வித்தியாசம் தான் அழகு – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : வித்தியாசம் தான் அழகு
ஆசிரியர் : ச. மாடசாமி
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 112
விலை : 110
பேரா. ச. மாடசாமி அவர்களை தமிழக கல்வி தளத்தில் இயங்குகிறவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. காரணம் எனக்குத் தெரிந்து 1990 முதல் இன்று வரை குழந்தைகள் மற்றும் மக்களுக்கான கல்வியை கடைநிலையில் உள்ள மக்களுக்கு எப்படியாவது சென்று சேர்த்துவிட வேண்டும் என்று துடிக்கின்ற இதயம் அவருடையது. எப்போதும் யாரிடமாவது எது குறித்துப் பேசினாலும் அதில் கல்வி வந்துவிடும்.
அவர் பெரிதும் எழுதிய நூல்கள் கல்வி சார்ந்தவையாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து பாம்பாட்டிச் சித்தர் என்ற புத்தகமும், ஒரு அரசியல் புத்தகமும் (பெயர் தெரியவில்லை) தவிர மற்றவை அனைத்தும் கல்வி சார்ந்தவையாகவே இருக்கும். இவருடைய படைப்புகள் அனைத்தும் ஆசிரியர்களுக்குப் பெரிய வழிகாட்டியாக இருக்கும். குறிப்பாக இளம் ஆசிரியர்கள் அந்த புத்தகங்களைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். அப்படியாக வாசிக்க வேண்டிய புத்தகம் தான்
”வித்தியாசம் தான் அழகு” என்ற புத்தகம். இதில் 20 கதைகளும் அது சொல்லும் நீதிகளும் யாருக்கு என்பதைத் தெளிவாக பதிவு செய்துள்ளார். இது பெற்றோருக்கும், ஆசிரியருக்குமான நீதிக் கதைகளை கொண்டது. ஆனால் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய கதைகள்.
கதைகள் என்னமோ வெளிநாட்டுக் குழந்தை எழுத்தாளர்களின் கதைகள் தான். ஆனால் அந்த கதைகளை சொல்லும் முன் அவர் முன்வைக்கின்ற தன்னுடைய அனுபவம் மிக முக்கியமானது. அதற்காக அவர் கையாளுகிற வார்த்தைகள் மிகவும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளாக இருக்கும். அவர் பேசுவதும் கூட மிக நிதானமாக பேசக்கூடியவர்.
அறிவொளி இயக்கத்தின் அனுபவத்திலிருந்து இலங்கை அகதிகள் குழந்தைகள், நரிக்குறவர் வீட்டுப் பிள்ளைகள் எப்படி வெளியேறினார்கள் என்ற வருத்தத்தோடு பதிவு செய்கிறார். இது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால்
”வித்தியாசங்களை ஏற்கும் பக்குவம் வகுப்பறையிலேயே உருவாகவேண்டும்” என்று பதிவு செய்கிறார்.
நமக்கும் கூட இந்த அனுபவம் இருக்கும். மேடைகளில் ஆடும் பிள்ளைகள் அனைவரும் வெள்ளையாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இருப்பார்கள். இதற்காக ஒரு கதையை சொல்லுகிறார்.
இயலா குழந்தைகளுக்கு எது பலத்தை தரும்? அவர்களுக்கு அழுத்தங்களை தருவதற்கு பதிலாக, பொறுமையாக அவர்கள் பேசுவதை கேட்பதன் மூலமே திணறும் குழந்தைகளுக்கு பலம் தரமுடியும் என்று கூறுகிறார்.
கதைகளின் தலைப்பே குழந்தைகளுக்கும், இந்த சமூகத்திற்கும் எது தேவை என்பதை உணர்த்துகிறது. எச்சரிக்கையாக இருப்பதா? நண்பர்களாக இருப்பதா? எது தேவை என்பதை கதையின் வழியல் சொல்லுகிறார். அப்படி அவர் சொல்லும் போது பெரியவர்களாகிய நாம் என்ன நினைக்கிறோம் என்பதையும் குறிப்பிடுகிறார். அதாவது
”விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் குழந்தைகளுக்கு முக்கியம். ஆனால் குழந்தைகளின் விளையாட்டுகளுக்கு இடையே பெற்றோர்கள் அவர்களின் சாமர்த்தியத்தை எடைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.” இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பிரமாண்டமான பள்ளிகளைப் பார்த்துப் பார்த்து நமக்குச் சிறிய மற்றும் அரசுப் பள்ளிகளின் சாதனைகள் நமக்குத் தெரிவது இல்லை. இது அறிவியல் அறிஞர்களுக்கும் பொருந்தும். அது குறித்து அவர் சொல்லும் போது இப்படி சொல்லுகிறார்
” பெரிய வெளிச்சங்களையே பார்த்துப் பழகிய கண்களுக்குச் சிறிய வெளிச்சங்கள் இருட்டாகத்தானே தெரியும். அங்கீகாரம் சுலபத்தில் கிடைக்குமா?”
சிறிய வெளிச்சங்களென்று கண்கள் ஒதுக்குகின்றன. கவனித்துப் பார்த்தால், சிறிய வெளிச்சத்திற்குள் பெரும் பிரமிப்புகள் இருக்கின்றன. என்கிறார். இப்படியான தெரிப்பான விஷயங்களைக் கதைகளைச் சொல்லத் தொடங்கும் போதும், முடிக்கும் போது சொல்லுவது நமக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும். நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இவற்றிற்குப் பொருத்தமான கதைகளை அவர் தேர்வு செய்து எழுதியுள்ளார்.
மிகச் சிறந்த புத்தகம். ஒவ்வொரு கதைசொல்லிகளும், இளம் ஆசிரியர்களும், பெற்றோரும். குழந்தைகளோடு இயங்குகிறவர்களும் இந்த நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். கதைகள் வழி வரலாறு வேண்டும் என்ற அவருடைய வேண்டுகோள் கவனிக்கத்தக்கது.
இப்படியான நூலை வாசிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய பேரா. ச. மாடசாமி சாருக்கு என் அன்பும் வாழ்த்துகளும். இந்த நூலை அழகாக வடிவமைத்துள்ள பாரதிபுத்தகாலயத்திற்கும் எனது நன்றி
நூல் அறிமுகம் எழுதியவர் :
மொ. பாண்டியராஜன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.