Vitha Vithamai Thoyulagam By Bharathichandran கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் - பாரதிசந்திரன்

கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், வாழ்வின் சுவடுகளைத் தொட்டு, வருடி, அலசி, அங்காலயத்து வேறு வேறு கோணங்களில் உருவமைத்துத் தெளிவுறவுணர்ந்து உணர்ந்தவாறே வெளிப்படுத்தத் தெரிந்த மாயாஜாலக்காரர்.

 ”என்ற ஒன்று எனும் அவரது தொகுப்பு முழுவதும், வான்வெளிப் பரப்புகளில் வாசகனைப் பறக்கவிடும் சாகசக்காரர்.  அக்கவிதைத் தொகுப்பில்விதம் எனும் கவிதை, நமக்கான பார்வைக்கு வேறு ஒரு பார்வை தருகிறது.

உள் நுழைந்து, விரவி, அதாகிக் கடக்கும் போது, பிரிதொன்றிலிருந்து மீள்வதோ அல்லது விளைவித்துக் கொள்வதோ  இயலாத ஒன்றாகி விடுவதாகவே ரகம் பார்ப்பதில் அல்லது ரகம் பிரிப்பதில் பெரும்பாலும் எல்லாமும் அமைந்து விடுகின்றன. இதை விளக்கி விட முனைவதாகவே கவிஞர் அபியின்விதம் கவிதை அமைகிறது.

மேலிருந்து பாருங்கள் எல்லாவற்றையும் என்பதைப்போல், உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்ததுண்டா? கடற்கரையில் விளையாடுவது, பூங்காவில் விளையாடுவது இரண்டும் விளையாட்டுத் தான். ரகம் வேறு வேறான பதிவுகளோடுக் கிளர்ச்சிகளை அது எளிமையாய் படம் வரைகின்றன நமக்குள்.

தியேட்டரில் படம் பார்ப்பதும், வீட்டில் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும், ஒரே  நேர்கோட்டில் அச்சுவார்த்தாற் போல், நமக்குள் உணர்வைச் சில்லிட வைக்குமா? என்றால் இதுவும் அதுவும் வேறு வேறு ரகம். ஆனால் செயல் ஒன்று தான்.

”பாத்திரத்திற்குள் இருப்பதை மூடி அறியாதா என்ன? மூடிகள் திறக்கப்பட்டால், உள்ளிருக்கும் பாம்பு, புழுக்களுக்குத் துன்பம்தான். ஆகவே, எப்படிப் பார்ப்பது என்பதில் கவனமாக இருங்கள். எந்தக் கனவுகளை உங்களில் அனுமதிக்கிறீர்கள் எதை அனுப்பி விடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று மிர்தாதின் புத்தகம்’ வழி மிகெய்ல் நைமி’ கூறுவார்.

உள்ளும் – புறமுமான, இருப்பதும் – இல்லாதிருப்பதுமான தோற்ற வெளிப்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதைக் கவிஞர் அபி தனது அரண்மனைகளுக்குத் தூண்களாக நிறுத்தி வைத்திருக்கின்றார். நாமே நாமாகயில்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதை நாமறிந்திருக்கின்றோமா? என்றால், ஏமாற்றம் தான் என்கிறார். 

நாம் எத்தனை எத்தனை வேடம் தரித்த வேடதாரிகளாய்க் காட்டிக்கொண்டே எப்பொழுதும் ஒன்றே ஆகி இருப்பதாய் மார்தட்டிக் கொள்கிறோம். இது,  நமக்கு  எப்பேர்பட்ட தோல்வி  என்கிறார்.

சூழலிலிருந்து
பிரிபட்டு
உருக் கொண்டெழும்
விஷயங்களை
ஊடுருவியதில்

விதம் புணர்ந்த
வாழ்க்கையை
நீள்கோடுகளில் ஆராய்ந்ததில்
எதிலும் தோல்வி”

எதிர்நோக்கும் கண்களில், ஒன்றாய் நாம் சிக்குவோம்.  நம்மை அசை போட்டு, மென்று, முழுங்கி,இது இப்படியாய் இருக்கிறது என்று அப்பதிவேட்டில் பதியப்படும்.  நாம் காட்சிப்பொருளாகி நிற்பது, ஒன்று இரண்டல்ல, வாழ்நாளில் ஓராயிரம். ஒவ்வொன்றும், ஒவ்வொன்றாகவே நம்மைப்  பற்றி  எழுதி  வைத்துக் கொள்கின்றன.

நாம் வளர்க்கும் எதோ ஒன்று, நம்மை எதோஒன்றாய் நினைக்கும். அதனின் இனமான வேறொன்று வேறோரிடத்தில் போகும் பொழுதோ, நிற்கும்போதோ அது, முன்னது நினைத்த அதையே தான் நினைக்கும் எனக் கூற முடியாது என்பதை இனம் பிரித்து அறிந்து கொள்வதைப் போல் தான் எல்லாமும்.

”விதம்
என்ன என்று தெரியாமல்
விழிப்பதே  வழக்கம்.

விதம் மெல்லச் சிரித்து
இரக்கத்தோடு பார்த்து
அசைவு எதுவுமின்றிக்
கடந்து போகும். (அப்படித் தோன்றும்)

எனக்கோ
விதம்
என்ன என்பது புரியாது”

நிகழ்வுகளை உணர்கின்றோம். அலசி ஆராய்கின்றோம். அதற்காகச் சில நேரம் வேறொன்றாய் மாறுகின்றோம். பின், உணர்த்துகிறோம். தாளமுடியாமல் சலித்துப் போய்,இதுதான் நான். போனால் போ”  என்கிறோம்.

  • எல்லாம் சரி. இருத்தலைப்  பூரணத்துவமாய்  இருந்திடாமல் வாழ்வதென்பது எது?
  • எத்தனை தோல்விகளை நமக்கே நாம் தருவது?
  • இருபுறமும் எளிமையாய் ஏமாறும் பட்டவர்த்தனம் உண்மையா?
  • கபடத்தின் வெளி விரிந்த வானத்தைத் தடவிக்கொண்டும் நடந்து நடந்து பார்ப்பதுதான் நீயா?  இல்லை  நானா?

எனப் பல கேள்விகளை இக்கவிதை முன்வைக்கிறது.  இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இக்கேள்விக்குத்  “தெளியுமா?  தொய்யுலகம்”

பாரதிசந்திரன், 9283275782,
[email protected]

  •  (கவிஞர் அபியின் 80- ஆவது பிறந்த நாள் ஜனவரி-22 ஆகும். அவரைச் சிறப்பிக்கும் வண்ணம் இக்கட்டுரையை வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டுகிறேன்.)
  • (கவிஞர் அபி குறித்தறிய www.abikavithaiulagam.blogspot.com எனும் எமது வலைப்பூவைக் காணலாம்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *