Book Day | விரிந்த சிறகுகள் | Virintha Sirakukal | Book Review

விரிந்த சிறகுகள் – நூலறிமுகம்

விரிந்த சிறகுகளின் நன்னோக்குப் பயணம்

மதுரையில் வசிக்கும் பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர் பா. சண்முக வேலுவின் முதல் நூலான “விரிந்த சிறகுகள்” சிறுகதைத் தொகுப்பு 9 சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்துள்ளது‌. இந்நூலை மதுரை வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டம் பேசுவது, அணி திரட்டுவது, போராடுவது, வெற்றி காண்பது என்பதோடு சுருங்கிவிடுபவர்களாக இருப்பதே அதிகம். ஆனால் அதையும் தாண்டி எழுத்துலகில் பிரவேசிப்பதும் இலக்கியங்களைப் படிப்பதும் இலக்கியங்களை உருவாக்குவதும் சிலர் மட்டுமே செய்யும் பணியாக உள்ளது. அவர்களுள் ஒருவர் பா.சண்முகவேலு. இவர் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எனும் அமைப்புகளில் பல பொறுப்புகளேற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். அந்த அனுபவங்களை அழகியலுடன் சிறுகதைகளாக்கித் தொகுத்துள்ள நூலே இந்நூல்.

இந்நூலில் 9 கதைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும் பெரும்பாலான கதைகள் தொழிற்சங்க அனுபவங்களால் நிரம்பி வழிகின்றன.

பொதுவாக தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடும் தலைவர்களுக்கு அவர்களுடைய வீடுகளில் மனைவிமார்கள் ஒத்துழைப்புத் தருவதில்லை. ஏனெனில் தலைவர்களின் பெரும்பாலான நேரம் சங்கப் பணிகளில் செலவிடப்படுகின்றன. அதைத்தாண்டி மனைவி, குழந்தைகள், உறவுமுறைகள் என அவர்களுக்காக நேரம் செலவிட அவர்களுக்கு வாய்ப்பதில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் பணிகளைச் செம்மையாகவும் நேர்மையாகவும் செய்தால்தான் உயர் அலுவலர்களிடம் சங்க உறுப்பினர்களுக்கான கோரிக்கைகள், போராட்டம், பேச்சுவார்த்தைகளில் சாதனைகளை நிகழ்த்த முடியும். எனவே தனது பணியைச் செம்மையாகவும் நேர்மையாகவும் செய்துகொண்டே சங்கப் பணிகளையும் செய்ய வேண்டும். கிடைக்கும் நேரங்களில் குடும்பத்திற்காக கொஞ்ச நேரம் ஒதுக்க முயன்றாலும் பல நேரங்களில் உணர்வுப் பூர்வமான பிரச்சினைகள் குறுக்கே நிற்கும்போது அவற்றுக்கான தீர்வை நோக்கிய பயணமாகத்தான் தொழிற்சங்கத் தலைவர்களின் பயணம் அமைகிறது. எனவே இயல்பாகவே வீட்டில் அதிருப்தி நிலவுவது இயல்பு. ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில் நடப்பு நிகழ்வுகளும், தொழிற்சங்கத் தோழர்களின் தோழமை, அர்ப்பணிப்பு நடவடிக்கைகள் மூலம் தலைவர்களுக்கு கிடைக்கும் பாராட்டும் புகழும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட மாற்றங்களை “புதுயுகம்” எனும் சிறுகதையில் அற்புதமாகக் கொண்டு வருகிறார் சண்முகவேலு. உறவினர்களைத் தாண்டி, கடவுள் நம்பிக்கையைத் தாண்டி தொழிற்சங்கத் தோழர்கள் கணவரில்லாத தருணங்களில் தமது குடும்பத்தைத் தாங்கி நிற்பதும் இடுக்கண் களைவதும் தோழமை உணர்வுடன் செயல்படுவதும் மனைவிக்குக் கணவன் மீது அளப்பரிய மற்றும் அன்பும் ஏற்படுவதைக் காட்சிப்படுத்தியுள்ள பாங்கு சிறப்பானது.

“இறுதி அஞ்சலி” எனும் சிறுகதையில் அர்ப்பணிப்பு மிக்க தொழிற்சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவின் இறுதிப் பயணம் கொரோனா கொடூரத்தால் அனாதைப் பிணம் போல ஆனதைத் தத்ரூபமாகத் திரைப்படம் போல் காட்டி நெகிழச் செய்கிறார் நூலாசிரியர்.

தொழிற்சங்கம் சொல்லிக்கொடுத்த மத நல்லிணக்கம் எனும் மகோன்னதப் பண்பு “பாங்கொலி” என்னும் சிறந்த சிறுகதையைப் படைக்க சண்முகவேலுக்குத் துணை நின்றுள்ளது.

“மாற வேண்டிய மனிதர்கள்” என்னும் வித்தியாசமான கதை பெண்ணுரிமைக்காகவும் சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நல்ல கதை. காதலனின் துணிவில்லா நிலையில் காதலி எடுக்கும் துணிவான முடிவு நூலாசிரியரை பாராட்ட வைக்கிறது.

“வளர்ப்பு மகன்” சிறுகதையில் உண்மையான சமூக செயற்பாட்டாளர் ஆண்டாள் என்பவரின் தூய அன்பை வெளிப்படுத்தித் தன் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கட்டையன் பாத்திரம் முக்கியப் பாத்திரமாக வெளிப்படுத்தியுள்ளார் சண்முக வேலு.

அனைத்து சிறுகதைகளுமே அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான். ஆனால் அவர்களை உலவவிட்டு நல்ல கதைகளாக்கி “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” எனும் இலக்குடன் அமைந்துள்ளது இச்சிறு இதை நூல்.

தொழிற்சங்கம் சரியான முற்போக்குவாதிகளாக தலைவர்களை வார்த்தெடுக்கிறது. அதன் பலனாக அவர்களது களப்பணி சிறப்படைகிறது. அதே போன்றுதான் அவர்கள் இலக்கியவாதிகளாக மாறும்போது அவர்களது கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரையில் முற்போக்கு விழுமியங்கள் பிரதிபலிக்கின்றன. அத்தகைய வெற்றியை ஈட்டியுள்ளது சண்முகவேலுவின் முதல் முயற்சியால் வெளியிடப்பட்டுள்ள இந்நூல். வயதான பிறகு நூலாசிரியர் எழுதி வெளியிட்டிருந்தாலும் இச்சிறுகதைகள் இளமையாகவே இருக்கின்றன.

இந்நூலை வாங்கிப் படிப்பது தொழிற்சங்கத்தில் ஈடுபடுவோர்க்கு மட்டுமல்லாமல் முற்போக்காளர்களுக்கு மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளுக்கும் அவசியமாகிறது. நூலாசிரியர் மேலும் பல நூல்களைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

 

நூலின் தகவல் 

நூல் : விரிந்த சிறகுகள்

ஆசிரியர் : பா. சண்முக வேலு

பக்கங்கள்128

விலை ரூ.120

வெளியீடு : மதுரை வாசகர் வட்டம்

தொடர்பு எண்: 9952315757

 

எழுதியவர் 

பெரணமல்லூர் சேகரன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *