மூன்றாம் விதி நூலிலிருந்து…
தமிழ்ச் சிறுகதை வானில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜிலா தேரிராஜன் மற்றும் ஒரு நட்சத்திரமாகப் பரிணமித்துள்ளார். ’இறுதிச்சொட்டு’ எனும் தன்னுடைய முதற் சிறுகதைத் தொகுப்பிலேயே வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தடம் பதித்துள்ளார். ‘கவிதை உறவு இலக்கிய விருது’, ’பாரதி தமிழ் இலக்கியப் பேரவை விருது’, ’வியன் புக்ஸ் சமூக நீதி இலக்கிய விருது’ ’முற்போக்கு கலை மேடை விருது’ ஆகிய விருதுகளை இவரின் ’இறுதிச்சொட்டு’ நூல் பெற்றுள்ளது. இவரின் ‘மூன்றாம் விதி’ எனும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பினை Her Stories பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியரான விஜிலா பணிக் காலத்தில் விருதுநகர் மாவட்டத்தின் சிறந்த சமூகச் செயற்பாட்டளராகவும் விளங்கியுள்ளார். 1990களில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அசைவுகளை ஏற்படுத்திய அறிவொளி இயக்கத்தில் பேரா.ச.மாடசாமி போன்றோருடன் இணைந்து தீவிரமாக இயங்கினார்.
விஜிலா தேரிராஜன் சிறந்த கதை சொல்லி என்பதை ’மூன்றாம் விதி’ தொகுப்பில் இருக்கும் பத்தொன்பது கதைகளும் பறை சாற்றுகின்றன. சிறுகதை இலக்கியத்துக்கான இலக்கணங்களைச் சிக்கெனப் பிடித்துக் கதைகளை நேர்த்தியுடன் சொல்லிச் செல்கிறார். கதைகளில் மெல்லிய பெண்ணியம் இழையோடுகிறது. நகைச்சுவை உணர்வு இயல்பாக மேலிட வார்த்தைகள் நர்த்தனமாடுகின்றன. கரிசல் வட்டார பழக்க வழக்கங்களை அம்மண்ணுக்கே உரிய சொற்கள், சொலவடைகளுடன் வாசகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறார். வீட்டிலும், வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சனைகளே கதைகளின் களங்கள் ஆகின்றன.
கதாபாத்திரங்களின் உரையாடல் வழி கதைகளை நகர்த்திச் செல்லும் விஜிலா தேரிராஜனின் கதைகளில் சமூகத்தின் மீதான கோபம் வெளிப்படுகிறது. ஆனால் அதில் வன்முறைகள் இல்லை. கதைகளில் சபலம், சலனம், சஞ்சலங்களுக்கு ஆளாகும் ஆண்கள் யாரும் வன்முறையைக் கையிலெடுப்பதில்லை. சமூகத்தின் வக்கிரங்களை, வன்முறைகளைச் சித்தரிப்பதல்ல விஜிலாவின் நோக்கம். குடும்ப வாழ்வில் நாள்தோறும் எழும் சண்டைகள், சச்சரவுகள், இறுதியில் ஏற்படும் சமாதானங்கள் இந்த யதார்த்தங்களே கதைகளாகியுள்ளன.
சாதியில் தோய்ந்த இந்தியச் சமூகத்தில் சாதிய உணர்விலிருந்து வெளிவருவது யாருக்கும் அவ்வளவு எளிதானதல்ல என்பதை ’சாதிய மூட்டை’ கதை புலப்படுத்துகிறது. வரதராஜன் – துர்கா தம்பதிகளின் கார் டிரைவர் நடேசன் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது. துர்கா வெள்ளிக்கிழமை தோறும் காலை வீட்டிலிருந்து சில மைல்கள் தூரத்தில் இருக்கும் புத்துக்கோயிலுக்குப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கோயிலுக்குச் செல்லும் ரோடு கரடு முரடானது. குண்டும் குழியுமான அந்த ரோட்டில் கார் ஓட்டிச் செல்வது சிரமமான காரியம். அதுவும் ஏழு பேர் பயணிக்கும் அந்தப் பெரிய காரில் துர்காவை மட்டும் கூட்டிச் செல்லும்போது நடேசன் ஒரு உத்தியைக் கடைப்பிடிக்கிறான். காரின் பின் சீட்டுக்கு அடியில் இரு சிறு மணல் மூட்டைகளை வைத்துவிடுவான். இதனால் கார் பள்ளத்தில் ஏறி இறங்கும்போது தூக்கியடிக்காது. மற்ற நேரங்களில் மணல் மூட்டைகளை எடுத்துவிடுவான்.
ஒரு வெள்ளிக்கிழமை கோயிலிக்குச் செல்லும்போது காரில் மணல் மூட்டைகளை ஏற்றிக் கொள்ளாமல் புறப்படுகிறான். புத்துக்கோயில் நோக்கி கார் செல்லும்போது தன் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இரு குழந்தைகளுடன் வழியில் நிற்பதை துர்கா பார்க்கிறார். நடேசனைக் காரை நிறுத்துச் சொல்லி அவர்களைத் தன் காரில் ஏற்றிக்கொள்கிறார். திரும்பும்போது அவர்களைக் கூட்டிச் செல்ல குழந்தைகளின் அப்பா வந்துவிடுகிறார். துர்கா மட்டும் வண்டியில் ஏறிக்கொள்ள வீடு நோக்கிக் கார் செல்கிறது.
வழியில் நடேசனுடைய உறவினர் வீட்டுப் பெண் குழந்தைகள் இருவர் சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் வழியில் சைக்கிள் ரிப்பேராகி நடு வழியில் நிற்பதைப் பார்த்து அவர்களைக் காரில் ஏற்றிக்கொள்ள நினைக்கிறான். இதற்கு துர்காவின் அனுமதியைக் கேட்டதும் அவர் முகம் சுழிக்கிறார். ”நீ வண்டியை நிறுத்தாதே! வீட்டுக்குப் போ! அய்யா இன்று சீக்கிரம் வெளியே போக வேண்டும்”. என்று சொல்லி அவனைத் தடுத்துவிடுகிறார். பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளை ஏற்றிச்செல்ல அவளுக்கு மனமில்லை. சாதி குறுக்கே நிற்கிறது. எத்தனை வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்குச் சென்றாலும் இந்த அம்மாவின் சாதிய உணர்வு மட்டும் போகாது என்பதை நடேசன் புரிந்து, நொந்து கொள்கிறான் வீட்டுக்கு வந்ததும் அவன் கண்களுக்கு கீழே கிடந்த மணல் மூட்டைகள் ’சாதிய மூட்டை’களாகத் தெரிந்தன. என்று நச்சென்று கதை முடிகிறது.
’மாதா, பிதா – தெய்வம்’ கதை பள்ளிகளில் ஒரு சில ஆண் ஆசிரியர்களின் வக்கிரங்களால் பெண் குழந்தைகளின் படிப்பு பாழாவதைச் சித்தரிக்கிறது. பார்வதி ஓர் ஏழை வீட்டு முதல் தலைமுறை பள்ளி செல்லும் பெண். அவள் அம்மா சின்னத்தாயிக்கு மகளின் படிப்பு மீதெல்லாம் அவ்வளவு அக்கறையில்லை. பத்தாம் வகுப்பு முடித்ததும் பார்வதிக்குக் கல்யாணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் பார்வதி அடம் பிடித்து பக்கத்து ஊரில் இருக்கும் மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பில் சேருகிறாள். அந்தப் பள்ளியில் வேதியில், தமிழ், உயிரியல் தவிர்த்து மற்ற பாடங்கள் சொல்லித் தர ஆண் ஆசிரியர்களே இருக்கின்றனர். பார்வதி படிப்பில் கெட்டிக்காரி. ஆசிரியைகள் அவளின் படிப்பின் ஆர்வத்தை மெச்சி அவளுக்குத் துணையாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் வக்கிரப் புத்தியுள்ள ஒரு கணக்காசிரியன் பார்வதிக்கு ஸ்பெசல் வகுப்பு எடுப்பதாச் சொல்லி வரச்சொல்கிறான். அவளிடம் தப்பாக நடக்க முயலுகிறான். பார்வதி சுதாரித்துக் கொண்டு தப்பிச் செல்கிறாள். நடந்ததை தன் சிநேகிதி லட்சுமியிடம் மட்டும் சொல்லி அழுகிறாள். லட்சுமி. ‘’வா! உமா டீச்சரிடம் போய் சொல்லுவோம், இல்லாட்டி ஸ்கூல் போர்டில் எழுதிப்போட்டுள்ள 1098க்கு போன் பண்ணுவோம்,” என்கிறாள். பார்வதி பயந்துபோய் வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள்.
மறுநாள் பார்வதி பள்ளிக்கு வரவில்லை என்றதும் லட்சுமி தன் சிநேகிதி பார்வதிக்கு நடந்த விஷயத்தை உமா டீச்சரிடம் சொல்லிவிடுகிறாள். கணக்காசிரியர் ஒரு வாரம் பள்ளிக்கு லீவு போட்டிருப்பதின் காரணம் உமா டீச்சருக்குப் புரிந்துவிடுகிறது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை உமா டீச்சரும், லட்சுமியும் பார்வதியின் வீட்டுக்குச் செல்கிறார்கள். சின்னத்தாய் தன் மகள் பார்வதியின் படிப்பை நிறுத்திவிட்டு பக்கத்து ஊருக்குச் செல்ல முடிவெடுக்கிறார். உமா டீச்சர், ‘’ஆசிரியைகள் நாங்கள் இருக்கிறோம், நாங்கள்தான் பள்ளியில் குழந்தைகளுக்கு அம்மாக்கள்! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’” என்று சொல்லிப் பார்க்கிறார். சின்னத்தாய் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. மறுநாள் காலை படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த பார்வதி கண்ணீர் மல்க ஊரைவிட்டு, படிப்பைவிட்டு எங்கோ செல்கிறாள். அப்பெண்ணின் கல்விக் கனவைப் பறித்த அந்தக் கயவன் தண்டனைகள் ஏதுமின்றி தப்பித்துவிடுகிறான். குரு ஸ்தானத்தை இழந்த அவன் எப்படி தெய்வமாவான்?
மனிதர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஈடேறுவதில்லையே! அதிலும் பெண்கள் திருமணத்துக்கு முன் காணும் கனவுகள் பெரும்பாலும் நனவாதில்லை. ‘காக்கிச் சட்டையும் காட்டு யானையும்’ கதையின் நாயகி வசந்தாவுக்கு காக்கிச் சட்டை அணியும் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மீது ஓர் ஈர்ப்பு. தான் காக்கிச் சட்டை அணியும் போலீஸ்காரனைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தாள். அவள் விருப்பம்போல் ஒரு போலீஸ்காரனுக்கு அவளை மணமுடித்து வைக்கிறார்கள். ஒரு துடுக்கான ஆண் குழந்தைக்கும் தாயாகிறாள். இருப்பினும் மகள் முகத்தில் தெரியும் வாட்டத்தையும், ஏமாற்றத்தையும் கண்டு தாய் வருத்தப்படுகிறார்
ஊரில் திருவிழாவுக்குச் செல்லும்போது தன் சிநேகிதி கலாவிடம் தனக்கு நடந்த ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறாள் வசந்தா. அவள் ஆசையுடன் எதிர்பார்த்த ’போலீஸ்’ அல்ல தன் கணவன் என்ற வேதனையைச் சொல்லி அழுகிறாள். தன் கணவன் போலீஸ் அதிகாரி வீட்டில் ஆர்டலியாகப் பணி புரிவது அறிந்து மனம் நொந்து போகிறாள். அதிகாரியின் மனைவிக்கு குற்றேவல் செய்யும் எடுபிடியாக அடிமை வேலை பார்க்கிறான் தன் கணவன் என்பதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆர்டலி முறையை ரத்து செய்துவிட்டாளும் இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் இதைக் கடைப்பிடிப்பது அவலமே!
வசந்தா மனதில் இருப்பதை அவள் மகன் அஸ்வினும் பிரதிபலிக்கிறான். அஸ்வினுக்குப் பிடித்த மிருகம் யானை. எப்போதும் யானை படத்தை வரைவான். யானையின் பிரமிக்கச் செய்யும் உருவமும், அதன் மிடுக்கும் அவனுக்குப் பிடிக்கும். ஊர்த் திருவிழாவில் நிஜ யானையைக் காட்டுகிறார்கள். யானைப்பாகன் யானையைக் கூட்டிச் சென்று பிச்சை எடுக்கவைப்பதைப் பார்த்து அஸ்வின் அதிர்ச்சை அடைகிறான். யானைப்பாகனுக்கு கட்டுப்பட்டு அடிமையாக யானை உழைப்பதும், பிச்சை கேட்பதும் அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ‘’இந்த யானையை காட்டுக்குப் போகச் சொல்லுங்கள்,’’ எனறு சொல்லி அழுகிறான். அவன் அம்மாவுக்கு காக்கிச் சட்டை மீதிருந்த பிரமிப்பு சரிந்து விழுந்ததுபோல் யானை மீதிருந்த அவனுடைய பிரமிப்பும் சரிந்து விழுகிறது.
வறுமை கொடியது. இளமையில் வறுமை அதிலும் கொடியது. ‘எட்டாக்கனி’ கதையில் வறுமையில் வாடும் சிறுமி வீரலட்சுமியைக் காண்கிறோம். விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி நகரங்களிலும், இந்நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நிறைந்திருக்கும் தொழில் தீப்பெட்டி தொழில்தான். இங்கு வாழும் ஏழை மக்கள் மரணத்துடன் விளையாடும் தீப்பெட்டி தொழில் செய்துதான் குடும்ப வறுமையைப் போக்குகிறார்கள். வீரலட்சுமியின் அம்மா செல்லத்தாயும் தீப்பெட்டித் தொழிற்சாலையில்தான் வேலை செய்கிறார். சிறுமி வீரலட்சுமி தன்னுடைய பாடத்தில் படிக்கும் பழங்களில் தான் சுவைத்திராத ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு ஏங்குகிறாள். தன்னுடைய இந்த நீண்ட நாள் ஆசையைத் தீர்த்துவைக்க முடியாத தாயின் நிலைமையையும் புரிந்து கொள்கிறாள்.
ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்மணி தன்.மகளுக்கு நடக்கவிருக்கும் வளைகாப்பு விழாவிற்கு வந்து வீட்டு வேலை செய்யச் சொல்லி செல்லத்தாயை அழைக்கிறார். செல்லத்தாயும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்கிறார். விழா முடிந்ததும் கொஞ்சம் சோறும், பலகாரங்களும் கொடுத்து அனுப்புகிறார். செல்லத்தாய் கண்களில் தட்டு நிறையக் குவிந்து கிடக்கும் ஆப்பிள் பழங்கள் மீது படுகிறது. ஒரு ஆப்பிளையேனும் தர மாட்டாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. ஆனால் அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு ஆப்பிள் பழத்தைக் கொடுக்க மனமில்லை. செல்லத்தாய் ஏக்கத்துடன் வீடு திரும்புகிறார்.
வழக்கம்போல் வீரலட்சுமி ‘’அம்மா! ஆப்பிள் வாங்கி வந்திருக்கிறீங்களா?” என்று ஆசையுடன் கேட்கிறாள். வழக்கம்போல் செல்லத்தாயும் ‘’நான் வரும்போது பழக்கடை எல்லாம் மூடிவிட்டது கண்ணே! நாளை வாங்கி வருகிறேன்,’’ என்கிறார். அடுத்த நாள் காலை செல்லத்தாய் அந்த வீட்டுக்குத் திரும்பவும் வேலைக்குச் செல்கிறாள். யாரோ பாதி கடித்துத் தூக்கியெறிந்த ஆப்பிள் பழம் ஒன்றை மாடு மென்று தின்கிறதைப் பார்க்கிறார். ஆனால் வீரலட்சுமிக்கு என்னவோ எப்போதும் ஆப்பிள் ’எட்டாக்கனி’யாகவே நீடிக்கிறது.
தொகுப்பில் இருக்கும் அத்தனை கதைகளிலும் படிப்பவர் நெஞ்சை நெகிழச் செய்யும் ஏதேனும் ஒரு நிகழ்வு அல்லது காட்சியுள்ளது. தொகுப்பின் வெற்றிக்கு அடையாளமாக விளங்கும் எனக்குப் பிடித்த நான்கு கதைகளைப் குறிப்பிட்டுள்ளேன். மற்ற கதைகளை நீங்களே நூலில் படித்து மகிழுங்கள். எழுத்தாளர்கள் உதயசங்கரும், பாஸ்கர் சக்தியும் பொருத்தமான அணிந்துரைகளை வழங்கியுள்ளனர். விஜிலா தேரிராஜன் தனது காத்திரமான படைப்புகள் மூலம் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை. ’ஹெர் ஸ்டோரிஸ்’ வெளியீட்டகம் நூலினை பாங்குடன் வெளியிட்டுள்ளது
நூல்: மூன்றாம் விதி
ஆசிரியர்: விஜிலா தேரிராஜன்
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரு.240/
===================
மூன்றாம் விதி அறிமுக கட்டுரையாளர்:
பெ.விஜயகுமார்,
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்.
மதுரை- 18.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.