எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் 2024- ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது:
கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம், கேடயத்தை உள்ளடக்கிய இந்த விருதுக்கான தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது. 2024-ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை பீளமேடு பிஎஸ்ஜி கல்லூரி யில் வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்று, நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்குகிறார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தலை கீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை, மாமிசப் படைப்பு, எட்டுத்திக்கும் மதயானை உள்ளிட்ட நாவல்களுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை என 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, அமுதன் அடிகள் விருது, கனடா நாட்டு இயல் விருது, மெல்பர்ன் தமிழ்ச் சங்க இயற்றமிழ் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் பெரியசாமித்தூரன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கிய உலகில் தடம் பதித்தவர்களுக்கு வழங்கப்படும் கி.ரா. விருதை எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம், எஸ்.வி.ராஜ துரை ஆகியோர் கடந்த ஆண்டு களில் பெற்றுள்ளனர்.
நன்றி: தினமணி நாளிதழ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.