தங்கேஸ் எழுதிய "வில்லாததை வித்து" சிறுகதை | Villathathai Vithu Short Story Written By Thanges | தமிழ் சிறுகதைகள் pdf | www.bookday.in

தங்கேஸ் எழுதிய “வில்லாததை வித்து” சிறுகதை

சாவடிக்கு முன்பு ஊரே ஒன்று திரண்டுருச்சு . நாட்டாமை மாரியப்பன் மாமா , பெரிய ஆம்பளை காளியப்பன் , பூசாரி மாரி , தரகன் கிட்ணன் இப்படின்னு ஊரு பெரிய ஆளுக எல்லாம் ஒன்னு கூடி வந்து நின்னு சின்னம்மைகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்க்குறாக. ஆனா அவள் எதுக்கும் அசைஞ்சு கொடுக்கிற மாதிரி தெரியலை. துட்டி சொல்லி வந்த அய்யனன் ரொம்ப நேரமா நெகாத் தெரியாம கையை பிசைஞ்சுகிட்டு நின்னுகிட்டிருந்தான். ஊரில் அதிகாலையிலேயே துட்டி விழுந்து விட்டதால் , அவனுக்கு காலையில் கம்மங் கஞ்சி கூட கொடுக்காமல் , விரட்டி விட்டார்கள். எப்பவுமே சாவடி திண்டு மேல் அவன் போனியை தலை கீழாகத்தான் கவுத்தி தான் வச்சிருப்பான். ஊருக்குள் இருந்தால் அன்னாடப் பாடு எப்படியும் ஓடி விடும். போனியை எடுத்துக் கொண்டு ஏதாவது வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டால் , ஆளு பேருகளோடு சேர்த்து இவனுக்கும் அந்த வீட்டுப் பொம்பளைகள் கஞ்சியோ கூழோ கொடுத்து விடுவார்கள்.

தொட்டுக்கிறதுக்கு சின்ன வெங்காயம் , ரெண்டு பட்டை வத்தல் , இல்லைன்னா எதாவது கடிச்சிக்கிர என்று கொடுப்பார்கள். வயித்துப் பாடு தெரியாது.
முதல் பஸ்சை பிடித்து நேரா சின்னம்மையைக் கட்டிக் கொடுத்திருந்த வேப்பம் பட்டிக்கு வந்து விட்டான். இதை விட்டா அடுத்த பஸ்சு மத்தியானம் பன்னென்டு மணிக்குத் தான் வரும்னு சொன்னாங்க ஆளுக . ஊர் பெரியாம்பிளைக வழிச் செலவுக்கு குடுத்து , அவனை தலையைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி அடுத்த பஸ்சுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். பொதுவாக எந்த நல்லது கெட்டதுன்னாலும் பக்கத்து ஊர்கள்ள போய் தாக்கல் சொல்றதுக்கு அய்யனனைத் தான் அனுப்புவாங்க. அவனும் அலுப்பு சலுப்பு பார்க்க மாட்டான். ஒத்தக்கட்டை , பொண்டாட்டியா ? புள்ளை குட்டியா ? எதுக்கும் அவன் மொகம் கோணமாட்டான். அதனால தேன் சின்னம்மை என்ன தான் சொல்லுறா பார்ப்போம்னு கால் கடுக்க நின்னுகிட்டேயிருந்தான்.

சின்னம்மை ஒரு படி நெல்லை உரலில் போட்டு குத்தி எடுத்து சுளகில் வைத்துப் புடைத்து எடுக்கும் வரைக்கும் அவன் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தான் ” பாவி மக ! உள்ளூர்க்காரன் எனவனாச்சேன்னு , இவ ஒரு அஞ்சு பத்து கூட குடுக்க வேண்டாம் . ஒரு சிரங்கை பச்சரிசி கூட தெள்ளி குடுக்க கூடாதா ” என்று நினைத்துக் கொண்டான். ஆளாளுக்கு சும்மா வள வளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். நாட்டாமை மாரியப்பன் மாமா எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார். எப்போதோ செத்துப் போய்விட்ட அவளது புருசன் ராசுக்கு அவர் சித்தப்பா முறை வேண்டும் . அந்தப் பாசத்தில் அவர் சின்னம்மையை எப்போதும் மருமகளே என்று தான் கூப்பிடுவார் ” மருமகளே எப்பவோ நடந்தது நடந்து போச்சு அதை இப்ப நினைச்சு வீம்பு பண்ணக் கூடாது. என்ன இருந்தாலும் அவன் உன் கூடப் பொறந்துட்டான்ல , நல்லதுக்கு போகலன்னாலும் , கெட்டதுக்கு போறது தான் முறை . நமக்கும் நாளைக்கு மனுச மக்க வேணுமில்லை ” என்று தயவாக சொல்லிப் பார்த்தார். சின்னம்மை இறங்கி வருவதாக தெரியவில்லை அவள் ” என்ன ரொம்பவும் வற்புறுத்தாதீங்க மாமா , இருபது வருசத்துக்கு முன்னாலயே எங்க அம்மை அய்யா செத்ததுக்கு கூட நான் அந்த வீட்டு வாசப் படியேறி உள்ள போகலை . வாசலோட சரி . கொள்ளி ஒடைக்குற ரெக்கத்துக்குப் போய்த்தான்அவுகளுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செஞ்சு கடைசியா அனுப்பி விட்டுட்டு வந்தேன். அன்னைக்கு கூட அவன் மூஞ்சில முழிக்கலையே ” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் அப்படியே குத்துக் கல்லைப் போல உட்கார்ந்து விட்டாள்.

”கடைசியா ஒரு தடவ நீ போய் முகத்தைப் பார்த்துட்டு வந்தாத்தேன் என்ன சின்னம்மை ” என்று கேட்டுப் பார்த்தார் பெரிய மாரி அய்யா . ” உனக்குன்னு தான் இங்க யாரு இருக்குறாக , ஒத்தப் பொம்பளப் புள்ளயை பெத்து வளர்த்த , அதையும் சிவகாசிப் பக்கம் கட்டி கொடுத்துட்டே , கடைசி காலங்கள்ள உனக்கும் உறவுன்னு சொல்ல நாலு ஆளு பேரு வேணும்ல ” என்று சொல்லிப் பார்த்தார் .

பொதுவாக தெற்கத்திப் பக்கம் செங்குளத்தில் இருந்து , இந்தப் பக்கம் காஞ்சு போன வேப்பம் பட்டிக்கு அவ்வளவாக சம்பந்தம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். . ” ஏ அவங்க பூரா கிருசு கெட்ட பயலுகப்பா , நம்ம பொண்ணை குடுத்துட்டு வருசமெல்லாம் மல்லு கட்டிகிட்டு இருக்க முடியாது ” என்று என்னத்தையோ சொல்லி மழுப்பி விடுவார்கள். ஆனால் சின்னமையை அந்த ஊரில் இருந்து தான் ராசு கல்யாணம் செய்து கூட்டி வந்திருந்தான். சும்மா சொல்லக் கூடாது அவளும் எந்த வேலைக்கும் அஞ்ச மாட்டாள் என்பது அவள் வந்த சில நாட்களிலேயே அந்த ஊருக்குள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. சம்சாரிக வயல் காட்டில் களை எடுக்கப்போனாலும் சரி , நாத்து நட்டாலும் சரி , இல்லை கருதறுப்பு என்றாலும் சரி முதல் ஆளாக வேலையை சூட்டிகையா முடிச்சிட்டு வாறது அந்த ஊருப் பொம்பளைகள்ளயே சின்னம்மையாத் தான் இருக்கும் .

எந்த வேளை செய்யறதுக்கும் ஆம்பளையைப் போல அஞ்சவே மாட்டாள். கருதறுப்போ , நாத்து நடவோ நிரை புடிச்சான்னா பத்தாளுகளுக்கு முன்னால போய் நின்னு திரும்பி பார்த்து விட்டு , பொகையிலையை எடுத்து வாய்க்குள்ள அதக்கி விட்டு மறுபடியும் ஆரம்பித்து விடுவாள் . நிரை முடிந்த பிறகு தான் தலையை நிமிர்த்திப் பார்ப்பாள். அப்படித்தான் அலுக்காமல் அல்லும் பகலும் காட்டு வேலை வீட்டு வேலைன்னு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் செய்து கொண்டிருந்தாள். ஊருக்குள் பெரிய பொம்பளைகளும் ஆம்பளைகளும் தங்கள் மருக்கமார் காது படவே இவளைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் காட்டுவார்கள் . ’ சங்கிலி சரப்புளி எதுக்குங்குகிறேன்.

இப்படி ஆம்பளைக்கு ஆம்பளையா பொம்பளைக்கு பொம்பளையா சரிக்கு சரியா , ஒரு சம்சாரி வீட்டுக்கு மருமக வந்தான்னா நகை நட்டெல்லாம் கால் தூசிக்கு சமானம் தான ” என்பார்கள். “ நல்லா கிடாறிக் கன்னுக் குட்டி மாதிரி சுறு சுறுப்பான புள்ளையை கொண்டு வந்திருக்கீங்கப்போய் , உன் மகனை மாதிரி அப்பிராணிபயலுக்கெல்லாம் இந்த மாதிரி சுறு சுறுப்பான புள்ள தான் வேணும் ” என்று மேலத் தெரு பெரிய ஆளுக வந்து ராசுவோட அப்பன் கருப்பனன் கிட்ட சொல்லி விட்டுப் போவார்கள். எப்பவும் சனங்களுக்கு மூச்சுக் குத்து புடிச்சிருச்சுன்னா அவருகிட்டத் தேன் வைத்தியத்துக்கு வந்து போவாங்க . ரெண்டு சோளத் தட்டையை எடுத்து , இன்னொரு ஆளையும் கூப்பிட்டு , இடுப்பில வைச்சு இரண்டு பக்கமும் பிடிக்கச் சொல்லுவார் , ரெண்டு மூனு மந்திரத்தை வாய்க்குள்ளயே வச்சு சொல்லிபிட்டு , சோளத்தட்டையை நாலா , மூனா ஒடிச்சிப் போட்டு விட்டு ‘’ சரியாப் போச்சு போயிட்டு வாங்க ‘’ என்று அனுப்பி விடுவார் . யாராவது மூச்சுக்குத்து பிடிக்க ஆளுக வந்து விட்டால், ” மருமகளே ரெண்டு சோளத் தட்டையை கொண்டாமா ” என்பார் , அவர் சொல்லி முடித்த மறு நிமிசம் சின்னம்மை ரெண்டு சோளத்தட்டையோடு வந்து நிற்பாள் . அங்க நிற்கிறவுகளுக்கு ஆச்சரியம் தாங்காது.

மகனுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைச்சிருக்கிறத நெனைச்சி கருப்பனனும் அவர் பெஞ்சாதி முத்து மாரியும் அடிக்கொரு தரம் ரொம்பவும் பெருமைப் பட்டுக் கொள்ளுவார்கள். இவள் வந்ததுக்கப்புறம் தான் கஷ்டத்துல கிடந்த அந்தக் குடும்பமும் கொஞ்சம் தலை எடுக்க ஆரம்பிச்சது . ரெண்டு வருஷத்துல அவளுக்கு ஒரு பொம்பள புள்ள பொறந்துச்சு . அதைப் பத்தி யாரும் வருத்தப்படலை. பொன்னம்மா என்று பெயர் வைத்து பிள்ளையை நல்லா கைக்குள்ளேயே வச்சுத் தான் வளர்த்தார்கள். அவளும் சின்னம்மையைப் போலத்தான் நல்லா சூட்டிகையா இருந்தா.

எல்லாம் இப்படி நல்ல படியாத்தான் போய் கிட்டயேயிருந்தது . ஆனா அடுத்த நாலஞ்சு வருசத்து சுத்தமா மழை தண்ணி இல்லாமப் போகும்னு யார் நினைச்சா ? . கிணறு கெட்டைல ஒத்தப் பொட்டு தண்ணியைப் பார்க்க முடியலை. எங்க பார்த்தாலும் ஒரே வறட்சி தான். எத்தனை நாளைக்குத் தான் கையிலிருக்கிற தானியம் தவசம் வரும் ? கடைசில குடிக்க கூழு கூட இல்லாமப் போச்சு . அம்பதடி அறுபதடி கிணறுகள்ள கூட தண்ணி சுத்தலை . பெருசு பெட்டு எல்லாம் பசில பாதி , பட்டினில பாதின்னு போய் சேர்ந்திருச்சுக. மீதியிருந்த சனங்களும் ஊரைக் காலி பண்ணிட்டு தெக்கயும் வடக்கயும் ஆளாளுக்கு அதது வழியைப் பார்த்து போகுதுங்க . யாருக்கும் எங்கயும் ஒரு வழியைக் காணோம். பெரிய வீட்டு சம்சாரிக எல்லாம் காரை வீட்டைப் பூட்டிகிட்டு வீட்டுக்குள்ளளே உட்கார்ந்துட்டாக. யார் கிணத்துல தண்ணி நல்லா ஏழ்க்கையா சுத்துதோ அவுக தான் ஏதோ வயலுப் பக்கம் வந்தாக . மத்த சம்சாரிகள்ளாம் மானாம் பாரி பயறு பட்சைகளைப் போட்டு காலத்தை ஓட்டுனாக. ”ஒரு நாள் ” ஏம்ப்பா தாது வருசப் பஞ்சம் , சென்னை மாகாணப் பஞ்சமெல்லாம் இப்படித்தான் இருக்கும்னு எங்க தாத்தன் பெரிய கருப்பன் , நான் சின்னப்புள்ளையா இருக்கையில கதை கதையா சொல்லுவான்பா . அதையெல்லாம் இப்பத்தான் கண் கொண்டு பாக்குறேன் ” . என்றான் தரகன் கிழவன். ”

ஆமாம் பக்கத்து ஊர்கள்ளயெல்லாம் சனம் சன்னமா சாகுது , பசியில பாதி , பட்டினியில பாதி ” ” ஆமாமா ஏமன் பழி சுமப்பானா சொல்லு ?”

குருணா கஞ்சி , சோளக்கஞ்சி, கம்மஞ்கஞ்சி , குருத வாலிச்சோறு , பழைய சோறு இப்படின்னு எல்லாம் வரிசையா திண்ணு தீர்ந்து போய் கடைசியில “ ரேசன் கடையில மக்காச்சோள மாவு குடுக்குறானாம் போய் வாங்கிட்டு வருவோம்பா ” என்று மக்காச்சோளம் மாவை வாங்க சனங்கள் போனார்கள். அதை வாங்கி நல்ல உப்புமா மாதிரியும் , களி மாதிரியும் கிண்டி சாப்பிட்டார்கள் . .பள்ளிக் கூடத்துல மத்தியானம் புள்ளைகளுக்கும் அதை தான் உப்புமா செய்து கொடுத்தார்கள். பள்ளிக் கூடம் போகாத புள்ளைங்க எல்லாம் கூட்டமா சேர்ந்து ஒரு பக்கம் தரிசுக் காடுகளுக்குள்ள இறங்கி , எலிப் பொந்துகளை தோண்டி , வெளியேறுகிற எலிகளை , கட்டி கரம்பைகளை வச்சு எறிஞ்சு சாகடிச்சு , சூட்டாம் போட்டு திங்குதுங்க .

இந்த கடுமையான பட்டினி பஞ்சத்தில் ராசுவோட அய்யாவும் அம்மையும் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியலை. அடுத்தடுத்து திரும்பி வரமுடியாத பெரிய ஊருக்கு போய் சேர்ந்து விட்டார்கள். அது போலத்தேன் செவக்குளத்தில் சின்னம்மையின் அப்பனும் , அம்மையும் அடுத்தடுத்து போயிட்டாக. பல்லுல பச்சைத் தண்ணி படாம ராசுவும் சின்னம்மையும் பிள்ளையின் முகத்தை முகத்தைப் பார்த்து பார்த்து பொறுமினார்கள். கறி வேப்பிலை கொத்து மாதிரி ஒத்தப் பிள்ளையை பெத்து வச்சிருக்கு . அதை காப்பாத்தனுமே . என்ன வழி என்று சின்னம்மை யோசனை கேட்டாள். ராசு ரொம்ப நேரம் யோசித்து விட்டு ஒரு விசயத்தை தயங்கி தயங்கி சொன்னான். ” ஊர் பெரிய ஆளுக எல்லாம் நேத்து அவுகவுக கிணறுகளை நீரோட்டம் பார்க்குறவனை கூப்பிட்டு வந்து காட்டுனாக . நானும் நம்ம கிணத்தை காட்டுனேன் . ‘’ கரு கருன்னு நல்ல கருங்கல் பாறை தான் .ஆனா இன்னும் நாலு அடி தோண்டுனா ஈசான மூலையில பவுனு மாதிரி வத்தாத தண்ணி ஊத்து கண்டுரும் . அப்படி காங்காட்டி என் கையில இந்த குறி சொல்லற கோலை எடுக்குறதையே விட்டுர்றேன்னு சொன்னான் . அவன் . நான் கேட்டு சொல்றன்னு வீட்டுக்கு வந்துட்டேன் ‘’ என்றான்.

ராசு சின்னம்மை எனக்கும் ஆசை தான் ” வீட்டுப் பக்கத்துல கிணறு , இளநித் தண்ணி மாதிரி ருசி , ஊர் காரக் கழுதைகள்ளாம் இதில இருந்து தான் வாளில கயிறு கட்டி இறைக்குதுக . தண்ணி மட்டும் கிடைச்சதுன்னா இந்த ஒரு குறுக்கத்தை பாடுபட்டாலே போதுமே நமக்கு கஞ்சி குடிக்க , மிச்சத் தண்ணியை பக்கத்து காடுகளுக்கும் வாடகைக்கு பாய்ச்சலாம் ” என்றாள். ” ஆனா அம்புட்டு துட்டுக்கு எங்கிட்டு போறது ? ” ” எவ்வளவுஆகுமாம் ?‘’ ” பெரிய நோட்டு அஞ்சு ஆகுமாம் ” ” அடி ஆத்தி அம்புட்டுக்கு இந்த நேரத்துல எங்கிட்டுப் போறது ? ” ஏன் உங்கண்ணனை கேட்டுப் பார்ப்பமா ?” ” அதுவுந் தேன் எங்கிட்டுப் போகும் ? ” ஏற்கனவே இருந்த அரைக்குறுக்கத்தையும் வித்து செலவழிச்சும் , அய்யாவையும் அம்மையையும் காப்பாத்த முடியாம கிடக்குறாக ” ‘ ஏ உங்க மதினி நகையை கேட்டுப் பார்க்குறது ‘’ ‘ இல்லேன்னு சொல்லிட்டான்னா அசிங்கமா போயிரும் ‘’ ” சரி அப்ப விட்டுரு , உள்ளதப் பார்ப்போம் ” என்றான் ராசு . ” சரி எதுக்கும் போயி கேட்டுப் பாக்கேன் ” என்று கிளம்பி விட்டாள் அவள்.

சின்னம்மை அண்ணன் வீட்டுக்குப் போன போது மதினி மட்டும் தான் வீட்டில் இருந்தாள். உங்க அண்ணன் தெக்கே கருசக் காட்டுக்குத் தேன் பாத்தி கட்டப் போயிருக்கு , செத்த இரு இப்ப வந்திரும் ” என்றாள். சுப்பையன் மத்தியானத்துக்கு மேல் கஞ்சிக்கு வீட்டுக்கு வந்தவன் , தங்கச்சியைப் பார்த்ததும் போய் கோழியைப் பிடிச்சிட்டு வந்திட்டான். கோழிக் குழம்பு கொதிக்கிற நேரத்துல , சின்னம்மை ஊர் கதையை முழுசா சொல்லி முடித்து விட்டாள். கேட்க கேட்க மதினி முகம் ஒரு தினுசா போறதையும் அவ பார்க்க தவறலை . ‘’ கிணத்துல தண்ணி கண்டுட்டா ரெண்டு வெள்ளாமையில திருப்பி குடுத்திரலாம்னு வீட்ல சொல்லி விட்டுச்சுன்னே ” என்று குறிப்பறிந்து சொன்னாள். சுப்பையா நேராகப் போய் டிரங்கு பெட்டியைத் திறந்து , மதினியின் நான்கு பவுன் சங்கிலியை சின்ன பட்டுத் துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு வந்தான் .

அதை அப்படியே எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி முக்குல இருக்குற கோபால் செட்டியார் அடகு கடைக்கு போய் , அப்பவே ஐயாயிரத்துக்கு அடகு வைத்து , பணத்தை நல்ல பச்சை துணிப் பையில் போட்டு முடிந்து அவள் கையில் கொடுத்தான். ” பாருப்பா இதை நீ ரெண்டு வெள்ளாமையில இல்ல மூனு வெள்ளாமையில கொடுத்தா கூட போதும் . ஆனா இது இவுக அய்யா இவளுக்கு பங்கு பாகம் பிரிச்சதுல இவ பங்கா கொடுத்தது . இவுக அண்ணணுக்கு நெட்டா நாலு ஏக்கர் வயக்காடு ,நல்ல தண்ணிப் பாசானத்தோட குடுத்துருக்காரு. இவளுக்கு மடுடும் இந்த நாலு பவுனுன்னை குடுத்து , முடிச்சு விட்டுட்டாரு. போன மாசம் தேன் இவளோட அய்யாவும் அம் மாவும் வந்து குடுத்துட்டுப்போனாக, அதை ஒரு மாசம் கூட வீட்டுல வச்சுப் பார்க்க முடியலை , இவளே இன்னும் ஒரு தடவை கூட போட்டு பார்க்கலை . இதை வச்சுத்தான் அவ பொட்டைப் புள்ளைய கரையேத்தப் போறாளாம். எனக்கும் சின்னஞ் சிறிசுக நண்டும் சிண்டுமா இரண்டு இருக்கு , அதை மட்டும் பார்த்துக்கோ ” என்றான். ” என் தலையை அடகுவச்சாவது திருப்பி குடுப்பேன் ” என்று கிளம்பி விட்டாள் சின்னம்மை .

ஒரு வாரம் கிணத்து வேலை நல்ல போர்ட்சாகத்தான் நடந்தது. ஆணும் பெண்ணுமாக சும்மாடு கட்டி கிணத்துக்குள்ள இறங்கி , கல்லும் ஈர மண்ணையும் சுமந்து போட்டார்கள். இன்னொரு பக்கம் கமலை போட்டு மஞ்சள் காரையை வெளியேற்றினார்கள். கரி மருந்து திரி போட்டு பொளந்து போட்ட கல்லையும் மண்ணையும் சுமந்து வந்து கொட்டினார்கள். மஞ்சள் நிறத்தில் காராங்கால் அம்பாரமாக குவிந்து விட்டது. சின்னம்மை தட்டாம் பயறும் பாசிப் பயறும் அவித்து வேலை செய்கிற ஆட்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அவள் வேண்டாத தெய்வமில்லை. கையில இருந்த காசு எல்லாம் அருவாக அருவாக புருசன் பொஞ்சாதி ரெண்டு பேருக்கும் அடிவயித்துல தீப்பிடிச்சது. ” எப்படி கொண்டு செலுத்துறதுன்னு தெரியலியே மாரித்தாயி ” என்று சின்னம்மை அரற்றினாள். கடைசி நாளில் காயத்திலிருந்து வரும் ரத்தத்தைப்போல ஈசான மூலையில் இலேசாக தண்ணி கசிவெடுத்தது .” இதுநாலு குடம் பிடிக்க கூட காணாதே அரக்குறுக்கத்தை எப்படி சுத்தும் ” என்று ராசு நொடிந்து போய் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். ” உடைஞ்சு போக வேண்டாம் ஆனது ஆச்சு , மறுபடியும் கொஞ்சம் முகர்ச்சி பண்ணி பாத்திருவோம் ” என்று பெரிய ஆள்கள் சொன்னதை கேட்டு, ஊருக்குள் போய் பெரிய வீட்டு ஆளுக கூடலிங்கத்துகிட்டயும் , வேலுச்சாமிகிட்டயும் காட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கொண்டு வந்து மறுபடியும் கிணற்றில் போட்டார்கள் . அது பூதம் மாதிரி அகலமாக வாயைத்திறந்து எல்லாவற்றையும் வாங்கி கொண்டு பெரிய ஏப்பமாக விட்டது.

அடுத்து நடந்ததெல்லாம் காலக் கொடுமை என்று சொல்ல வேண்டும் . பெரிய வீட்டு ஆளுக முதல் வருசமே வட்டி கட்டலை அசலையும் கட்டலைன்னு வந்து , ரெட்டை ஏர் பூட்டி , ஆளுக்கு ஒரு குண்டை உழவடிக்க ஆரம்பிச்சுட்டாங்க . ராசு எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் ஒண்ணும் பிரயோசனமில்லாமல் போய் விட்டது. ‘’ சம் சாரிக பொழப்புக இப்படித்தாம்பா ‘ என்று ஊர் பெருசுகள் பெருமூச்சு விட்டார்கள்.

இப்போது ராசுவும் சின்னம்மையும் கிடைச்ச கூலி வேலைக்கு போக ஆரம்பித்திருந்தார்கள். பொன்னாத்தாவை அஞ்சாம் கிளாசோடு நிறுத்தி விட்டு கையில் தூக்குச் சட்டியை கொடுத்து தீப்பெட்டி ஆபிசுக்கு அனுப்பி விட்டு , சின்னம்மை விக்கி விக்கி அழுதாள். பஸ்ஸில் விடியங் காட்டியே ஏத்திவிட்டதும் மலங்க மலங்க விழித்த படியே பிள்ளை பஸ்சுக்குள் ஏறிப்போனாள். ” இதெல்லாம் ஒரு பொழப்புன்னு பொழைக்கனுமான்னு இருக்கு ” என்று ராசுவிடம் அரற்றுவாள் சின்னம்மை. அவன் ஒரு வார்த்தை பேசாமல் மம்பட்டியை எடுத்துக் கொண்டு கூப்பிட் சம்சாரிகளுக்கு கூலி வேலைக்குப் போய் விடுவான் .

மூனு வெள்ளாமையும் போயி நாலாவது வெள்ளாமைக்கும் அண்ணங்கிட்ட வாங்குன நகையை சின்னம்மையால திருப்பிக் குடுக்க முடியலை. அண்ணனும் மதினியும் நாலு கடிதாசி போட்டு விட்டார்கள். சின்னம்மை ஒன்றுக்கும் பதில் போடவில்லை. வட்டி வளர்ந்து வளர்ந்து அசலே முங்கப் போகுதுன்னு கோபால் செட்டியார் கூப்பிட்டு சொல்வதாக கடிதத்தில் தெரிவித்து இருந்ததாக கடைசி கடிதத்தில் எழுதியிருந்தார்கள். எதற்கும் இவர்கள் பதில் போடவில்லை. உள்ள நிலைமையை ஊர்காரர்கள் யாராவது சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள் .

பொறுத்து பொறுத்து பார்த்து , ஒரு நாள் ஆயர்தர்மம் பஸ்ஸுக்கு அண்ணணும் மதினியும் நேராக வீட்டுக்கே வந்து இறங்கிவிட்டார்கள். வந்தவர்கள் வீட்டு வாசலுக்கு உள்ளே நுழையவேயில்லை . வாசலில் இருந்தே மதினி மானாங்கண்னிக்கு பேச ஆரம்பித்து விட்டாள். அய்யய்யோ இன்ன வார்த்தையின்னு இல்லை. சன்னமா ? ” ஏன் நகை பூராம் கடன்ல முழுகிப் போச்சுடி ,ஒரு நாள் ஒரு பொழுது அதை போட்டு கழட்டலை நானு . யாரு யாருக்குப் பிறந்திருக்காகன்னு தெரியலை. எங்கய்யா சதுரகிரிக்கு நான் ஒருத்தி மட்டும் தான் பிறந்திருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் ” என்று வாய் கூசாமல் பேசி விட்டாள் . சுப்பையா இவள் இவ்வளவு தூரத்துக்குப் பேசுவதை கேட்டும் , ஒரு வார்த்தை கேட்கவில்லை .

ராசு நிலைப்படியை புடிச்சு நின்னவன் தான் . அப்படியே சிலையாக நின்னுட்டான் பாவி மகன் . சின்னம்மை பொறுத்து பொறுத்துப் பார்த்தாள். ஒன்றும் தாங்க முடியவில்லை. வாய் பொறுக்க மாட்டாமல் ரெண்டு வார்த்தையை விட்டு விட்டாள். சண்டை முற்றி விட்டது. மதினி மாரியம்மன் கோவிலுக்கு முன்னால் போய் மண்ணை வாரி வாரி தூத்தி விட்டு ” வாங்குன கடனை அடைக்கனும்னா வில்லாததை வித்துனாலும் அடைக்கனும்டி ’‘ என்று சொல்லி விட்டு புருசன் கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போய்விட்டாள் . அன்று தான் அண்ணனையும் மதினியையும் சின்னம்மை கடைசியாகப் பார்த்தது . ராசு ரோசக்காரன் அன்னிக்கு ராத்திரியே ரெட்டைப்புளிய மரத்துல தும்புக்கயிறை போட்டு நாண்டுகிட்டான். ”

சின்னம்மையும் பொன்னம்மாளும் ஒரு நாள் ராத்திரியில் அனாதையாகிப் போனார்கள் . அண்ணனும் மதினியும் சாவுக்கு வந்தால் , அவளும் பிள்ளையும் ஊர் கிணற்றில் விழுந்து செத்துப் போய் விடுவோம் என்று சொல்லி விட்டாள். ஊர்காரர்கள் சுப்பையாவிடம் கடுசாக சொல்லி விட்டதால் அவர்கள் ராசுவின் சாவுக்கு வரவேயில்லை.

சின்னம்மை ரொம்பவும் பேச்சுவார்த்தையை ரொம்பவும் குறைத்துக் கொண்டாள். நாளாவட்டத்தில் கல்லுக்குள் தேரை போல ஊருக்குள் அவள் இருக்கும் இடம் தெரியாமல் போனது . உழைக்காத உழைப்பில்லை. படாத சீண்டரமில்லை. பொன்னம்மா எப்படி வளர்ந்து வாலிபமானான்னு தெரியலை. காலம் குடு குடுன்னு ஓடிப் போச்சு . அவளோட விசேசத்துக்கு கூட அண்ணனுக்கும் , மதினிக்கும் ஒரு வார்த்தை சொல்லி விட தோணலை. ஒரு நாள் பொன்னம்மாவை சிவகாசியில் இருந்து பொண்ணு கேட்டு வந்தார்கள். பையன் அச்சாபிஸில் வேலை பார்க்கிறவன் விசாரித்துப் பார்த்ததில் நல்ல இடமாகத் தெரிந்தது . ஏதோ அவளால் ஏண்டதைப் போட்டு கரையேற்றி விட்டு விட்டாள். மகள் போனதிலிருந்து ஊருக்குள் சின்னம்மை ஒத்தைக் கட்டை தான்.

நாட்டாமைக்கார மாரியப்பன் மாமாவிலிருந்து ஊர் பெருசு முனியப்பன் வரை எல்லோரும் எம்புட்டு தூரத்துக்கோ சொல்லிப் பார்த்து விட்டார்கள். ஒன்றும் ஆகவில்லை கடைசியில் எல்லோரும் , கையை விரித்து , உதட்டைப் பிதுக்கி விட்டுச்சென்றார்கள். நாட்டாமை மாமா ’’ பொம்பளையானவ சொல்லறதைக் கேட்டாவுல நல்லாருக்கும் தான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுன்னு நிக்கிறவளை , நம்ம என்ன சொல்லி என்ன செய்ய ‘’ என்று அலுத்துக்கொண்டார். ஊர் சாவடியில் பெருசுகள் எல்லாம் சேர்ந்து ஏதோ கூடி கூடிப் பேசினார்கள். சின்னம்மை ஒரு வசத்துக்கு வரமாட்டேங்குறா என்று ஆளாளுக்கு அபிப்பிராயப்பட்டார்கள். கடைசியில் எல்லாம் கூடி மொத்தமாக ஒரு முடிவெடுத்தார்கள்.

நாட்டாமை அவளிடம் ‘’ சரி மருமகளே ! நீயே இந்தப் போட்டியில செகிச்சிட்டுப்போ , ஆனா ஊர் வளமைன்னு ஒண்ணு இருக்கில்ல. அதை எப்படி விட்டுக் குடுக்க முடியும் ?. நாளைப் பின்ன அந்த செவக்குளத்துக்காரங்க எங்களைப் பார்த்தா மூஞ்சியில எச்சியைக் காரி துப்பிரமாட்டாய்ங்களா ,? என்று கேட்டார். ” அதுக்கு நான் என்ன செய்யனும் மாமா ? என்றாள் சின்னம்மை ” ” அதுதேன் நாங்க எல்லாம் கூடிப் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கோம் , அதுக்காவது கட்டுப்படனும் . ” ’ சரி சொல்லுங்க ” ” நீ போகலன்னாலும் பரவாயில்லை , உன் புள்ளையையாவது அனுப்பி விடு , அவ வரலான்னாலும் அவ புள்ளையைவாது அனுப்பியிருக்காளேன்னு அந்த ஊர்காரங்க ஒரு ஆறுதலா பேசட்டும் ‘ என்றார்கள்.

சின்னம்மை சுவரில் சாய்ந்தபடியே பாதிக் கண்களை மூடிக்கொண்டு சொப்பனத்தில் பேசுவது போல பேசினாள். ‘’ நான் யாரையும் போன்னும் சொல்லலை , நில்லுன்னும் நிறுத்தலை , அந்தப் புள்ளை போறதுன்னா தாராளமாப் போகட்டும் ‘’ என்று முடித்துக் கொண்டாள். ‘’ பிறகென்னப்பா உடையவளே போகச் சொல்லிட்டா , அந்தப் புள்ளையை எங்க குடுத்திருக்கு சிவகாசில தான ? முதல்ல அதுக்கு தாக்கல் குடுங்க , சம்பந்தகாரக செய்முறைக என்ன இருக்குதோ அதை முறைப்படி செய்யனும்ல ‘’ என்று சொல்லி ஊரிலிருந்து இன்னொருத்தனை சிவகாசிக்கு அனுப்பி வைத்தார்கள். அய்யனனை வழிச் செலவுக்கு குடுத்து அனுப்பி விட்டு , ஊரில் இருந்து செங்குளத்திற்கு சில பேர் கிளம்பி போனார்கள்.

சின்னம்மை சித்தம் சரியில்லாதவள் போல சுவரில் சாய்ந்தபடியே நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேதானிருந்தாள். ‘’ வெரசா கிளம்பும்பா பன்னென்டு மணி பஸ்சு இப்ப வந்திரும், இல்லன்னா ஆல மரம் வரைக்கும் நடந்து போய் அங்கயிருந்து ரூட் பஸ்சு பிடிச்சுத்தான் போகனும் . பஸ் சார்சும் அதிகம் போடுவான் ’’யாரோ யாரையோ என்று விரட்டினார்கள்.

தூரத்தில் நடக்கும் போதே துட்டி வீட்டில் சாவு மேளச் சத்தம் வந்து சனங்களை கூப்பிட்டுப் போனது. ‘’ ஏன்டா ரண்டக்கு ரண்டா , ரண்டக்கு ரண்டான்னு அடிக்கிறானா இல்லாட்ட கஞ்சிக்கு செத்தான் , கஞ்சிக்கு செத்தான்னு அடிக்குறானா ? ‘’ என்று கேட்டுக் கொண்டே வேப்பங்குளத்து ஆளுக மொது மொதுவென்று அந்த வீட்டுக்குள் போனார்கள். கூட்டத்துக்குள் சின்னம்மை தட்டுப்படுகிறாளாவென்று என்று துட்டி வீட்டு ஆட்கள் உட்பட ஊர்சனம் ஒவ்வொன்றும் தேடியது. அவளை காணாமல் ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டார்கள். ‘’ரோசக்காரி அவளை மாத்த முடியாது ‘’ என்று வேறு யாரோ சொன்னார்கள். அங்க முன்னமே வந்து பொன்னம்மா உட்கார்ந்திருந்தாள்.

அவள் சிவகாசிக்காரி அவளுக்கு அடிக்கொரு தரம் பஸ் இருக்கும் . விசயத்தை கேள்விப் பட்டதும் போட்டது போட்டபடி கிடக்க அப்படியே கிளம்பி வந்து விட்டாள். அத்தைக்காரி வந்து அவளது கழுத்தை கட்டிக் கொண்டு அழுதாள். ‘’ உங்க மாமா சொல்லிக்கிட்டே இருக்கும். அவ ரோசக்காரி நான் செத்தாலும் வரமாட்டான்னு , கடைசிக்கு அதே மாதிரியே உங்கம்மை வரலையேடி ‘’ என்று கதறினாள். ‘’ அந்த மனுசனும் நானும் அப்படி பேசுனதுக்கெல்லாம் நல்லா பட்டு அழுந்திட்டோம்டி ‘’ என்று பிறகு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். இழவு வைத்துக் கொண்டிருந்த கிழவி ஒருத்தி ,ஒப்பாரியை நிறுத்தி விட்டு இவர்கள் என்ன பேசுகிறாள் என்பதை கூர்ந்து கவனித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தாள்.

நேரம் ஆக ஆக ஊர் பெரியாள்கள் அவசரப்படுத்தினார்கள் . ‘’ பொழுது ஏறிகிட்டே போகுது , சட்டுன்னு எடுக்குறதுக்கு வழியைப் பாருங்கய்யா , அது தான் வரவேண்டிய சனமெல்லாம் வந்துட்டாகள்ள ‘’ என்றான் அந்த ஊர் நாட்டாமை . ஊர் கிணத்துக்கு நீர்மாலைக்குப் போன போது பொன்னம்மை , தனது புருசனை விட்டு அத்தை மகன்களுக்கு வேட்டி துண்டு உருமா கட்டினாள் . அத்தை மகளுக்கு எடுத்து வந்த சேலையை அவளிடம் கொடுத்தாள். அதற்குள் சுப்பையனை இளவட்டங்கள் சேர்ந்து கட்ட மண் சுவருக்கு பின்னால் வைத்து குளிப்பாட்டி, புது வேட்டி சட்டை உடுத்தி எடுத்து வந்து படுக்க வைத்திருந்தார்கள்.

‘’ ஏம்மா கொள்ளி போடுறவ வா , முன்னால , ‘’ அவளுக்கு மண் கலயத்தில் தண்ணீர் நிறைத்து கொடுத்தார்கள். ஊர் நாவிதன் சின்ன முனியான்டியை கூப்பிட்டு நாட்டாமை ’ ஏப்பா இங்க பாரு நல்ல பதமான ஊசி மூக்கு அருவாளா வச்சுக்கோ , ஒத்த கொத்துல , அந்த இடத்தில் பொத்தல் விழுந்து தண்ணி வழியனும் . போன வட்டம் செவனம்மா கெழவி செத்ததுக்கு இப்படித்தான் அருவா பதமில்லாம போய் நாலஞ்சு கொத்து கொத்தி பானையே அந்த கெழவி மக தலையில சாய்ச்சு விட்டுட்ட என்று அழுத்துக் கொண்டார். சின்னமுனியான்டி தலையாட்டி விட்டு ‘’ நல்ல பதமான அருவாய்யா இது ‘’ என்றான் . இளவட்டங்களைப் பார்த்து ‘’ ஏ தேரு ரெடியாப்பா பூராம் வாகரிச்சிக் கட்டைகள வச்சுக் கெட்டிருக்கீங்க , கெழவனை தாங்குமா ? என்று கேட்டான் அய்யனன் . ஊர் இளவட்டங்கள் அக்கிரமம் பெயபுள்ளைகள் அய்யனன் என்றால் கொஞ்சம் விளையாடித்தான் பார்ப்பார்கள்.

அதெல்லாம் ரெடியாத்தான் இருக்கு ,சந்தேகமிருந்தா நீயே வந்து இதுல படுத்துப் பாரு தாங்குதான்னு பார்ப்போம் ‘’ என்றார்கள். ‘’ எல்லாம் அகராதி புடிச்ச பெயபுள்ளைக , தலையால ஆடுதுக ‘’ என்ற படி ‘’ அய்யனன் நகர்ந்தான் ” ஏ எல்லா சாங்கியமும் முடிஞ்சதாப்பா , ஏ பொம்பளைகளா கொலவையை நல்லா உசத்திப் போடுங்க , ” என்றார் தலையாரி . யாரோ ” ஏய் இளந்தாரிப்பயல்கள்ளாம் வாங்கடா சுப்பையனை தூக்குங்க ‘’ என்று குரல் கொடுக்கவும் நெல்லுக் காட்டுக்குள் ஓடும் சூறைக்காற்றுச் சத்தம் போல , ஓ என்று ஒப்பாரிச் சத்தம் ஒரே மட்டமாக எழுந்தது . அடுத்த பக்கம் ஊர் பெரிய பொம்பளைக ளின் ஒப்பாரி ஓங்கி ஒலித்தது. ‘ தூக்குங்கடா ‘’ என்று வேலு சொல்லி முடிக்க , பொணத்தை தூக்கப் போகும் போது அந்தப் பக்கமிருந்து ஓடி வந்தது ஒரு வெண்கலக்குரல் என்று கேட்டது ‘’ ஏ என்னைப் பெத்த அய்யா , ஏ என்னைப் பெத்த அய்யா , போயிட்டியே ‘’ என்ற படி தலையில் தலையில் அடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள். சின்னம்மை.

ஊரே ஒரு நிமிசம் விருமுத்தி அடித்துப் அப்படியே நின்று இந்தக் காட்சியை பார்த்தது. யாருமே அவள் வருவாள் எதிர்பார்க்கவேயில்லை . பிணத்தை தூக்கப் போனவர்கள் கூட அதை அப்படியே போட்டு விட்டு , அவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கே வந்தாள் எப்படி வந்தாள் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ,, வந்தவள் தலையில் தலையில் அடித்துக்கொண்டு சுப்பையன் கால் மாட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள்.

‘’எட்டு மணி வண்டியேறி நான்
இளைப்போடு வந்து நின்னா
ஏலரிசிக் கஞ்சி காய்ச்சி இளைப்பாத்தும் அம்மாவெங்கே !
பத்து மணி வண்டியேறி
நான் பசியோடு வந்து நின்னா
உழுத வயலை விட்டு
ஒடி வரும் அய்யாவெங்கே ?
தாய் வீட்டுச் சேதியின்னு
தந்தி வந்து தகவல் சொல்ல
அழுத கண்ணு மாறாமல்
அடைச்ச கதவை பூட்டாமல்
நான் ஓடி ஓடி வந்தேனே
இப்ப நாதியத்து நின்னேனே ‘’

என்று ஏதேதோ சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டேயிருந்தாள். பொழுது மசங்க ஆரம்பித்தது. அவ எம்புட்டு அழுது தீர்க்கனுமோ அம்புட்டு அழுது தீர்க்கட்டும்னு எல்லோரும் காத்திருந்தார்கள். அவ அழுகுற தினுசைப் பார்த்தா , போய் சேர்ந்த அண்ணனை நினைச்சு அழுகுறாளா ? இல்லை என்னைக்கோ போய் சேர்ந்து விட்ட தாய் தகப்பனை நினைச்சு அழுகுறாளா என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இவளுடைய மதினி கூட கொஞ்ச நேரம் அழுகையை நிறுத்தி விட்டு இவளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இவள் நன்றாக அழுது ஓய்ந்த பிறகு ஊர் நாட்டாமை ‘ ஏந் தாயி ஆன மட்டும் அழுதுட்ட இப்ப எடுத்துரலாமா அண்ணனை ?’’ என்று கேட்டார். அவள் ” ஐயா செத்தோடம் பொறுங்க என்று சொல்லி விட்டு , சாவகாசமாக இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பைக்குள் கையை விட்டு நல்ல ஊதா நிறத்தில் இருந்த காகிதத்தை வெளியே எடுத்துப் பிரித்தாள்.

அதற்குள் நல்ல நாலு பவுன் தங்கச் சங்கிலி தக தகவென்று மினுங்கியது. என்ன நடக்கிறதென்று ஊரு சனமே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க , சுப்பையாவின் உயிரற்ற உடலைப் பார்த்து அவள் ‘’ வில்லாததை வித்து உன் கடனை அடைக்கச் சொன்னையில்ல அன்னைக்கு , இந்தா வில்லாததை வித்து தான் உன் கடனை வட்டியும் முதலுமா திருப்பி கொண்டு வந்திருக்கிறேன். இனி நீ நிம்மதியா போய் சேரு ‘’ என்று சுப்பையனின் காலடியில் வைத்தாள். ‘’ அப்படி என்னத்தடி வில்லாததை வித்து கொண்டு வந்த ‘’ ? என்று மதினி அவளைப் பார்த்து அந்த அழுகையிலும் கோபமாக கேட்டாள். ‘’ நானும் அந்த மனுசன் போனப் பிறகு உங்க கடனை அடைக்கனும்னு சிறுக சிறுக சேர்த்து வைச்சுக்கிட்டுத்தான் இருந்தேன் .

ஆனா அம்புட்டு பணம் சேர்க்க முடியலை. ஒரு ரெண்டு பவுனுக்குத் தேன் சேர்க்க முடிஞ்சது. மிச்சம் ரெண்டு பவுனுக்கு என் புருசன் எனக்கு விட்டுட்டுப் போன ஒத்த வீட்டையும் கையகல கொல்லையையும் வித்துப் போட்டு நாலு பவுனா கொண்டாந்திருக்கேன் . பார்த்துக்கோ , அசல் தங்கம் . தங்க முடியாபுள்ள கடையில எடை போட்டு பார்த்து எடுத்தது . பார்த்துக்கா ‘’ என்றாள். ‘’ ஊர் சனமெல்லாம் பெரிய வைராக்கியம் புடிச்ச கட்டை ‘’ என்றார்கள் அன்னிக்கு என் புருசன் சொல்லுச்சு ‘’ சாகுறதுக்குள் நம்ம தலையை அடமானம் வச்சாவது இவுங்க கடனை தீர்க்கனும்னு , என் புருசன் சொன்ன சொல்லை காப்பத்தனும்னு , இன்னிக்கு வில்லாததையும் வித்து எடுத்து , புரட்டி உங்க நகையை கொண்டாந்துட்டேன். சரியா இருக்கான்னு பார்த்து கணக்கை தீர்த்துக்கோ நான் போறேன் ‘’ என்று சொல்லி விட்டு சின்னம்மை விரு விருவென்று நடையைப் போட்டாள். ‘’ ஏ சின்னம்மை நில்லு ஏ ஆத்தா நில்லு ‘’ என்று யார் யாரோ அவள் பின்னால் இருந்து கூப்பிட்டுப் பார்த்தார்கள் ம் ஹும் அவள் திரும்பி பார்க்கவேயில்லை. சரி இனி அவளை யாராலும் நிறுத்த முடியாது என்று விட்டு விட்டார்கள் .

எழுதியவர் : 

✍️ தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *