எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் | Vishnupuram Saravanan | Kayiru | கயிறு

எழுத்தாளர் நக்கீரன் சொல்வதைப் போல் “மிகச் சிறிய கதை ஆனால் மிகப்பெரிய சமூக நோயான சாதிய சிக்கலை பேசுவது இதன் சிறப்பு.”
எங்க ஏரியா பக்கமெல்லாம் கையில் அல்ல இடுப்பில்தான் கயிறு கட்டுவார்கள் (அரைஞாண் கயிறு). எதற்காக எனில் அதுவும் ஒரு சாதிய முறையை அடையாளப்படுத்துவே கட்டபடுகிறது என்று நினைக்கிறேன்.

தோழர் தமிழ்ச்செல்வனிடம் ஒருமுறை பேசும்போது சொன்னார் கல்வி என்பது பாட புத்தகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் மட்டுமல்ல நம் வீடுகளில் இருந்தே குழந்தைகளுக்கு தொடங்குகிறது. அந்தக் கல்வி தெரு வழியாக பயணித்தே கல்வி நிலையங்களை போய் சேருகிறது.

அப்படி வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் ஒரு சின்னஞ் சிறிய கதை தான் ‘கயிறு’.

திங்கட்கிழமை மாலை ஆரம்பித்து வெள்ளிக்கிழமை மாலை முடிகிறது மொத்தம் ஐந்தே ஐந்து நாட்கள் தான். அந்த ஐந்து நாட்களில் மொத்தம் ஐந்து பக்கங்களில் இந்தியாவின் சமூக, ஏற்றத்தாழ்வுகளை சாதிய ஒடுக்கு முறைகளை ஒரு சின்னஞ்சிறிய கயிற்றை கொண்டு சொல்லி விடுகிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) முதலில் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பிறகு கதைக்குள் வருவோம். (சிலர் பக்கம் பக்கமாக நாவல்கள் எழுதினாலும் சமூகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்) .

“எதையும் சுதந்திரமாக,சுத்த அறிவுகொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி.அப்போதுதான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும். – தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் மேற்கோளுடன் ஆரம்பிக்கும் புத்தகம் எந்தப் பழக்கம் என்றாலும் ஏன், எதற்கு என்று கேட்டு பழக வேண்டும் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

முன்னதாகவே சொன்னதைப் போல திங்கள் கிழமை மாலை நேரம் ஐந்து மணிக்கு செழியன் வலது கை மணிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் ஒரு கயிறு கட்டிக் கொண்டு தன் அம்மாவிற்கு காட்டுகிறான்.

அம்மாவுக்கு பெரும் அதிர்ச்சி ஏனெனில் அவர்கள் வீட்டில் யாருக்கும் கையில், கழுத்தில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லை.

செழியன் அந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான்.

அவன் வீட்டில், செழியன், அம்மா வளர்மதி, அப்பா கதிரவன் ஆகியோருடன் தங்கை கயல்விழியும் இருக்கிறாள். இது சிறப்பு அல்ல கதையில்.

தினந்தோறும் இரவில் கதை சொல்லும் பாட்டி ஒருவர் இருக்கிறார். கதை மட்டுமல்ல நன்றாக நடிக்கவும் செய்வார் பாட்டி. தெருக்கூத்துகளில் நடித்திருக்கிறாராம். ( பெரும்பாலும் பெண்கள் இப்போதெல்லாம் பாட்டிகள் ஆவதில்லை என்று எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு நேர்காணலில் குறிப்பிடுவது போல நிறைய வீடுகளில் இன்று பாட்டிகள் இருப்பதில்லை).

அதுவும் கதை சொல்லும் பாட்டிகளெல்லாம் அமைந்தால் கொடுத்துவைத்திருக்க வேண்டும் நாம்.

கதைக்கு வருவோம் செழியன் கையில் கயிறு கட்டி இருந்தது அல்லவா அந்த கயிற்றை யார் கட்டினார்கள் என்று செழியனின் அம்மா கேட்கும்போது.
“நம்ம தெருவுல இருக்கிற சேகர் அண்ணா. எங்க ஸ்கூல் பக்கத்துல ஒரு பெட்டிக்கடை வச்சிட்டு இருக்காரு மா அவர் தான் கட்டினாரு.

அந்த அண்ணன் தான் இந்த கயிற்றைக் கட்டி விட்டார் என்று மீண்டும் சொல்லிவிட்டு கையை திருப்பி திருப்பி அந்த கயிற்றை ரசித்தான் செழியன்”.

நாளைக்கு பள்ளிக்கூடத்திற்கு போகும்போது “ஏன் இந்த கயிறு கட்டி விட்டிங்கன்னு கேளு செழியா மறந்த விடக்கூடாது” என்று அம்மா சொன்னதால்.
மறுநாள் காலையில ஸ்கூலுக்கு போகும்போதே முதல்ல அந்த கடைக்கு தான் போனான். அண்ணன் கிட்ட “எதுக்குண்ணா இந்த கயிற்றை எனக்கு கட்டினீங்கன்னு” கேட்டதற்கு “ஸ்பெஷலா எந்த காரணமும் இல்லை. சும்மா அழகுதான்” என்று சொன்னார்.

அதை அம்மாவிடம் சொன்ன பிறகு “மஞ்சள் விட நீல கலர் கயிறு தான் உனக்கு நல்லா இருக்கும். யூனிபார்ம் கூட நீலம் தானே கயிறு அந்த கலரில் இருந்தால் மேட்சிங்கா இருக்கும். அதனால நீல கலரில் கயிறு கட்டிக்கவா அந்த அண்ணன்கிட்ட கேளு” என்று சொன்ன பிறகு, அவனும் அந்த அண்ணன் கிட்ட நீல கலர்ல கயிறு கட்ட சொன்னதற்கு அந்த அண்ணன் “மஞ்சள் கலர் தான் நம்ம கட்டணும். நம்ம அடையாளம். வேற கலரில் கட்டக் கூடாது”.என்று சொன்னதையும் அம்மாவிடம் சொன்னான் செழியன்.

பிறகு செழியனின் அம்மா “உனது பெஸ்ட் பிரண்ட் யார்? “.என்று கேட்டதற்கு சட்டென்று “அம்பேத்” என்று சொன்னான். பிறகு “உன் நண்பனையும் அழைத்து அந்த கடைக்கு சென்று ஒரு கயிறை அவனுக்கு கட்டிவிடு” என்று சொன்னதால் மறுநாள் கடைக்கு நேராகச் சென்று அந்த அண்ணனிடம்
அம்பேத்துக்கும் எனக்குக் கட்டி விட்ட மாதிரி ஒரு மஞ்சள் கயிறு கேட்டதற்கு…

அவர் ரொம்ப கோவம் ஆயிட்டாரு.

அவன் எல்லாம் இந்தக் கயிறெல்லாம் கட்டக்கூடாது. நீயும் இப்படி எல்லாம் யார்கிட்டயும் கேட்கக்கூடாது என்று சத்தம் போட்டதால் பயந்து செழியன் தன் அம்மாவிடம் மீண்டும் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

அம்மா அவனை உற்சாகப்படுத்தி தைரியப்படுத்தினால்.

நாளைக்கு மீண்டும் சென்று அந்த அண்ணன் கிட்ட அம்பேத்க்கு இந்த கலர்ல கயிறு ஏன் கொடுக்க மாட்டேன்னு கேளு என்று சொல்லி அனுப்பினார். அவனும் அதே மாதிரி போய் கேட்டான். அதற்கு கடைக்காரர் என்ன சொன்னார் தெரியுமா “நாம எல்லோரும் ஒரே ஆளுங்க அவங்க வேற ஆளு, நாம் உயர்ந்த ஆளுங்க…அவங்க எல்லாம் நமக்குக் கீழ அதனால அந்தப் பையன் இந்த கலர்ல கட்டக் கூடாதுன்னு சொன்னார்…இதைப் பத்தி மறுபடியும் என்கிட்ட பேசாதன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப கோபமா வந்துச்சு…என்னைவிட அம்பேத்துதானே அதிகமா மார்க் வாங்குவான்…பேச்சுப் போட்டியிலும் அவந்தான் ஃபர்ஸ்ட்…அப்புறம் எப்படி அவன் எனக்குக் கீழேன்னு நினைச்சு குழப்பமா இருந்துச்சு” என்றான் செழியன்.

அப்புறம் என்னாச்சு என்று ஆவலுடன் கேட்ட அம்மாவிற்கு…

“எனக்கும் அம்பேத்துக்கும் உள்ள ஃபிரண்ட்ஷிப்பை அந்த கயிறு பிரிச்சிடுமோன்னு தோணுச்சு…அதான்” என்று சொல்லி வலது கையை காட்டினான். அவன் கையில் அந்த மஞ்சள் நிறக் கயிறு இல்லை.

“அந்தக் கடை வாசல்லயே அந்த கயிற்றை அவுத்து கீழே போட்டு விட்டேன்” என்றான்.

அந்தக் கடை வாசலில் கயிற்றை மட்டுமல்ல அவன் சாதியும் தூக்கி தூர வீசியெறிந்து விட்டு செழியன் வந்தான் என நினைக்கிறேன்.

செழியினைப் போல நாமும் சாதியை தூக்கி எறிந்து விட்டு சக மனிதர்களை சக மனிதர்களாக நேசிப்போம்.

புத்தகத்தில் குறிப்பிடுவது போல் ‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்”.

மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும், வாசிப்பு பழக்கம் நோக்கி சிறாறை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக வெளியிட்டு வரும் ஓங்கில் கூட்டம் பதிப்பகத்தையும், ஒருங்கிணைக்கும் எழுத்தாளர்களையும் வாழ்த்தி பாராட்டுகிறேன்.

குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் இல்லாத சூழல் என்று பேசிக் கொண்டிருக்கையில் நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்களும், இலக்கியங்களும் தமிழில் வரவேண்டும்.

அனைத்து பகுதிகளுக்கும் அந்த புத்தகங்கள் சென்றடைய வேண்டும். அப்பணியை எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், வாசிப்பாளர்களும் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையும் அவசியமும் தற்போது நிறைவே இருக்கிறது.

மிகச் சிறிய கதையில் மிகப்பெரிய சிக்கலை பேசி இருப்பதால் இதனை எத்தனை முறை பாராட்டினாலும், வாழ்த்தினாலும் மனம் அமைதி கொள்ள மறுக்கிறது.

மீண்டும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுக்களும். 💐💐💐

நூலின் தகவல்கள்: 


நூலின் பெயர்
: கயிறு – இளையோர் சிறுகதை

தமிழில் : விஷ்ணுபுரம் சரவணன்

விலை ரூ. 30/-

பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்

 

அறிமுகம் எழுதியவர்: 

அமுதன் தேவேந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *