2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்றது விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றை சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) புத்தகம். இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
இப்போது கவிஞர்.வெய்யில் எழுதிய அணிந்துரை பார்ப்போம்….
நானும் பறந்தேன்…
நண்பர்களே…
இந்த பிரபஞ்சத்தில் பூமி தனித்துவமான உயிரிகளைக்கொண்ட கோளாக விளங்குவதற்கும், பூமியில் மனித இனம் தனித்துவமாகப் பரிணாமம் கண்டதற்கும் மொழியே முதன்மைக் காரணம் மொழி அப்படித் தனிச்சிறப்புகொண்ட ஒன்றாக இருப்பதன் காரணம் என்ன? மொழி, மனிதச் சமூகத்தின் கடந்தகால நினைவுகளையும் எதிர்காலக் கனவுகளையும் தன்னுள் கொண்டவை; நிகழ்கால உணர்ச்சிகளை ஆள்பவை. அஃறிணைகள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் சச்சரவின்றி ஒன்றுகூடிச் செயலாற்ற இயல் இயலாதவை. ஆனால், கோடிக்கணக்கான மனிதர்கள் ஓரிடத்தில், ஓருணர்வில் அமைதியாகத் திரளவும் செயல்படவும் முடியும். இது இப்படிச் சாத்தியமானது? சாத்தியமாகிறது? மொழி மொழிக்குள் உருவாக்கப்பட்ட புனைவுகளே அதன் முக்கியக் காரணம். அப்படியான புனைவுகளின் வழியாகத்தான் கடவுள், சாத்தான், பேய், பூதம், சொர்க்கம், நரகம், தேவர்கள். தேவதைகள் எல்லாம் தோன்றினார்கள். மொழியில் சாத்தியமான இந்தக் கதையம்சம்தான் மனிதர்களை ஆச்சர்யப்படுத்தியது ஆற்றுப்படுத்தியது ஒன்றுதிரட்டியது ஓடச்செய்தது. சமூகம் கோடிக்கணக்கான சமூகங்களாகப் பிரிந்திருந்தாலும், ஒரு கதையால் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும்; உணர்ச்சியூட்ட முடியும்.
மொழியின் முதன்மையான, தொன்மையான, வசீகரமான உடல் என்பது கதைதான். கதையின் வானத்தில்தான் வடை திருடிய காகம், நீதி பற்றிய ஒரு பாடலை பாடித் திரிகிறது காலம்காலமாய். நண்பர்களே கனவுகளை மொழிப்படுத்தும் சாகசம்தான், கதை!
இயல்பிலேயே படைப்பூக்கம் கொண்டவர்கள் சிறார்கள். அவர்களிடம் கனவுகளுக்கும் கற்பனைக்கும் கதைகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை. சிறார்களுக்கு கதை எழுதவது என்பதும், கொல்ல தெருவுக்கே சென்று ஊசி விற்பதைப் போன்றது. அப்படியான சவால் மிக்க பணியை தமிழில் மிகச் சிலரே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் விஷ்ணுபுரம் சரவணன் இது அவரின் இரண்டாம் சிறார் நாவல்.

‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற தலைப்பை வைத்து, இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை! பின் முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும் இப்படியாக இருக்குமோ என்று இன்னொரு கதையை யூகித்தேன். அதுவும் இல்லை! ஒவ்வொரு பத்துப் பக்கத்துக்குமாக புதிய புதிய திசையில் கதை விரியத் தொடங்கியது. ஓவியா சூடிக்கொண்டது போக மீதமிருந்த அந்த ஒற்றைச் சிறகை அணிந்துகொண்டு கதைக்குள் நானும் பறக்கத் தொடங்கிவிட்டேன்.
அரசுப் பள்ளியில், ஏழாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் படிக்கும் ஐந்து மாணவர்கள், ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒத்திகைப் பார்க்கும் சமயம், திடீரென்று சில அற்புதங்கள் நடக்கின்றன. அந்த அற்புதத்தையே விழாவில் கலைநிகழ்ச்சியாக நடத்தலாம் என முடிசெய்கிறார்கள் நண்பர்கள். இவர்களின் அற்புதம் நிகழ்வதற்கு அவசியாமன பொருள் ஒன்றை திருடி மறைத்து வைக்கிறார்கள் 8-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர்.
என்ன அற்புதம்? அது ஏன் நடந்தது? இழந்த ‘அற்புதப் பொருளை’த் தேடும் பயணத்தில் அவர்கள் பெற்ற அனுபவமும் செய்தியும் என்ன? இறுதியில் அந்த அற்புதம், கலை நிகழ்ச்சியாக விழாவில் நடத்தப்பட்டதா இல்லையா? என்கிற கேள்வியும் பதிலும்தான் கதைச் சுருக்கம், ஆனாலும், கதை மெல்ல மெல்ல விரிந்து தீவிரம் பெறும் விதம் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கனவுகளுக்குள் சென்று ரகசியங்களைத் தேடுவது, மண்புழு கொண்டு வரைபடம் உருவாவது. ஒலியிலிருந்து வாசனை எழுவது. பூக்களால் வரையும் உருவம் உயிர் பெறுவது என சிறார் உலகில் சரவணன் வண்ணம் தீட்டும்விதம் அலாதியானது. எல்லாக் குழந்தைகளுக்கும் சுதந்திரமும் மகிழ்ச்சியும் பொதுவானது என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், அரசுப் பள்ளி மாணவியும் வறுமையான வாழ்க்கைச் சூழலும்கொண்ட ஓவியாவின் ஒற்றைச் சிறகுக்கே உயிர் உண்டாகட்டும் என்று தனது மந்திரக்கோலை உயர்த்தும்போது சரவணன் நம் மனதில் பதிகிறார்.
ஒரு ஃபேண்டசி சஸ்பென்ஸ் கதைக்குள், தமிழகத்தின் மிக முக்கியமான ஓர் அரசியல் பிரச்னையை மிக லாகவமாகப் பிண்ணியிருக்கிறார். அதில் தொளிக்கும் கேள்விகளும் அச்சமும் விழிப்புணர்வும் இக்கதையை வாசிக்கும் சிறார்கள் மனதில் மிக ஆழமாக இறங்கும். அதுவே இக்கதை பெறப்போகும் முக்கிய வெற்றி என்பேன். ஏன் நிலத்தில் முன்பைப் போல மண்புழு இல்லை? இப்போது ஏன் நீர் அதன் இயல்பு நிறத்தில் இல்லை? என்ற இரண்டு கேள்விகளை இரண்டு சிறுவர்கள் இந்தச் சமூகத்தை நோக்கிக் கேட்டால் போதுமானது.
இயற்கைதான் மாபெரும் அற்புதம்; மிகப்பெரிய கனவு: ஆகச்சிறந்த மேஜிக், வாழ்வும் அப்படித்தான். குழந்தைகளைக் கனவுகளின் வழியே, கதைகளின் வழியே யதார்த்த உலகத்துக்கு வெளியே அழைத்துச் செல்லாமல், இந்த உலகின் உண்மையை நோக்கி மிக நுட்பமாக அழைத்துச் சென்ற வகையில் சரவணன் பாராட்டுக்குரியவர்.
கதையில் ஓரிடத்தில், இயற்கை சுரண்டப்படுவதற்கு எதிராகப் போராடியதற்காகக் கைதுசெய்யப்பட்ட 12 பேரின் பெயர்களில் அற்புதத்தை அடையும் சாவிகளில் ஒன்றை ஒளித்துவைக்கிறார் சரவணன், இனி கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்களிலெல்லாம் யாரேனும் ஒரு சிறுவனோ சிறுமியோ அற்புதங்களின் சாவியைத் தேடுவார்களல்லவா? அது போதும்!
நிறைய்ய அன்புடன்
சென்னை.
வெய்யில்
21.08.2019,
நூலின் விவரம்:
நூல்: ஒற்றைச் சிறகு ஓவியா (Ottrai Siraku Oviya)
ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan)
வெளியிடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ. 120 (2025 ஜூன் 18 – 19 ஆகிய இரு தினங்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் 50% சலுகை விலையில் ரூ.60)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.