(தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து செய்திகள் வெளிவரத்துவங்கியவுடனேயே, தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஷபருல் இஸ்லாம் கான், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பெரிய அளவில் போலீஸ் பட்டாளம் அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சம்பவங்கள் தொடர்பாக ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ (‘action taken report’) என்று அறிக்கையும் வடகிழக்கு காவல் துணை ஆணையரிடமிருந்து கோரினார். சம்பவம் நடந்த ஒரு வாரம் கழித்து, 47 உயிர்கள் பலியாகியிருந்த நிலையில், சம்பவ இடங்களுக்குச் சென்று ஸ்தாபனரீதியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை வெறியாட்டங்களில் பலியானவர்களிடம் பேசினார், சேதங்களை மதிப்பிட்டார்.
ஒரு நாள் முழுவதும் அவ்வாறு சுற்றிப்பார்த்துவிட்டு, ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “தில்லியின் வட கிழக்குப் பகுதியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் ஒருதலைப்பட்சமானவை, மிகவும் நன்கு திட்டமிடப்பட்டவை. முஸ்லீம்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளூர் ஆட்களின் ஆதரவுடன் மிகப்பெரிய அளவில் நாசம் விளைவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்திடாமல் அவர்களால் மீண்டும் தங்கள் வாழ்வாதாரங்களைக் கட்டி எழுப்ப முடியாது. இதற்காக தில்லி அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.” என்று கூறினார்.
அவர், ஃப்ரண்டலைன் இதழுக்கு அளித்த நேர்காணல் வருமாறு)
கேள்வி: வட கிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். முஸ்லீம்களுக்கு எதிராக ஸ்தாபனரீதியாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று நினைக்கிறீர்களா, அல்லது சாதாரணமாக நடைபெற்ற மேலும் ஒரு வகுப்புக் கலவரம் என்று நினைக்கிறீர்களா?
ஷபருல் இஸ்லாம் கான்: இல்லை, இல்லை. இது ஒன்றும் சாதாரணமான வகுப்புக் கலவரம் கிடையாது. இது ஸ்தாபனரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு பக்க வன்முறையாகும். இதற்கு உள்ளூர் ஆட்கள் ஆதரவும் இருந்திருக்கிறது. உள்ளூர் ஆட்களின் ஆதரவின்றி, முஸ்லீம்களின் வீடுகள், கடைகள், பட்டறைகளை மட்டும் தனியேபிரித்துக் குறிப்பிட்டு தாக்குவது சாத்தியமில்லை. இத்தாக்குதல்களை நடத்த வெளியாட்கள் வந்தார்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்தே அவர்கள் இரண்டு பள்ளிகளில் தங்கியிருந்தார்கள். மேலும் கூட பல இடங்களில் தங்கி இருந்திருக்கலாம். சிவ விகாரில் ராஜதானி பப்ளிக் ஸ்கூலிலும், டிபிஆர் கான்வென்ட் ஸ்கூலிலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்கி இருந்தார்கள். அவர்கள் நல்ல கட்டுமஸ்தான நபர்கள்.
ஹெல்மெட்டுகள் அணிந்திருந்தார்கள், அவர்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டார்கள். அவர்கள், இரண்டு-மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை அணி அணியாக வெளியே சென்றார்கள். பின்னர் திரும்பி வந்தார்கள். அந்தக் குண்டர்கள், தனியார் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வமற்ற கமாண்டோ யூனிட்டுகளைச் சேர்ந்தவர்கள் போன்றே இருந்தார்கள். இந்த இரண்டு பள்ளிக்கூடங்களிலும் சுமார் இரண்டாயிரம் பேர் தங்கி இருந்தார்கள். மேலும் சில இடங்களிலும்கூட தங்கி இருக்கலாம். அவர்களைப் பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருந்ததற்குக் காரணம் அங்கே ஏராளமான அறைகள், கழிப்பிடங்கள் போன்று வசதிகள் இருந்தன. பள்ளிக்கூடங்களிலிருந்து இவர்கள் பல இடங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டார்கள். அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்களில் தங்கி இருந்தார்கள். பிப்ரவரி25 செவ்வாய் அன்று மாலை போலீசார் வரத்தொடங்கியபின்னர்தான் அவர்கள் அங்கிருந்து மறைந்து போனார்கள்.
கேள்வி: பாதிக்கப்பட்டவர்கள் எவரிடம் பேசினாலும், அது இந்துவாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீமாக இருந்தாலும் சரி, ஒரேவிதமாகப் புகார் கூறினார்கள். அதாவது தாங்கள் போலீசாரை அழைத்தபோது, அவர்கள் தங்கள் அழைப்பினை ஏற்கவே இல்லை என்றார்கள். போலீசார் வன்முறைக்கு எதிராகச் செயல்படுவதில் மிகவும் மந்தமாக இருந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஷபருல் இஸ்லாம் கான்: போலீசார் வேகமாக வந்து செயல்படவில்லை என்பது உண்மைதான். பிப்ரவரி 24 அன்று வன்முறையாளர்கள் மிகவும் வெறித்தனமாக செயல்பட்ட இரண்டாவது நாளாகும். அன்றாவது போலீசார் வந்திருக்க வேண்டும். பிப்ரவரி 25 மாலையிலிருந்துதான் போலீசார் செயல்படத் தொடங்கினார்கள். அதற்குள்ளாகவே ஏராளமான பாதிப்புகள், உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்டுவிட்டன.
கேள்வி: பிப்ரவரி 24, 25 தேதிகளில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள், குஜராத்தில் நடந்த வன்முறை வெறியாட்டங்களைப் பிரதிபலிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஏனெனில், அங்கேயும் 48 மணி நேரத்திற்கு அரசாங்கம் செயல்படாமல் இருந்தது.
ஷபருல் இஸ்லாம் கான்: இது குஜராத் மாடல் என்று சொல்வது சிரமம். ஆனாலும் அங்கே நடந்ததைப்போன்றே சில இங்கேயும் நடந்திருக்கிறது.
கேள்வி: குண்டர்கள் எட்டு அல்லது பத்து மசூதிகளையும் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறே,…!
ஷபருல் இஸ்லாம் கான்: எட்டு அல்லது பத்து மசூதிகளா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், குறைந்தபட்சம் மூன்று மசூதிகள் மிகவும் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். காஜூரி காஸில் பாத்திமா மசூதி, சிவ விகாரில் ஆலியா, மற்றும் ஒரு மசூதி. உண்மையில் அவை மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் அதிகம் சேதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அங்கேயெல்லாம் செல்வதற்கு எங்களுக்கு நேரம் இல்லை.
கேள்வி: நீங்கள் அசோக் நகருக்குப் போனீர்களா? அங்கேதான் குண்டர்கள் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு, முஸ்லீம்களின் வீடுகளைத் தனிமைப்படுத்தியும், இரண்டு மசூதிகளையும் தாக்கியதாகக் கேள்விப்பட்டதால், இதனைக் கேட்கிறேன்.
ஷபருல் இஸ்லாம் கான்: இல்லை. நாங்கள் அசோக் நகருக்குப் போகவில்லை. நாங்கள் சிவ விகாரில் ஆலியா மசூதிக்குப் போனோம். மசூதி தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. மசூதியின் தரை குப்பைகளால் மறைக்கப்பட்டிருந்தது. தரையில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களும் கிடந்ததைப் பார்த்தோம். அநேகமாக அவை வெடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் கூறியது போல் வன்முறை நடைபெற்ற விதம் ஒரேமாதிரியாகத்தான் அனைத்து இடங்களிலும் இருந்தது. மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 30 சதவீதமாக இருந்த இடங்களில் எல்லாம் இதுபோன்று வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அங்கெல்லாம் முஸ்லீம்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். உதாரணமாக, பஜன்புராவில், ஒரு டிராவல் ஏஜன்சி, ஒரு மோட்டார்சைக்கிள் ஷோ ரூம் போன்று முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன, பின்னர் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் இந்துக்களுக்குச் சொந்தமான கடைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. காஜூரி காஸில் இ-பிளாக்கில், முஸ்லீம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். அதேபோன்று, காஜூரி காஸ் எக்ஸ்டென்ஷனில், ஜமீல் அகமது என்பவர் ஒரு கார் ரிப்பேர் கேரேஜ் வைத்திருந்தார்.
இங்கே வைக்கப்பட்டிருந்த ஏழு கார்கள், ஆறு ஆட்டோ ரிக்ஷாக்கள், ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன. அவர் எங்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு, இந்துக்கள் தாங்கள் கொண்டுவந்து ரிப்பேருக்காக நிறுத்தி வைத்திருந்த கார்களை எடுத்துச் சென்றுவிட்டார்களாம். அதன்பின்னர்தான் காரேஸ் முற்றிலுமாக தீ வைத்துக்கொளுத்தப்பட்டதாகவும், கட்டிடத்தில் இருந்த அனைத்தும் சூறையாடப்பட்டதாகவும், பின்னர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் கூறினார். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் அவர்களைக் குறிவைத்திட வில்லை.
கேள்வி: முஸ்லீம்கள் அதிகமாக உள்ள இடங்களில் இந்துக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்களா?
ஷபருல் இஸ்லாம் கான்: நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் சில இடங்களில் இந்துக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்துக்கள் குறிவைக்கப்படவில்லை.
கேள்வி: எந்தவிதத்தில், எங்கே மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஷபருல் இஸ்லாம் கான்: கபில் மிஷ்ரா, பிப்ரவரி 23 அன்று காவல்துறையினருக்குக் காலக்கெடு விதித்து, தீயைக் கக்கும் வெறுப்புப் பேச்சை உமிழ்ந்தபின்னர்தான் வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கின என நான் நினைக்கிறேன். அதன்பின்னர்தான் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்தன என்பது தெளிவாகும். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தால், நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். கபில் மிஷ்ரா அவ்வாறு பேசிய பிப்ரவரி 23 அன்றிரவு அதனை அவர்கள் செய்யவில்லை. பிப்ரவரி 24 அன்றும் அதனை அவர்கள் செய்யவில்லை. பிப்ரவரி 25 அன்றிரவுதான் அதனை அவர்கள் செய்தார்கள். இவ்வாறு இரு நாட்கள் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோதிலும், கபில் மிஷ்ரா கைது செய்யப்படவில்லை.
கேள்வி: நீங்கள் கபில் மிஷ்ரா குறித்துக் கூறுவதன் மூலம் அவர் இரண்டு நாட்களாகக் கைது செய்யப்படாததற்காக, மத்திய அரசைக் குறிவைத்துக் குறை கூறுகிறீர்கள். ஏனெனில் காவல்துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது. ஆனால், பிரச்சனையைச் சமாளிப்பதில் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கமும் தவறு இழைத்துவிட்டதாக, நீங்கள் நினைக்கிறீர்களா?
ஷபருல் இஸ்லாம் கான்: கபில் மிஷ்ரா இன்னமும் கைது செய்யப்படவில்லை. ஆம் ஆத்மி அரசாங்கமும், தாங்களும் ஓர் அரசாங்கம்தான் என்று உணர்ந்திருக்க வேண்டும். அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் காவல்துறை இல்லாமல் இருக்கலாம். உண்மைதான். எனினும், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அவர்கள் அந்த இடங்களுக்குச் செல்லும்போது, ஒரு காவல் படையும் பாதுகாப்புக்காக அவர்களுடன் செல்லும். “நான் அந்தப் பகுதிகளுக்குச் செல்கிறேன்,” என்று முதலமைச்சர் அறிவித்திருந்தாரானால், அங்கே பெரிய அளவில் காவல்துறையினர் பட்டாளமும் சென்றிருந்திருக்கும். ஆனால் இதனை அவர்கள் செய்யவில்லை. இதற்குப் பதிலாக முதலமைச்சர் ராஜ் காட்டிற்குச் சென்றார். இது வெறும் கண்துடைப்பு மட்டுமே.
கேள்வி: வன்முறை வெறியாட்டங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறிர்கள், அது போதுமானதா?
ஷபருல் இஸ்லாம் கான்: இது மிகவும் அற்பமாகும். மிக, மிக அற்பமாகும். குறைந்தபட்சம் இது இரட்டிப்பாக்கப்பட வேண்டும். சேதமாகியுள்ளவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாதிப்பு குறித்தும் மதிப்பிடப்பட வேண்டும். பெயரளவில் இழப்பீடு வழங்கக் கூடாது.
(நன்றி: ஃப்ரண்ட்லைன்)
தில்லி வன்முறை வெறியாட்டங்கள்:திட்டமிட்ட தாக்குதலேயாகும்
ஷபருல் இஸ்லாம் கான், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர். தில்லி
(தமிழில்: ச.வீரமணி)