ச.சுப்பாராவ் எழுதி பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியிட்ட விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) - நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: விரலால் சிந்திப்பவர்கள்

சிறந்த சிறுகதை எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளவர், தற்சமயம் மதுரையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி வருபவர், “நிகழ்ந்து போவதே எழுதப்பட்ட வரலாறு”, “இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”, “உலக மக்களின் வரலாறு” உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளவர் நாவல், பல சிறுகதைத் தொகுப்புகள் என நிறைய எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான ச.சுப்பாராவ் அவர்களின் விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) நூலின் வழியே பல எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அறியப்படுகிறது.

நிறைய நூல்களை எழுதி இலக்கிய உலகில் புதிய தாக்கங்களை ஏற்படுத்திய எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் நூல்களை அறிமுகம் செய்கிறது இந்த நூல்.

சிந்தனைகள் எவ்வித தாக்கத்தை மனங்களுக்குள் ஏற்படுத்தும் என்பதை விரிவாக அலறுகிறது நூல்.. தங்களின் வாழ்வியல் தன்மையும் வளரும் முறையும் எவ்வாறு அவர்களுக்குள் சிந்தனைகளை விதைக்கின்றன என்பதையும் விளக்குகிறது நூல்.

எழுதும் தன்மையும் காலமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதைக் கூறும் நூலில் உலகத்தின் சமூக நகர்வை முன்னகர்த்தும் சிந்தனைகள் எழுவதால் நூல்கள் சிறப்புற வருகின்றன என்பதையும் விளக்குகிறது.

விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) நூலிலிருந்து சில எழுத்தாளர்களின் வாழ்வு சுருக்கமாக;

எழுதுவது என்பது விரல்களால் சிந்திப்பது என்று தனது சுயசரிதையில் கூறியிருக்கும் ஐசக் அசிமோ 11 வயதில் இருந்து எழுத ஆரம்பித்து 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதியவர். நாளொன்றுக்கு ஆயிரம் வார்த்தைகள் வீதம் பிரசுரமாயின. “எந்த வகை எழுத்தாளனும் எழுத்திற்காக மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் தேவையற்ற வார்த்தைகள் இல்லாத நேரடியாக எழுதும் அபூர்வமான படைப்பாளி. வார்த்தை சாலமற்ற நேரடி எழுத்து சாதா கண்ணாடி ஜன்னல் போன்றது. உள்ளே இருப்பதை வெளியில் இருந்தும் வெளியே இருப்பதை உள்ளே இருந்தும் பார்க்க முடியும். எழுத்து என்பது தினமும் விடா முயற்சியோடு செய்து கொண்டே இருக்க வேண்டிய ஒரு வேலை”” என்ற கூற்றுகளுக்கு சொந்தக்காரர் ஐசக் அசிமோ. தனிப்பட்ட முறையில் இவர் ஒரு நாத்திகர். விஞ்ஞானத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தவர்.

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தொ.மு.சி. ரகுநாதன் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். புதுமைப்பித்தன் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரின் சோக நாடகம் உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று முகவுரையில் குறிப்பிடப்படுகிறது. இந்த நூலில், கையில் பணம் புரள்கிற வேளையில் கடைக்குள் நுழைந்து விலையைப் பார்க்காமல் புத்தகங்களை அள்ளிக் கொள்வது புதுமைப்பித்தனின் பாணி. கதை கேட்டு பத்திரிக்கை ஆசிரியர்கள் வந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்துவார், எழுதியே ஆக வேண்டிய கட்டாயம் வரும் நாளில் புயல் வேகத்தில் எழுதி விடுவார்” என்று அவரது வறுமை நிலை எடுத்துரைக்கப்படுகிறது.

பம்மல் சம்பந்த முதலியார் சட்டப்படிப்பு படித்தவர் பல்வேறு தங்கப் பதக்கங்கள் பரிசுகள் பெற்றவர் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்த வக்கீல் பின்னாளில் நீதிபதியானவர் நிறைய நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர் தனது 18 வது வயதில் சுகுணவிலாச சபையைத் துவக்கி முதல் நாடகத்தை எழுதினார். அதற்கு விளம்பரம் செய்ய அந்தக் காலத்திலேயே 25 ஆயிரம் நோட்டீஸ் அடித்து குதிரை மீது அமர்ந்து ஒரு ஓய்வு பெற்ற சிப்பாய் இசைக்கருவி வாசித்தபடியே மக்களிடம் அந்த நோட்டீசை விளம்பரப்படுத்துகிறார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடகம் மனோகரா அவருடைய அனுமதி இல்லாமலேயே பல ஆயிரம் முறை மேடை ஏறி உள்ளது.

பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியின் வாழ்க்கை வரலாறு பொன்னியின் புதல்வர் என்ற பெயரில் அவரது சீடர் சுந்தாவால் எழுதப்பட்டுள்ள பெரிய நூல். தனது இறுதிக் காலத்தில் தனது மகள்கள் பாடிய ஆனந்த பைரவியிலும் காவடிச்சிந்திலும் அமைந்த பாடல்களை கேட்டு மரணம் அடைந்தவர் கல்கி. உ வே சாமிநாதையரை கெஞ்சிக் கூத்தாடி விகடனில் என் சரித்திரம் எழுத வைத்தவர் அவருக்கு தமிழ் தாத்தா என்ற பட்டம் தந்ததும் கல்கி தான். ஏதாவது ஒன்றை எழுதுவதற்கு முன்னால் அவர் ஊஞ்சலில் வீசி வீசி ஆடுவார் பிறகு யோசித்துக்கொண்டே தமது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட நேரம் நடந்து கொண்டே இருப்பார் அந்த அறையின் நீளம் அகலம் கணக்கிட்டு துல்லியமான கணக்கீட்டை அவரது உதவி ஆசிரியர் நாடோடி பதிவு செய்திருக்கிறார். எழுத்து பத்திரிக்கைப் பணி என கல்கி நிறைய சாதித்து இருந்தாலும் அவருடைய மிகப்பெரிய சாதனை காந்தியடிகளின் சுயசரிதையை தமிழில் மொழி பெயர்த்தது அதற்கு சத்திய சோதனை என்று பெயர் வைத்ததும் மிகப்பெரிய சாதனை என்று கருதப்படுகிறது.

டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் புத்தகம் வெளிவந்த புதிதில் ஒவ்வொரு 19ஆவது வினாடிக்கும் ஒரு புத்தகம் என்ற வேகத்தில் விற்றுத் தீர்ந்தது. ஒன்பதாவது படிக்கும்போதே வானவியல் அண்டவியல் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றை பற்றி ஆழமாகப் படித்தார். மதத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள முரண்பாட்டை உணர்ந்தார். காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் எட்டு மணி வரை எழுதுவார் 12 மைல் சைக்கிளில் சென்று காலை வேளைக் கல்லூரியில் பாடம் நடத்துவார் திரும்பவும் 12 மைல் சைக்கிள் மிதித்து வீடு சாப்பாடு மதியம் மற்றொரு பள்ளியில் கல்லூரியில் பாடம் திரும்ப வந்து மீண்டும் எழுத்துப்பணி. இவர் எழுதிய டாவின்சி கோட்டின் ஒவ்வொரு பக்கத்திற்கும் பத்துப் பத்து பக்கங்கள் வேறு வேறு விதமாக எழுதி மாற்றி திருத்தி அமைத்த கடும் உழைப்பாளி. தான் எழுதும் ஒவ்வொரு நூலுக்கான கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் அதற்கான குறிப்புகளை தேடுவதும் இவரது வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறப்பான காரணம்.

டி.கே.சிதம்பரநாத முதலியார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ரவீந்திரநாத் தாகூர் ஜி யு போப் திரிகூடராசப்ப கவிராயர் பாரதியார் என மிகப் பெரிய ஆளுமைகளுக்கு நண்பராகத் திகழ்ந்த எழுத்தாளர் உ வே சாமிநாத ஐயர். அவரது சுயசரிதை ஏன் சரித்திரம் அத்துடன் கி.வா.ஜா அவர்கள் எழுதிய என் ஆசிரியப் பிரான் நூலும் அவரைப் பற்றிய தகவல்களை சிறப்பாகத் தருகின்றன. உவேசா ஒரு புத்தகக் காதலர் 1862ல் மாயவரத்தில் கம்ப ராமாயணத்தின் ஏழு காண்டங்களும் ஏழு புத்தகமாக விற்கப்படுவதைப் பார்க்கிறார். விலை ரூபாய் 7. உடனே திருவாவடுதுறையில் உள்ள தன் சித்தப்பாவிடம் போய் 7 ரூபாய் கேட்கிறார் சித்தப்பா தனது அந்த மாதச் சம்பளமான ஏழு ரூபாயை முகம் சுழிக்காமல் எடுத்துத் தர உடனே மாயவரம் போய் புத்தகங்களை வாங்குகிறார். மாயவரத்தில் இருந்து திருவாவடுதுறை சுமார் 18 கிலோமீட்டர் தூரம் புத்தகம் வாங்க அன்று அவர் 36 கிலோ மீட்டர் நடந்திருக்கிறார். அவர் மரணிக்கும் தருணத்திலும் எனது புத்தகங்கள் ஓலைச்சுவடிகள் என்று முணுமுணுக்க அனைத்தையும் கட்டி எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்த பிறகு தான் அவர் உயிர் பிரிந்தது. இசைஞானம் அதிகம் உள்ள உவேசா தனது குருநாதருக்கு சங்கீதம் கற்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் என் நேரம் முழுவதும் தமிழுக்கே என்று கூறி சங்கீதத்தை மூட்டை கட்டி வைத்து விட்டவர்.

ஒரு மாபெரும் எழுத்தாளனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள அவர் நடத்திய இலக்கிய இதழின் கதையை அறிவதன் மூலமே முழுமையாக அறிய முடியும் என்றால் அது “எழுத்து” பத்திரிகையையும் அதை வெளியிட்ட சி.சு. செல்லப்பா அவர்களையும் மட்டுமே சாரும். புகைப்படம் எடுப்பது கழுவுவது பிரின்ட் போடுவது ஆகிய எல்லா நுட்பங்களையும் கற்றுத் தானே தான் எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போட்ட படைப்பாளி அவர். அவரது புகழ்பெற்ற புதினமான வாடிவாசல் நூலுக்காக நிறைய ஜல்லிக்கட்டுகளைச் சென்று பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து அதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறந்த காவியம் அது. எவ்விதமான விருதுகள் அன்பளிப்புகளையும் ஏற்கக் கூடாது என்று பிடிவாதமாக இலக்கிய வேள்வி நடத்தியவர் சி.சு. செல்லப்பா 75 ஆவது வயதிலிருந்து 85 வயது வரை அவர் எழுதிக் குவித்தது மிக அதிகம். சுதந்திர தாகம் என்னும் 2000 பக்க நூலும் அந்த காலகட்டத்தில் தான் எழுதப்பட்டது.

எழுத்தாளர் சாவி அவர்களின் வாழ்க்கை வரலாறு ராணிமைந்தனால் எழுதப்பட்டு சாவி 85 என்ற பெயரில் வெளியானது. மிகப்பெரிய பக்தி மான். ஆனால் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை அற்றவர். இளம் வயதில் கணவனை இழந்த தனது இரு புதல்விகளுக்கும் மறுமணம் செய்து வைத்தவர். காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தர் ஆனால் தனது பக்தி தனது தொழிலில் தலையிடாதபடி பார்த்துக் கொண்டவர். பார்க்கும் ஒரு சிறு நிகழ்ச்சி படைப்பாளனின் மனதில் என்னென்ன கற்பனையெல்லாம் உருவாக்கி ஒரு மாபெரும் படைப்பு உருவாக காரணமாகிறது என்பதற்கு சாவி மிகப் பெரிய எடுத்துக்காட்டு. இவரது வாஷிங்டனில் திருமணம் என்ற நூல் எழுதுவதற்காக இவருடைய வாசிப்பும் உழைப்பும் மிக நீண்ட நெடிய வரலாற்றை நமக்கு கற்றுத் தருகிறது. வாஷிங்டனை சென்று பார்க்காமலேயே அவர் எழுதிய அந்த நூலில் இருந்து ஒரு தெருவிற்கு பிற்காலத்தில் அவர் செல்லும்போது இடது வலது கூட அவருக்கு மிகத் துல்லியமாகத் தெரிந்தது என்பது எவ்வளவு பெரிய வியப்பு.

