விசாவுக்காக காத்திருக்கிறேன் - நூல் அறிமுகம், Visavukkaga Kathirukkiren, P.Vimaladevi, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் - https://bookday.in/

விசாவுக்காக காத்திருக்கிறேன் – நூல் அறிமுகம்

புத்தகத்தின் பெயர் : விசாவுக்காக காத்திருக்கிறேன்
ஆசிரியர் : டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
தமிழில் : பூ. கொ. சரவணன்
பக்கங்கள் : 32
பதிப்பகம் : நன்செய் பிரசுரம்

புத்தகம் உள்ளே செல்வதற்கு முன்னர் இந்த புத்தகத்தின் தலைப்பை
பற்றியும் அட்டை படத்தை பற்றியும் நான் கலந்துரையாட விரும்புகிறேன்.

“விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற தலைப்பு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏதோ வெளிநாட்டுக்கு செல்வதற்கு , தனக்கு விசா வரவேண்டும் என்பதாகவும், அதற்காக தன் காத்திருத்தலையும் , தன் காத்திருக்க நேரிட்டதன் காரணத்தையும் விளக்கும் புத்தகமாக தான் இப்புத்தகம் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் முற்றிலும் மாறுபட்டதாக உள்நாட்டிலேயே ஒரு மனிதன் பிறப்பின்
காரணமாக விசாவுக்காக காத்திருக்கிறார் என்று நினைக்கும் போது மனம் ரணமானது. அடுத்து அட்டைப்படம் . அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோரணை. எனக்கு எவையெல்லாம் மறுக்கப்பட்டதோ அவற்றையெல்லாம் அடைய வேண்டுமென ஆர்வம் கொண்டு அடைந்தேன் என்பதன் குறியீடாக நான் காண்கின்றேன். அட்டைப்படம் மற்றும் தலைப்பை பற்றிய இந்த கருத்துக்கள் புத்தகத்தை
வாசித்த பின்னர் என்னுள் எழுந்த கருத்துக்களே.

இனி நூல் பற்றி:

இந்நூல் ஆறு பகுதி கொண்ட கட்டுரைகளாக பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு பகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பகிரங்கமாக எடுத்துக் கூறும் நிகழ்வுகளை விளக்குகிறது.

ஒரு மனிதன் பிறப்பின் அடையாளத்தை முன்வைத்து குடிநீருக்காக ஏங்கும் இடங்கள் , பேசுவதற்கு ஒரு மனிதன் துணை கிடைக்க மாட்டானா என்று ஏங்கும் பொழுதுகள் , உண்மையான தன் அடையாளத்தைச் சொன்னால் இன்னும் என்னவெல்லாம் பறிக்கப்படுமோ என்ற ஐயங்கள் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்கிறது.

தொடர்வண்டி நிலையத்தில் சற்று தொலைவில் செல்லும் ஒரு ஊருக்கு பயணம் மேற்கொள்ள தீட்டுப்பட்டுவிடும் என்ற காரணத்தால் வாடகைக்கு வண்டி தர மறுத்த மனிதர்களின் மத ஒழுக்கம் , எத்தனை பெரிய ஜாம்பவானாக நீ இருந்தாலும் சரி… , உன்னிடம் எத்தனை பணம் காசுகள் அதிகமாக புழங்கினாலும் சரி… நீ தீண்டத்தகாதவன் தான் என்பதை ஆணித்தரமாய் சொல்கிறது.

வயிறு நிறைய உண்பதற்கு வண்டியில் உணவு இருந்தும் , தாகம் எடுத்தால் அருந்துவதற்கு நீர் கிடைக்காதே என்ற ஏக்கத்தில் வயிற்றை பட்டினி போட்டு பல மணி நேர பயணம் செய்யும் நிலைமை , எந்த மதம் மனிதனுக்கு கற்பித்த பாடம் என்று தெரியவில்லை..?

வகுப்பில் ஆரம்பித்து , படித்து அரசு பணியாளராக வேலை செய்யும் இடங்களிலும் கூட , குடிதண்ணீருக்கு அதற்காக நியமிக்கப்பட்டவர் வந்து இவர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட குவளைகளில் தண்ணீர் ஊற்றினால் மட்டுமே தாகம் தணிக்கப்படும் என்ற நிலைமை , ஏன் அந்த மனிதனின் ஆறறிவை ஓரறிவாய் மாற்றியது.

இந்து ஒருவனுக்கு தீண்டப்படாதவனாக இருப்பவன் , பார்சியாக இருந்தாலும் முகமதியனாக இருந்தாலும் அவர்களுக்கும் அவன் தீண்டப்படாதவனே என்பதை விளக்குகின்றன இன்னும் சில பகுதிகள்.

ஒரு சாதாரண கூலி தொழிலாளியை விட எவ்விதத்திலும் மேம்பட்டவனாக இல்லாத சாதி இந்து வண்டியோட்டிற்கு கூட சமூக மதிப்பு இருந்தால், அதன்படி அவன் எல்லா தீண்டப்படாதவர்களை விடத் தன்னை மேலானவனாகக் கருதி கொள்கிறான். அந்த தீண்டப்படாதவர் பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் என்றாலும் அவனுக்கு ஒரு பொருட்டில்லை.

தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் ஒரு நாற்காலியில் அமர விடாது , இன்னும் ஒரு படி மேலே போய் அவன் தனக்கு சமமாக இந்த அலுவலகத்தில் வேலை செய்யக்கூடாது என்று , அவனை தன் கையாலேயே வேலை நீக்கம் செய்ய வைத்து , அவனது சொந்த ஊருக்கே மூட்டை கட்டி அனுப்பிய சம்பவங்கள் எல்லாம் , வலிகளை கடந்த வாழ்வை தேர்ந்தெடுத்த வழிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

விடுதியில் முதல் மாடியில் சிறு படுக்கையறை, அதையொட்டி ஒரு தண்ணீர் குழாயோடு கூடிய சிறிய குளியலறை. மீதமிருந்த இடம் பெரிய கூடமாக இருந்தது . நான் தங்கி இருந்தபோது அந்த பெரிய கூடத்தில் குப்பை கூலங்கள், பலகைகள் , இருக்கைகள், உடைந்த நாற்காலிகள் முதலிய எல்லாவற்றையும் கொட்டி நிரப்பி இருந்தார்கள் . இத்தனையும் சுற்றி வளைத்துக் கொள்ள இவற்றுக்கு இடையே ஒற்றை ஆளாக நான் தனித்து வாழ்வேன். தவிர்க்கவே முடியாத போது மட்டுமே பராமரிப்பாளர் உணவோடு எட்டிப் பார்ப்பார் . அதுவும் பேசா மௌனத்தோடு…

இந்த வானத்திற்கு கீழே எனக்கென்று ஒதுங்க ஓர் இடமும் இல்லாததால் தான் நான் அவ்விடுதியில் சென்று தங்க வேண்டி இருந்தது . முதல் மாடியில் பெரிய கூடத்தில் என்னோடு அளவளாவ சக மனிதர்கள் யாரும் இல்லை . மொத்த கூடத்திலும் இரவோடு தனிமையும் அப்பிக் கிடந்தது. அப்போதெல்லாம் எனக்கு துணையாக இருந்தது சிறிய ஹறிக்கேன் விளக்கு.‌ மனிதர்கள் என்னோடு பேச வர மாட்டார்களா என மனித துணைக்காக ஏங்கி தவித்த நான் , புத்தகங்களின் நட்பை நாடினேன் . படித்தேன்… படித்தேன்… ஓயாமல் படித்துக் கொண்டே இருந்தேன். நூல் வாசிப்பில் லயித்துப் போய் என்னுடைய தனிமையை மறந்தேன்.

இந்த வரிகள் போதும் ஒரு மனிதன் பிறப்பின் காரணமாகப்பட்ட அசூயை சொல்ல.

தீண்டப்படாதோர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை காட்டும் நிகழ்வுகளை பதிவு செய்ய இரு வழிமுறைகளை தேர்ந்தெடுக்கிறார்.

ஒன்று சில பகுதிகள் அவருடைய அனுபவங்களாகவும் , பிற பகுதிகள் பிறரின் அனுபவங்களாகவும் இருக்குமாறு அமைத்துக் கொண்டதாகவும் அவை விளக்கப்படுகின்றன.

சுருக்கமாக சொல்லப்போனால் எல்லா வகையிலும் கிராமத்தை தங்களின் சொந்த மண்ணாக கருதினாலும் கிராமத்தைச் சேர்ந்த எவர் ஒருவரையும் ஒருபோதும் தொடமுடியாதவராகவும் , எவர் ஒருவராலும் தீண்டப்படாமலும் அவர்களால் எப்படி இருக்க முடிந்தது என்பதை விளக்குகிறது “விசாவுக்காக காத்திருக்கிறேன்” எனும் இந்நூல்.

நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *