எழுத்தாளர் பா செந்தாழை அவர்கள் 1961இல் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பிறந்தவர். குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வரும் இவர் நவதானிய வணிகர் ஆவார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் 2008 இல் வெளியாகியது. இவரின் சிறுகதைகள் காலச்சுவடு, ஆனந்த விகடன், தடம், மணல் வீடு,தமிழினி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
சிறுகதைகள் என்பது நம்மைச் சுற்றியும் நாம் செய்யும் வேலை அல்லது தொழிலைச் சுற்றியும் நடக்கும் விஷயங்களோடு பின்னிப்பிணைந்தவை. நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடுவோம்.ஆனால் ஒரு எழுத்தாளரின் பார்வையில் அந்த விஷயங்கள் ஒரு சிறுகதையின் மையக்கருவாக அமைந்து அவை சிறுகதைகளை பிரசவிக்கின்றன.

சிறுகதைகள் ஆசிரியரின் பாணிக்கேற்ப விதவிதமாக வெளிப்படும். எழுத்தாளர்
பா. செந்தாழை அவர்களின் சிறுகதைகள் கதை மாந்தர்களின் பார்வை வழியே ஊடுருவிச் சென்று நம்மைப் பார்க்க வைக்கிறது.
இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம்19 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன..இதில் என் மனதிற்கு உகந்த ஒரு சில கதைகளை இங்குப் பகிர்கிறேன்.
வயது வித்தியாசம் அதிகமாக உள்ள தம்பதிகளில் மன உணர்வுகளை டி-ஷர்ட் என்ற கதை பிரதிபலிக்கிறது. சகல வசதிகள் கொடுத்தும் மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத ஒரு கணவனின் மன ஓட்டத்தையும் அவனின் பதைபதைப்பையும் இக்கதை சுட்டிக்காட்டுகிறது. மனைவி தன்னை விட்டு பிரிந்த காரணம் தெரியாது அவளைத் தேடி அலைகிறான்..தன்னிடம் இல்லாதது அவனிடம் என்ன உள்ளது என்று தேடி அவளை அடைந்தபோது அவளின் கொலுசு ஒலியின் ஓசையில் அதை உணர்ந்தானா என்பது மீதிக் கதை. .
தன் கணவனிடம் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத பெண் அதை வேறொருவரிடம் நாடுவதன் மூலம் அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சியான உணர்வுகளையும், அவப்பெயரினால் ஏற்படும் மனவேதனைகளையும் அக்கதாபாத்திரத்தின் வாயிலாகவே திராட்சை மனம் கொண்ட பெண் என்ற கதையில் ஆசிரியர் கூறுகிறார்…அவள் சமூக வழக்கத்திற்கு மாறாக தன்னுடைய இச்சையை தீர்த்துக்கொள்ள வேறொருவரை நாடுவதால் அவளை சமூகம் தகாத பெயரைச் சொல்லி அழைக்கிறது..அதே தவறைத் தான் அவளுடன் சேர்ந்து ஒரு ஆணும் செய்கிறான்.ஆனால் அவனுக்கு அந்த பெயர் வருவதில்லை..இந்த முரண் காலங்காலமாக நம் சமூகத்தில் நீலவி வருகிறது..இது போன்ற அவச்சொற்களை ஒரு பெண்ணின் மீது பிரயோகிப்பதை இனியாவது கதை எழுதும் எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் அவளின் உணர்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கதைகளைப் படைக்க வேண்டும. அப்போதுதான் காலங்காலமாக பெண்களிடம் மட்டுமே பிரயோகித்து வரும் அவச் சொற்கள் மறையும் என்பது என் எண்ணம்.
ஆசிரியர் வணிகச் சூழலில் வாழ்வதால் அவருடைய விலாஸம் ,த்வந்தம். துலாத்தான் போன்ற கதைகள் வணிகம் சார்ந்து அமைந்துள்ளன. இக்கதைகளின் வாயிலாக வணிகத்தில் உள்ள நெளிவு சுளிவுகள், வணிகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள்,அதில் உள்ள சிக்கல்கள், வணிகம் செய்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், எப்பொழுது எதை வாங்க வேண்டும் எதை விற்க வேண்டும் என்ற உத்திகள் என வணிகத்தைப் பற்றி அறியாத பல விஷயங்களையும் இக்கதைகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
குழந்தையில்லாத ஒரு பெண்ணின் மனம் எப்படியெல்லாம் மனசாட்சி இன்றி வக்கிரமமாக மாறுகிறது என்பதை ஆபரணம் என்ற சிறுகதையின் வாயிலாக கூறுகிறார் ஆசிரியர். இதற்கெல்லாம் காரணம் குழந்தையின்மையை இந்தச் சமுதாயம் சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு பெண்ணிற்கு ஏற்படுத்தும் மன அழுத்தத்தின். வெளிப்பாடே.
புத்தகத்தில் உள்ள கதைகளில் பல கதைகளை புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. சில கதைகள் புரியவே இல்லை. புதிதாக சிறுகதை வாசிப்பவருக்கு புத்தகம் படிப்பது மிகவும் கடினம்.
பல கதைகள் தகாத உறவுகள் மற்றும் பாலியலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை இச்சிறுகதைகள் உடைக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு முடிவை கொண்டு இருக்கும் என்ற வரையறை ஏதும் இல்லாமல் ஆசிரியர் சுதந்திரமாக கதைகளைக் கையாண்டு இருக்கும் விதம் சிறப்பு. கதையின் முடிவுகள் வாசகரின் மனப்பான்மைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும்படி உள்ளது. வித்தியாசமான ஒரு சிறுகதைத் தொகுப்பை படித்து உணர்வு இப்புத்தகத்தைப் படித்தவுடன் ஏற்படுகிறது. நன்றி.
நூலின் தகவல்கள்
நூல் : “விலாஸம்”
ஆசிரியர் : பா.திருச்செந்தாழை
பக்கங்கள்: 216
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூலறிமுகம் எழுதியவர்
ச சுபாஷிணி திருச்சி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

