விநாயக முருகனின் ‘ராஜீவ்காந்தி சாலை’ சென்னை மாநகரின் மென்பொருள் நிறுவனங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ரகசியங்களைச் சொல்லிடும் நாவல்.
– பெ.விஜயகுமார்.
பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு ஏதேனும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திட வேண்டும் என்பதே. தனியார் பொறியியல் கல்லூரிகளும் இளைஞர்களின் இந்த ஆசையை நிறைவேற்றுவோம் என்ற விளம்பரத்துடனேயே தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள். பெற்றோர்கள் பொறியில் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும்முன் அக்கல்லூரியில் ’கேம்பஸ் செலக்ஷன்’ வெற்றிகரமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பணத்தைக் கொட்டிக் கொடுத்து தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். சென்னையில் ராஜீவ்காந்தி சாலை முழுவதும் ஐடி நிறுவனங்கள் வானளாவ உயர்ந்து நின்று நம்மை பிரமிக்கச் செய்கின்றன. அன்றிருந்த பழைய மகாலிபுரம் சாலையே இன்று ராஜீவ்காந்தி சாலை என்றழைக்கப்படுகிறது. மாற்றம் பெயரில் மட்டுமின்றி அதன் முழுப் பரிமாணமும் மாறியுள்ளதை நாவல் விவரிக்கிறது.
’’ராஜீவ்காந்தி சாலை என்பது ஓரிடம் மட்டுமல்ல, அது ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும், புறமும் படந்திருக்கும் அவலத்தின் நிலப்பரப்பு’’ என்கிறார் நாவலாசிரியர் விநாயக முருகன். விநாயக முருகன் கும்பகோணத்தில் பிறந்து சென்னையில் வாழ்கிறார். சென்னையில் சில கம்ப்யூட்டர் பற்றிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். தற்போது ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஆனந்த விகடனிலும் தமிழ் இணைய இதழ்களிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. ‘கோவில் மிருகம்’ இவரின் முதல் கவிதைத் தொகுப்பு. ‘ராஜீவ்காந்தி சாலை’ நாவல் 2014ஆம் ஆண்டிற்கான ’மலைச்சொல்’ விருது பெற்றது. இவரின் ‘சென்னைக்கு மிக அருகில்’ நாவல் ‘சுஜாதா நாவல் விருது’ பெற்றது. தொடர்ந்து எழுதிக்கொண்டுள்ளார்.
இருபத்தோராம் நூற்றாண்டு வளர்ச்சியின் அடையாளமாக ஐடி நிறுவனக் கட்டிடங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பதைக் கண்டு பரவசம் அடைகிறோம். இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுத்துள்ள விலை மிகப் பெரியது என்பதை நாம் அறிவதில்லை. தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கப் பணிகளில் நிலங்களை இழந்தவர்களுக்கும், மெட்ரோ ரயில் திட்டம், மென்பொருள் நிறுவனங்கள் கட்டிடப் பணிகளில் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இந்நாவலை விநாயக முருகன் சமர்ப்பணம் செய்துள்ளது மிகப் பொருத்தமானது.
ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தின் மாடியிலிருந்து விழுந்து ஓர் இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும் செய்தியுடன் தொடங்குகிறது நாவல். ’’இந்த வீடியோவை உலகம் முழுவதும் பார்த்தது. ராஜீவ்காந்தி சாலையில் இருப்பவர்கள் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். கை நிறையச் சம்பளம் வாங்கும் இன்றைய இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன’’? இக்கேள்விக்கு விடை அளிக்கிறது நாவல்.
ஆம்; வளர்ச்சிக்கும், அழிவுக்கும் இடையில் இருப்பது நூலிழை இடைவெளிதான். இதனாலயே எது வளர்ச்சி என்ற குழப்பத்தில் மானுடம் எப்போதும் திகைக்கிறது. ஒன்றை அழித்துத்தான் மற்றது வளர முடியும் என்பதுதான் இயற்கையின் நியதியா? ஒன்றிணைந்த வளர்ச்சி என்பது சாத்தியமில்லையா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது எப்போது? இப்புதிர்களுக்கான விடையைத் தேடி அலைகிறார்கள் நாவலின் கதைமாந்தர்கள். வாசகர்களாகிய நாமும் இத்தேடலில் இணைகிறோம்.
ராஜீவ்காந்தி சாலையில் ஒரு பத்துமாடிக் கட்டிடத்தில் இருக்கும் ’சில்வர் சாஃப்ட்’ மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமே கதையின் களமாகும். இதைத் தாங்கி நிற்கும் ராஜீவ்காந்தி சாலை மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி திருவான்மியூர், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி எனப் பயணிக்கும் இச்சாலை நாவலூரில் சற்று இளைப்பாறி மீண்டும் தெற்கே சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், தண்டளம், பையனூர் எனச் சளைக்காமல் கிட்டதட்ட ஐம்பது கிலோமீட்டர்கள் ஓடி இதற்கு இணையாக வரும் கிழக்குக் கடற்கரைச் சாலையுடன் இணைகிறது.
சில்வர் சாஃப்ட் கட்டிடத்தின் பத்தாம் மாடியில் தனது சிஇஒ அறையில் அமர்ந்திருக்கும் சந்திரசேகர்தான் இந்நிறுவனத்தைத் தொடங்கியவர். ’’நம்ம ஆபிசுக்கு க்ரூப்– 4 ஆளுங்க கேட்டீங்களே? என்னாச்சு,’’ ரங்கா என்று கேட்கிறார். அதற்கு ’’காண்ட்ராக்டரிடம் சொல்லிவிட்டேன்; அவர் பார்த்துக்கொள்வார்’’, என்கிறார் ரங்கபாஷ்யம்.
மென்பொருள் நிறுவனங்களில் இப்படித்தான் எல்லோரும் பெயர் சொல்லித்தான் மற்றவர்களை அழைப்பார்கள். அரசு அலுவலங்களில் இருப்பதுபோல் சார் என்றோ மேடம் என்றோ அழைக்கமாட்டார்கள். நேற்றுக் கல்லூரியில் முடித்து இன்று வேலையில் சேர்ந்திருக்கும் இளைஞன்கூட சிஇஒவைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவான். ஆனால் இது க்ரூப்-4 பணியாளர்களுக்குப் பொருந்தாது. மென்பொருள் நிறுவனங்களில் செக்யூரிட்டிகள், தரையைப் பெருக்குபவர்கள். கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்கள், ஓட்டுநர்கள் போன்ற உடலுழைப்பு வேலை செய்பவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்தாமல் காண்ட்ரக்டர்களிடம் கொடுத்து விடுவார்கள். காண்ட்ராக்டர்கள் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் பணத்தின் பெரும் பகுதியைத் தாங்கள் எடுத்துக்கொண்டு க்ரூப்-4 ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுப்பார்கள். இந்த வேலைகளுக்கு உள்ளூர் மக்களையே நியமிக்க வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில் நிறைய வேலை செய்யும் பீஹார் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களே நியமிக்கப்படும் அவலத்தை நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்க நிறுவனங்கள் இந்திய இளைஞர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துவதன் மூலம் பெரும் லாபம் ஈட்டுகின்றனர். அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நாட்டு ஊழியர்களை நியமித்தால் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க முடியாது. ஏகப்பட்ட சலுகைகள் கேட்பார்கள். இந்தியர்கள் என்றால் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும். அவர்களுக்கு வேலை நேரம் ஒரு பொருட்டல்ல. பணி நிரந்தரம் கேட்பதில்லை. ஓர் அமெரிக்கன் சம்பளத்தில் பத்து இந்திய மென்பொருள் பணியாளர்களை வைத்து வேலை வாங்கலாம். மூன்று அமெரிக்கர்கள் செய்யும் வேலையை ஒன்றரை இந்தியன் செய்துவிடுவான். இதைப் பின்பற்றித்தான் இந்திய மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர்களுக்குப் பணிநிரந்தரம் கொடுப்பதில்லை. வேலை இருந்தால் கூப்பிடுவார்கள். இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். மென்பொருள் ஊழியர்களுக்காவது பி. எஃப்,, காப்பீடு போன்ற சலுகைகள் உண்டு. க்ரூப்–4 ஊழியர்களுக்கு எதுவும் கிடையாது.
பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து முடித்ததும் ஐடி நிறுவனத்தில் பணியில் அமரும் இளைஞர்கள் தங்கள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அவர்களின் உள்ளக் கிளர்ச்சி நியாயமானதுதான். இன்று சாதாரண பட்டதாரி இளைஞர்களும், மற்றவர்களும் வேலையின்றித் தவிக்கும்போது இவர்கள் ‘High Wage Islanders’ ஆக வலம் வருவது வெற்றியின் அடையாளம்தானே! வெற்றிக் களிப்பில் கால்கள் தரையில் பாவாமல் கனவுலகில் மிதப்பதும் ஆபத்துதானே! இவர்களில் ஒரு சிலர் வேலையில் சேர்ந்ததும் விலை உயர்ந்த கார் வாங்குவது, சென்னை, பெங்கலூர் போன்ற மாநகரங்களில் ஆடம்பர வீடு வாங்குவது, லேட்டஸ்ட் வெர்ஷன் செல் போன் வாங்கிக்கொண்டே இருப்பது, விடுமுறை நாட்களில் சக ஊழியர்களுடன் குடித்துக் கும்மாளமிடுவது என்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதே நேரத்தில் இத்தகு வாழ்க்கை முறையிலிருந்து விட்டுவிலகி ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடும் மென்பொருள் பொறியாளர்களையும் பார்க்கிறோம். தமிழ் மொழி இன்று கணினி உலகில் சிறந்து விளங்குவதற்கு இவர்களின் பங்களிப்பு அளவிடற்கரியது என்பதையும் அறிவோம்.
சந்திரசேகர் ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். அங்கேயே தனுஜா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சென்னை திரும்பியதும் இந்த சில்வர் சாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார். தலைமை அதிகாரி ரங்காவிடம், ‘’இந்த வருடம் 20% லாபம் எதிர்பார்த்தோம். ஆனா 18% வந்திருக்கு. இது எப்படி லாபம் ஆகும்? லாபம் குறைந்தால் அது நஷ்டம் என்றுதான் அர்த்தம். செலவைக் குறைக்கப் பாருங்க’’ என்று ஆதங்கப்படுகிறார். அதிகாரி ரங்கா க்ரூப்-4 ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். லாபத்தை அதிகரிப்பது குறித்த சிந்தனையுடன் சந்திரா பத்தாவது மாடியிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாக வெளி உலகைப் பார்க்கிறார். முதலாளித்துவத்தின் மிகச் கச்சிதமான பிரதிநிதி சந்திரசேகர்!
ராஜீவ்காந்தி சாலை ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் அவரைப் பிரமிக்கச் செய்கிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்த இடம்? எவ்வளவு மனித உழைப்பு? மாந்தோப்புகளும், பனைமரக் காடுகளும், வயல்களும் இருந்த இடம். ஏரிகளும், குளங்களும் நிறைந்த சதுப்பு நிலம். இன்று எங்கு திரும்பினாலும் அதிநவீன ஹைடெக் கட்டிடங்கள். நான்குவழிச் சாலைகளே தேசத்தின் அடையாளம்! தேசத்தின் வளர்ச்சியை அளக்க விரும்பினால் அதன் சாலைகளை அளந்தால் போதும். அதே நேரத்தில் இந்த சாலைகள் உருவாக எத்தனை பேர் தங்களின் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். விளை நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. இந்தச் சிந்தனைகளுடன் நிறுவனர் சந்திரா கட்டிடத்தின் கீழே கூர்ந்து பார்க்கிறார் சில்வர் சாஃப்ட் நிறுவனத்தின் மிக அருகில் அன்னத்தின் தள்ளுவண்டிக் கடை அந்தப் பகுதியின் அழகையே கெடுப்பதுபோல் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நிற்பதைப் பார்த்த சந்திராவின் முகம் அசூயை கொள்கிறது. அன்னம் ராஜீவ்காந்தி சாலை உருவாக்கத்தில் தன் வாழ்வாதாரத்தைத் தொலைத்தவர் என்பதை அவர் அறியார்!
மாட மாளிகைகளில் வசிப்போருக்கு சேவகம் செய்ய ஒரு பெரிய கூலித் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ராஜீவ்காந்தி சாலையின் அழகான, ஆடம்பரமான அடுக்கு மாளிகைகளில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் குடியிருக்கச் சேரிகள் தேவைப்படுகின்றன. இவர்கள் தங்குவதற்கான இடமே செம்மஞ்சேரி. சென்னை மாநகரைச் சுனாமி தாக்கியபோது பட்டிணப்பாக்கத்தில் வாழ்ந்த மக்களை வெளியேற்றி செம்மஞ்சேரியில் குடியேற்றியது சென்னை மாநகராட்சி. புதுப்பேட்டையில் கூவம் நதிக் கரையில் வாழ்ந்த தொழிலாளிகளை விரட்டி அடித்து கண்ணகி நகரில் வாழச்செய்ததும் அரசுதான். சமூகத்திற்கு கடைநிலை ஊழியர்கள் வேண்டும். ஆனால் அவர்கள் கண்ணில்படாத இடத்தில் வசிக்க வேண்டும்!
செம்மஞ்சேரியில் வாழும் சூசையும், லூர்தும் நண்பர்கள். இருவரும் சந்தித்த இடம் சென்னை புழல் சிறை. ஒரே செல்லில் ஆறு மாதம் இருந்தார்கள். செம்மஞ்சேரியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சூசையை சிறையில் அடைத்தார்கள். கண்ணகி நகரில் வாழும் லூர்து மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் துடிக்கும் ஒரு போராளி. மக்களைத் திரட்டி ராஜீவ்காந்தி சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டான். அன்றிலிருந்து காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருந்தான். காவல்துறையினர் இதுபோன்ற போராளிகளையே கண்காணித்துக் கொண்டிருப்பர். திருடு, கொலை, கொள்ளை, வழிப்பறி செய்பவர்கள் எல்லாம் பெரிய குற்றவாளிகள் அல்ல. சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களே ஆபத்தானவர்கள் என்று அதிகார வர்க்கம் பயப்படுகிறது. லூர்து ஷேர் ஆட்டோ ஓட்டி வாழ்க்கைப் பயணத்தை நடத்தினான். சூசை மினி லாரி ஓட்டிப் பிழைக்கிறான். லூர்துவுக்கு சில்வர் சாஃப்ட் நிறுவனத்தில் கார் டிரைவர் வேலை கிடைக்கிறது. தான் வாழும் வாழ்விலிருந்து எத்தகு மாறுபட்ட வாழ்வை சில்வர்சாஃப்ட் மென்பொறியாளர்கள் வாழ்கிறார்கள் என்பதை நேரில் கண்டு வியக்கிறான்.
சில்வர் சாஃப்ட் நிறுவனத்தில் பழநி என்ற டிரைவர் லூர்துவுக்கு நிறுவனத்தின் ரகசியங்களை எல்லாம் பிட்டுபிட்டு வைக்கிறான். பழநியின் கழுகுக் கண்களுக்கு அங்கு நடக்கும் எந்தவொரு செயலும் தப்பாது. டிரைவர்களைக் கண்கானிக்கும் வேலையில் காசிம் பாய் இருக்கிறார். காசிம் பாய் லூர்து செய்ய வேண்டிய வேலைகளை விளக்கிச் சொல்கிறார். மென்பொருள் பொறியாளர்களை பணிக்கு அழைத்து வருவதும், பணி முடிந்ததும் வீட்டுக்கு விட்டுவிட்டு வருவதும் அவனின் வேலை. பழநி சொல்லும் நிறுவனத்தின் ரகசியங்களைக் கேட்டு லூர்து அதிர்ச்சி அடைகிறான். நிஜம் கற்பனையைவிட அதிசயமானது என்பதறிகிறான்.
சில்வர் சாஃப்ட் நிறுவனத்தில் பணியில் இருக்கும் கார்த்திக் – ப்ரணவ் உறவு அலாதியானது. இருவரும் நல்ல பொறியாளர்கள்தான். ஆனால் கார்த்திக் எட்டும் உயரத்தை ப்ரணவ் எட்ட முடியவில்லை. கார்த்திக் ஐடி நிறுவனங்களின் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவன். நண்பன் என்ற முறையில் ப்ரணவ்வுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குகிறான். கொடுத்த வேலையைக் கொடுத்த நேரத்தில் செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். அதீத ஆர்வம் காட்டுவதெல்லாம் வேண்டாத வேலை என்று அறிவுரை அளிக்கிறான். ப்ரணவ் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். இதனால் பாதிப்புக்குள்ளாவது அவன் மட்டுமல்ல. அவன் மனைவியும்தான். வீட்டுக்கே செல்லாமல் இரவு பகல் என்று உழைக்கிறான்.
ப்ரணவ்வின் இளம் மனைவி சுஜா பாவம்! காதலுக்காகவும் காமத்திற்காகவும் ஏங்குகிறாள். அவள் இன்ஃபோடெக் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். அவளுடன் பணியாற்றும் கௌசிக் என்பவன் அவளின் ஏக்கத்தைப் புரிந்துகொள்கிறான். மெல்ல மெல்ல அவளை நெருங்குகிறான். வெற்றி அடைகிறான். ப்ரணவ் கொடுக்கத் தவறிய இன்பத்தை கௌசிக்கிடம் பெறுகிறாள் சுஜா. ஆனால் கௌசிக் ஒரு கயவன். அவளின் நிர்வாணத்தைப் படம் எடுத்து அவளுக்கே அனுப்புகிறான். அந்தப் போனைக் கைப்பற்றி அவன் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு அவள் பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கிறது. கௌசிக் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த சுஜாவின் தோழி ரேஷ்மாவையும் காதலித்துக் கைவிடுகிறான்.
சில்வர்சாஃப்ட் நிறுவனம் ப்ரணவை வேலையிலிருந்து நீக்குகிறது. வேலை தேடி அலைகிறான். தோல்வி! தோல்வி! எங்கும் தோல்வி! ராஜீவ்காந்தி சாலையில் காரில் விரைந்து ஓட்டுகிறான். எங்கே போவதென்று தெரியாமல் சுற்றுகிறான். தொலைந்து போன காலமும், காரிகையும் திரும்பக் கிடைக்காது என்பது இயற்கை விதி. வேலையே கதி என்று கிடந்து காலத்தைத் தொலைத்தான். தன் காரிகையும் தொலைத்தான். சுஜாவின் மனதிலிருந்து ப்ரணவ் முற்றிலும் நீங்கிவிடுகிறான். கௌசிக் செய்த வஞ்சகச் செயலுக்குப் பின்னரும் அவள் திருந்தவில்லை. மனம் அலை பாய்கிறது. காமம் கொழுந்துவிட்டு எரிகிறது.
ஒரு மாலைப்பொழுது வீடு திரும்பும் ப்ரணவ் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான். திறந்திருக்கும் ஜன்னலில் அவன் காணும் காட்சி நெஞ்சைப் பதறச் செய்கிறது. அவன் அன்பு மனைவி சுஜா யாருடனோ சல்லாபம் செய்கிறாள். மனமொடிந்த ப்ரணவ் வெறிபிடித்து அலைகிறான். சில்வர்சாஃப்ட் அலுவலகம் வாயில்வரை வந்து மீண்டும் திரும்புகிறான். அவனின் கிறுக்குத்தனமான நடவடிக்கைகளை உற்று நோக்கும் அன்னம் ‘’என்னாயிற்று இவனுக்கு!’’ என்று பதறுகிறார். ராஜீவ்காந்தி சாலையில் எங்கு செல்கிறோம் என்ற நினைவின்றி காரை விரைவாக ஓட்டிச் சென்று பல வண்டிகளின் மீதும் மோதுகிறான். காரில் இருந்த ‘’ஐ லவ் யு சுஜா’’ என்று ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரைக் கிழித்து எறிகிறான். திரும்பவும் அலுவலகம் வருகிறான். திருமணமான புதிதில் அவனும் சுஜாவும் எடுத்திருந்த போட்டோ அவன் டெஸ்கில் ஒட்டப்பட்டிருக்கிறது. அதையும் கிழித்து எறிகிறான். சில்வர்சாஃப்ட் நிறுவனத்தின் பத்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்கிறான். ஏதோ ஒரு குரல் கேட்கிறது. அவனை கீழே குதிக்கச் சொல்கிறது. அது கடவுளின் குரல் என்று நினைக்கிறான். அடுத்த கணம் குதித்துவிடுகிறான். மரணத்துக்குள் குதித்துவிடுகிறான்.
நகர வாழ்வு சிலருக்கு நரக வாழ்வாக அமைந்துவிடுகிறது. மன அமைதி – மனப் பிறழ்வு இரண்டுக்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது மெல்லிய நூலிழையாகும். அது எந்த நிமிடமும் அறுந்து விழலாம். மனிதனுக்கு எப்போது மனப் பிறழ்வு நடக்கும் என்பது யார் அறிவார்? நகரம் முழுவதும் இப்படியான மனப் பிறழ்வின் விளிம்பில் இருக்கும் மனிதர்கள் அதிகம் நடமாடுகிறார்கள் என்று அன்னம் நினைக்கிறார். நாவலில் அன்னம் கிரேக்க செவ்வியல் நாடகங்களில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து வர்ணனை செய்யும் Chorus போன்றவர். அன்னத்தால் நிகழ்வுகளைப் பார்த்து மௌன சாட்சியாக நிற்க மட்டுமே முடியும். குறுக்கீடு செய்ய முடியாது. வினையாற்றிட முடியாது.
நாவலில் நிறையக் கதைமாந்தர்கள் ராஜீவ்காந்தி சாலையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்துபோகிறார்கள். அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து முடிக்கிறார்கள். சௌம்யா மென்பொருள் பொறியாளர்களில் முற்றிலும் வேறுபட்டவராகப் பார்க்கிறோம். சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கிறார். லூர்து காரில் கூட்டிச் செல்லும் சில்வர்சாஃப்ட் ஊழியர்களின் உள்ளங்களை அளந்து பார்க்கிறான். சொம்யாவின் விசாலமான மனதைப் புரிந்து அவளிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளும் ஏற்றுக்கொள்கிறாள்.
ராஜீவ்காந்தி சாலையில் அமோகமாக நடக்கும் மற்றுமொரு தொழில் ரியல் எஸ்டேட். இத்தொழிலில் சண்முகசுந்தரம் கைதேர்ந்தவராகத் திகழ்கிறார். செம்மஞ்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிட திட்டமிடுகிறார். அரசு அதிகாரிகள் அவர் கொடுக்கும் லஞ்சத்துக்கு அடிபணிகிறார்கள். அனைத்து விதிகளையும் வளைத்து வெற்றி அடைகிறார். சூசைக்கு இருந்த தும்மாந்துண்டு நிலத்துக்கு பல லட்சங்கள் கிடைக்கிறது. நண்பர்கள் சூசையும், லூர்தும் இணைந்து ஸ்டார்ட்டப் தொழில் தொடங்குகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் அவர்களின் டாக்சிகள் பறக்கின்றன.
அன்னம் – தங்கவேல் செட்டியார் இடையே நிலவிடும் பாசமிகு உறவு நாவலுக்கு மெருகூட்டுகிறது. தங்கவேல் செட்டியார் ஒரு விபத்தில் இறக்கிறார். உயிலில் தான் நடத்திவந்த கடையை அன்னத்திக்ற்கு எழுதிவைக்கிறார். செட்டியாரின் நண்பர் பஷீர் வந்து உயிலைக் கொடுக்கிறார். பெட்டிக் கடை வைத்திருக்கும் அன்னத்துக்கு இக்கடையை நடத்தத் தெரியாது என்பதால் பஷீரிடமே அதன் பொறுப்பைக் கொடுத்து அவர் கொடுக்கும் வாடகையை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி பெற்றுக்கொள்கிறார். ராஜீவ்காந்தி சாலையில் மனிதம் முற்றிலும் மரணித்துவிடவில்லை என்பதன் அடையாளமாக சௌம்யா, லூர்து, சூசை, பஷீர், அன்னம், தங்கவேல் செட்டியார் போன்ற மனிதர்களும் நடமாடுகிறார்கள். இவ்வுலகம் இது போன்ற மனிதர்கள் இன்றும் இருப்பதாலேயே வாழ்வதற்கு இனியதாக உளது. இதனையே சங்கப் பாடலில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி,
’’உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியரும் உண்டலுமிலரே முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்
அயர்விலர் அன்ன மாட்சி அனையாரகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்கென முயலுந ருண்மையானே”.
என்று எழுதியுள்ளார்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ‘ராஜீவ்காந்தி சாலை’ நாவல் |
| ஆசிரியர்: | விநாயக முருகன் |
| வெளியீடு: |
உயிர்மை பதிப்பகம்
|
| விலை: | ₹.320 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 பெ.விஜயகுமார் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
