பிரெஞ்சு மொழியில் 32 பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு அழகான கதை. இது 1957ல் வெளியாகியுள்ளது. தமிழில் க.நா.சு. மொழிபெயர்த்துள்ளார். மிக அழகான எழுத்துநடை. இக்கதையை வாசிக்கும் போதே எனக்குள் க.நா.சு பற்றி தோன்றிய விஷயம், உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள தலைசிறந்த படைப்புகளை எவ்வாறு அடையாளம் கண்டார் என்று. “அன்புவழி, பசி” போன்ற இவரின் மொழிபெயர்ப்பு நாவல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. அப்படியானால் எவ்வளவு ஆழமாகவும், தீவிரமாகவும் இருந்திருக்கிறது அவருடைய வாசிப்பு. பிரம்மிப்பாக இருக்கிறது!
“விருந்தாளி” இக்கதை அல்ஜீரிய நாட்டில் யுத்த காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. மனித சஞ்சாரமேயற்ற மலைச்சரிவில் உள்ள பள்ளியின் ஆசிரியர் டாரு. இவரிடத்தில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட ஒரு அராபியனைக் கைதியாக கொண்டுவந்து விடுகிறார் போலீஸ்காரர் பால்டுச்சி. மறுநாள் கைதியை மலைக்கு வடக்கேயுள்ள கிராமமான டாஜ்டிட்டில் உள்ள தலைமைக் காரியாயத்தில், போலீசாரிடம் ஒப்படைத்து விடுமாறு கூறுகிறார். டாரு இது ஒரு ஆசிரியரின் வேலை அல்ல என மறுக்கிறார். பால்டுச்சி எனக்கு வந்த உத்தரவை உன்னிடம் சொல்லிவிட்டேன், யுத்த காலமாக இருப்பதால் என்னை உடனே திரும்பச் சொல்லி உத்தரவு எனக் கூறி புறப்பட்டுவிடுகிறார்.
தற்போது பனிப்புயல் வீசுவதால் சுற்றியுள்ள மலைக்கிராமங்களிலிருந்து வரும் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதில்லை. முதலில் இப்பிரதேசத்தில் வேலை செய்ய வந்த டாருவுக்கு மனித சஞ்சாரமற்ற இந்த மலையின் மௌனத்தை சகிப்பது கடினமாக ஒன்றாக இருந்தது. பின், தீவிர தனிமைக்கு ஆட்பட்டு, இப்பகுதியைத் தவிர வேறு எங்கு சென்றாலும் அந்நியனாகவே உணரத் தொடங்கிவிட்டார். படுத்து உறங்க குறுகிய கட்டில், வண்ணம் பூசாத மர அலமாரிகள், சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்கள், பின்பக்கத்துக் கிணறு இவை மட்டுமே போதுமென்று திருப்தியாக வாழ்கிறார்.
தற்போது இந்த அராபியனின் இருப்பு அவரை ஏதோ செய்கிறது. அவன் இருப்பை அவர் விரும்பவில்லை. எனினும் அவனை உபசரிக்கிறார். உணவு தருகிறார். படுத்துக்கொள்ள கம்பளி தருகிறார். அவருக்கு சமமாகவே அவனையும் கைதி என்ற வேறுபாடின்றி நடத்துகிறார். இரவு முழுவதும் அவனுடன் கழிகிறது. மறுநாள் காலையில் அவனை தலைமைக் காரியாயத்துக்கு அழைத்து செல்வதற்காக புறப்படுகின்றனர். பாதி வழியில் ஒரு குன்றின் உச்சியில் நின்று கொண்டு இந்தப் பக்கம் சென்றால் காரியாயம், தெற்குப் பக்கம் சென்றால் அராபியர்கள் உள்ள ஊர். உன்னை இங்கே விட்டுவிட்டு நான் செல்கிறேன், எந்தப் பக்கம் போவது என நீ முடிவு செய்து கொள் என்று கூறி விட்டு சென்று விடுகிறார்.
சிறிது நேரம் கழித்து வந்து அவனை விட்ட இடத்தில் பார்க்கிறார். அவர் கொடுத்த ரொட்டித் துண்டுகளுடனும், காசுடனும் அவன் காரியாயத்தை நோக்கிச் செல்வதை கனத்த மனதுடன் பார்க்கிறார். பின் மேலே பள்ளிக்குச் சென்று கரும்பலகையில் “நீ எங்கள் சகோதரனை போலீசில் ஒப்படைத்தால் அதற்கான தண்டனை உனக்குண்டு, நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என எழுதியிருப்பதைப் பார்க்கிறார். வெளியே வந்து வானத்தையும், கண்ணுக்கெட்டாத பல பிரதேசங்களையும் பார்க்கிறார். தீவிர தனிமையை உணர்கிறார்.
இக்கதையின் முன்னுரையில் “கதையின் கடைசி வரியில் ஒரு செய்தி இருக்கிறது. அதை நீங்களே கண்டடையுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது “இந்த நிலப்பரப்பிலே டாரு தனியானவர், ஒருத்தர்”. ஆம் அதனால் தானோ என்னவோ அவனை அவன் மக்களிடமிருந்து பிரிக்க மனமில்லாமல் முடிவை அவனிடமே விட்டுவிடுகிறார். அவனோ தன்னை உபசரித்த ஆசிரியரே பெரிது என போலீசிடம் செல்கிறான்.
ஆழமான கருவுடன் அழகான கதையை உணர, அனைவரும் வாசிக்கலாம்.
ஜானகி ராமராஜ்
நூல்: விருந்தாளி
ஆசிரியர்: ஆல்பெர் காம்யூ தமிழில் க.நா.சு.
அருமையான குறுநாவல். இரக்கம், கடமை, தனிமை,, உபசரிப்பு, அடைக்கப் பண்பு இது போன்ற மானுட சக்திகளை மிகச் சிறப்பாக காட்டுகிறார் ஆர்பெல் காம்யூ அவர்கள். மொழிபெயர்ப்பு அருமை.