ஒரு நூலில் வரும் குறிப்பிட்ட கதாநாயகனின் பெயர் உலகம் முழுவதும் புகழ் அடைந்து நூலில் அவன் இறந்ததற்காக உலகமே துக்கம் கொண்டாடிய நிகழ்வு நடந்தது என்றால் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரப்படைப்புக்கும் அதை எழுதிய கானன் டாயலுக்கும் சொந்தமான சிறப்பம்சம். தனது துப்பறியும் நாவலில் அவர் உருவாக்கிய செர்லாக் ஹோம்ஸ் இன்றுவரை பல நிகழ்வுகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் அவரது உழைப்பும் எழுத்தின் மீது அவர் காட்டிய தீவிரத் தன்மையும் நன்கு அறிய முடிகிறது.

பால் குயிலோ 12 வயதிலிருந்து தான் படிக்க ஆரம்பித்த புத்தகங்கள் பற்றி குறிப்பு எடுக்க ஆரம்பிக்கிறார் 12 வயதில் இருந்து 48 வயது வரை இப்படி குறிப்பெடுத்தவை 170 டைரிகளும் 94 கேசட்டுகளும் என நிரம்பி வழிகிறது. தான் எழுத்தாளனாக வேண்டும் என்று முடிவு செய்து எப்படி எழுத வேண்டும் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு முழு தகவல் களஞ்சியம் தொகுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தவர். சராசரியாக ஒரு பிரேசிலியன் ஆண்டுக்கு ஒரு புத்தகம் படித்த காலத்தில் அவர் 75 புத்தகங்கள் படித்தார். என்றேனும் ஒரு நாள் எனது புத்தகங்கள் ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகும் என்று தனது டைரியில் எழுதி வைத்தார். அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று அவருடைய புத்தகங்களின் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியது எழுத்தின் மீது தான் வைத்த நம்பிக்கை பொய்த்துப் போகா வண்ணம் அவருடைய உழைப்பு அவரை வழிநடத்தி வெற்றி பெற வைத்தது. அவரது ஜாகிர் என்ற நாவல் முதல் பதிப்பில் 2000 பிரதிகள் அச்சாகி அச்சகத்தில் இருந்து பதிப்பாளருக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டபோதே கொள்ளையடிக்கப்பட்டு அவருடைய ரசிகர்களால் பிரித்துக் கொள்ளப்பட்ட வினோத சம்பவம் நடந்திருக்கிறது. அடிக்கடி தனிமையில் இருப்பவர் யாருடனும் பழகாமல் தனித்திருக்கும் இவருக்கு இரண்டு முறை மனநல விடுதியில் அடைக்கப்பட்டு மின்சார ஷாக் தரப்படுகிறது போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் அவருடைய மனைவியும் காதலியும் மனைவியின் காதலனும் ஒரே வீட்டில் வாழ்ந்த சீரழிவும் நடந்திருக்கிறது. உனக்காக நான் எந்த ஒரு துன்பத்தையும் தாங்குவேன் என்று சொன்ன ஒரு காதலியை சோதிக்க அவளது தொடையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரட்டை வைத்து அழுத்தி அவள் வேதனையை ரசித்திருக்கிறார்.

“படைப்பாற்றல் என்பது சம்பவங்களை அப்படியே மனதில் நினைவில் வைத்துக் கொண்டு எழுதுவது அல்ல. அந்தச் சம்பவம் தொடர்பான அனைத்தையும் மறந்து விட்டு அது தொடர்பானவற்றை உன் கற்பனையில் இருந்து எழுதுவது தான் படைப்பாற்றல்” என்று கூறும் கிரஹாம் கிரீன் தனது தூக்கத்திலும் பணம் சம்பாதித்த கெட்டிக்கார எழுத்தாளர். அவருடைய அத்தனை நாவல்களுக்கான கருவும் அவருக்கு கனவாக உதித்து பிறகு நூலாக எழுதப்பட்டது.

தனது இலக்கியக் கனவுகள் ஈடேற வேண்டும் என்பதற்காக யாரிடமும் அடிமைச் சேவகம் செய்வது பிடிக்காமல் அறச்சீற்றத்தோடு வெளியே வந்து தீபம் என்ற இலக்கியப் பத்திரிக்கையை 23 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர் நா. பார்த்தசாரதி. அந்த இதழின் வரலாறே அவரது வரலாறாகவும் அமைகிறது. இந்த இதழ் பல எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.அவர் ஒரு அற்புதமான பேச்சாளர் எடுப்பு தொடுப்பு முடிப்பு என்று அருமையாக பேசுவார் 500க்கும் மேற்பட்ட குறள்களை மனப்பாடமாக கூறும் சிறப்புடையவர் பழந்தமிழ் இலக்கியங்களை மிக ஆழமாக கற்று அறிந்தவர்.

தமிழின் முதல் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு புலவர் என்.வி. கலைமணி அவர்களால் தமிழ் நாவல் உலகின் தந்தை என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. நீதிமன்ற ஆவணங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளராக வேலைக்கு சேர்ந்தவர் பிரதாப முதலியார். ஒரு கட்டத்தில் முன்ஷிப் பதவிக்கு விண்ணப்பித்து நீதிபதியாக உயர்கிறார் ஆனால் அரசின் சிவப்பு நாடா அவருக்கு ஒத்துவரவில்லை ஜால்ரா அடிக்கத் தெரியவில்லை. கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். நீதிமன்றத்தில் தனியாக போராடி தனக்கான பென்சனை வாங்கினார்.

அலீசின் அற்புத உலகம் என்ற நூலையை எழுதிய லூயி கரோல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர். எல்லாவற்றையும் கச்சிதமாக திட்டமிட்டு நடந்து கொள்பவர். வீட்டில் கதை எழுத ஒரு அறை படம் வரைய ஒரு அறை கணித நூல்கள் எழுத ஒரு அறை என்று தனித்தனியாக இருக்கும். வந்த கடிதங்கள் அனைத்தையும் பற்றிய விவரங்களை அதற்கு என்ன பதில் எழுதினார் என்பதன் சுருக்கம் உள்ளிட்டு குறித்து வைக்கும் பதிவேடு ஒன்றை பராமரிப்பார். வீட்டுக்கு வருந்த விருந்தினர்கள் பற்றிய பதிவேடும் உண்டு. அதில் யார் எந்த தேதியில் எத்தனை மணிக்கு வந்தார் என்ற விபரங்களுடன் அவருக்கு என்ன உணவு பரிமாறப்பட்டது என்று கூட குறிக்கப்பட்டு இருக்கும். மிகவும் சிக்கனமானவர் ஆனால் தனக்கோ தன் நண்பர்களான சிறுவர் சிறுமிகளுக்கோ புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால் கணக்கே பார்க்காமல் செலவு செய்பவர். பயணம் செய்வது என்றால் அதற்கான ஒவ்வொரு நிமிடத்தையும் துல்லியமாக திட்டமிடுபவர். பெண் குழந்தைகள் பகுத்தறிவோடு தர்க்கத்தோடு சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இலத்தீன் மட்டுமே கோலோச்சிய காலத்தில் ஆங்கிலத்தில் எழுதி அதை உலகப் பொது மொழியாக மாற்றிக் காட்டிய மாபெரும் எழுத்தாளர். ஆங்கிலத்தில் முதன் முதலில் எழுதிய பெருமைக்குரியவர். இரட்டை எதிர்மறைச் சொற்களை பயன்படுத்தியவர். பெயர்ச் சொல்லை வினைச்சொல்லாக பயன்படுத்தியவர். புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தியவர். 2035 புதிய ஆங்கிலச் சொற்களை உருவாக்கியவர். ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல்லை உருவாக்க அதோடு un சேர்க்கும் வழக்கத்தை உருவாக்கியவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் வில்லியம் ஷேக்ஸ்பியர்.

பிரிட்டன் உளவுத்துறையின் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தவர் பணி நிமித்தமாக ஜமைக்காவில் ஓய்வு எடுக்க சென்ற ஒரு நாளில் அதன் அழகில் மயங்கி தான் ஓய்வு பெற்றதும் அங்கேயே வீடு வாங்கி குடியேறுகிறார். நாவல் எழுதினால் நிறைய பணம் கிடைக்கும் என்ற ஏதோ ஒரு தகவலை நம்பி தங்க டைப்ரைட்டரை வாங்கி தனக்குத் தெரிந்த எழுத்துக்களை அதில் எழுத ஆரம்பித்து மிகப் பெரிய நாவலையான “காசினோ சாயல்”” வெளியிடுகிறார். அவர்தான் எழுத்தாளர் இயான் ஃபிளம்பிங். இன்று உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படமாவது பார்த்திருப்பார் என்று புள்ளி விவரம் கூறுகிறது. நீங்கள் உங்கள் எழுத்தால் உங்கள் சூழ்நிலையை உயிரோட்டம் உள்ளதாக ஆக்குகிறீர்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம் உங்கள் எழுத்தால் உங்கள் சூழ்நிலையை உயிரோட்டம் உள்ளதாக மாற்றுவது தான் அதை மனதில் கொண்டு எழுதுங்கள் நீங்கள் எழுதி பணம் சம்பாதிப்பது எல்லாம் முற்றிலும் வேறு விஷயம் என்று எழுத்துக்கு இலக்கணம் சொன்ன இயான் ஃபிளம்பிங் உருவாக்கிய கதாநாயகன் ஜேம்ஸ் பாண்ட் 007. இயற்கையை நேசித்தவர் பறவை ஆராய்ச்சியாளர்.

தனக்கு மிகவும் பிடித்த அமெரிக்காவின் புகழ் பெற்ற பறவை ஆராய்ச்சியாளரான ஜேம்ஸ்பாண்ட் பெயரைத்தான் தனது ஆதரச கதாநாயகனுக்கு வைத்து மகிழ்ந்தார் இயான் ஃபிளம்பிங். தான் எழுதும் துப்பறியும் நாவல் அனைத்திலும் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்தும் புதிய புதிய தொழில்நுட்பங்களை இவர் நேரடியாகச் சென்று அது பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்து பிறகு அதை எழுத்தில் பயன்படுத்தி இருக்கிறார். வைரங்களை எப்படி தரம் பிரிக்கிறார்கள் அறுகிறார்கள் என்று ஒரு மாத காலம் தங்கி இருந்து கற்றுக்கொண்டு வந்து பிறகு அது தொடர்பான நூல் எழுதுகிறார். துப்பாக்கிகள் பற்றிய நுணுக்கமான தகவல்களையும் இவர் ராணுவத்தில் இருந்து தெரிந்து கொண்டு தனது நூலில் பயன்படுத்துகிறார். இவருடைய இந்த கடின உழைப்பே அவருக்கு உலகம் முழுவதும் புகழைப் பெற்றுத் தந்தது.

தொல்காப்பியம் நன்னூல் திருக்குறள் திருக்கோவையார் பெரியபுராணம் சமய நூல்கள் கந்தபுராணம் திருவிளையாடல் புராணம் போன்ற பலதரப்பட்ட நூல்களை அழகுற அச்சியற்றி வெளியிட்ட பெருமைக்குரியவர் ஆறுமுக நாவலர் பெருமான்.”” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்”” ” என்னுடைய வீடு எல்லாருக்கும் ஜெப வீடு” “வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே என்னிடம் வாருங்கள் நான் இளைப்பாறுதல் தருவேன்” என்றெல்லாம் இன்று அனைவராலும் ஆராதிக்க ப்படும் பைபிளின் எழுத்துக்கு சொந்தக்காரர் ஆறுமுக நாவலர். இவர் பைபிள் பணியை தமிழ்படுத்தி முழுமையான தமிழில் வெளியிட்ட போது அவருக்கு வயது 22.

உலகெங்கும் தனது கதைகளை தனது குரலிலேயே ரசிகர்களுக்கு படித்துக் காட்டும் நிகழ்ச்சியை நடத்தி சாதித்த மிகப் பெரும் படைப்பாளி சார்லஸ் டிக்கன்ஸ். தி டேல் ஆஃப் டூ சிட்டிஸ் என்ற கதையின் மூலம் உலகப் புகழ்பெற்ற சார்லஸ் டிக்கன்ஸ் சிறுவயதில் தந்தை ஷூ பாலிஷ் தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் தினமும் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த தொழிற்சாலைக்கு நடந்து போய் வேலை பார்த்துவிட்டு வந்தவர். தான் பத்திரிக்கையாளராக மாறியபோது குழந்தைத் தொழிலாளிகள் பெண் தொழிலாளிகள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் உலகளவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தன. பெண்கள், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சுரங்கப் பணிகளில் அமர்த்தக்கூடாது பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் பல நாடுகள் சட்டங்கள் இயற்ற இவரது எழுத்து அடிப்படை காரணமாக அமைந்தது. ஒன்பது குழந்தைகள் பெற்ற பின் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் ஒருமுறை சண்டையின்போது இரவு இரண்டு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி 30 மைல் தூரம் நடந்தே தனது டென்ஷனை குறைத்துக் கொண்டவர்.

ஒரு சிறு கரு கிடைத்தால் எத்தனையோ எழுத்தாளர்கள் மிகப்பெரிய நாவலை எழுதி விடுகின்றனர். ஆனால் இவரோ ஒரு நூல் எழுதுவதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சியை நடத்தி பிறகு எழுதியிருக்கிறார். ஒரு ஜீப் நிறைய ஆய்வுக்கு உதவும் புத்தகங்களை எடுத்துச் சென்று (ஊரில் மின்சாரம் இல்லாத போதும்) அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து அதிலிருந்து குறிப்புகள் எடுத்து பிறகு அந்த நாவலை முடித்து வெளியிட்டார். ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் எழுதுபவர். எழுதிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் பிரச்சினை வந்தால் அதை தாளின் ஓரத்தில் குறித்து வைத்துக் கொள்பவர். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் டுட்டோரியல் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்து சொல்லிக் கொடுத்தவர். அவரே எம்டி வாசுதேவன் நாயர்.

இப்படியாக ஒவ்வொரு எழுத்தாளர்களின் இளமையும் கல்வியும் வளர்ந்த விதமும் வெவ்வேறாக இருக்க அவர்களின் சிந்தனைகள் பல தரப்பட்ட தளங்களில் உயர்ந்து நிற்க எழுத்தின் மீது கொண்ட ஆர்வமும் கடின உழைப்புமே அவர்களை மிகப்பெரிய எழுத்தாளர்களாக உலகம் அறியச் செய்திருக்கிறது. சிந்தனைகளின் வழியே சமூகத்தை அறியத் தருகிற பல சிறந்த எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை வாசிக்கத் தந்திருக்கும் சுப்பாராவ் அவர்களின் உழைப்பு மிகச் சிறப்பானது. விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) நூல் அனைவரும் அறிய வேண்டிய தகவல் சுரங்கமாகவும் அமைந்துள்ளது.

நூலின் தகவல்கள்:

நூல்: விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal)
ஆசிரியர்: ச.சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 96
விலை: ரூ 90
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) நூல் அறிமுகம் எழுதியவர்:

இளையவன் சிவா @ கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
அன்பு மொழி(2024) என நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *