‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூலுக்காக ‘சாகித்ய அகாதமி’ விருது பெற்றவர் முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். தமிழ்ச் சூழலில் ஒரு முழுநேர எழுத்தாளராக எழுத்தையே நம்பி வாழ்வது எவ்வளவு துயரமானது என்பதை அறிந்திருந்தும், தான் வகித்த அரசு வேலையை உதறிவிட்டு, முழுநேர எழுத்து வாழ்க்கையை இளம் வயதிலேயே ஏற்றுக்கொண்டு, வைராக்கியத்தோடு வாழ்ந்துகொண்டி ருப்பவர்.
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் கிருஷ்ணசாமி. 19ஆவது வயதில் இவரது முதல் சிறுகதை ‘சந்திரகாந்தக்கல்’ நாரண.துரைக் கண்ணன் நடத்திய ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியத் திறனாய்வுகள், இதழியல் ஆய்வுகள் என ஏராளமாக எழுதியுள்ளார். ‘கோரநாதன்’, ‘சொக்கலிங்கம்’, ‘மிவாஸ்கி’, ‘நையாண்டி பாரதி’ ஆகியவை இவரது புனைபெயர்கள்.
புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘திருமகள்’, கோவை யிலிருந்து ‘சினிமா உலகம்’, சென்னையிலிருந்து ‘நவசக்தி’, துரையூரி லிருந்து ‘கிராம ஊழியன்’ ஆகியவை இவர் பணியாற்றிய இதழ்கள்.
திரைப்படத்துக்காக வசனம் எழுதுகிற வாய்ப்பு கிடைத்த போதிலும், அதை நிராகரித்து, இலக்கியத்தின் மீதே தீவிர கவனம் செலுத்தியவர்.
பார்வைக்கு எளியவராக, பழகுவதற்கு இனியவராக தமிழ் இலக்கிய உலகின் தகவல் பெட்டகமாக, இளைஞர்களை உற்சாகப் படுத்தி வளர்க்கும் ஆசானாக, சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துக்கொண்டிருக்கிறார். அவருடன்…
‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்றொரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறீர்கள். அதற்கு ‘சாகித்ய அகாதெமி’ விருதும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கவிதைக்கான அனைத்து அம்சங் களையும் கொண்ட ஒரு புதுக்கவிதையைக் கூறமுடியுமா?
ந.பிச்சமூர்த்தி எழுதிய,
“மகுடி மேல் சீறிவரும்
ராகம் போல் ஆடிற்றடி
மின்னலைப் போல் வெகுண்டு
முகிலிடையே எரிந்ததடி
கத்தியைப் போல் சுருண்டு
வெளியெங்கும் சுழன்றதடி
ராகுவைப் போல் எழுந்து ஓடி
சூரியனைத் தீண்டிற்றடி
குரங்கைப் போல் வாலடித்து
கர்ணம் பல போட்டதடி
காலைப் புறாவைப் போல்
புள்ளியாய் மறைந்ததடி’’
என்ற புதுக்கவிதையைக் கூறலாம்.
‘ஒரு ஐரானிக் ஆடிட்யூட் இயங்க, ஒரு பிரமாதமான சாதனையை புதுமைப்பித்தன் காட்டி இருக்கிறார். அந்த ஐரானிக் ஆடிட்யூட்டின் பூரண இலக்கியத் தன்மை உருப்பெற முடியாது என்ற சித்தாந்தம் இதைவிட ஓர் உயரிய ஆடிட்டியூட் இருக்கிறது என்பதைக் குறிக்கும்’ என்று மௌனி புதுமைப்பித்தனை ஒரு பேட்டியில் குறை கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
புதுமைப்பித்தனை குறைகூறும் வகையில்தான் மௌனி இப்படி சொல்லி இருப்பார். உண்மையில், புதுமைப்பித்தன் எழுத்தில் கொண்டு வந்த ஐரானிக் ஆடிட்யூட், இதுவரை தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் எழுதியதில்லை. இந்தப் போக்கு புதுமைப்பித்தன் எழுத்துக்கு ஒரு தனித்தன்மை சேர்த்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் சிறப்பம்சங்களில் ஒன்று, சலிப்பில்லாமல் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருப்பது. இப்படி கடிதம் எழுதுவதை ஒரு பணியாகவே செய்துகொண்டு வருகிறீர்கள். இதற்காக குறிப்பிடும்படியான காரணம் ஏதாவது இருக்கிறதா?
எனக்கு சின்ன வயசிலிருந்தே சரளமாக பேச வராது. ஆனால் பேசுவதற்கான விசயங்கள் ஏராளமாக இருக்கும். அந்த விசயங்களைக் கடிதம் மூலமாக தெளிவாக – விரிவாக எழுத முடியும். கிராம ஊழியனில் வேலை செய்யும்போது நான் எழுதின கடிதங்களைப் பார்த்துட்டு, “வாங்குகிற 30 ரூபாய் சம்பளத்தையும் கடிதம் எழுதியே தீர்த்துடுவே போலிருக்கே…’’ என்று திட்டியிருக்கிறார்கள்.
நான் பேச்சாளன் கிடையாது. என்னால் நீட்டி மடக்கிப் பேசத் தெரியாது. வேகமாக படபடன்னு பேசுகிறேன் என்று சொல் கிறார்கள். கோவை ஞானிக்கு பார்வை தெரியாதில்லையா, அவர் ஒரு மேடையில் நான் பேசுவதைக் கேட்டு, “படிக்கிறாரா?’’ என்று கேட்டாராம். முன்பெல்லாம் மேடையில் பேசுவதையே தவிர்த்தேன். சாகித்ய அகாதெமி விருது கிடைத்த பிறகு, ஒவ்வொரு ஊராக என்னை அழைத்துச் சென்று எனக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். நானும் பேச வேண்டியதாகிவிட்டது.
புதிதாக ஒரு பத்திரிகை வந்தாலோ, புதிதாக ஒரு புத்தகம் வந்தாலோ, அது உங்கள் பார்வைக்கு வந்தால் முதல் பாராட்டுக் கடிதம் உங்களுடையதாகத்தான் இருக்கும். இது எப்படி சாத்தியமாகிறது?
என் மீது அன்பு காரணமாக சில நண்பர்கள் எனக்கு இதழ்களையும் புத்தகங்களையும் அனுப்புகிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்த ஒரு கடிதம் எழுதினால் அவர்களுக்கு அதிலே ஒரு மகிழ்ச்சி. பலர் நான் எழுதிய முதல் கடிதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் எல்லோரையும் ரொம்பவே பாராட்டி எழுதுவதாக ஒரு விமர்சனம் இருக்கிறதே…?
“பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவற விட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன’’ என்று பாரதியே சொல்லியிருக்கிறாரே. பொதுவாக, பாராட்ட வேண்டியதை பாராட்டுகிற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்பு கிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும். நான் சகட்டுமேனிக்கு எல்லோரையும் எல்லாவற்றையும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற குறை கூறலும், பரிகசிப்பும் நிலவுவதை நான் அறிவேன். அதே வேளையில் எனது பாராட்டுகள் பல பேருக்கு ‘டானிக்’ போல உந்துசக்தியாக உதவுவதையும் உணர்வேன்.
தமிழில் இலக்கிய விமர்சனம் சரியாக வளராததற்கு என்ன காரணம்?
தமிழில் க.நா.சு.தான் இலக்கிய விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தார். தன்னுடைய ரசனையை அடிப்படையாகக் கொண்டு எழுத்துகளை மதிப்பிடுவதாக அவர் சொன்னார். விமர்சனத்தில் எழுத்தாளர்களின் தரப் பட்டியல் தயாரிப்பது அவரது வழக்கம். முதலில் இவர்கள்தான் சிறந்த படைப்பாளிகள் என்று பத்து பேரைக் குறிப்பிடுவார். சிறிது காலத்திற்குப் பிறகு, அந்தப் பட்டியலிலிருந்து சில பேரை நீக்கிவிட்டு, வேறு சிலரை இணைப்பார். இதற்கான காரணங்கள் எதையும் அவர் சொன்னதில்லை. இதனால் அவரது விமர்சனத்தில் நேர்மை இல்லாது போனது.
இவரைப் பின்பற்றி சி.சு.செல்லப்பா விமர்சனம் எழுதினார். அவர் ‘ஆழ்ந்த பகுப்பாய்வு’ முறையில் விமர்சனம் எழுதினார். ஆனால், அவர் “மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிறகு நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றவே இல்லை’’ என்று உறுதியாக நம்பினார். ஆகவே, அவரது மதிப்பீடுகள் பரவலாக இல்லாமல் ஒரு சிலரைப் பற்றியதாக மட்டுமே உள்ளது.
அதன் பிறகு, வெங்கட் சாமிநாதன், பிரமிள் என்கிற தரும சிவராமு ஆகிய இருவரும் விமர்சனத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தமிழில் சுயபடைப்புகளே கிடையாது. தமிழ்நாடு பாலைவனம் போன்றது. இங்கு சுயசிந்தனையே தோன்றவில்லை என்கிற தன்மையில் குறுகியப் பார்வையோடு விமர்சனங்களை எழுதினார்கள்.
முற்போக்கு இலக்கிய நோக்கில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இலங்கைத் திறனாய்வாளர்களின் எழுத்துகள் தமிழ்நாட்டில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தின.
நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன் ஆகியோர் முற்போக்கு விமர்சனத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தில் படைப்புகளை எடை போட்டார்கள்.
பிறகு ஜெயமோகன் தீவிரமாக விமர்சனம் எழுத லானார். ஆனால், இவர் தமிழில் ஒரு நல்ல நாவல்கூட எழுதப் படவில்லை என்ற கோளாறான பார்வையுடனேயே விமர்சிக்கிறார்.
இப்படியாக, விமர்சனத்துறை இருப்பதால் ஆரோக்கியமான விமர்சனம் தமிழில் வரவில்லை. நல்ல விமர்சனம் என்பது குறை கூறுவதோடு மட்டுமல்லாமல், படைப்புகளின் நல்ல அம்சங்களையும் எடுத்துக்காட்ட வேண்டும். எழுத்தாளர்களுக்கு வழிகாட்டு வதாகவும் இருக்கவேண்டும்.
நீங்கள், தமிழ் இலக்கியமானது வங்காள, மலையாள, கன்னட இலக்கியங்களைப் போல செறிவு பெறவில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். இது உண்மை யாக இருக்கக்கூடும். 2,500 ஆண்டு கால சீரிய இலக்கி யத்தைக் கொண்ட தமிழ், இன்று இப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்குமானால், அதன் உண்மையான காரணம் என்ன?
தமிழின் 2,500 ஆண்டுகால பாரம்பரிய பெருமையே தமிழ் இலக்கியத்தின் காலத்தோடு ஒட்டிய வளர்ச்சிக்கு ஊறு செய்து வந்திருக்கிறது. பழமையான சீரிய இலக்கியங்களின் பெருமையை தமிழர்கள் உணர்ந்து ரசித்து இன்புறுகிறார்கள்; படித்து மகிழ் கிறார்கள் என்ற நிலைமை இல்லை. பழம்பெருமை பேசுவதிலேயே பெருமை அடைகிறார்கள். பண்டித மனோபாவம் பெற்றவர்கள் புதுமை இலக்கிய வளர்ச்சியை ஆதரிக்கவில்லை; வரவேற்பதும் இல்லை. ஆங்கிலம் கற்ற சிலர் தமிழ்ப் படைப்புகளை பொருட்படுத்துவதே இல்லை.
இதர இந்திய இலக்கியங்களில் புராதன இலக்கியப் பெருமை இல்லை. அங்கெல்லாம் மொழி ஆர்வலர்கள் தங்கள் மொழியை வளம் செய்வதற்காக தற்கால இலக்கியப் படைப்புகளில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவது இயல்பாயிற்று. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களும் தாய்மொழி இலக்கிய வளத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டு உற்சாகத் தோடு உழைப்பது நடைபெறுகிறது.
இதர மொழிகளில் வாசகர்கள், பத்திரிகைகள், விமர்சனங்களின் கவனிப்பும், வரவேற்பும் அதிகம் இருக்கின்றன. பெரிய பெரிய பத்திரிகைகள்கூட எழுத்தாளர்களுக்கும் அவர்களைப் பற்றிய தகவல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆங்கில பத்திரிகைகள்கூட எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்கள் குறித்தும் எழுதுவதில் ஆர்வமாக இருக்கின்றன. கல்லூரிப் பேராசிரியர்கள் சமகால எழுத்தாளர்களின் புத்தகங்களை விரிவாக விமர் சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்நிலைமை இல்லை. ஆங்கிலப் பத்திரிகைகள் தமிழ் எழுத்தாளர்களையும், அவர்களது முயற்சிகளையும் மதிப்பதே இல்லை. எழுத்தாளர்களுக்குள் குறுகிய கோஷ்டி மனப்பான்மை வளர்ந்து, படைப்பு முயற்சிக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது. திறமையுள்ள, பெயர் பெற்ற எழுத்தாளர்கள் பிற திறமைசாலிகளையும் தரமான படைப்புகளையும் கண்டுகொள்வதில்லை. பாராட்ட மனம் கொள்வதில்லை.
தமிழ்நாட்டில் முழுநேர எழுத்தாளர்களுக்குச் சாதகமான சூழல் இருக்கிறதா?
விரும்பியதை விரும்பிய நேரத்தில் படிக்கலாம், எழுதலாம். அதில் ஓர் ஆத்ம நிறைவு கிடைக்கும். கேரளா போன்ற எழுத் தாளரை மதிக்கிற – எழுத்தாளருக்கு நிறைய ராயல்டி கொடுக்கிற மாநிலங்களில் முழுநேர எழுத்தாளராவது சாத்தியம். இங்கே நிலைமை அப்படி இல்லை.
பிரபஞ்சன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்கள் இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். எழுத்தையே நம்பி வாழக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இன்னும் உருவாகவில்லை.
சந்திப்பு : சூரியசந்திரன்