ஓ ஹென்றியின் சிறுகதைகள் – அன்பாலானது உலகம்………
வெளிநாடு, அதிலும் குறிப்பாக அமெரிக்கா என்றால், நமக்கு மேட்டிமையான குடியிருப்புகளும், பகட்டான ஆடை அணிந்த கனவான்களும், சீமாட்டிகளும் நிறைந்த உலகம் ஒன்றுதான் கண் முன்னே வரும். அங்கும் விவசாயிகள் இருப்பார்கள்; பல்பொருள் அங்காடிகளில் வேலை பார்க்கும் சாதாரணப் பெண்களும், ஆண்களும் இருப்பார்கள், வாடகை கொடுக்க முடியாமல் வீட்டுச் சொந்தக்காரரிடம் அல்லல் பட்டுத் துரத்தப்படுவார்கள், ஒரு வேளை உணவுக்காகத் திண்டாடுவார்கள் என்றெல்லாம் நாம் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். ஆனால், இப்படிப்பட்ட மனிதர்கள் வல்லரசு நாடாகவே இருந்தாலும், அமெரிக்காவில் இருப்பார்கள் என்பதையும், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு துன்பம் மிகுந்ததாகவும், அதே சமயம் அன்பால் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை ஓ ஹென்றியின் சிறுகதைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். நம்மில் பலர், நம் பள்ளி நாட்களிலோ, கல்லூரி நாட்களிலோ துணைப்பாடத்தில் இவருடைய ஒரு சில கதைகளை வாசித்துத் தெரிந்து கொண்டிருப்போம். அதன் பிறகு, சுஜாதா போன்ற எழுத்தாளர்களால் ஒ ஹென்றி கதைகள் சுவாரசியம் மிகுந்தவை என்று அறிந்திருப்போம். அவருடைய 600 க்கும் மேற்பட்ட சிறுகதைகளில், 15 கதைகளைத் தேர்ந்தெடுத்து, விஜயானந்தலட்சுமி என்பவர் மொழிபெயர்த்து சந்தியா பதிப்பகம் வழியாகக் கொண்டு வந்திருக்கிறார்.
கிறிஸ்துமஸ் பரிசு ( THE GIFT OF MAGI) என்ற கதையும், காதலின் சேவை ( A SERVICE OF LOVE ) என்ற கதையும், ஒரே கருப் பொருளைச் சொல்வதாக, காதலின், பரஸ்பர அன்பின் உன்னதத்தைச் சொல்வதாக அமைந்திருக்கிறது. முதல் கதையில், டெல்லாவும், ஜிம்மும் வறுமையில் வாடும், தங்கள் அன்றாட உணவுக்காக வேலை பார்த்துக் கொண்டு வாழ்பவர்கள். டெல்லாவுக்கு, தன் பிரியமிக்க ஜிம்முக்கு, அவன் நீண்ட நாளாக ஆசைப்படும், பாக்கெட் கடிகாரத்துடன் இணைக்கப்படும் சங்கிலியை கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுக்க ஆசை. ஜிம்முக்கு, தன் பிரியமிக்க டெல்லாவின், நீண்ட கூந்தலை அழகான கொண்டையாக முடிந்துகொள்ள கொண்டை ஊசிகளைப் பரிசாக வாங்கிக் கொடுக்க ஆசை. ஜிம் வேலைக்குச் சென்றிருக்கும் வேளையில், டெல்லா, கடைக்குச் சென்று, தன் நீண்ட கூந்தலின் பகுதியை விற்று அதில் கிடைக்கும் பணத்தில், ஜிம்முக்கு சங்கிலியை வாங்கி வைக்கிறாள். ஜிம், மாலையில் வீட்டுக்கு வந்தவுடன், டெல்லா, ஆசையாக, அந்தச் சங்கிலியைக் கொடுக்க வருகிறாள். அப்போது, அவளுடைய முடியைக் காணாது அவன் வருந்துகிறான். அது பற்றிக் கேட்கும்போது, அவள் அவனுக்குச் சங்கிலி வாங்குவதற்காக அதை விற்று விட்டதாகவும், அது மீண்டும் வளர்ந்து விடும் என்று சமாதானப் படுத்துகிறாள். அவனோ, அந்தச் சங்கிலிக்கு அவசியம் இல்லை என்றும், ஏனென்றால், அவன் தன் கடிகாரத்தை விற்று, அவளுக்குக் கொண்டை ஊசிகள் வாங்கி விட்டதாகக் கூறுகிறான். அவர்கள்தான் ஞானிகள் என்று கதையை முடிக்கிறார் ஹென்றி.
இதே போல, காதலின் சேவை ( A SERVICE OF LOVE) கதையில் ஜோவும், டேலியாவும் வருகிறார்கள். ஜோ ஒரு சிறந்த ஓவியன். டேலியா, சிறந்த பாடகி. ஜோ தன் கலையை வளர்த்துக் கொள்வதற்காக மிகப் பெயர் பெற்ற ஓவியரிடம் தன் கலையைப் பயின்று வருகிறான். தன்னுடைய ஓவியங்களை விற்றும் பணம் சம்பாதித்து வருகிறான். டேலியா மிகப் பிரபலமான பாடகரிடம் கற்றுக் கொள்கிறாள். சில கச்சேரிகளும் செய்கிறாள். இருவருக்கும், கொஞ்சம் வருமானம் வருகிறது. திடீரென, இருவருக்குமே வருமானம் குறைந்து விடுகிறது. ஆனால், தனக்கு ஒரு மாணவி கிடைத்து விட்டாள் எனவும், தான் பாட்டு வகுப்பு எடுத்து சம்பாதிப்பதாகச் சொல்கிறாள். அவள், ஜோவிடம், கட்டணம் செலுத்த முடியாததால் அவனுடைய ஓவியப் பயிற்சி வகுப்புகள் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பொய்யை சொல்கிறாள். அதே போல, ஜோவும், தன்னுடைய ஓவியங்களை சிலர் வாங்கியதாகச் சொல்கிறான். இருவருமே. தாங்கள் ஈட்டிய வருமானத்தை மேசை மீது வைக்கிறார்கள். அப்போது, டேலியாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்றும், அவள் கையில் எப்படிச் சுட்டுக் கொண்டாள் என்று கேட்கிறான். அவள் உண்மையைச் சொல்லி கண்ணீர் விடுகிறாள். அவன் எப்படிக் கண்டு பிடித்தான் எனறு கேட்கிறாள். தான் துணி வெளுக்கும் கடையில் இஞ்சின் அறையிலிருந்து, மாடியில் இஸ்திரி போடும் அறையில் கையில் சுட்டுக் கொண்ட பெண்ணின் காயத்திற்கு பஞ்சினையும், எண்ணையையும் அனுப்பியதாகவும், தான் அந்தச் சலவைக் கடையில் இயந்திரத்துக்கு நெருப்பு இட்டுக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறான். அவர்கள் இருவரும், ” கலையை நேசிக்கும்போது எந்தச் சேவையும் மிகுந்த கடினமானதாக இருக்காது” முதலில் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது, ஒருவர் காதலிக்கும்போது என்று மாற்றிச் சொல்கிறார்கள்.
இந்த இரண்டு கதைகளையும் வாசித்தவுடன், சங்க காலப் பாடல் ஒன்றில், ஆண் மானும், பெண் மானும் நீர் நிலையில் நீர் அருந்தும்போது, ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கின்ற காட்சி ஒன்று மிகவும் பிரபலமானது. இந்தக் கதைகளை வாசிக்கும்போது அந்தக் காட்சி நமக்குத் தோன்றும்போது, அமெரிக்காவாக இருந்தால் என்ன, எந்த நாடாக இருந்தால் என்ன, காதல், அன்பு, விட்டுக் கொடுத்தல் எல்லாம் அன்பு நிறைந்த மனங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அன்பு தழைத்தோங்கிக் கொண்டேயிருக்கும் என்பதையே காட்டுகிறது.
