நூல்: “நிழற்காடு” – சிறுகதைத்தொகுப்பு
ஆசிரியர்: எழுத்தாளர் விஜயராவணன்
வெளியீடு: சால்ட் பதிப்பகம்
———————————————-
சில நூறு அடி தூரத்தில் இருக்கும் விஜயராவணன், ஒரு அதிகாலைப்பொழுதில் இந்த தொகுப்பைக்கொண்டு வந்து கொடுத்தார். ஒரே வாசிப்பில் வாசிக்க இயலாத கதைகள். இருப்பது பத்து கதைகள் தாம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
வாடகை வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு குடிபுகும் செல்வரத்தினத்தின் கதை. புது வீட்டிற்குள் குடிபுகும்போதே, விலையுர்ந்த கண்ணாடி சரவிளக்கில் குருவி கூடு கட்டியிருக்கிறது. காபி ஆறுவது கூடத்தெரியாமல் டம்ளரை கையில் வைத்துக்கொண்டு தினமும் குருவிக்கூட்டைப் பார்ப்பதும், குருவியை ” சின்னப்பிள்ளை” மாதிரி ரசிப்பதுமாய் இருக்கிறார். அடுப்பாங்கரையில் இருக்கும் மனைவியிடம் பொழுதன்னைக்கும் குருவிகளைப்பற்றியும், அதன் முட்டைகளைப்பற்றியுமே பேசிக்கொண்டிருக்கிறார். ரேடியோவில் தென்கச்சிக்கோ ஸ்வாமிநாதன் பேச்சைக்கேட்டு, குருவிகளுக்கு சிறுகம்பு தானியம் வாங்கி மொட்டை மாடியில் வீசுகிறார். பல ஆயிரம் கொடுத்து வாங்கிய சரவிளக்கை எரிய விடாமல் வைத்திருக்கும் கணவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் மனைவி. வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் அப்பாவின் கதைகளை சொல்கிறாள். குஞ்சுகள் பிறக்கின்றன. பறக்க முயற்சிக்கின்றன. குஞ்சுகளின் கீச் கீச் சத்தம் காதுகளுக்கு இதமாய் இருக்கின்றன. ஒருநாள் வெளியே சென்ற குருவியும், குஞ்சுகளும் வீடு திரும்பவில்லை.
பதைபதைத்து தேடுகிறார். பக்கத்து வீடுகளில் விசாரிக்கிறார்.
” உங்க வீட்ல குருவி பார்த்தீங்களா ”
குருவி வரவே இல்லை. அவர் மனைவி சொல்கிறார் ” குருவி தான் போயிருச்சுல்ல..அந்த கூட்டை எடுத்துப்போட்டு விட்டு, சுத்தம் பண்ணலாம்ல..நீங்க ஆசையா வாங்கின சரவிளக்கு தான் குப்பை மாதிரி கிடக்கு ”
செல்வரத்தினம் சொல்கிறார் : ” அடிப் போடீ..குப்பையாம்ல குப்பை..அது அங்க இருக்கும் வரைக்கும் தானடி இந்த வீட்டுக்கே அழகு..”
குருவிக்கூடு அவருக்கு கோபுரக்கலசமாய் தெரிகிறது.
* * * * * * * * * * * * *
ரகுவின் அப்பா நேர்ச்சை எடுக்கும்போதெல்லாம் முதல் பலியாவது ரகுவின் தலைமுடி தான். பயல் பாஸானால் மொட்டை..பெயிலானால் வேண்டுதல் மொட்டை, யாருக்கும் உடம்பு சரியில்லை எனில் குணமடைய மொட்டை, சரியாகி விட்டதா..நன்றி மொட்டை, அவருக்கு ஆபீஸ்ல ப்ரோமோஷன் வரணுமா அதற்கும் மொட்டை என்று ரகுவிற்கு மொட்டையடித்தபடியே இருக்கிறார். பத்து வயசுப்பையன் எதிர்த்துப்பேச முடியுமா ? எப்போதும் முடி பற்றிய கனவுகளுடனேயே இருக்கிறான்.
மொட்டை அடிப்பதில் ஒரே ஒரு பிரயோசனம், அவனுக்கு புது சட்டை, டவுசர் கிடைக்கும். ஒரே மாதிரியான கட்டம் போட்ட சட்டை..
பச்சை நிற டவுசர் துணி..தொள தொள என தைத்துத்தரும் டெய்லர் சேகர் அண்ணன்..( இன்னும் இரண்டு வருஷம் தாராளமாய் போடலாமாம் டவுசரை ). முடி சீக்கிரம் வளர மீரா சீகைக்காய் வாங்கி தேய் தேய் என்று தேய்க்கிறான். சாய்பாபாவை கும்பிடுகிறான், முடி சுருள் சுருளாய் வளர வேண்டும் என்று. அவனுக்கு தம்பி பாப்பா பிறக்கப்போகிறதாம். தங்கச்சி பாப்பா வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறான். தலை நிறைய முடி இருக்கும். பூ வைக்கலாம். சடை பின்னலாம்.
ஆஸ்பத்திரி நர்சிடம் சொன்னபோது, ” அப்போ காலத்திற்கும் உன்னோட மண்டைல தான் மொட்டை போடுவாங்க உங்க வீட்டில். பொண்ணுக்கு யாருடா மொட்டை போடுவாங்க ” என்று சொன்னவுடன் அவனுக்கு குழப்பம். தம்பி பாப்பா வேணும் சாமி என்று தனது டீலை மாற்றிக்கொள்கிறான் கடவுளிடம். பொண்ணு தான் பிறக்கிறது.
” பாப்பாக்கு ஏன் தலையில் முடி கம்மியா இருக்கு ” என்று கேட்கும்போது, அப்பா சொல்கிறார் : ” அதுக்கென்ன ..மொட்டை போட்டா வளர போகுது ”
யாருக்கு என்று அவர் சொல்லாததால், ரகு பயத்தோடு சிரிக்கிறான்.
* * * * * * * * * * * * * *
இந்த இரண்டு கதைகள் மட்டுமே துவக்கநிலைக் கதைகள்..
மற்றையக்கதைகள் எல்லாம் வெவ்வேறு வகையில் தனித்துவம் மிக்கவை.
சாலையில் முகமூடி விற்றுக்கொண்டிருப்பவனைப்பற்றி ஒரு கதை.
தினமும் பேருந்தில் சென்று வரும் பிரம்மநாயகம் அவனை வேடிக்கை பார்க்கிறார். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு வகையான முகமூடியை விற்கிறான்..ஒருநாள் கரடி முகமூடி..ஒருநாள் குரங்கு முகமூடி..ஒருநாள் சிங்கம் முகமூடி..
கதையின் இன்னொரு டிராக்கில் பிரம்மநாயகம், அவரது மனைவி வடிவு..நீண்ட நாள் தவமிருந்து பெற்ற பையன் சுதாகர்..செல்லம் கொடுத்து கொடுத்தே தறுதலையாய்ப்போன பயல்..பதிமூணு வயசு பெண்ணிடம் சேட்டை பண்ணி பதின்ம வயதில் அப்பாவிடம் அடி வாங்கி வீட்டை விட்டே ஓடியவன் அவன்..
இரண்டும் ஒரு புள்ளியில் இணையும்போது, வெறுமை சூழ்கிறது.
ஜப்பானின் புஜிமலையை உணரும் கண் தெரியாத ஓவியன் ஹாருட்டோவின் கதை ஒன்று. தனது நண்பரிடம் கேட்கிறார் அவர்
” அவ இப்போ என்ன நிறத்தில் இருக்கா ”
முன்பு எரிமலையாய் இருந்து தற்போது குளிர்ந்து விட்ட புஜிமலை..
புஜிமலையேற்றம் ஒவ்வொரு ஜப்பானியரின் தணியாத கனவு.
சிறுவனாய் இருக்கும்போது, கண் பார்வை இருக்கும்போது ஹாருட்டோ தனது பெற்றோருடன் இந்த மலையில் ஏறியிருக்கிறான். அப்போது அது சாம்பல் நிறத்தில் மஞ்சள் ஒளியோடு காட்சியளித்தது. மங்கத்தொடங்கியிருந்த மகனின் பார்வைக்கான வேண்டுதலுக்காக அவன் அப்பா அழைத்து சென்றார். அது ஒரு காலம்.
அவரது நண்பருக்கும் அவருக்குமான இயல்பான உரையாடல் தான் கதையின் அடிநாதம். பரபரப்பான மனித வாழ்க்கையில், புஜிமலையின்
பரிபூரண அழகை, நொடிக்கு நொடி தனது வர்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கும் அழகை, என்றாவது ரசித்துப் பார்த்திருக்கிறோமா ? (புதுமைப்பித்தனின் ” சிற்பியின் நரகம் ” நினைவில் வந்து போனது வாசிக்கையில்). இந்த அறையின் திரைச்சீலையை ஒதுக்கி விட்டு புஜிமலையை ரசிப்பது தனி அழகு என்று நண்பர் சொல்லும்போது, ஹாருட்டோ ஒரு புத்த பிக்கு கதை சொல்கிறார்.
ஒருமுறை ஏழைக்குடியானவனின் குடிசைக்கதவை தட்டி அவர் யாசகம் கேட்க, உளுத்துப்போயிருந்த அந்த கதவு விழுந்து விட்டது. அந்தக்குற்ற உணர்வில் இருந்து அவர் மீள இயலவில்லை. அன்றிலிருந்து கதவைத்தட்டி யாசகம் கேட்காமல் புத்தரின் அறிவுரைப்படி, உடம்பில் மணிகளைக்கட்டி ஓசையெழுப்பி திறக்கப்படும் கதவுக்காக அமைதியாய் காத்திருக்க தொடங்கினார் என்று சொல்லி விட்டு, ஒருவிதத்தில் விடியல்பொழுதின் ஆதவன் கூட அந்த புத்தபிக்கு தான்..விலக இருக்கும் திரைச்சீலைகளுக்காக மௌனமாய் காத்திருக்கிறான் ” என்கிறார்.
அவரது ” கான்க்ரீட் மனிதர்கள் ” ஓவியம் சொல்லும் செய்தி புதியது. சமீபத்திய ஓவியமான தேநீர்க்கோப்பைகள் ஓவியம் பற்றி ஹாருட்டோ சொல்லும் விளக்கம் நம்மை யோசிக்க வைக்கிறது. கண் பார்வை இழந்த சிறுவன் ஹாருட்டோவின் அப்பாவும், அம்மாவும் அவனுக்கு ஓவியம் வரைய நம்பிக்கை கொடுக்கிறார்கள்.
” எங்களால் நிறங்களை பார்க்க மட்டுமே முடியும். உன்னால் தான் அவற்றை உணர முடியும் ” ஒன்றை எடுத்துக்கொண்டு இயற்கை மற்றொன்றை தந்து விடுகிறது.
நண்பரின் கையில் இருக்கும் வெருகு பூனையைப்போல நாமும் அவரது ஒவ்வொரு வார்த்தைகளையும் உள்வாங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதை என்று இதையே சொல்வேன்.
காகிதக்கப்பல் மற்றொரு சிறுகதை..
வானம் கறுத்திருக்கிறது. சவுமு, தன் அப்பாவிடம் கேட்கிறான்.
” அது என்ன ” என்று. அப்பா சொல்கிறார் : ” எங்கோ கப்பல் போயிட்டிருக்கு. அதோட புகைதான்..அதான் வானம் இப்படி கறுப்பா இருக்கு ”
கல்கத்தாவில் இருந்து தொலைவில் இருக்கும் சவுமு விற்கு அன்றில் இருந்து கப்பல் பார்க்கும் ஆசை..கப்பல் கடலை விடப்பெரியது. கப்பலை பார்த்தால் மட்டும் போதாது..கப்பலில் ஏறிப்பார்க்க வேண்டும்..கப்பலில் எல்லாம் கிடைக்கும்.
ஒரு பேய் மழையில் அவர்களின் குடிசை அடித்து சென்று விட, சவுமு கல்கத்தாவின் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறான், கப்பல் பற்றிய கனவுகளுடன். வாடிக்கையாளராக வரும் ஒரு மாலுமியோடு , அவனுக்கு தெரிந்த வங்காளமும், ஆங்கிலமும் கலந்து பேசி அவரின் கவனத்தை ஈர்க்க முனைகிறான். ஒரு சிறுவனின் கனவை அற்புதமாய் காட்டுகிறார் விஜயராவணன்.
போதிசத்வா – இறுதியாய் உள்ள சிறுகதை.
புத்தனுக்கும், வழிப்போக்கன் ஒருவனுக்கும் இடையே நடக்கும் தர்க்கம் தான் இந்தக்கதை. ” உயிர்த்தியாகம் உன்னதமா இல்லை வெறும் பித்தலாட்டமா ”
மதுப்பழக்கம் உடைய ,மனைவி,குழந்தையை கொடுமைப்படுத்தும் ஒருவன் , யாரையோ காப்பாற்றப்போய் அவன் உயிரை இழக்கிறான். காப்பாற்றப்பட்டவன், காப்பாற்றியவனின் மனைவியையும், குழந்தையையும் பாதுகாக்க முன்வருகிறான். இதைச்சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
இதில், இன்னமும் பேசப்பட வேண்டிய கதைகள் உள்ளன. எழுத்துக்களில் வீரியம் இருக்கிறது. கதை சொல்லும் முறை முற்றிலும் புதிது. நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுவரவு விஜயராவணன் என்று சொல்லலாம். நெல்லையில் இருந்து மற்றுமோர் எழுத்தாளர் புறப்பட்டிருக்கிறார்.
இரா. நாறும்பூநாதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
விஜயராவணனின் சிறுகதை தொகுப்புக்கு நாறும்பூ ஈர்ப்பும் நேர்த்தியும் கொண்ட அறிமுகமுறை மூலம் புதியபடைப்பாளியை கெரவித்திருக்கிறார். விஜயராவணனுக்கும் துழர் நாறும்பூவுக்கும்வாழ்த்துகள்.