்.

விஜய் டெண்டுல்கர் (1928-2008) மராத்தி நாடக இலக்கிய உலகில் வெற்றிகரமாக வலம்வந்த எழுத்தாளர். நாடகம் கலை என்பதைத் தாண்டி அதுவொரு சமூகச் செயல்பாடு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், வரலாறு என்று நிறைய எழுதினார். சிறுவர்களுக்கென்றே பதினாறு நாடகங்கள் எழுதியுள்ளார். நாடகங்களில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் புதுமையாகவும், சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. ’சைலன்ஸ்! தி கோர்ட் இஸ் இன் செஷன்’, ’கன்னியாதான்’, ’காஷிராம் கோட்வால்’, ’சகாராம் பைண்டர்’, ’கமலா’ போன்ற நாடகங்களை மராத்தியில் எழுதினார். இந்நாடகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய நாடகங்களில் அரசியல் அதிகாரங்கள் தனி மனிதர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் காட்சிப்படுத்தினார்.

1967இல் அரங்கேறிய ’சைலன்ஸ்! தி கோர்ட் இஸ் இன் செஷன்’ நாடகம் விஜய் டெண்டுல்கரை அகில இந்திய அளவில் அறியச் செய்தது. ‘கமலாதேவி சட்டோபாத்யா விருது’ம் பெற்றது. ஆங்கிலத்திலும், பல இந்திய மொழிகளிலும் இந்நாடகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகம் ஆணாதிக்கத்தின் வன்மம், சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பாசாங்குத்தனம், மத்தியதர வர்க்கத்தினரின் ஒழுக்கம் பற்றிய கற்பிதங்கள் ஆகியனவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறது. நாடகத்தின் நாயகி லீலா பெனாரே முப்பத்து நான்கு வயதான பள்ளி ஆசிரியை. குழந்தைகளிடம் அன்பைப் பொழிந்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

பெனாரேயின் திறமைகளையும், சுதந்திரச் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளாமல் பள்ளி நிர்வாகம் அவர் மீது அசூயை கொள்கிறது. பழி வாங்கத் துடிக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் இருக்கும் அவலத்தையும், கல்வித்துறையின் போதாமையையும் விஜய் டெண்டுல்கர் இந்நாடகத்தில் சாடுகிறார்.

தளைகள் ஏதுமின்றி சுதந்திரமாக வாழ விரும்பும் லீலா பெனாரேயின் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள சமூகம் மறுப்பது அவலமே. பெனாரேயின் கள்ளங்கபடமற்ற, வெகுளித்தனமான நடத்தையை அவரைச் சுற்றியுள்ள ஆண்கள் புரிந்துகொள்ளாமல் அவர் மீது களங்கம் சுமத்துகின்றனர். சொந்தத் தாய்மாமனே அவரைத் தவறாகப் பயன்படுத்திவிட்டு விலகுகிறான். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான பேராசிரியர் தாம்லேவுடன் அறிவார்ந்த நட்புடன் பெனாரே பழகுகிறார். ஆனால் தாம்லே அத்துமீறி நடந்துகொண்டதால் பெனாரே தாய்மை அடைந்து தாம்லேயின் குழந்தையைச் சுமக்க நேர்கிறது. பெனாரே தன் வயிற்றில் வளரும் சிசுவைக் கொல்ல விரும்பவில்லை. திருமணமாகாமல் கர்ப்பிணியான பெனாரே மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நினைக்கிறது.

இந்தப் பின்னணியில் நாடகத்தில் நடிக்க வரும் பெனாரே நாடகக் குழுவில் இருக்கும் ஆண்களின் வக்கிரப் புத்திக்கும் ஆளாகிறார். கேலி செய்வது என்ற பெயரில் அவர் மனதைப் புண்படுத்தி குரூர இன்பம் காண்கிறார்கள். ஒரு பெண் சுதந்திரமாக வாழ முடியாத சூழல் சமூகத்தில் நிலவுவதை அறச் சீற்றத்துடன் பகடி செய்கிறார் விஜய் டெண்டுல்கர்.

மும்பையில் இருக்கும் ஓர் அமெச்சூர் நாடகக் குழு ’சைலன்ஸ்! தி கோர்ட் இஸ் இன் செஷன்’ என்ற நாடகத்தை அரங்கேற்ற அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறது. இரவு எட்டு மணிக்குத்தான் நாடக அரங்கேற்றம். ஆனால் நாடகக் குழு காலையிலேயே வந்துவிடுகிறது. நாடகம் நடக்கவிருக்கும் ஊருக்கு முதலாக வருபவர் பெனாரே. உள்ளூர் இளைஞன் சமந்த் அவரை வரவேற்கிறான். இருவருக்கும் இடையிலான உரையாடல் சுவராசியமாக இருக்கிறது. கிராமத்து இளைஞனான சமந்த் நகரப் பெண்ணான பெனாரேயைக் கண்டு வியக்கிறான். பெனாரேவின் பேச்சு, நடவடிக்கைகள் எல்லாம் சமந்துக்கு வித்தியாசமாக இருக்கிறது. அவனுடன் ஒட்டி நின்று பெனரே பேசுவது அவனுக்குக் கூச்சத்தைத் தருகிறது. இருப்பினும் பெனாரேவின் வெகுளித்தனத்தை சமந்த் புரிந்து கொள்கிறான். சமந்த் பெண்களை மதிக்கும் நற்குணத்தைக் கொண்டுள்ளான்.

மாலையில் அவர்கள் அரங்கேற்ற இருந்த நாடகத்தின் கருப்பொருள் முக்கியத்துவமானது. உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்காடுதலாகும். அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் அணுகுண்டுகளை அதிக அளவில் தயாரிப்பதற்கு எதிராக அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதாக நாடகக் கதை புனையப்பட்டுள்ளது. இந்தக் கோர்ட் நடவடிக்கையை அரங்கேற்றவே நாடகக் குழுவினர் வந்துள்ளனர்.

பெனாரேவைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் வந்து சேர்ந்ததும் அரங்கம் கலகலப்பாகிறது. பேராசிரியர் தாம்லேயும், ராட்டே என்ற நடிகரும் வந்துசேரவில்லை. இவர்களுக்குப் பதிலாக உள்ளூர் நடிகர் ஒருவரை இணைத்துக் கொண்டு சமாளிக்கலாம் என்று நினைக்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கிராமத்து இளைஞன் சமந்த் மாற்று நடிகனாக நடிக்கத் தகுதியானவன் என்று முடிவெடுக்கிறார்கள்.

நாடகக் குழுவில் பல்வேறு தொழில் செய்பவர்களும் உள்ளனர். குழுவின் தலைவர் காஷிக்கர் ஒரு சமூக சேவகர். திருமதி காஷிக்கர் கணவர் சொற்படி நடக்கும் மனைவி. இவர்களுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை. ரோக்டே என்ற இளைஞன் இவர்கள் நிழலில் வாழ்கின்றான். அவனும் நாடகக் குழுவில் ஓர் உறுப்பினன். சுகாத்மே என்ற வக்கீல் மற்றொரு முக்கியமான நடிகர். பாவம்! அவர் வழக்குகள் இல்லாமல் அவதிப்படும் வக்கீல். இவர்களுடன் போன்ங்செ, கார்னிக் ஆகிய நடிகர்களும் இணைந்து ஒற்றுமையுடன் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். ரோக்டேவிடம் நாடகத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடகக் குழுவின் தலைவர் காஷிக்கர்,’’ரோக்டே! நாடகச் சீன்களை எல்லாம் மறந்துவிடாமல் கொண்டுவந்துவிட்டாயா? ஒவ்வொரு முறையும் நீ ஏதாவது ஒன்றை மறந்துவிடுகிறாய். சரியாக எல்லாப் பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்.’’ என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார். எல்லா பொருட்களையும் சரியாகக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறான். ’’இரவு எட்டு மணிக்குத்தானே நாடகம், அதுவரை ஏதேனும் ஒரு நாடகத்தை விளையாட்டாகப் போட்டு பொழுது போக்கலாமே,’’ என்று காஷிக்கர் ஆலோசனை கூறுகிறார். ’’இரவு நாம் அரங்கேற்றவிருக்கும் நாடகம் ஒரு கோர்ட் சீன். அதுபோன்ற கோர்ட் சீன் ஒன்றை இப்போது போடுவோம்.’’ என்று காஷிக்கர் சொன்னதும் எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

திருமதி காஷிக்கர்,’’நல்லது; புதிதாக நடிக்கப் போகும் இளைஞன் சமந்த்க்கு ஒரு பயிற்சிபோல் அமையும். நாடக அரங்கேற்றம் பற்றி அவன் கொஞ்சம் புரிந்துகொள்வான். எப்போதும்போல் சமூக அக்கறையுள்ள கருப்பொருளை எடுத்துக்கொள்வோம். நாடெங்கிலும் சிசுக் கொலை அதிகம் நடக்கிறது.

அதற்கெதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகம் ஒன்றை அரங்கேற்றுவோம்,’’ என்ற அவரின் விருப்பம் எல்லோருக்கும் பிடிக்கிறது. உடனே சமந்த்,’’ஆம்; எங்கள் ஊரிலும் சமீபத்தில் ஒரு சிசுக் கொலை நடந்துள்ளது.” என்றதும் தாங்கள் தேர்தெடுத்த கருப்பொருள் பொருத்தமானதே என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்த முடிவை எடுக்கும்போது பெனாரே அங்கில்லை. இதைக் கேள்விப்பட்டதும், பெனாரே,’’சிசுக் கொலை! – இதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு திருட்டுக் குற்றத்தை எடுத்துக்கொள்வோமே’’ என்று சொல்கிறார். அவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் சிசுக் கொலைக் குற்றத்தையே வழக்குக்கான பொருளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ரோக்டே நாடக மேடையைத் தயாரிக்கும் வேலையில் இறங்குகிறான். நீதிபதி உட்காருவதற்காக நாற்காலி, மேஜை, மேஜையின் மீது ஒரு சுத்தியல் (Gavel) வைக்கிறான். நீதிபதியாக நடிக்கவிருக்கும் காஷிக்கர் நாற்காலியில் தோரணையாக அமர்கிறார். அடுத்து குற்றவாளிக் கூண்டு தயாராகிறது. குற்றவாளியாக நடிக்கப்போகும் பெனாரெவை அதில் நிற்கச் செய்கிறார்கள். சாட்சிகள் உட்கார ஒரு பெஞ்சு போட்டதும் அதில் திருமதி காஷிக்கர், போன்ங்ஷே, கார்னிக், ரோக்டே ஆகிய நால்வரும் உட்கார்ந்து கொள்கின்றனர். அடுத்து வழக்கை அரசு தரப்பில் வாதிடப்போகும் (பிராசிக்கியூஷன்) வழக்கறிஞருக்கான இருக்கையில் சுகாத்மே பந்தாவாக அமர்கிறார். ‘’டிஃபென்ஸ் தரப்பில் வாதாட நம்மிடம் யாரும் நடிகர்கள் இல்லையே; என்ன செய்வது?’’ என்று ரோக்டே கேட்டதும், சுகாத்மே,’’அதற்கென்ன நானே டிஃபென்ஸ் தரப்பு வழக்கறிஞராகவும் நடிக்கிறேன். இரட்டை வேடம் போடுகிறேன்’’ என்கிறார். நிஜ வாழ்க்கையில் வழக்கறிஞராகத் தோற்றுப்போன சுகாத்மே நாடகத்திலாவது மிளிரலாம் என்று நினைக்கிறார் பாவம்!

விளையாட்டு தொடங்குகிறது. அது விபரீதத்தில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீதிபதி காஷிக்கர் இன்றைய வழக்கு என்ன? என்று கேட்டதும் சுகாத்மே, ‘’யுவர் ஆனர்! குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இந்தப் பெண் மீது சிசுக் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது’’. என்கிறார். ’’குற்றவாளி முதலில் சத்தியப் பிரமானம் எடுக்கட்டும். ரோக்டே! புத்தகத்தைக் கொண்டு வா’’ என்றதும் ரோக்டே ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியைக் கொண்டு வருகிறான். ’’என்ன, ரோக்டே? பகவத் கீதை புத்தகம் கொண்டுவரவில்லையா? என்றதும். ரோக்டே,’’மறந்துவிட்டேன்,’’ என்றதும், காஷிக்கர்’’பரவாயில்லை, இதுவொரு விளையாட்டுதானே’’ என்று சொல்லி. ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுக்கச் சொல்கிறார். டிக்‌ஷனரி மீது கைவைத்து பெனாரே ‘’நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறேதும் இல்லை’’ என்று சத்தியப் பிரமானம் எடுத்துக்கொள்கிறார்.

அடுத்து அரசு தரப்பு வக்கீல் சுகாத்மே வழக்காடத் தொடங்குகிறார். ஒவ்வொரு சாட்சியாகக் கூப்பிடுகிறார். எல்லோரும் ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டு சாட்சி சொல்லத் தொடங்குகிறார்கள். முதலில் ரோக்டே ஓர் இரவில் பேராசிரியர் தாம்லே வீட்டில் பெனாரே இருந்ததைத் தான் பார்த்ததாகச் சாட்சி சொல்கிறான். உடனே இதைக் குறிப்பில் ஏற்றச் சொல்கிறார் காஷிக்கர். ஒவ்வொருவராக பெனாரேவுக்கு எதிராகச் சாட்சி சொல்கிறார்கள். திருமதி காஷிக்கர் பெண்ணின் பெருமை பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கிறார். பெனாரே பெண்களின் மாண்புகளுக்கு களங்கம் விளைவித்துவிட்டார் என்று சாட்சி சொல்கிறார். பெனாரேவால் பொறுக்க முடியாத அளவுக்கு காட்சிகள் நகர்கின்றன. பெனாரே அங்கிருந்து தப்பி ஓட முயலுகிறார். முடியவில்லை. கதவை வெளியிலிருந்து பூட்டி இருக்கிறார்கள். இது உண்மையில் ஒரு விளையாட்டுதானா என்ற சந்தேகம் பிறக்கிறது.

நீதிபதி இருக்கையில் இருந்து கீழிறங்கிவந்து, ‘’இந்த வழக்கு தொடர்பாக நானும் சாட்சி அளிக்க விரும்புகிறேன். சுகாத்மே! நீங்கள் என்னையும் ஒரு சாட்சியாக விசாரிக்கலாம்,’’என்றதும் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கின்றனர். நீதிபதி எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? அவர்கள் திடுக்கிட்டு நிற்பது கண்ட காஷிக்கர்,’’இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி நான் சாட்சி அளிக்க விரும்புகிறேன். சிசுக் கொலை கொடூரமான குற்றம்! திருமணமாகாமல் குழந்தை பெறுவது சமூகத்தையே சீரழிக்கும் குற்றம்! இந்தக் குற்றவாளி தப்பிவிடக் கூடாது என்பதே என் நோக்கம்’’ என்ற காஷிக்கர் சொல்வதைக் கேட்டு பெனாரே பயந்து நடுங்குகிறார். ’’விளையாட்டு என்றுதானே சொன்னார்கள். இப்போது இவர்கள் எல்லோரும் எனக்கு எதிராக வன்மத்துடன் நடந்துகொள்கிறார்களே’’ என்று சொல்லி அழுகிறார்.

சாட்சிகளை விசாரித்து முடிந்ததும் பிராசிக்கியூட்டர் என்ற முறையில் சுகாத்மே இறுதியாக பெனாரே மீதான குற்றத்தைச் சொல்லி வாதத்தை முடிக்கிறார். குற்றம் கொடூரமானது. பெனாரே பெண் குலத்துக்கே இழுக்கை ஏற்படுத்தியுள்ளார். இத்தகு குற்றத்தை வளர விடும் பட்சத்தில் நாட்டில் ஒழுக்கக் கேடுகள் கூடிவிடும். இதனால் குற்றவாளிக்கு அதிகப் பட்ச தண்டைனையை கனம் கோர்ட்டார் அவர்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி தன் வாதத்தை முடிக்கிறார்.

’’பெனாரே! நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொள்கிறீர்களா? உங்கள் தரப்பு வாதத்தை நீங்கள் கூறலாம்’’ என்கிறார் நீதிபதி காஷிக்கர். பெனாரே எதுவும் கூறமுடியாமல் தலை குனிந்து அழுகிறார். ’’அவர் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றால்; நான் என் தீர்ப்பைச் சொல்கிறேன். பெனாரே செய்துள்ள குற்றம் தீவிரமானது. திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்று கூறுவது நமது சமூகம் இதுவரை காப்பாற்றிய அறநெறிகளுக்கு எதிரனது. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே பெனாரே அவர் வயிற்றில் வளரும் சிசுவை அபார்ஷன் மூலம் கொன்றுவிட வேண்டும்’’ என்று தீர்ப்பளிக்கிறார்.

அதிர்ச்சியில் பெனாரே கதறி அழுகிறார். நாடகம் போடும் நேரம் ஆகிவிட்டதால் கிராமத்தினர் வெளியிலிருந்து கதவைத் திறந்து உள்ளே வருகின்றனர். உள்ளே இருள் சூழ்ந்துள்ளது. அழுதுகொண்டிருக்கும் பெனாரே மீது மட்டும் வெளிச்சம் விழுகிறது. திரை கீழே இறங்குகிறது.

அமைதி! கோர்ட் நடக்கிறது’ என்றழைக்கப்படும் நாடகத்தில் அமைதியும், ஒழுங்கும் இல்லாதததைக் காண்கிறோம். இந்த நகைமுரணே நாடகத்தின் வெற்றியாகும். விளையாட்டாகத் தொடங்கும் நாடகம் இறுதியில் விபரீதமாக முடிவது அதிர்ச்சி அளிக்கிறது. சிரித்துக்கொண்டே குற்றவாளிக் கூண்டில் ஏறும் பெனாரே நாடகத்தின் இறுதியில் வெடித்து அழுவது நெஞ்சை நெகிழச் செய்கிறது. திட்டமிடாத வன்முறை திட்டமிட்டுச். செய்யப்படும் வன்முறையைக் காட்டிலும் கொடூரமாக இருப்பது கண்டு மனம் பதறுகிறது கிரேக்க துன்பியல் நாடகங்களுக்கு இணையானது ‘சைலன்ஸ்! தி கோர்ட் இஸ் இன் செஷன்’ நாடகம். காலம், இடம், வினை ஆகியன ஒருங்கமைந்து செவ்வியல் கோட்பாடுகளுடன் எழுதப்பட்டுள்ள சிறப்பினை உடையது என்பதிலும் ஐயமில்லை.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சைலன்ஸ் – தி கோர்ட் இஸ் இன் செஷன் (Silence – The Court is in Session)
ஆசிரியர்:
விஜய் டெண்டுல்கர் (Vijay Tendulkar)
வெளியீடு:
Oxford University Press
விலை:₹.230
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 பெ.விஜயகுமார்,
மதுரை- 18.
இமெயில்: vijayakumarmuta@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. Ramachandra vaidhyanath

    டெண்டூல்கரின் நாடகத்திற்குள் நாடகம் போன்றே மிருணாள் சென்னும் திரைப்படத்திற்குள் ஒரு திரைப்படமொன்றை அளித்திருக்கின்றார். அதுவும் சமகாலப் பிரச்னையை ஆழமாக கையாண்டிருக்கிறது. அகாலே சந்தானே அல்லது ஏக் ஆதூரி கஹானியாக இருக்கலாம். வயோதிகம் காரணமாய் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

    டெண்டூல்கரின் இந்த நாடகம் அன்னாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

    ஜீவனுடன் மையக் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *