வினையன் கவிதைகள்1.

கண்டயிடம் காணியாச்சு
தங்கவும் உண்கவுமா யிடமில்லை

கல்லுப் பொறுக்கி அடுப்பு மூட்டி
கலப்பரிசியில் பொங்கிய சோறு
நாள்பட்ட பசித் தீர்க்கும்

காரியங் களவு
நல்லது கெட்டதென
பங்கும் பங்காளி பாகஸ்தனில்லை

எட்டுத் தலைமுறையாய்
*தவசுச் சொல்லி
பிழைப்போடுகிறது சுத்துப்பட்டில்

சாங்கியத்துக்கொன்றும் குறையில்லை
ஆளாளுக்கு மாறுபடும்
எரிக்கலாம்
புதைக்கலாம்

சென்ற விடமெல்லாம்
சொல்லும் சேதி யொன்றுதான்

உசுர் போகிற வரைக்கும்
தொம்பனென்று மட்டும்
அழைக்காமலிருங்கள்
செத்தப் புண்ணியமாப் போவும்

 

–‘–‘–‘–

*தவசு (தபசு) – தன்வேதனை ( தங்கள் வாழ்வில் கடந்து வந்த துன்ப துயரங்களை கலையின் வழி பாடலாக பாடி கொட்டு அடித்து 30 அடி உயர மூங்கில் கழியின் மேலேறி வித்தைக் காட்டுவார்கள். வருடா வருடம் தை மாதத்தில் ஊரில் வந்து தங்கி நிகழ்த்து வேலைகள் முடிந்து கிளம்பிடுவர். பழங்குடிகளான அவர்களை தொம்பர்கள் என்றழைப்பார்கள்)2.

சடலம் கழுவி
சவ்வாது மணக்கும் பந்தல்
சாலை நெடுகிலும்
உதிர்த்து விடப்பட்ட சாமந்தி
உற்றவளின் ஓலம்
இளநீர் வெட்டி வைத்த எல்லை வரை
எரியும் என்மேல்
கங்குகளாய் மின்னுகிறது
காலம்

 

3.

ஈரங் கோர்த்த கொட்டகையில்
புழுக்கையின் வீச்சம்
கொடி ஆடு படுத்துக் கிடக்கும்
சனி மூலையில்தான்
நோவில் கிடந்த பெரியம்மா
உசுர் போனது
ஞாயிறு சந்தையில் பேரம் முடித்து
கயிற்றோடு வீடு திரும்பினார்
பெரியப்பா
கொடி ஆட்டுக்குட்டி
அதே சனி மூலையில்
வயிறு வீங்கி அசைவற்றிருந்தது4.

துண்டறிக்கைகள்
கண்டன ஆர்ப்பாட்டங்கள்
எச்சரிக்கை கோஷங்கள்
டீ க்கும் ரொட்டிக்குமிடையில்
இசங்கள்….
பெருமழை கொண்ட
ஓர் அர்த்த யிரவில்
தலைக்காக தரப்பட்ட நெகிழியில்
நீர் சொட்டுகிறது
மேக் கூரையை
அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்
தோழர்

 

5.

மாட்டுக்கறிக் கடைகள்
நெரிசல் மிகுந்திருக்கின்றன

டாக்டரு சொன்னாருங்க தம்பி
வைத்தியத்துக்கு வாங்கிட்டு போறேன்
இந்தப் பெரிய பய என்னத்த கண்டான்னு தெரில
நடுக்குட்டிதான் பறக்குது -என
மேலத்தெரு அண்ணன்கள் வரிசையில் நிற்கின்றனர்

செத்த மாட்டை தூக்க கூப்பிட்ட
இவர்களின் அப்பாக்கள்
ஆன்மா சாந்தியடையட்டும்
கோமாதா.
6.

மரணம் பற்றி எழுத முன்பே
மரணித்திருக்கத் தேவையில்லைதானே ஈசா?
உன் கவ்வைக் குச்சியில்
எரியும் பிணவாடை
முதுகெலும்பிகளின் பேரிரைச்சல்
வாய்க்கரிசிகளை பொங்கித் தின்னும்
உன் இய்யத் தட்டில்
ஆண்டைகளின் நிலத்தில் மாடாய்
உழுத சேரிக்குடியானவனின் வியர்வை
உப்புக் கரிக்கிறதா ஈஸ்வரா?
நெற்றிச் சில்லறைகளை சேமித்து வைக்கிறாய்
செல்லாக்காசென “காவி” யத்தலைவன் அறிவித்தால்
எப்படி எதிர்கொள்வாய் அம்பலத்தா?
கனன்றெரியும் சடலம் நரம்பிழுத்து எழும்போது
மூட்டுக்கு மூட்டு தட்டி அடக்குவாய் ஞாபகமிருக்கா?
அது உயிரற்ற உடல்
இந்நாட்டில்,
நாங்கள் உயிருள்ள பிணம்
மரணம் பற்றி எழுத முன்பே
மரணித்திருக்க தேவையில்லைதானே ஈசா?

 

7.

யானை கட்டிப் போரடித்தீர்கள் – சரி
யாருக்குக் கிடைத்தது
நெல்லுச்சோறு