அதே போல, சில கதைகளை வாசிக்கும்போது நல்நேர் எண்ணங்கள் எப்படி சிலருடைய வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் என்று எண்ண வைக்கிறது. கடைசி இலை( THE LAST LEAF ) என்ற கதையில், ஒரு சிறுமி வினோத நோயினால் அவதிப்படுகிறாள். அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவளுடன் அவள் தாயார் இருக்கிறார். அந்தச் சிறுமியின் அறைக்கு எதிரே ஒரு மரம் இருக்கிறது. தினமும், அவள் அதை பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அதன் இலைகள் உதிர்ந்து கொண்டே வருகின்றன. அந்தப் பெண், அம்மரத்தின் கடைசி இலை உதிரும்போது தானும் இறந்து விடுவதாக அவநம்பிக்கையோடு பேசுகிறாள். அவளது தாயார் பதற்றமுறுகிறாள். அன்று இரவு, தாயார், அந்தச் சிறுமி உறங்கும்போது, அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழே இருக்கும் ஒரு ஓவியனை ( அவன் மிகவும் திறமையானவன்) தன் மகளின் உயிர் பிழைக்க வேண்டுமென்றால், அந்த ஓவியன் வந்து உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறாள். அவனும், அந்த மரத்தின் இலை உதிராதது போல உயிர்ப்புடன் அந்த இலைகளை வரைந்து விடுகிறான். அந்தச் சிறுமி, நோயிலிருந்து விடுபடுகிறாள். ஆனால், அந்த ஓவியன் தாங்க முடியாத குளிரில் நின்று கொண்டு ஓவியம் வரைந்ததால், இறந்து போகிறான்.
அதே போல, பணயக் கைதி ( RANSOM OF RED CHIEF ) என்ற கதையில், பிணயக் கைதியாக ஒரு சிறுவனைப் பிடித்துக் கொண்ட இரு கொள்ளையர்கள், அவனுடைய குறும்புத்தனத்தால், சாதாரண மனிதர்களாக மாறுவதும், அந்தச் சிறுவன், இவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டு விடுவதும், சூதுவாது இல்லாத குழந்தையின் நல்ல மனம், மனிதர்களை மாற்ற வல்லமை கொண்டது என்பதையும் காட்டுகிறது.
சாதாரண மனிதர்களால் நிரம்பிய உலகத்தையே மையமாகக் கொண்ட கதைகளில், மூன்றாவது சேர்மானம் ( THE THIRD INGREDIENT) என்ற கதையில் சாப்பாட்டுக்கே திண்டாடும் ஹெட்டி,சிசிலியா என்னும் இரு பெண்கள் ஒரே குடியிருப்பில் திடீரென ஒரு நேரத்தில் சந்திக்கிறார்கள். ஒருவர் இறைச்சித் துண்டு மட்டும் வைத்திருக்கிறார். இன்னொருவர் ஓர் உருளைக் கிழங்கு வைத்திருக்கிறார். சமைப்பதற்கு ஒரு வெங்காயம் தேவைப்படுகிறது. அதற்காக, அவர்கள் சேர்ந்து சமைக்க முடிவெடுக்கிறார்கள். அப்போது ஹெட்டியிடம், சிசிலியா தான் படகில் செல்லும்போது நீரில் விழுந்ததை, ஒருவர் காப்பற்றியதை எல்லாம் சொல்கிறாள். அவருடைய நினைவில் அவள் இருப்பதையும் தெரிவிக்கிறாள். அந்த ஒருவரே, இப்போது இவர்களுக்குத் தேவையான வெங்காயம் வைத்திருக்கும் நபராக அந்தக் குடியிருப்பிலேயே இருக்கிறார்.
சிசிலியா நீரில் விழுந்தபோது, காப்பாற்றியது இந்த நபர்தான் என்பது புரிகிறது. அவர்கள் இருவரையும் இந்தத் தருணத்தில் ஹெட்டி புரிந்து கொண்டு இணைய வைக்கிறாள். இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும் மிகவும் அழகாக இருக்கிறது. இந்தக் கதையில் வரும்
ஒருவர் சோர்வாகவோ அல்லது சோகமாகவோ அல்லது நம்பிக்கையற்றோ இருக்கும்போது அன்பே எல்லாவற்றையும் விட முக்கியமாகிறது” என்ற வரிகள் மனம் கவர்கிறது.
மீட்டெடுத்த சீர்திருத்தம் ( A RETRIEVED REFORMATION ) என்ற கதை மிகவும் சுவாரசியமானது. திருடனாக இருந்தவன், இனிமேல் இந்தத் தொழிலை விட்டு விட வேண்டும் என்று தீர்மானித்து வேறு ஊருக்குச் சென்று ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறான். ஆனால், அங்கும் அவன் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் தந்தையின் வங்கியில் ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதைச் செய்கிறான். அப்போது, அவனுடைய திருட்டுத் தொழிலுக்காக அவனை கைது செய்ய நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் சரியாக அவனைக் கண்டு கொள்கிறார். ஆனால், அவனுடைய சூழ்நிலையையும், தற்போதைய திருந்திய அவனுடைய மனநிலையையும் புரிந்து கொண்டு அவனை தனக்குத் தெரியாத மாதிரிக் காட்டிக் கொள்கிறார். மிகவும் மனம் கவரும் கதை இது.
இப்படி ஒவ்வொரு கதையையும் ரசித்து ரசித்து சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒவ்வொன்றும் சிறப்பாகவும், அலுப்புத் தட்டாததாகவும் இருக்கிறது. ஒவ்வொன்றிலும், இழையோடும் நகைச்சுவை கதைகளை மேலும் சுவையாக்குகிறது. காட்சி விவரணைகள் அப்படியே நம்மை அந்தச் சூழ்நிலைக்கே எடுத்துச் செல்கிறது. மனிதர்களின் பெயர்களையும், ஊர்களின் பெயர்களையும் மாற்றிப் பார்த்தால், ஹென்றியின் கதை மாந்தர்கள், நாம் சந்திக்கும் மனிதர்களாகவும், அவர்களுடைய வேதனைகளாகவும், கவலைகளாகவும் நம்மால் உணர முடியும். அப்படி உணர வைத்திருப்பதுதான் இந்தக் கதைகளின் வலிமை.
ஓ ஹென்றி கதைகளை, தமிழ் மொழி வாசகர்களுக்காக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கும் விஜயானந்தலட்சுமி அவர்கள் பாரட்டுக்குரியவர். சிலச் சில இடங்களில் மொழிபெயர்ப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆயினும் பெரிய அளவுக்கு நெருடலாக இல்லை. அந்த வகையில் மொழிபெயர்த்து ஆக்கியிருக்கும் விஜயானந்த லட்சுமி அவர்களும், வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தாரும் பாராட்டுகுரியவர்கள்.
——————————————–
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஓ ஹென்றி சிறுகதைகள் |
| ஆசிரியர்: | தமிழில் – விஜயானந்தலட்சுமி |
| வெளியீடு: |
சந்தியா பதிப்பகம்
|
| விலை: | ₹.275 |
| அறிமுகம் எழுதியவர்: |
எஸ். ஜெயஸ்ரீ, கடலூர்
|
******************************************************************************
*புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு*
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
*கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56*
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


The book was well introduced by jayaahree which creates a eager to read that book
காலங்கடந்து நிற்பவை என்பது ஓ ஹென்றியின் கதைகளுக்கு நிச்சயம் பொருந்தும். மொழிபெயர்ப்பினை சிறப்பாகவே ஜெயஸ்ரீ அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அன்னாளில் ஹென்றியின் பாதிப்பில் தமிழில் நிறைய கதைகள் வந்திருப்பதாகவே கருதுகிறேன். அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் (?) அகிலனின் காசு மரம் போன்றவற்றை குறிப்பிட முடியும்.