நூல் அறிமுகம்: பேறு பெற்ற இலைகள் – பாவண்ணன்

Vijayananda Lakshmi Poems Collection Udanpaattu Veil (உடன்பாட்டு வெயில்) Book Review By Writer Pavannan. Book Day And Bharathi Puthakalayam.கேட்டுக்கேட்டுப் பழகிய கைவிடப்பட்டவர்களின் குரலாகவோ, ஏமாந்தவர்களின் குமுறலாகவோ, சீற்றம் கொண்டவர்களின் அறைகூவலாகவோ, சாபமாகவோ, அழுகையாகவோ இல்லாத ஒரு புத்தம் புதிய குரலாக இருக்கிறது, விஜயானந்தலட்சுமியின் கவிதைக்குரல். அது ’உடன்பாட்டு வெயில்’ தொகுதியெங்கும் குயிலோசையென சீராக ஒலித்தபடி இருக்கிறது. அந்தக் குரல் வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களில் கண்ட காட்சிகளை முன்வைக்கிறது. தான் அடைந்த பரவசத்தைப் பகிர்ந்துகொள்கிறது. தனக்குள் எழும் பெருமூச்சையும் கேள்விகளையும் முன்வைக்கிறது. குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் கூட எடுத்துரைக்கிறது. கச்சிதமான கவிமொழியில் அனைத்தையும் நவீனவாழ்வின் தரிசனங்களாகவும் சாரமாகவும் உருமாற்றிக் காட்டுகிறது. அதுவே விஜயானந்தலட்சுமியின் முதன்மைச்சிறப்பு. சங்கச்செய்யுளின் சாயலில் மிக எளிமையான அழகுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் விஜயானந்தலட்சுமியின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் தேடலையும் பார்க்கமுடிகிறது. நவீன தமிழ்க்கவிதையுலகில் சிறப்பானதோர் இடம் விஜயானந்தலட்சுமிக்காகக் காத்திருக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அலைத்தேன் அருந்தும்
நிலாவண்டு
மலர்ந்து தளும்பும்
கடற்பூ

தலைப்பில்லாத இக்கவிதையைப் படிக்கும்போது, விஜயானந்தலட்சுமி தன்னைப்பற்றி தானே எழுதிக்கொண்ட கவிதையோ என எண்ணத் தோன்றுகிறது. எல்லாக் கவிஞர்களும் ஒருவகையில் மலர்களைத் தேடித்தேடி தேனெடுத்து உண்ணும் வண்டுகளே. கவிஞர்கள் மட்டுமன்றி, சுவைநாட்டம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் இத்தகைய தேடல் உள்ளவர்களே. ஆனால் விஜயானந்தலட்சுமிக்கு தேனுண்ணும் வண்டாக மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்வது மனநிறைவை அளிக்கவில்லையோ என தோன்றுகிறது. அவருக்கு அந்த வழக்கமான வண்டின் வடிவம் போதுமானதாக இல்லை. மேலும் துளியளவு தேனை மட்டுமே தன்னகத்தே கொண்ட மலர்களும் போதுமானவையாக இல்லை. அதனால் எளிய வண்டுகள் பறக்கும் எல்லைக்கு அப்பால் வெளியில் மிதக்கும் நிலவென்னும் வண்டாக உருமாற்றிக்கொள்கிறார். தேனருந்த, சாதாரண மலர்களைக் கடந்து, கடலென மலர்ந்திருக்கும் மலரை நாடிச் செல்கிறார். நிலவென மாறி அந்த மலரில் அவர் அருந்திக் களித்த தேன்துளிகளே கவிதைகள்.

உதிரும் அளவுக்கு
லேசாகியிருந்தது சிறகு
உதிர்க்க முடியாதபடி
வலுவிழந்திருந்தது பறவை

சுருக்கமான வடிவில் இப்படி ஒரு கவிதை. இதுவும் தலைப்பில்லாதது. இங்கு சிறகென நீடித்திருப்பது எது? நினைவின் இனிமையா, துயரமா, அனுபவமா, ஞானமா? சிறகை உதிர்க்கக்கூட வலிமையற்று கூட்டிலிருக்கும் பறவையென இங்கே அமைதியுடன் அமர்ந்திருப்பவர் யார்? காதலனா? காதலியா? ஞானியா? அசடனா? உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை தொன்றுதொட்டு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள உறவின் வழியாக தொடர்புப்படுத்துவதன் நீட்சியாக இக்காட்சியைக் கருதவும் ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது.

தூரப்பயணம் செய்து
தன்னை அடைந்த பறவைக்கு
நெடுங்கனவொன்றின் முனையை
கொத்தத் தருகிறது நீர்நிலை

இக்கவிதை வழியாக மீண்டும் ஒரு பறவையின் காட்சியை முன்வைக்கிறார் விஜயானந்தலட்சுமி. இது இங்கிருக்கும் நீர்நிலையைத் தேடி எங்கிருந்தோ வலசை வந்த பறவை. கடந்த வலசைப்பயணத்தில் கண்டும் களித்தும் பறந்தும் கரையோரத்தில் நடந்தும் கொத்தியும் பழகிய நீர்நிலைக்கு, இந்தப் பயணத்திலும் நேரமும் காலமும் பிசகாமல் வந்து சேர்ந்திருக்கிறது பறவை. பறவையையும் நீர்நிலையையும் முன்வைத்து யுகயுகமாக காலம் நிகழ்த்தும் ஆடல் அது. நீர்நிலைக்கு அருகில் நடந்தும் தாவியும் தன் வருகையை உணர்த்துகிறது பறவை. இதோ வந்துவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறது. கடந்த வலசைப்பயணத்திலிருந்து இந்த வலசைப்பயணம் வரைக்கும் சிறுகச்சிறுக உருவாக்கித் திளைத்திருந்த தன் நெடுங்கனவைத் தீண்டிப் பார்க்க அனுமதிக்கிறது நீர்நிலை. வலசைப்பயணமே காதல் பயணமாகிறது.

நிறுத்தம் தாண்டியதும்
வளைவில் நின்றிருந்த மரங்கள்
நிழலசைத்து விடை கொடுக்கின்றன

நின்ற மரங்களை வழியனுப்பி
கையசைத்துக் கடக்கிறது பேருந்து

விடை பெறுவதா, கொடுப்பதா
என்று
புரியாமலேயே பயணிக்கிறது
போகிற போக்கில் உதிர்ந்து
இருக்கையில் அமர்ந்த இலைகள்

புன்னகைக்க வைக்கும் ஒரு காட்சியை அழகானதொரு சொல்லோவியமாக தீட்டிக் காட்டியிருக்கிறார் விஜயானந்தலட்சுமி. பேருந்து தன் போக்கில் மரத்தைக் கடந்துசெல்லும் ஒற்றைக் கணத்தில் நிகழ்ந்துவிடும் மாயத்தைச் சித்தரிக்கிறது கவிதை. இலைகள் மரக்கிளையிலிருந்து உதிர்ந்து, தன் போக்கில் பேருந்துக்குள் பறந்தலைந்து வந்து அமரும் கணம், அற்புதமானதொரு கணம். அந்த இலைகளுக்கு நம் விருப்பம்போல பல உருவங்களைக் கொடுக்கலாம். ஒவ்வொரு உருவமும் அக்கவிதையின் அழகையும் ஆழத்தையும் அதிகரிக்கவே செய்கின்றன. அது உணர்த்தும் பரவசத்தவிப்பு ஈடு இணையற்றது.

Vijayananda Lakshmi Poems Collection Udanpaattu Veil (உடன்பாட்டு வெயில்) Book Review By Writer Pavannan. Book Day And Bharathi Puthakalayam.

ஒரு கோடி சொற்களிலிருந்து ஒரே ஒரு சொல் மந்திரத்தன்மை அடைவதைப்போல, ஓராயிரம் கற்பாறைகளில் ஒரு பாறையிலிருந்து சிற்பம் எழுவதுபோல, எண்ணற்ற கடற்பாறைக்குவியலில் ஒரு குவியல் பாறை பவழமென்றாவதைப்போல, கிளைதோறும் இலைகொண்ட மரத்திலிருந்து ஒன்றிரண்டு இலைகள் மட்டும் உதிர்ந்து பறந்துசென்று பேருந்தின் இருக்கையில் அமர்கின்றன. அது ஒரு வாய்ப்பு. தனித்துப் பிரிந்து செல்லும் பேறு பெற்றவை. தன் வாழ்க்கைக்கான இலக்கென வேறொன்றைக் கொண்டவை. பிரிந்து செல்லும் இலைகளையும் பிறிதொருமுறை பார்க்க இயலாத மரத்தையும் ஒரே காட்சித்துண்டாக முன்வைக்கிறார் விஜயானந்தலட்சுமி. விடை கொடுப்பதா, விடை பெறுவதா என்ற கணநேரத்துக் குழப்பமும் அக்காட்சியில் இணைந்துகொள்கிறது.

இரைகவ்வி வந்த பறவையின்
வெற்றுக்கூட்டில்
ஒலித்துக்கொண்டே இருக்கும்
இல்லாத குஞ்சுப்பறவைகளின்
கதறலைப்போல
நீ விட்டுச் சென்ற பொழுதுகள்

குஞ்சுகளுக்காக இரைதேடிச் சென்ற பறவை திரும்பிவரும்போது குஞ்சுகளைக் காணவில்லை. கூடு மட்டுமே இருக்கிறது. குஞ்சு எப்படி மறைந்தது என்பது அந்தத் தாய்ப்பறவைக்குப் புரியவில்லை. பருந்துகளின் பார்வையில் சிக்கி இரையாகிவிட்டதோ என்பதும் தெரியவில்லை. உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவில்லை. தன்னிச்சையாகப் பறந்துவிட்டதா என்று அறிந்துகொள்ளவும் வழியில்லை. குழம்பித் தவிக்கும் தாய்ப்பறவையின் நெஞ்சில் கூட்டின் வெறுமை தகிக்கவைக்கிறது. இல்லாத குஞ்சுகளின் குரல்கள் பேரோசையோடு அதன் காதில் அறைகின்றன. விஜயானந்தலட்சுமி கவிதையை அத்துடன் நிறுத்தவில்லை. அதற்கு ஒரு மானுட இருப்பை அளிக்கிறார். ஒருவர் பிரிந்துவிட, இன்னொருவர் அடையும் தனிமையின் வெறுமையோடு அந்தப் பேரோசையை இணைத்துக் காட்டுகிறார். குஞ்சுகள் எப்படி மறைந்தன என்பது எப்படி புதிராக விடப்பட்டதோ, அதேபோல விலகிச்சென்றவரின் பிரிவும் புதிராகவே விடப்பட்டுவிட்டது. அவர் வேறு ஏதேனும் சூழலின் நெருக்கடிக்கு இரையானவரா அல்லது ஆணவக்கொலைக்குப் பலியானவரா என்பதெல்லாம் புதிராகவே உள்ளது. அவர் பெண்ணா, ஆணா என்பதும் புதிராகவே உள்ளது. மொத்தத்தில் அவர் இல்லை. அது மட்டுமே உண்மை. அவர் காதுகளில் எதிரொலித்தபடி இருக்கும் இன்மையின் பேரோசையை ஒருவகையில் உண்மையின் பேரோசை என்றே சொல்லவேண்டும். விஜயானந்தலட்சுமி அக்கவிதைக்கு ஒரு மானுட இருப்பை வழங்கும்போது, அக்கவிதைக்கு ஒரு சமகாலத்தன்மை வந்துவிடுகிறது.

மின்சாரம் நின்று போனதும்
குளிர்பதனியிலிருந்து சொட்டுகிற நீர்
தரைமுழுதும் படரும்முன்
கோட்டுத்தடம் கிழித்து
வடிகாலுக்கு அனுப்பும் உத்தேசம் இருந்தது
நினைவுகளை எரித்துவிட்டு
புகையை
குடுவையில் அள்ளிக்கொண்டிருந்தவளின்
அம்மாவுக்கு

இன்மையின் வழியாக இருப்பை நினைத்துக்கொள்ளும் மற்றொரு கவிதை. தடம்வழி ஓடும் நீர் வடிகாலின் நீருடன் கலந்துவிடலாமே ஒழிய, அது ஒருபோதும் இல்லாமலாகாது. எங்கோ இன்னொரு வடிவில் இருந்துகொண்டுதான் இருக்கும். நினைவுகளும் அத்தகையவையே. அவை எரியூட்டப்படலாம். கரியாகலாம். சாம்பலாகலாம். இன்னொன்றுக்கு உரமாகலாம். அந்த உரத்தில் வேறொன்று வளர்ந்து நிற்கலாம். எதுவாக இருந்தாலும் அது ஆதிவடிவத்தின் மற்றொரு வடிவமாகவே நிற்கும். ஆதிவடிவம் என்பது அழிவற்றது. நிலையானது. அழிக்கும் முயற்சிகளைக் கடந்து உருமாறி நிலைத்திருப்பது. அதுவே இயற்கையென்னும் பேரிருப்பின் இயங்குவிதி.

தலைச்சுமையை இறக்கிவைக்க
ஒரு கல்லும்
இடுப்புப் பிள்ளையைத் தூளியாட்ட
ஒரு மரமும்
கிடைத்துவிட்டன
பிள்ளை எழுந்துவிடாமல்
சுமைக்குத் தூரம் போகாமல்
மனதை இறக்கிவைக்க
கண்ணுக்கெட்டும் வரைக்கும்
நீண்டு கிடக்கிறது காட்டுவெளி

அதிக விளக்கங்களோ குறிப்புகளோ எதுவும் தேவைப்படாத கவிதை. மனபாரத்தை இறக்கிவைக்க வழியற்ற நிராதரவான புள்ளியை நோக்கி விரையும் எளிய கவிதை என்றாலும், முடிவேயின்றி காலம்காலமாக இம்மண்ணில் தொடரும் அத்துயரம் எப்போது இல்லாமலாகும் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

பனியின் கதவுகள் திறந்ததும்
நழுவக் கிடைத்த நொடியில்
தலைகீழாக வழிகிறது நீர்
அது தன்னிலிருந்து விடுபடும் பேருவகையை
அசையாமல் பார்க்கிறது மலை

ஒரு மலை. அதன் மீது வழியும் அருவி. அருவியைப் போர்த்தியிருக்கும் பனி. ஒரு குழந்தையின் துள்ளலையும் ஆடலையும் பார்த்து மெய்மறந்து ரசிப்பதுபோல தாயென பனி விலகி வழிந்தோடும் அருவியின் நடனத்தைக் கண்டுகளிக்கிறது மலை. அந்தக் களிப்புதான் கவிதை. அது தாய்மையென்றும் சொல்லலாம். தந்தைமை என்றும் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு அழகான தருணம். அந்தத் தருணத்தில் தன்னையிழந்து வியந்து நிற்கிறார் கவிஞர்.. வியப்பின் வழியாக தாய்மையையும் தந்தைமையையும் உணர்ந்து ஒரு புள்ளியில் இறைமையையும் தொட்டுவிடுகிறார். இது அவர் பெற்ற பேறு. அவர் வழியாக வாசகர்களும் பேறு பெற்றவர்களாகிறார்கள்.

(உடன்பாட்டு வெயில் – கவிதைகள்.
விஜயானந்தலட்சுமி.
சந்தியா பதிப்பகம்,
53 வது தெரு,
9 வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை -83.
விலை. ரூ.100)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.