நூல் அறிமுகம்: எழுத்தாளர் ச. சுப்பாராவ்-ன் *விரலால் சிந்திப்பவர்கள்* – மந்திரமூர்த்திநூல்: விரலால் சிந்திப்பவர்கள்
ஆசிரியர்: எழுத்தாளர் ச. சுப்பாராவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: 2019- டிசம்பர்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/viralal-sindhippavarkal/

விரலால் சிந்திப்பவர்கள் என்ற இந்த நூலின் ஆசிரியர் நண்பர் எழுத்தாளர் ச.சுப்பாராவ் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். தற்போது மதுரையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி வருகிறார். நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, இந்தியப் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், உலக மக்களின் வரலாறு உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுக்குத் தந்த பெருமைக்குரியவர்.

நூலின் முன்னுரையில் ச.சுப்பாராவ் “மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. அதிலும் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களது வாழ்க்கை வரலாறுகள் மற்றவற்றை விடச் சுவையாக இருக்கும். அதிலும், அந்தச் சாதனையாளர் ஓர் எழுத்தாளர் என்றால் அதில் போராட்டமும் கூடுதலாக இருக்கும். அதன் சுவையும் கூடுதலாக இருக்கும். ஏதோ ஓர் ஆர்வத்தில் எழுத்தாளர்களினுடைய வாழ்க்கை வரலாறுகளை சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். இதன் மூலம் எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமல்லாது, எப்படி எழுதுவது, எப்படி உழைப்பது என்ற கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொண்டேன். அந்த எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை நான் வாசித்த அனுபவமே இந்த நூல். புதிய நூல்களை, புதிய படைப்பாளிகளைத் தேடிச் சென்று படிக்க வாசகர்களுக்கு இந்த நூல் உதவும் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் ச.சுப்பாராவ் கடும் சிரமத்திற்கு இடையேத் தேடித்தேடி வாசித்த வாழ்க்கை வரலாற்று நூல்களை மிகச் சுருக்கமாக, ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பெருநோக்கில் இந்த நூலைத் தந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.நூலில் மொத்தம் 21 எழுத்தாளர்களைக் குறித்த கட்டுரைகள் இருக்கின்றன. உலகின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் அசிமோவ், புதுமைப்பித்தன், தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், பொன்னியின் புதல்வர் கல்கி, டாவின்சி கோடின் ஆசிரியர் டான் பிரவுன், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், எழுத்து சி சு செல்லப்பா, பத்திரிக்கையாளர் சாவி, சர் ஆர்தர் கானன் டாயில், பாலோ கொய்லோ, கிரஹாம் கிரீன், தீபம் நா.பார்த்தசாரதி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, லூயி கரோல், ஷேக்ஸ்பியர், இயான் பிளமிங், பைபிளை அழகுத் தமிழில் முதலில் மொழி பெயர்த்த ஶ்ரீஆறுமுக நாவலர், ஹருகி முரகாமி, இவான் துர்கனேவ், அலெக்சாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ், எம் டி வாசுதேவன் நாயர் ஆகியோரின் படைப்புகள் குறித்த முக்கிய வரலாற்றுச் செய்திகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ச.சுப்பாராவ்.

எழுத்தாளர் சுப்பாராவ் எப்போதுமே என்னை ஆச்சரிய படுத்துகிறார். அலுவலகப் பணியில் இருந்து கொண்டே ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பு நூல்கள், கதைகள் போன்ற படைப்புகளைத் தருவதுடன் அவர் வாசிக்கும் 100 க்கும் அதிகமான புத்தகங்களின் லிஸ்ட் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அதற்கான காரணத்தைச் ச.சுப்பாராவின் ‘விரலால் சிந்திப்பவர்கள்’ என்ற நூலை வாசித்தபோது புரிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பைத் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக நெடுங்காலமாகச் சீராக அமைத்துக் கொண்டவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

ஏராளமான எழுத்தாளர்களைக் குறித்த வாழ்க்கை வரலாறுகளை எந்த விதமானக் காய்தல், உவத்தல் இன்றித் தேடிப் பிடித்து வாசித்திருக்கிறார் நூலாசிரியர். அவற்றில் குறிப்பிடத்தக்க 21 எழுத்தாளர்களைக் குறித்த செய்திகளை இங்கு வாசகர்களுக்காகத் தந்திருக்கிறார் என்பது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. இந்த எழுத்தாளர்கள் தங்களுடைய கடுமையான வாழ்க்கைப் போராட்டங்களுக்கு இடையிலும் எவ்வளவு முக்கியமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள் என்பதை இந்த நூலில் வாசிக்கும் போது நமக்கு ஆச்சரியமாகவும், உற்சாகம் தருவதாகவும் இருக்கிறது. ஒரேயொரு தொகுப்பில் இவ்வளவு அதிகமான அளவில் 21 எழுத்தாளர்களைக் குறித்த முக்கியச் செய்திகளை அறிந்து கொள்ள முடிவது என்பது வாசகர்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்.
எழுத்தாளர் ச.சுப்பாராவின் நடையிலேயே சிலரின் படைப்புகளைக் குறித்துக் காணலாம்.

அசிமோவ் கிட்டத்தட்ட அறுபது ஆண்டு எழுத்துப் பயணத்தில் முதல் 40 ஆண்டுகளில் 10 நாட்களுக்கு தனது ஒரு படைப்பை பதிப்பாளருக்குத் தந்தவர். கடைசி இருபது ஆண்டுகளில் ஆறு நாட்களுக்கு ஒரு படைப்பைத் தந்திருக்கிறார். நாளொன்றுக்குச் சராசரியாக அவரது ஆயிரம் வார்த்தைகள் பிரசுரமாயின. ரஷ்யாவில் பிறந்து பெற்றோர் அமெரிக்காவுக்குச் சென்றதால் அமெரிக்கப் பிரஜையானவர் இவர். அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஒரு முறை அவரது பதிப்பாளர் 250 அறிவியல் அறிஞர்களினுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை எழுதித் தரச் சொன்னார். அசிமோவ் எழுத எழுத அது வளர்ந்து கொண்டே போய், கடைசியில் 1000 அறிவியல் அறிஞர்களினுடைய வாழ்க்கை வரலாறு பற்றி அதுவும் விரிவான அளவில் அமைந்திருந்தது. தேவையற்ற வார்த்தைகள் இல்லாது நேரடியாக எழுதும் அபூர்வமான படைப்பாளி அவர். பொதுவாக விஞ்ஞானப் புனைவுகள் எழுதுபவர்கள், விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் சீரழிவுகளை எழுதிய பொழுது விஞ்ஞானத்தின் வெற்றியைக் கொண்டாடி எழுதியவர் அசிமோவ். ‘எழுதுவது என்பது என் விரல்களால் சிந்திப்பது’ என்கிறார் அவர். ‘அவரது சுயசரிதை படிக்கும் எவருக்கும் விரலால் சிந்திக்கும் ஆசை வந்துவிடும் என்பது உறுதி’ என்கிறார் சுப்பாராவ்.

நம்மில் பலரும் வாசித்து இருக்கக் கூடிய தொ மு சி ரகுநாதன் புதுமைப்பித்தனைப் பற்றி எழுதிய வரலாற்றினை சில சுவாரஸ்யமான பகுதிகளை நமக்குத் தொட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.“பாரதி அன்பர் வ.ரா, தொ.மு.சி.யிடம் புதுமைப்பித்தன் குறித்துக் கூறிய ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. ” ஆசாமி திடீரென்று ஒரு நாள் வந்து நின்றார். எங்கள் நிலைமை தான் தெரியுமே! தள்ள முடியுமா? வந்தவருக்கு கைச் செலவுக்காக இரண்டு ரூபாய் கொடுத்தோம். ஆனால் மனுஷன் என்ன செய்தார் தெரியுமா! மூர் மார்க்கெட்டுப் பழைய புத்தகக் கடையில் ஒன்னேகால் ரூபாய்க்கு மாப்பசான் கதைப்புத்தகம், மீதிக் காசுக்கு ஸ்பென்சர் சுருட்டு இவற்றை வாங்கி வந்துவிட்டார். அன்றாட வாழ்வின் இடைஞ்சல்கள், சோகங்கள் எதுவும் தன்னைத் தின்னத் தகாதென்று உற்சாகமாக வாழ்ந்த மனிதர் அவர். வேடிக்கை, நக்கல் பேச்சுக்கும் அவரிடம் குறைவில்லை. தமிழுக்கு இல்லாத பெருமையை எல்லாம் ஏற்றிச் சொல்பவர் பற்றி ‘உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று சொல்பவர்கள் இவர்கள்!’ என்று அவரை தவிர வேறு யார் கூற முடியும்! ”

ஆர்தர் கானன் டாயில், கிரகம் கிரீன், தீபம் நா.பார்த்தசாரதி, வேதநாயகம் பிள்ளை, லூயி கரோல், ஷேக்ஸ்பியர், இயான் பிளமிங், ஹரிகி முரகாமி , துர்கனேவ், அலெக்சாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ், எம் டி வாசுதேவன் நாயர் ஆகியோரைக் குறித்து இந்த நூலில் ஆசிரியர் தரும் செய்திகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கின்றன.

‘விரலால் சிந்திப்பவர்கள்’ என்ற ச.சுப்பாராவின் இந்த நூல் தமிழில் வாசிப்பை ஊக்குவிக்கும் முக்கியமான நூல் என்றே சொல்ல வேண்டும்.