ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில் அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ இதழில், இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம் இடஒதுக்கீடு தொடர்பாகவும் சமூகநீதி தொடர்பாகவும் இதுகாறும் மூடிமறைத்து வைத்திருந்த விஷயம் வெளிவந்துள்ளது. எதார்த்தத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கமானது இந்திய சமூகத்தில், சமூக ரீதியாக மிகவும் அடித்தட்டில் இருக்கிற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிரான ஒன்றேயாகும்.
ஆனால் இதனை வெளிப்படையாக அறிவிப்பது அவ்வளவு எளிதல்ல. குஜராத் மாநிலத்தில் மிகவும் வலுவாக ஆதிக்க இனமாக இருக்கக்கூடிய பட்டேல் இனத்திற்கு இடஒதுக்கீடு வேண்டும் அல்லது இடஒதுக்கீட்டுக்கொள்கையே ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி கிளர்ச்சி நடத்தியபின்னர்தான், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் தன்னுடைய அமைப்பின் உண்மையான கொள்கையை வெளிப்படுத்தக் கூடிய துணிச்சலைப் பெற்றார்.
இந்திய சமூகத்தில் பலநூறு ஆண்டு காலமாக இருந்துவரும் சாதிய அமைப்புமுறையின்கீழ் மனிதப்பிறவியாகவே கருதாது மிகவும்அடித்தட்டில் வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினருக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்துடன்தான் இடஒதுக்கீட்டுக் கொள்கை உருவானது. இன்றைக்கும் கூட, நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளுக்கு எதிராக சமூகப்பாகுபாடு பல்வேறு வடிவங்களில் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு இருந்தும்கூட, உயர்சாதியினர் உயர்பதவிகளில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அதே சமயத்தில், தலித்துகள் மிகவும் அற்பமான வேலைகள் செய்யவே கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தலித்துகள். கிராமப்புறங்களில் உயர்சாதியினரின் வருமானத்தைவிட 40 சதவீதத்திற்கும் குறைவாகவே தலித்துகள் வருமானம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுவே நகர்ப்புறங்களில் இவ்வாறான இடைவெளி 60 சதவீதம் என்னும் அதிர்ச்சி செய்தியையும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தலித் குடும்பங்கள் கொலை செய்யப்படுதல், தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுதல், தலித்துகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் சாதி அமைப்பின் இத்தகைய கொடுமைகள் தொடர வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விருப்பம். ஏனெனில் இந்து சமூகத்தை ஒன்றுபடுத்துவதற்கான சக்தி சாதிய அமைப்பு `சுத்தமான’ வடிவத்தில் இருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவம், `இந்துத்துவா’வை அடிப்படையாகக் கொண்டது. `இந்துத்துவா’ என்பது நால்வர்ண சாதிய அமைப்பிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆர்எஸ்எஸ் சாதிய அமைப்பை முழுமையாக நம்புகிறது. அதன்கொள்கையின்படி, ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிவழக்கப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளை எவரும் குறைகூறாத அளவிற்குச் செவ்வனே ஆற்றிவரவேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருக்கு தலித்துகள் மற்றும் பழங்குடியினர்மீது எவ்விதமான பாசமோ நேசமோ கிடையாது.
இந்து சாஸ்திரங்கள் சொல்லியுள்ளபடி தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட இனத்தினரும் தங்கள் கடமைகளைச்செய்து வர வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. நரேந்திரமோடி கூட, மலத்தைத் தலையில் தூக்கிச் செல்லும் தலித்துகள்கூட தங்கள் வேலையைச் செய்வதில் உள்ளார்ந்த முறையில் உற்சாகத்தை உணர்வதாகக் (feel spiritual pleasure) கூறியிருக்கிறார். அவருடைய அமைச்சரவை சகாவான விகே சிங், இரண்டு தலித் சிறுவர்கள் சன்பெத் என்னுமிடத்தில் மிகவும் கொடூரமான முறையில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட நிகழ்வை, நாயை கல்லால் அடித்துக் கொல்வது போன்றதே என்று குறிப்பிட்டார்.
எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கம் தலித்துகள் குறித்து உண்மையிலேயே என்ன கருதுகிறது என்பதையும், இதற்கான ஆதாரங்களை அவர்கள் எதிலிருந்து பெறுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதனைப் புரிந்துகொள்வதற்கு, நால்வர்ண/சாதிய அமைப்பின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் வரலாற்றை மாற்றி எழுதிட தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிற சூழ்நிலையிலும், சாதிய அமைப்பு முறையே மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று தான் என்றும், அதற்கு முன்னர் அனைவரும் நல்லிணக்கத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்ந்து வந்ததாகவும் கூறிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையிலும், இது மிகவும் அவசியமான ஒன்றாகும். புராதன இந்து சாஸ்திரங்கள் அனைத்தும் வர்ணாச்ரம/சாதியஅமைப்பு முறையை போற்றிப் புகழ்ந்துள்ளதுடன், `கீழ்’ சாதியினரை’ எந்த அளவிற்கு மனிதாபிமானமற்றமுறையில் தாழ்ந்த நிலையில் வைத்திட வேண்டும் என்றும் தெளிவாக வரையறுத்திருக்கின்றன.
வர்ண/சாதி அமைப்புமுறையும், தர்ம சாஸ்திரங்களும்
நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன், “வாழ்க்கை குறித்து இந்துக்களின் பார்வை”’’ (“The Hindu view of Life”) என்னும் தன்னுடைய நூலில், இந்து சமூகம் குறித்து கவர்ச்சிகரமான சித்திரத்தை முன்வைத்துள்ளார். அது நான்கு வர்ணங்களால் ஆனது. உச்சத்தில் பிராமணர்கள் இருக்கிறார்கள், அடிமட்டத்தில் சூத்திரர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த சித்திரம். நான்கு வர்ணங்களுக்கும் வெவ்வேறான கடமைகள் (தர்மங்கள்) அல்லது ஒழுக்க விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ராதாகிருஷ்ணன் இதை மிகவும் சமச்சீரான அமைப்புமுறை என்று சித்தரிக்கிறார். ஆனால், இவ்வாறு கவர்ச்சிகரமாக முன்வைக்கப்பட்டுள்ள சித்திரம், வரலாற்றில் மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற அமைப்பு முறையாகவே இருந்து வருகிறது.
சதுர்வர்ணம் என்று சொல்லப்படுகின்ற இந்த நான்கு வர்ணங்களும் அவற்றிற்கு இடப்பட்டுள்ள கட்டளைகளும், இவ்வாறான தர்மத்தை உருவாக்கியவர்களின் கற்பனை மட்டுமே. நடைமுறையில் எங்குமே இது நடைபெறவில்லை. எதார்த்தத்தில் சாதிய அமைப்புமுறை பிறப்பிலேயே துவங்கிவிடுகிறது. சாதிய அமைப்புமுறை ஜதி வியவஸ்தா (Jati Vyavastha) என்று அழைக்கப்படுகிறது. ஜதி என்றால் பிறப்பு. எனவே சாதிய அமைப்பு முறை என்பது பிறப்பின் அடிப்படையில் உருவான ஓர் அமைப்பு.
மனிதகுல வரலாற்றில் இத்தகைய சாதிய அமைப்புமுறை இந்து சமூகத்தில்தான் காணப் படுகிறது. சாதிய அமைப்புமுறையின் மற்றொரு முக்கிய அம்சம், இவை உயர்ந்த மற்றும் தாழ்ந்த சாதிகளுடன் மரபுவழியைக் கொண்டிருப்பதுமாகும். இத்தகைய மரபுவழிக் கருத்தோட்டத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பதன் காரணமாகத்தான் ஒரேவிதமான சாதிகளுக்குள்ளேயே உயர்சாதி, தாழ்ந்த சாதி என பல அடுக்குகள் (sub-castes) இருப்பதையும் ஒரு சாதியைச் சேர்ந்தவர் மற்ற சாதியைச் சேர்ந்தவர்களை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதுவதையும் காணலாம்.
இவ்வாறான நான்கு வர்ணங்கள் இல்லாது, இவற்றைத்தாண்டியும் மிகப்பெரிய அளவிலான மக்கள் இருந்து வருகிறார்கள். அவர்கள் இந்த நான்கு வர்ணங்களுக்குள் வரமாட்டார்கள். அவர்களை தர்மத்தை உருவாக்கியர்களோ அல்லது இந்து தர்மசாஸ்திரங்களோ இந்த சமூக அமைப்பின் ஒரு பகுதியாகவே கருதுவதில்லை. அவர்களை `அன்ட்யஜா’ (Antyaja) அல்லது `கடைசியாகப் பிறந்தவர்’ (last birth) எனக் கூறுகிறார்கள்.
தலித்துகளும் பழங்குடியினரும் `அன்ட்யஜா’-க்களாம், சாதி அமைப்புக்குள் வராதவர்களாம், எனவே இவர்களை இந்து சமூகத்தின் கீழே உறுப்பினர்களாக சேர்க்க முடியாதாம். இந்து மரபுவழியிலான நான்கு வர்ண அமைப்பில், மிகவும் இழிவாகவும், சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்பட்டு வரும் தலித்துகள் பொருந்த மாட்டார்களாம். ஆனாலும், இப்போதும் சில தலித் சாதியினர் தங்களை இந்துக்களாகப் பாவித்துக் கொள்கிறார்கள், இந்து சமூகமும் அதற்காக வலியுறுத்து கிறது.
நான்கு வர்ண அமைப்பு ரிக் வேதத்தின் `புரூஷ் சுக்தா’(Purush Sukta)-விலிருந்து வளர்த்து விரிவாக்கப்பட்டது. ரிக் வேதம், நான்கு வேதங்களிலும் மிகவும் பழைமையானது, சுமார் கி.மு.1500 ஆம் ஆண்டில் உருவானது. இது முழுமையாக உருவாக்கப்பட பலநூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. ரிக் வேதத்தின் 10ஆவது மண்டல் என்பதுதான் கடைசி. இது கி.மு.800இல் உருவாக்கப் பட்டதாக கருதப்படுகிறது. இந்த 10ஆவது மண்டலில்தான் – ஒட்டுமொத்த ரிக் வேதத்தில் இதில் மட்டும் ஒரேயொரு இடத்தில் – நான்கு வர்ணங்கள் குறித்து குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ரிக் வேதத்தில் உள்ள `புருஷ் சுக்தா’ பாடலில்தான் தலையிலிருந்து பிராமணர்களும், கைகளிலிருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், கால்களிலிருந்து சூத்திரர்களும் உருவானார்கள் என்று காணப்படுகிறது.
ரிக் வேதத்தில் இந்த பத்தாவது மண்டல், ஆரியர்கள் கங்கைப் பள்ளத்தாக்கில் குடியேறிய சமயத்தில் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில்தான் அவர்கள் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டார்கள். விவசாயம் செய்வதை பிரதானத் தொழிலாக மாற்றிக்கொண்டார்கள். நாடோடி வாழ்க்கையின்போது பிரதானமாக இருந்த கால்நடைகள் வளர்ப்பு இரண்டாம்பட்சமானது. நிரந்தரமாக ஓரிடத்திலேயே தங்கியதும், இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தியதும் அபரிமிதமான உற்பத்தியைக் கொண்டுவந்து உபரியை ஏற்படுத்தியது.
ஆரிய சமூகமும் பல சாதிய அடுக்குகளாக மாறியது. விவசாயப் பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்தகைய சாதிய அடுக்குகள் நியாயப்படுத்தப்பட்டன. புருஷ் சுக்தாவிலிருந்து சாதிய அமைப்பு அல்லது வர்ண அமைப்பு தோன்றியது என்று கூறுவது, குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவது போன்றதேயாகும். இது அறிவியலுக்குப் புறம்பானதாகும். இவ்வாறு புருஷ் சுக்தா மூலம் சமூகத்தில் பிரிவினைகள் உருவானது தெய்வீக அமைப்புமுறை என்று நியாயப் படுத்தப்பட்டது.
