ஜூன் 2019 வெளிவந்த மலையாளப் படம். ஆஷிக் அபூ இயக்கியுள்ளார். 626900 டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாம். 2018இல் கேரளாவை தாக்கிய நிபா வைரசை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை கதையம்சத்தோடு படமாக்கியுள்ளார்கள். முதல் பகுதி ஒரு நோய் தாக்கும்போது மக்களிடையேயும் நிர்வாகத்திலும் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்துவதை மருத்துவமனைக் காட்சிகளை மையப்படுத்தி காட்டப்படுகிறது. சற்று பலவீனமானவர்கள் இந்தப் பகுதியைப் பார்க்கும்போது சிரமப்படலாம். இரண்டாவது பகுதி தனிப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளும்  தொற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க அரசு நியமித்த குழுவின் செயல்பாடுகளும் இணைந்து விறுவிறுப்பாக செல்கிறது. தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்புகள் அனைத்தையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் இறுதியாக வரும் ஒரு நோயாளிக்கு மட்டும் எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு தொற்றை பயங்கரவாதிகள் பரப்புகிறார்களா இல்லை விலங்குகள் மூலம் வந்ததா என்பதை ஒரு துப்பறியும் கதை போல காட்டுகிறார்கள்.   

                   குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, பார்வதி திருவோத்து, டொவினோ தாமஸ், ரஹ்மான், இந்தரஜித் சுகுமாரன், இன்டரன்ஸ், சவ்பின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, டிலீஷ் போத்தன், ரீமா கலீங்கல், மடோன்னா செபாஸ்டின், ரம்யா நம்பீசன், ஜோசு ஜார்ஜ் இவர்களுடன் ரேவதியும் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. படம் சொல்லும் கருத்தும் அதுவே. அதாவது அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சவால்களையும் எதிர்கொள்ளலாம் என்பதே. ரேவதி அச்சு அசலாக ஷைலஜா டீச்சர் போன்றே தோற்றமளிக்கிறார். எல்லா நடிகர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

11 Famous Movies Featuring Parvathy Thiruvothu Proving Her Remarkable Talent - Iscream Sundae

                    சில இடங்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும். மருத்துவ மனை ஊழியர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பணி செய்யமுடியாது என்று சொல்வதும் மேலாளர் அவர்களுடன் பேசி நிலைமையை விளக்கி அவர்களை இணங்க வைப்பது; ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பணிக்கு வர பயப்படுவதும் பின் அவர்களும் இணைவது; இறந்தவர்கள் உடலை டிரெஸ்ஸிங் செய்ய பலர் தயங்குவது; மருத்துவர்களே பிணங்களை எரியூட்டுவது; பொதுமக்கள் தங்கள் பகுதியில் பிணங்களை எரிக்க எதிர்ப்பு தெரிவிப்பது; செவிலியரின் இறப்பு, மருத்துவர்களுக்கு ஏற்படும் நோய் என நடப்புகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. மத்தியிலிருந்த வந்த குழு ஒரு வாரத்திற்குள் தொற்றின் மூலத்தை குறிப்பாக வெளிநாட்டு தீவிரவாதிகளின் செயலா என்று  கண்டுபிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் தாங்களே அதை தங்கள் கையில் எடுத்துக் கொள்வோம் என்று சொல்லும்போது சுகாதார அமைச்சர், காவல் துறை தங்கள் கடமையை செய்யும; ஆனால் தங்களை அரசியல் ரீதியாக மிரட்ட வேண்டாம் என்று சொல்லும் இடம் சிறப்பு.

                  நிகழ்ச்சிகளை பலர் சொல்வதாகக் காட்டுவதால் படம் முன் பின்னாக நகர்கிறது. நேர்கோட்டில் செல்லும் படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு சற்று குழப்பமாக இருக்கலாம். இன்றைக்கு மிகவும் தேவைப்படும் ஒரு ஆவண மற்றும் கலாபூர்வமான படம்..        

First-look poster of Kunchacko Boban and Indrajith starrer 'Virus' revealed | Malayalam Movie News - Times of India



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *