பழைய பெயர் ஆறு முக்கு. இதை ஏற்படுத்த ஏழு சாலைகள் தேவை. பல கிராம மக்கள் ஏழு திசைகளில் இருந்து வந்து நகரில் விளை பொருட்களை விற்றனர். நாளடைவில் அது பெரும் சாலையாகி, ரோடாகி இறுதியாக அபாய சிக்னலாக ஆனது. அபாயங்களை தவிர்க்க மேலே பாலம் வந்தது. வீடில்லா மக்கள் சிலர் பகலிலும் பலர் இரவிலும் படுத்துறங்க ஏதுவான இடமாக மாறியது மேம்பாலத்தின் அடியில் இருந்த பயனற்றுப் போன பழைய சாலைகள்.
பாலத்தின் மேலே நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து நின்றால் கீழே உள்ள சாலை மீண்டும் தன் பழைய சாலைப் பணியை செய்யும். ஆறு முக்கில் அன்று என்ன நடந்தது. பிறந்த விழா கோலகாலமாக நடந்தது. அதுவும் அமைச்சரின் மகன் பிறந்த நாள். ஆளும் கட்சிக்காரர்கள் மேம்பாலத்தில் சாலையை மறித்து விழா எடுத்தனர். எல்லா வாகணங்களும் மேம்பாலத்தில் செல்லமுடியாமல் கீழே செல்லுமாறு வழி மாற்றம் செய்யப்பட்டது. எப்போதும் கீழ் சாலையில் போக்குவரத்து வராது என்ற நம்பிக்கையில் போடப்பட்ட விளம்பரத்தட்டி குடிசைகள் இரண்டு காணாமல் போயின. போக்குவரத்து காவலர்கள் வாகனங்கள் ஓட தடையாய் இருந்த குடிசைகளை பிரித்து எறிந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
நெரிசல் குறைந்து மீண்டும் மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கும் போது மாலை ஏழு மணியானது. இரவு பத்து மணிக்கு தனம் தன் குடிசைக்கு வந்தாள். மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலை. இரண்டு கணவர்களுக்கு பெற்ற நான்கு பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவு தருவது அவள் பொறுப்பு. அவளே தன்னார்வத்துடன் எடுத்துக் கொண்ட பொறுப்பு.. முதல் கணவன் அதிகம் மது குடித்து மாண்டான். இரண்டாம் கணவன் ஜேப்படி செய்த பணத்தை பங்கு போடும் போது வந்த சச்சரவில் குத்தி கொல்லப்பட்டான்.
ஆனால் தனம் என்ற தனலட்சுமி எதற்கும் கலங்காமல் வாழ்வை தொடர்ந்தாள். பிள்ளைகளிடம் ஒப்பந்தம் போட்டாள். எல்லாரும் பதின் வயதை கடந்து விட்டனர். சுயமாக சம்பாதிக்க முடியும். ஒரு வேளை காலை உணவு அவள் பொறுப்பு, மதியம் மற்றும் இரவு அவளை தாய் என்ற காரணத்தால் பலவந்தப்படுத்தி சோறு கேட்க கூடாது. முதலில் பிரச்னையாகாத்தான் இருந்தது. ஆனால் நான்கு பிள்ளைகளும் பழகி விட்டனர். பசிக்கும் பழகி விட்டனர். ருசிக்கும் பழகி விட்டனர். அவர்களுக்குள்ளே உள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர் பிள்ளைகள். யார் என்ன சம்பாதித்தாலும் பணமோ உணவோ மேம்பாலத்தின் கீழ்வந்து விளம்பரத் தட்டிகளால் ஆன வீட்டினுள் வந்து பங்கு போட்டுக் கொள்ளவேண்டும். ஆகவேதான் அந்த மேம்பாலத்தின் கீழ் இருந்த பயனற்றுப் போன சாலையின் ஒரு மூலையில் இருந்த விளம்பரத் தட்டிகளால் ஆன குடிசைகள் இரண்டு ஒன்று தாய் குடிசை, மற்றொன்று பிள்ளைகள் குடிசை. ஆம் பிள்ளைகள். எல்லா பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள்.
அவ்வப் போது தனலட்சிமிக்கு வரும் ஒரு இறுமாப்பு நல்லவேளை எல்லாம் ஆணாக பிறந்து விட்டனர். பெண்ணாகப் பிறந்திருந்தால் அவள் பொறுப்பு அதிகமாக இருந்திருக்கும். எல்லா பெண் பிள்ளைகளுக்கும் பாத்திரம் கழுவும் வேலை கிடைக்கும் என சொல்ல முடியாது. இப்போது அது எதற்கு ஆணாக பிறந்து விட்டனர். ஜேப்படி, காசுக்கு அடிப்பது அதுதான் கொலை செய்வது, போலீஸ் கூறும் போராட்டங்களில் கலந்து கொண்டு கல்லெறிவது, சினிமா தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பது, இதைத்தானே பெரிய முதலாளிகளும் செய்கின்றனர், கதவடைப்பு அன்று ஓட்டல்காரன், ஆட்டோக்காரன், விலை கூட்டுவது இல்லையா, ஏன் ஏரோப்ளேன் பறக்க விடுபவன் கூட நெரிசல் நாளில், விடுமுறை நாளில் கட்டணம் கூட்டுவது இல்லையா ! எல்லாம் தேவை மற்றும் விநியோக பொருளாதார கொள்கையை அடிப்டையாக கொண்டது.
சரியாக இரவு பத்து மணிக்கு தனம் வந்தாள். வீட்டை காணவில்லை. தன் வீடும் இல்லை. பிள்ளைகளின் வீடும் இல்லை. அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிள்ளைகளுக்கு வேலை இருபத்தி நான்கு மணி நேரம். போதுமான அளவு பொருள் ஈட்டிவிட்டால் நடு இரவு வருவார்கள். முதலில் இடிந்து போய் அமர்ந்தவள் சிறிது நேரத்தில் அழத் துவங்கினாள். ஒரு மணி இருக்கும். முதல் இரண்டு பிள்ளைகள் வந்தனர். அவர்களை பார்த்ததும் அவள் அழுகையின் சத்தம் கூடியது.
’’அம்மா நம்ம வீடு எங்க போச்சு,?”’ அந்த சாலையில் நீண்ட காலத்துக்கு பின் வாகனங்கள் ஓடிய சக்கர பதிவுகளை பார்த்தனர். அடுத்த இரண்டு பிள்ளைகள் வந்தனர். அதில் இளையவன் கூறினான்
’’அம்மா காலையில இந்த வழியா எல்லா வண்டியும் போயிருக்கு வழியில நம்ம வீடு இருந்து மறிச்சதால பிரிச்சி எறிஞ்சீட்டாங்க. வர வழியில பிச்சைக்காரப் பாட்டி சொன்னாங்க’’ இதை கண்டுபிடித்தவன் கடைசி புதல்வன்.தாய் தனம் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
’’நா என்ன பண்ணுவே’’
‘’அம்மா அழாதீங்க விடிஞ்சதும் பாக்கலாம்’’
விடியல் வந்தது. நான்கு மகன்களும் மேம்பாலம் சென்றனர். கண்ணுற்றனர் மேம்பாலத்தின் கிழக்கு சுவரில் இருபது அடி உயரத்தில் பெரும் வளைவில் இருந்து இறங்கிய இருபது அடிக்கு முப்பது அடி பிறந்த நாள் வாழ்த்து கூறும் தட்டி காற்றில் ஊஞ்சல் ஆடியது. அதில் கண்களை பறிக்கும் நிறத்தில் கொட்டை எழுத்துக்கள்
‘’ சிங்கத்தின் சீற்றமே
புலியின் உறுமலே
வருங்கால முதலமைச்சரே
எதிர் கால விடியலே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஆணையிடு அணியாய் திரள்வோம்’’
எல்லோருக்கும் மூத்தவன் சொன்னான்.
’’டேய் தம்பிகளா இந்த பிறந்த நாள் ஒரு வாரம் கொண்டாடுவாங்க, முடிஞ்சதும் புது வீடு போடுவோம்’’
வாரம் சென்றது. மீண்டும் புதிய விளம்பரத் தட்டிகளில் புதிய குடிசையை போட்டனர் தனத்தின் தவப் புதல்வர்கள். ஆனால். சிங்கத்தின் சீற்றமே, புலியின் உறுமலே,வருங்கால முதலமைச்சரே,எதிர் கால விடியலே,பிறந்த நாள் வாழ்த்துக்கள்,ஆணையிடு அணியாய் திரள்வோம்’ இந்த வாசகங்கள் எல்லாம் தெரியவில்லை. அதையெல்லாம் கட்டிடக் கலை நுணுக்கத்துடன் உள்ளே வைத்து மடித்து குடிசையை அழகிய குடிலாக போட்டிருந்தனர். கண்களை பறிக்கும் நிறங்கள் உள் சுவற்றில் இருந்தாலும் வெளியே பிரதிபலிப்பு வீசியது. அதை குடிசை என்றால் யாரும் நம்ப முடியாது.