அரசு அதிகாரம், சமூகம் நீடித்து நிலைத்திருப்பதற்கு அவசியமான பொருளியல் உற்பத்தியை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சுரண்டும் கூட்டத்திற்கு அவர்களின் கைகளில் அதிகபட்சம் உபரியை வைத்துக்கொள்வதற்கும், உற்பத்தி செய்பவர்கள் அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவைப்படும் அளவிற்கு மிகவும் குறைந்தபட்ச அளவில் மட்டுமே அவர்களுக்கு அளித்திடுவதற்கும் வகை செய்கிறது. நால் வர்ணங்களும்கூட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன.
துவைஜாஸ் (Dvijas), அதாவது இருமுறை பிறந்தவர்கள். முதல் முறை தன் தாயின் கருப்பையிலிருந்தும், இரண்டாவது தடவை சாஸ்திரங்கள், சடங்குகள் மூலம் தீக்ஷ்சை பெற்றும் பிறப்பதாகும். இவ்வாறு இருமுறை பிறப்பவர்கள் சிறுபான்மையினரே. மீதம் உள்ள பெரும்பான்மையானவர்கள் சூத்திரர்கள். சூத்திரர்கள் உற்பத்தியில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் அதே சமயத்தில், துவைஜர்கள் (அதாவது இருமுறை பிறந்தவர்கள்) ஒட்டுண்ணிகளாக, பூசை செய்தல், ஆளுதல் அல்லது வணிகத்தில் ஈடுபடுதல், என்று நால்வர்ணத்தில் தங்கள் வர்ணத்திற்கு இடப்பட்டுள்ள பணியின்படி செயல்படுவார்கள். இவர்கள் அனைவருமே சூத்திரர்களின் உழைப்பில் வாழ்பவர்கள்தான்.
உழைக்கும் மக்களைச் சுரண்டிடும் இத்தகைய நால்வர்ண சமூகம் பிரச்சனை எதுவுமின்றி சுமுகமாக செயல்பட வேண்டுமென்பதற்காக, சுரண்டப்படுபவர்களை – அதாவது சூத்திரர்களை – மூளைச் சலவை செய்ய வேண்டியது அவசியம். அதற்குத்தான் புருஷ் சுக்தா பயன்படுத்தப்படடு இந்த நால்வர்ண அமைப்பு தெய்வீகமானது என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இது கூறும் தர்ம சாஸ்திரங்கள் (இவைதான் இந்த சமூகத்தின் சட்ட நூல்களாகும்) பிராமணன் பிரம்மாவின் வாயிலிருந்தும், சத்திரியன் மார்பிலிருந்தும், வைசியன் தொடையிலிருந்தும், சூத்திரன் காலிலிருந்தும் பிறந்தார்கள் என்கிறது. சூத்திரர்கள் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்திருப்பதால், மற்ற மூவர்ணத்தாரின் – அதாவது உயர்சாதிக் காரர்களின் – சுமைகளைத் தூக்கிச் சுமக்க வேண்டியது அவர்களின் தெய்வீகக் கடமை என்றும் அவை வரையறுக்கின்றன.
இவ்வாறு சமூகத்தில் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் பல்வேறு `ஸ்மிருதி’களில் விளக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரபல்யமானது மனுஸ்மிருதியாகும். இது, சூத்திரர்களுக்குப் பல மனிதாபிமானமற்ற சட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறது. உதாரணமாக, அவர்கள் சொத்து வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களே, அவர்களுக்கு மேல் உள்ள உயர்ந்த இனத்தவரான மற்ற மூவர்ணத்தாரின் சொத்துதான். ஒரு சூத்திரன், பிராமணன் ஒருவனைத் திட்டிவிட்டால், சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்கிறது. ஆனால் அதே சமயத்தில் ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைத் திட்டிவிட்டால், பெயரளவில் ஒரு தண்டனை அளிக்க வேண்டும் என்கிறது.
ஒரு சூத்திரன் பிராமணன் ஒருவனைஅடித்துவிட்டால், அந்த சூத்திரனின் கைகளை வெட்ட வேண்டும் என்றும், சூத்திரன் வேதம் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்றும், வேதத்தைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் கூறுகிறது. ஏதேனும் தகராறு நடப்பதை சூத்திரன் பார்த்துவிட்டான் எனில், அவன் நீதிமன்றத்தில் அதுதொடர்பாகக் கூறும் சாட்சியத்தை எப்போது தெரியுமா நம்பலாமாம். அவனுக்கு விஷம் கொடுத்து, அவன்குடித்து இறக்கவில்லை என்றாலோ அல்லது அவனைத் தீயிலிட்டு அவன் கருகவில்லை என்றாலோதான் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.
மனு(அ)தர்மத்தில் சூத்திரர்களுக்கு எதிராகக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள் என்ன தெரியுமா? (1) சூத்திரர்கள் புத்தாடைகள் அணியக்கூடாது. மேல்சாதியினர் உபயோகப்படுத்திவிட்டு, தூக்கி எறியக்கூடிய கிழிந்த துணிகளைத்தான் உடுத்த வேண்டும். (2) அதேபோன்று மேல்சாதியினர் சாப்பிட்டுவிட்டு மீதம் வைப்பவையை மட்டுமே உண்ண வேண்டும். (3) சூத்திரர்கள் தங்கள் பெயர்களைக்கூட அசிங்கமானவகையிலேதான் வைத்துக் கொள்ள வேண்டுமாம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தலித்துகளின் பெயர்கள் அமாவாசை, பிச்சை என்று மிகவும் கேவலமாக இருந்ததை அறிவோம். அவர்கள் தங்களுக்கு பெயர்களை நல்லவிதமாக வைத்துக் கொள்ளக்கூட உரிமை கிடையாது.
மனு(அ)தர்மம் மட்டுமல்ல, மற்ற தர்மசாஸ்திரங்களும் தலித்துகளை மிகவும் கொடூரமான முறையிலேயே பாவிக்கின்றன. பெண்கள், சூத்திரர்கள், நாய்கள், காக்கைகள் ஆகியன கெட்ட நடத்தை (vice), வஞ்சகம் (falsehood) மற்றும் இருட்டை (darkness) பாரம்பர்யமாகப் பெற்றிருக்கிறார்கள் என்கிறது. அட்ரி (சட்டத்தைக் கொடுப்பவர்) என்கிற தர்மசாஸ்திரம் பெண்களும், சூத்திரர்களும் பாடல்களைப் பாடுவதோ, தியானம் செய்வதோ, பிச்சை எடுப்பதோ, தீர்த்தயாத்திரை செல்லுவதோ, கடவுளைத் தொழுவதோ கூடாது என்கிறது.
அனைத்து தர்மசாஸ்திரங்களுமே தலித்துகளுக்கு கல்வியை மறுக்கின்றன, அவர்களை மிகக் கேவலமாக பாவிக்கின்றன. இவ்வாறு பலநூறு ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இவ்வாறான இழிசெயல்கள் உயர்சாதியினரின் மன திருப்திக்காக மட்டுமல்ல, தற்போதைய சுரண்டல் அமைப்பின் வர்க்க மற்றும் சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இவற்றை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு மனு(அ)தர்மமும், தர்மசாஸ்திரங்களும், இதிகாசங்களும் அநீதியான இந்து சமூகத்தின் தூண்களாக விளங்குகின்றன. அதன்மூலம் சாதிய அமைப்புமுறையைக் கட்டிக் காத்து வருகின்றன. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு எவரொருவரும் இந்துயிசத்தையோ(ஏன், இந்துத்துவாவையோகூட) கற்பனை செய்ய முடியாது.
ஆர்எஸ்எஸ் இயக்கமும் சாதிய அமைப்புமுறையும்
ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் இந்துத்துவா ஆகிய இரண்டின் தத்துவார்த்த சிந்தனையும் மேற்படி புராதன சாஸ்திரங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் எம்எஸ் கோல்வால்கர் தன்னுடைய `சிந்தனைத் துளிகள்’ (‘Bunch of Thoughts’)என்னும் நூலில் `தர்மா’ தான் நம் வாழ்க்கையின் வழிகாட்டிஎன்கிறார். `தர்மா’ என்று சொல்வதன் மூலம் வர்ணாச்சிரம நால்வர்ணத் தர்மத்தைத் தான் அவர் அர்த்தப்படுத்துகிறாரேயொழிய, மதத்தை அல்ல.
வர்ணாச்ரம தர்மத்தைப் போற்றிப் புகழும் கோல்வால்கர் தன்னுடைய `சிந்தனைத் துளிகள்’ நூலின் பாகம் 2, அத்தியாயம் 10-இல், `தேசமும் அதன் பிரச்சனைகளும்’என்ற தலைப்பின்கீழ், “எல்லாம்வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நால்வர்ண சமூகம் அனைவராலும் பூஜிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்,’’ என்று எழுதியிருக்கிறார். அதே அத்தியாயத்தில் சாதிய அமைப்புமுறை குறித்து அவர், “பழங்காலத்திலும் சாதிகள் இருந்திருக்கின்றன, நம் பிரகாசமான தேசிய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே அது தொடர்ந்திருக்கிறது. … அது சமூகத்தில் பல்வேறு பிரிவினரையும் இணைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது”என்கிறார்.
சாதிய அமைப்பைப் புகழ்ந்த கோல்வால்கர் மேலும், “சாதிய அமைப்புமுறை உண்மையில் நம் பலவீனத்திற்கு அடிப்படைக்காரணமாக இருக்குமானால், பின் நம் மக்கள் சாதிகளற்ற மக்களைவிட மிக எளிதாக அந்நியர் உட்புகுதலுக்குப் பலியாகி இருக்க வேண்டும்,’’ (“If the caste system had really been the root cause of our weakness, then our people should have succumbed to foreign invasion far more easily than those people who had no castes.”) என்று எழுதியுள்ளார்.
கோல்வால்கர் சாதி மற்றும் வகுப்புவாதம் தொடர்பாக எழுதியுள்ள எதனையும் ஆர்எஸ்எஸ்-ஆல் எந்தக்காலத்திலும் மறுக்கப்படவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்எஸ்எஸ் முழுமனதுடன் சாதிய அமைப்பு முறையை ஆதரிக்கிறது. இவ்வாறு இத்தகைய சாதியக் கட்டமைப்பின் கீழ் அனைவரும் ஒத்துப்போகவேண்டும் என்றுதான் அது கூறுகிறதேயொழிய, அனைவரும் சமம் என்று அது எப்போதுமே கூறியது இல்லை. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிய அடையாளங்களின்படிதான் வாழ வேண்டும் என்றும், அதனை அழித்திடாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும்தான் அது விரும்புகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2001இல் குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகராக பல ஆண்டுகள் கழித்தார். 2008இல் அவர் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்மீது செல்வாக்கு செலுத்தியுள்ள 16 மக்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். இதில் எம்எஸ் கோல்வால்கரை அவர் மிகவும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார். இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லைதான்.
ஆர்எஸ்எஸ் இயக்கமும் தலித்துகளும்
ஆர்எஸ்எஸ் இயக்கம், தலித்துகளைத் தீண்டத் தகாதவர்களாக வெளிப்படையாக நடத்திடவில்லை என்ற போதிலும், தலித்துகளின் நலன்களை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றம் எதையும் செய்வதற்கு — அது அரசமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, வேறு பல சட்டங்களாக இருந்தாலும் சரி அல்லது இடஒதுக்கீடாக இருந்தாலும் சரி — எதிர்த்து வருகிறது.
அரசியல்நிர்ணயசபை, அரசமைப்புச் சட்டத்தை இறுதிப்படுத்தியபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் 1949 நவம்பர் 30 தேதியிட்ட இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில், “புராதன பாரதத்தில் மிகவும் தன்னிகரற்று விளங்கிய அரசமைப்பு விதிகள் குறித்து இப்போது உருவாக்கப்பட்டிருக்கிற அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. மனு தர்மம் ஸ்பார்ட்டாவின் லிகர்கஸ் (Lycurgus of Sparta) அல்லது பெரிசியாவின் சாலன் (Solon of Persia) ஆகியோருக்கு வெகுகாலத்திற்கு முன்பே எழுதப்பட்டதாகும். இன்றளவும் மனுஸ்மிருதியில் காணப்படும் தர்மங்கள் உலகம் முழுதும் உற்சாகத்துடன் பாராட்டப்பட்டு வருகின்றன. மக்கள், அதில் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு, தம்மிச்சையாகவே கீழ்ப்படிந்து நடந்து வருகிறார்கள். ஆனால் நம் அரசமைப்பு மேதைகளோ அதில் ஒன்றுமே இல்லை என்று கருதி அதனை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்,’’ என்று புலம்பியுள்ளது.
1950 பிப்ரவரி 6 தேதியிட்ட ஆர்கனைசர் இதழில் ஓர்ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சங்கர் சுபா ஐயர், “மனு நம் இதயங்களில் ஆட்சி செய்கிறார்,’’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர், “டாக்டர் அம்பேத்கர் மனுவின் காலங்கள் முடிந்துவிட்டன என்று பம்பாயில் சமீபத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனினும், இன்றளவும் இந்துக்களின் நடைமுறை வாழ்க்கை மனுஸ்மிருதி மற்றும் இதர ஸ்மிருதிகளின் கொள்கைகள் மற்றும் கட்டளைகளின்படிதான் நடத்தப்பட்டு வருகின்றன. சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றாத இந்துக்கள் கூட, சில விஷயங்களில் ஸ்மிருதிகளில் உள்ள விதிகளைப் பின்பற்றி நடந்துகொண்டு வருகிறார்கள், அவற்றை முழுமையாகக் கைவிட முடியாத நிலையை அவர்கள் உணர்கிறார்கள்,” என்று எழுதியிருக்கிறார்.
கோல்வால்கர், தன்னுடைய `சிந்தனைத் துளிகள்’ நூலில், “நம்முடைய அரசமைப்புச் சட்டம் மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அரசமைப்புச் சட்டங்களிலிருந்து பல பிரிவுகளை எடுத்து கோர்க்கப்பட்டு கலவையாகவும், அவலட்சணமாகவும் இருக்கிறது. நமக்குச் சொந்தமானவை என்று கூறக்கூடிய எதுவும் இதில் இல்லை. நம் தேசத்தின் குறிக்கோள் என்ன என்பது குறித்தோ அதன் வழிகாட்டும் நெறிகள் குறித்தோ ஒரு வார்த்தையாவது அதில் இருக்கிறதா?”’ என்று கேட்டிருக்கிறார்.
மக்களிடையே சமத்துவமின்மையையும், மக்கள் திரளில் பெரும்பான்மையோரை மனிதர்களாகக் கருதாது, மாக்களாகக் கருதும் கொள்கைகளும் கொண்ட மனுஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்துள்ள இந்துத்துவாதான் நம் தேசத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும், சாதி, சமயம், பாலினம் மற்றும் மொழி ஆகிய வேற்றுமைகள் எதுவாக இருந்தாலும் சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்கிற தற்போதைய அரசமைப்புச் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தெளிவாகவே நினைக்கிறது.
கோவில்களுக்குள் தலித்துகள் நுழைவதற்காக நடைபெறும் கிளர்ச்சிகளை ஆர்எஸ்எஸ் எப்போதுமே ஆதரித்ததில்லை. சுதந்திரம் வாங்கி 68 ஆண்டுகள் கழிந்தபின்னர் இன்றைக்கும்கூட பல கோவில்களில் தலித்துகள் நுழைவதற்கு மறுக்கப்படுகின்றனர். அதே போன்று, புராதன இந்து பாரம்பர்யத்தின் அங்கமாக இருந்து, இன்றளவும் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கின்ற பல சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் வெளிப்படையாகக் கருத்துக்களைக் கூறுவதில்லை.
புதுதில்லியில் உள்ள வசந்த் குஞ்ச் என்னுமிடத்தில் 2001 பிப்ரவரி 1 அன்று வேதங்கள் ஆய்வு இன்ஸ்டிட்யூட் (Institute for Vedic Studies) ஒன்று அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. அதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முதுபெரும் தலைவரான எல்.கே. அத்வானி கலந்து கொண்டார். அந்த சமயத்தில் அங்கே குடியிருந்த பத்து தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தி விட்டார்கள். ஏனெனில், தலித்துகள் அங்கே இருந்தால் அந்தப் பகுதி தீட்டாகிவிடும் என்று அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்கள் நினைத்தார்கள். இதனை எல்.கே. அத்வானி உட்பட எந்த ஆர்எஸ்எஸ் நபரும் எதிர்த்திடவில்லை.
ஹரியானா மாவட்டத்தில் ஜாஜ்ஜர் மாவட்டத்தில் துலேனே காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் ஐந்து தலித்துகள் இறந்த பசுவின் தோலை விற்பதற்காக உரித்துக் கொண்டிருந்தார்கள். இதனைப் பார்த்த விசுவ இந்து பரிசத் மற்றும் சிவ சேனையைச் சேர்ந்தவர்கள் தலித்துகள் பசுவைக் கொன்றுவிட்டதாக வதந்தியைப் பரப்பினார்கள். இதனைத் தொடர்ந்து அந்த ஐந்து தலித்துகளும் கொல்லப்பட்டார்கள். மிகவும் கொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, விசுவ இந்து பரிசத் தலைவனான கிரிராஜ் கிஷோர் என்பவன் பசுவின் உயிர் மனிதர்களின் உயிரைவிட மிகவும் முக்கியமானது என்று கொக்கரித்தான்.
இந்த சம்பவம் தொடர்பாகவும் ஆர்எஸ்எஸ் ஒருவார்த்தைகூட இதுவரை கூறவில்லை. சமீபத்தில் கூட, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறு குழந்தைகள் உயர்சாதியினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளின் தாயாருக்கும் தந்தைக்கும் மிகவும் மோசமான முறையில் தீக்காயங்களும் ஏற்பட்டன. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நிகழ்வு குறித்தும் ஆர்எஸ்எஸ் இயக்கம் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியாகியதும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதிதான்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரைப் பொறுத்தவரை தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் சக்திபடைத்தவர்களாக மாறுவதை விரும்பவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, அத்வானி தலைமையிலான பாஜக, ராம ஜன்ம பூமி இயக்கத்தைத் தொடங்கி நாடு முழுதும் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் இட ஒதுக்கீட்டுக் கிளர்ச்சியைத் தொடங்கினார்கள். இவை அனைத்திற்குப் பின்னாலும் இந்துத்துவா சக்திகள் இருந்தன. மத்தியில் ஆட்சி செய்து வந்த வி.பி. சிங் அரசாங்கத்திற்கு பாஜக தான் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது.
சமீபத்தில், தில்லிக்கு மிக அருகே தாத்ரி என்னுமிடத்தில் ஒரு முஸ்லீம் அவருடைய வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று கூறப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறியிருக்கின்றன என்று சில ஆர்எஸ்எஸ் வெறியர்கள் வெளிப்படையாகவே அறிவித்தார்கள். மகாராஷ்ட்ராவில் வசிக்கும் மஹர் எனப்படும் தலித்துகளை ஆர்எஸ்எஸ் எந்தவிதத்தில் நடத்தப் போகிறது? ஏனெனில் மஹர்களில் பலர் மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள். ஏனெனில் ஆட்டுக்கறியைவிட இது விலை குறைவு. இரு தலைமுறைகளுக்கு முன்னர் மஹர் சாதியினர் மத்தியில் மாட்டுக்கறி முக்கியமான உணவாக இருந்தது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குறிக்கோள் என்பது மனு(அ)தர்மத்தில் கூறப்பட்டுள்ள (அ)நீதிகளின்படி நாட்டில் ஆட்சி அதிகாரத்தை நிறுவிட வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு இவர்கள் கனவு காணும் ஆட்சி தலித்துகளுக்கு எதிரானது, பழங்குடியினருக்கு எதிரானது, முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்று இதர மதக்காரர்களுக்கு எதிரானது. இதற்குமுன் எப்போதும் இருந்திடாத மனிதாபிமானமற்ற, ஆபத்தான, தரம்தாழ்ந்த மற்றும் வக்கிரமான சர்வாதிகார ஆட்சியாகவே அது இருந்திடும்.
எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் அதன் பல்வேறு முகங்களையும் எதிர்த்து சமர்புரியவேண்டியது, நாட்டிலுள்ள நாட்டுப்பற்று மற்றும் ஜனநாயக எண்ணம்கொண்ட அனைவரின் கடமையாகும்.