விஷ்ணு விஷால் நடித்த "ஆர்யன்" தமிழ் திரைப்பட விமர்சனம் | Vishnu Vishal's Aaryan (2025) Tamil Movie Review | www.bookday.in

விஷ்ணு விஷால் நடித்த “ஆர்யன்” தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆர்யன் – தமிழ் திரைப்படம் 2025, அக்டோபர் மாதம் வெளிவந்துள்ள இந்த படத்தின் திரைக்கதையை பிரவீன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அவரது முதல் படமாம் இது. விஷ்ணு விஷால் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நிறுவனமே இதை தயாரித்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் மானசா சவுத்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது நெட்டபிலிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

ஒரு புதின எழுத்தாளர் தனது மர்மக் கதை ஒன்றை எவரும் வெளியிடாததினால் விரக்தி அடைந்துள்ளார். தன்னைப் போன்றே சமூகத்தில் நல்ல சேவைகளை செய்து வரும் பலரும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கப்படுவதையும் ஏளனப்பட்டும் வருவதைக் கவனித்த அவர் அப்படிப்பட்ட ஐந்தாறு நபர்களின் கதையையே நாவலாக்குகிறார். சமூகத்தின் கவனத்தை அபப்டிப்பட்டவர்கள் மீது திருப்புவதற்காக அவர்களைக் கொலை செய்கிறார். தானும் தற்கொலை செய்து கொள்கிறார். என்ன மோசமான லாஜிக்? பொதுவாக இப்படிப்பட்டவர்களை மய்யமாக கொண்டு எழுதப்படும் கதை, ஒன்று அவர்களை யாரோ ஒருவர் கை தூக்கி விடுவதாக இருக்கும்; அல்லது அவர்களே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இருக்கும். இன்னும் சிலவற்றில் அவர்கள் பயங்கரவாதிகளாக மாறி தங்களை ஒதுக்கியவர்களை பழி வாங்குவதாக காட்டுவார்கள். ஆனால் இந்த மூன்றுமே இல்லாமல் அவர்களை கொலை செய்வதன் மூலம் சமூகத்தின் கவனத்தை திருப்புவது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

முதல் காட்சியில் எழுத்தாளர் அழகர் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நபராக இறப்பார்கள் என்று சொல்லிவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துவிடுகிறார். அதே போல் நடக்கவும் செய்கிறது. இறந்து போன அவர் எப்படி கொலை செய்கிறார் என்று காவல்துறையினர் தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அழகர் ஊடகங்களில் தோன்றி இறக்கப்போகிறவரின் பெயரை அறிவிக்கிறார். அந்தப் பெயரில் ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பார்கள்; எப்படி அவர்களை அடையாளம் காண்பது? இரண்டு மூன்று நிகழ்வுகளுக்கு பிறகு இறப்பவர்களுக்கு சில ஒற்றுமைகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். தனிமையில் இருப்பவர்கள்; விரக்தியில் இருப்பவர்கள் என்று. ஆனால் அதை வைத்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில்தான் அவர்கள் எல்லோருக்கும் முக்கிய ஒற்றுமை ஒன்று இருப்பது தெரிய வருகிறது. எல்லோரும் ஒவ்வொரு துறையில் செயல்பாட்டாளர்கள்.

இவர்களைக் கொல்வதற்கு அழகர் பயன்படுத்தும் முறைகள் அறிவியல் ரீதியானதாக காட்டுகிறார்கள். ஒருவரை மட்டுமே அழிக்கும் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு, ஒப்பனை பொருளில் சயனைட் விஷம், ஆழ்கடலில் மூழ்கும் யுவராஜின் ஆக்சிஜன் சிலிண்டரில் நைட்ரஜன் கலக்காத சுத்தமான ஆக்சிஜன்(நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்திருக்கிறது. சுத்தமான ஆக்சிஜன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறது), மெழுகுவர்த்தியில் விஷம் என பல்வேறு விதங்களில் கொல்லப்படுகிறார்கள்.

இந்தக் கொலைகளுக்காக, அழகர் பத்து வருடம் ஆய்வு செய்து பயன்படுத்திய தொழில்நுட்ப முறைகள் நடைமுறையில் இல்லாதது அல்லது சாதாரண மனிதர்கள் அறியாதது; தற்செயல் நிகழ்வுகள் என்று ஒரு விமர்சகர் கூறுகிறார். பல திகில் திரைப்படங்களில் இரைச்சலை அழுத்தமானது என்றும் சிக்கலானதை ஆழமானது என்றும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அத்தகைய படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் அவர். செயற்பாட்டாளர்கள் குறித்த சமூக விமர்சனம் என்பது பின்னால் சேர்க்கப்பட்டது என்றும் சொல்கிறார்.

ஆர்யன் என்ற தலைப்பு இன ரீதியானது அல்ல; கொல்லப்படுபவர்களின் முதல் எழுத்தை சேர்த்து அது வைக்கப்பட்டுள்ளது. எல்லா சமூக சேவகர்களுமா ஒதுக்கப்படுகிறார்கள்? அவர்களுக்கான உரிய இடம் கொடுக்கப்படுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டுமே ஒழிய இப்படி விசித்திரமான முறைகளை முன் வைக்கக்கூடாது. பிரவீன் அடுத்த முறை சரியாக செய்ய முயற்சிப்பார் என்று நம்புவோம்.

எழுதியவர் : 

✍️ – இரா.இரமணன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *