வகுப்பறை கதைகள் 23 (Vagupparai Kathaikal):- இராப்பள்ளிக்கூடம் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 23:- இராப்பள்ளிக்கூடம் – விட்டல்ராவ்

இராப்பள்ளிக்கூடம்

வகுப்பறைக் கதைகள் – 23

– விட்டல்ராவ்

முருகன் ஒரு குடியானவக் குடும்பத்தைச் சேர்ந்த வகுப்பு மாணவன். அரசாங்க லைன் வீட்டின் வலப்புறச் சுற்றுச் சுவரையடுத்து அவர்களது வயல் இருந்தது. ஒவ்வொரு பாடத்துக்கும், பார்த்து எழுதிவிட்டுத் தருவதாய்க் கேட்டு என் நோட்டை இரவல் வாங்கிச் செல்ல அந்த சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து எங்கள் வீட்டுக்கு வந்து போவான். வெண்முத்துச் சோளப் பயிர் வைத்திருந்தார்கள். ஐந்தாறடி உயரம் வளரும் முத்துச் சோளத்தின் தண்டுகள் தடிமனாயும் இனிப்பாயுமிருக்கும். காம்பவுண்டுச் சுவர் எளிதாக ஏறிநிற்கும் வகையில் உயரம் குறைந்தது.

சோளத் தண்டின் உச்சியில் கொத்தாக வெண்முத்துச் சோளம் இருக்கும். சுவரையொட்டி நெருக்கமாய் சோளப் பயிர் உயர வளர்ந்து சுவர்மேல் ஏறி நின்றால் சோளக்கதிர் கைக்கெட்டும். பால்கதிர் எனும் இளஞ்சோளப் பூட்டையை பாலில் வேகவைத்து சாப்பிட்டால் அப்படியொரு சுவை. முற்றித் தலை சாய்த்துவிட்ட கதிரை உதிர்த்து சோள மணிகளை எடுப்பதும் ஒரு சுகம். காம்பவுண்டுச் சுவரை ஒட்டின மாதிரியுள்ள சோளப் பயிர்கள் வரிசையாக தம் கதிர்களை என்னிடமும் ரெமியிடமும் பறிகொடுத்துவிட்ட மொட்டைத் தண்டாக நிற்கும் கோலம் முருகனின் அப்பாவிற்கு திருடர்கள் யாரென லைன் வீடுகளைக் காட்டும்.

ஆனால் எல்லா பாடங்களிலும் ஒற்றைப்படையில் மதிப்பெண்கள் பெற்று வரும் முருகன் என்னிடமும் ரெமியிடமும்தான் சந்தேகம் கேட்க நோட்டு இரவல் வாங்கிச் செல்ல என்று வந்து போகும் காரணத்தால் சோளப் பூட்டை களவுகுறித்து எங்களிடம் எதுவும் மூச்சுவிடமாட்டான். முருகன்தான் வகுப்பறையில் ஒரு நாள் பிரகடனம் செய்தான்.

‘‘தோப்பா, குமரேசர் சார் இராப்பள்ளிக்கூடம் வைக்கப்போராறாம்.’’

எல்லோரும் முருகனைச் சூழ்ந்து கொண்டனர்.

‘‘சார்கிட்டேயே கேக்கலாம்பா. இவனுக்கென்னா தெரியும்’’, என்றான் பிரபை.

இதெல்லாம் காலாண்டுத் தேர்வு முடிந்து விடைத் தாள் திருத்தப்பட்டு பிள்ளைகள் எந்தெந்தப் பாடங்களில் பின்தங்கியிருக்கின்றனர் என்ற நிலைமையை உத்தேசித்து ஏற்பட்டவை. நிறையபேர் பக்கத்து கிராமங்களிலிருந்து நடந்தும் சைக்கிளிலுமாய் இந்தப் பெரிய ஜில்லாபோர்டு பள்ளிக்கு படிக்க வந்து போகிறவர்கள். அவர்கள் அந்தந்த ஊர்களிலேயே டியூசன் வகுப்பு கிடைக்குமாவென்று பார்த்துவிட்டு தம் பள்ளிக்கூட ஆசிரியர்களையே தேடிப்போனார்கள்.

ஆங்கிலப் பாடத்தை மட்டும் எபினேசர் சார் டியூசன் எடுத்து வந்தார். ஆறாம் வகுப்பிலிருந்து பதினொண்ணாம் வகுப்பு வரை அவரிடம் கிராமத்துப் பிள்ளைகள் ஆங்கிலம் டியூஷன் படிக்க கும்பலாய்க் கூடிவிட்டிருந்தனர். மாலை ஐந்து முதல் இரவு பத்துவரை நடக்கும். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒண்ணரை மணிநேரம் ஒதுக்கியிருந்தார் எபினேசர் சார். குமரேசர் கணக்கு ஆங்கிலம் இரண்டையும் டியூஷன் சொல்லிக் கொடுப்பார். இவரிடமும் ஏராளமான பிள்ளைகள் மாலையிலிருந்து இரவு எட்டுவரை டியூஷனுக்குப் போய் வந்தனர்.

பெரியசாமி சார் டியூஷன் எதுவும் சொல்லித் தருபவரல்லர். ஆனால் சந்தேகங்களை புரியாதவற்றைக் கேட்க ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை பொறுத்தவரை அவரை அணுகினால் இலவசமாக சொல்லிக் கொடுத்து உதவுவார். அதேசமயம் பெண்களை மட்டும் தம் வீட்டுப்பக்கமே சேர்க்கமாட்டார். பெண்பிள்ளைகளின் ஆங்கில-விஞ்ஞான பாடங்களுக்கான சந்தேகங்களை வகுப்பிலேயே கேட்டுக்கொள்ளச் சொல்லிவிடுவார். பெண்கள் எபினேசரிடம் ஆங்கிலத்துக்கும் கணிதப் பாடத்துக்கு குமரேசரிடமும் டியூஷன் படிக்கப்போவார்கள். எங்கள் ஆங்கிலப் பாட சந்தேகங்களை அப்பாவே தீர்த்துவைப்பார். கணிதம் எங்கள் குடும்பத்துக்கே வராது. இதனால் விஞ்ஞானப் பாடமும் படுத்திவைக்கும்.

‘‘வாயேன், சொல்லித்தர்றேன்’’, என்றார் பெரியசாமி சார். காலாண்டுத் தேர்வுக்கு முன்பிருந்தே அன்னய்யன் ஒருவன் மாத்திரம் பெரியசாமி சாரிடம் ஆங்கிலம் விஞ்ஞானம் இரண்டையும் டியூஷன் வகுப்பாகவே படிக்க போய் வருபவன். என்னை தன்னிடம் வந்து விஞ்ஞானப் பாடம். கணிதங்களில் சந்தேகம் தீர்த்துக்கொள்ளும்படி நான் கேட்காமல் அவராகவே கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி அவர் அவ்வப்போது கேட்பதை பிரபை கவனித்திருக்க வேண்டும். மிகவும் சூட்சமமான பையன், ஒரு வார காரம் இப்படித்தான் அழைத்தாரென்று அவனும் அவரிடம் சந்தேகம் கேட்க போய்விட்டு வந்தவன். அன்று நாங்கள் அரூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள சிறிய பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு டியூஷன் குறித்து போனது.

‘‘இங்கிலீஷ் கஸ்டமில்லேப்பா பிரபை, அப்பா இருக்கறாரு. எனக்கும் எங்கண்ணன் ராமுவுக்கும் எம் புஸ்தகத்த வச்சே சொல்லிக் குடுத்துகிட்டே வர்றாரு’’, என்றேன்.

‘‘ஒம் புஸ்தகத்த வச்சி ஒங்கண்ணனுக்குமா, கேக்க மறந்துட்டேன். ஒங்க ராமு அண்ணனை ஸ்கூலுக்கு அனுப்பவே இல்லையா? ஒம் புஸ்தகத்த வச்சி எதுக்கு வீட்லயே சொல்லித் தரணும்?’’ என்று கேட்டான் பிரபை.

‘‘அதொரு கதை, பிரபை.’’

‘‘கதையா, சொல்லு கேக்கலாம்’’

‘‘தர்மபுரியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல ஃபீஸ் கட்டி படிச்சோம். நா மூணாவது, ராமு அஞ்சாவது, அவங்கிட்டே கெட்ட புத்தி ஜாஸ்தி. இப்ப பரவால்லே. எங்க ரெண்டுபேர் பள்ளிக்கூட ஃபீஸை சூதாட்டத்தில உட்டிட்டு ஓடிப்போயிட்டான்.’’

‘‘ஐய்யய்யோ, ஓடி எங்கே போனான்?’’

‘‘அந்தூர்ல ஒரு ஹோட்டல்ல சப்ளை வேலை செஞ்சிகிட்டு இருந்தான். ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அந்தக் கடைக்கு சாப்புடப் போனவரு இவனப் பாத்திட்டு புடிச்சி இழுத்துக்கிட்டு வந்து எங்க வீட்ல உட்டிட்டுப் போயிட்டாரு.’’

‘‘அப்பறம்?’’

‘‘அப்பா மிலிடரிகாரரு. கோவம்னா கோவம். அவமானமா போயிடுச்சி அப்பாக்கு. நல்லா அடிச்சாரு. மறுபடியும் ஓடிப்போயிட்டு திரும்பி வந்தான். இனி மேட்டு ஸ்கூலே உனக்கு லாயக்கில்லேனு ஸ்கூலவுட்டு நிறுத்தினதுதான். இன்னிக்கிவரை அவன் கடைக்குப் போறது, வீட்டுவேலை அது இதுனு பாத்துக்கிட்டு ஒரு வேலைக்காரன் மாதிரி இருக்கான், பாவமாயிருக்கு. அவங்கிட்டேயிருக்கிற கெட்ட புத்திய பாக்கறச்சே படட்டும்னுதான் தோணுது.’’

‘‘போப்பா, இருந்தாலும் ஒங்கப்பாவும் சுத்த மோசம். அவரு குடுத்த செல்லந்தான் ஒங்க அண்ணன கெடுத்திருச்சி.’’

‘‘எங்கூட்டு முன்னால இப்பிடி அப்பாவ சொல்லிப்புடாதே, பிரபை’’

‘‘சீ.. சீ.. அப்பிடியெல்லாம் சொல்லுவனா?’’

‘‘மறுபடியும் எப்படியாச்சி ஸ்கூல்ல சேரணும்னு இப்ப ஆசைப்படறான் ராமு. அப்பாவும் அப்பிடியே நினைக்கிறாரு.’’

‘‘வெளியில எங்கனாச்சி டியூஷன் சேர்ந்து படிக்கட்டும்பா,’’

‘‘அஞ்சாவது பாஸ் பண்ணின சர்டிபிகேட்டும், டிசியிமிருக்கு அவனுக்கு.’’

‘‘வயசு ஜாஸ்தியாயிடுச்சே இல்லே, நம்ப குமரேசர் சார்தான் சரியான ஆளு. இதுக்கு அவர்கிட்டே கேட்டா வழி சொல்லுவாரு.’’

‘‘நம்ம கிளாஸ் டீச்சர்கிட்டே கேக்கலாமா?’’

‘‘பெரிய சாமி சாரா, அவர்கிட்டே சந்தேகம்தான் கேக்க முடியும். டியூஷனெல்லாம் எடுக்கமாட்டாரு.’’

‘‘என்னை வா வானு கூப்புடறாரு, பிரபை’’

‘‘ஒனக்கு எதில சந்தேகம், சயன்ஸ்லயா?’’

‘‘ஆமா’’

‘‘த பாரு, போயிடாதே. அப்புடிதான் கூப்புடுவாரு. போயிடப்போறே’’

‘‘ஏம்பா அப்புடிங்கறே?’’

‘‘நா போயிட்டு வந்தவன். அதான் சொல்றேன் போகாதேன்னு’’

‘‘ஏன்னு சொல்லு’’

‘‘எப்புடி சொல்றது’’, பிரபை மிகவும் தயங்கினான். பெரியசாமி சாரைக் குறித்த ஏதோ ஒரு ரகசியம் அவனிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. சொல்லத் தயங்குகிறான்.

‘‘அன்னிக்கொரு நாள் அன்னய்ய நாயுடுக்கு சார் முத்தம் தந்தது ஞாபகமிருக்கா?’’ என்று கேட்டான் பிரபை. எப்படி மறக்கும். செய்யுள் மறக்கும். இங்கிலீஸ் மறக்கும். கணக்கு ஏறவே மாட்டேன்கிறது. ஆனால் இதெல்லாம் மறக்குமா, மறந்துவிடுமா?

‘‘ம்… ஆமாமா. என்னது?’’ என்றேன்.

பிரபை என்னைவிடவும் நிறைய சினிமா பார்த்தவன். சேலத்தில் இங்கிலீஸ் படம் கூட பார்த்ததையெல்லாம் சொல்லியிருப்பவன்.

‘‘பெரியசாமி சாருக்கு கல்யாணமாயி பொண்டாட்டி இல்லே, அது தெரியுமா?’’

‘‘அப்பிடியா, பாவம், செத்துப்போயிட்டாங்களா?’’

‘‘இல்லே, இவர வுட்டிட்டு வேறொருத்தங்கூட ஓடிப்போயிட்டாங்க.’’

‘‘எப்பிடித் தெரியும்?’’

‘‘அன்னய்யன் சொன்னான். என்னைக் கூப்புட்டாரு, சந்தேகம் இருந்தா கேளுன்னு. நா போலாம்னு இருந்தேம்பா. அன்னய்யன்தான் போகாதேனு சொல்லி, இதெல்லாம் சொன்னான்.’’

‘‘பின்னே அவன் டியூஷன் மாதிரி போயி படிச்சிட்டு வர்றானேப்பா.’’

‘‘அன்னய்யன் ஒரு ரகம். அதான் ஜடையே எடுக்காம இருக்கான். போன வருஷம் ஆண்டு விழாப்போ சிவராமன் சார் டிராமா எழுதி நடத்தினாரு. அன்னய்யன் கதாநாயகியா நடிச்சான். பெரியசாமி சார்கிட்டே கேமரா இருக்குது. அவனை அந்த வேஷத்தில நிறைய போட்டோ எடுத்து வச்சிருக்காரு.’’

‘‘சரி வுடு, நாம் போகமாட்டேன்.’’

‘‘ரெமிகிட்டேயெல்லாம் சொல்லிடாதேப்பா.’’

‘‘நா ஏம்பா சொல்றேன்.’’

இந்த சூழலில்தான் குமரேசர் இராப்பள்ளிக்கூடத்தை தொடங்கவிருப்பதை முருகன் சொல்லிக் கொண்டிருந்தான். பிரபை கொடுத்த யோசனையின் பேரில் குமரேசர் சார் கணித வகுப்பை முடித்துவிட்டு போகத் தயாரானபோது நான் அவரை அணுகினேன்.

‘‘ஒங்ககிட்டே டியூஷன் வச்சிக்கலாம்னு சார். வீட்ல கேக்கச் சொன்னாங்க’’ என்றேன்.

‘‘எல்லா பாடமுமா?’’

‘‘கணக்கு மாத்திரம் சார்.’’

‘‘வீடு தெரியும்தானே?’’

‘‘ஊம் சார்’’

‘‘சாயங்காலம் வீட்டுக்கு வா தம்பி. திருக்குறள் வகுப்பு முடிஞ்சதும் வா, பேசலாம்.’’

வீட்டில் மோகனாக்காவுக்கு அவரிடம் கணிதப் பாடம் டியூஷனும், ராமுவுக்கு என்ன செய்யலாமென்றும் கேட்டுவரச் சொல்லியிருந்தார்கள். மறுநாளிலிருந்து திருக்குறள் வகுப்பை வெட்டிக்கொள்ளுவதாய் முடிவாயிற்று. அரையாண்டுத் தேர்வுக்கு தயார் செய்யும் முயற்சியில் நிறைய மாணவர்கள் ஆண்களும், பெண்களுமாய் ஏற்கெனவே மாலையில் நடைபெறும் திருக்குறள் வகுப்பை கைவிட்டபடியிருந்தனர். சிவப்பிரகாசனார் ஐயாவும் வேற்றூருக்குப் பணி மாற்றல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பிலிருந்ததால் குறள் வகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. அவருக்கு உடல் உற்பாதைகளும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன. பள்ளி முடிந்தவுடன் அவரும் தம் வீட்டுக்குப் போவதையே விரும்புவதாய்ப் பட்டது. பிரபாகரும் குமரேசரிடம் கணிதப் பாடத்துக்கு மட்டும் டியூஷனில் சேர்ந்திருந்தான்.

அன்று மாலை ராமு அண்ணனைப் பற்றி குமரேசன் சாரிடம் நானும் மோகனாக்காவும் பேசினோம்.

‘‘பிரச்சினையேயில்லேம்மா. ஸ்கூல்லயே படிக்காதவங்க மறுபடியும் ஸ்கூல்ல சேர்ந்து படிக்க ஒருவழியிருக்கு. அந்த டியூஷன் கிளாஸ்ல சேந்து படிச்சி எட்டாவது பாஸ் பண்ணின சர்டிபிகேட் வாங்க பரீட்சைக்கு தயாராகி அதை எழுதி பாஸ் பண்ணணும். அது சர்க்கார் பரீட்சை, இ.எஸ்.எல்.சின் சொல்றது. அதாவது எலிமெண்டரி ஸ்கூல் லீவிங் சர்டிபிகேட்னு சொல்றது. அஞ்சாவதோட நின்னுபோனவனா ஒங்கண்ணன், ஆறு மாசம் போதும், இந்த வருஷ இ.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு தயார் பண்ணிடலாம். பரீட்சை எழுதற ஃபாரம் முதலான எல்லா விஷயங்களையும் பாத்துக்கறதுக்கு நானாச்சி. அர்த்தமாச்சா சொல்றது? பாஸ் பண்ணிட்டா ஹைஸ்கூலில் எட்டாவதுதான் சேத்திக்கிவாங்க. தேர்டு ஃபாரம். ஆச்சா, அதிலேந்து தொடர்ந்து படிக்கலாம். கூட்டிக்கிட்டு வா’’ என்றார் குமரேசர்.

‘‘இராப் பள்ளிக்கூட டியூஷனுக்கு ஃபீஸ் எவ்வளோனு கேட்டுகிட்டு வரச் சொன்னாங்க சார்.’’

‘‘ஃபீஸ் இருக்கட்டும்மா, பாத்துக்கலாம். நீயும் ஒந்தம்பியும் கணக்குப் பாடம் டியூஷன் படிக்கிறீங்க. ஒரே வீட்ல மூணு பேருன்னா பாவம் ஒங்கய்யா என்ன செய்வாரு, பாத்து போட்டுக்கலாம். வரச் சொல்லு. இந்த சலுகை ஒங்க வீட்டுக்கு மட்டுந்தான். யாருகிட்டயும் இதையெல்லாம் சொல்லக் கூடாது என்ன?’’

‘‘சரிங்க சார்.’’

அனைத்துப் பாடங்களிலும் மிக மிகப் பின்தங்கிய மதிப்பெண்களோடுள்ள மாணவர்களுக்கும், தனியாகப் படித்து இ.எஸ்.எல்.சி. அரசாங்க பொதுத் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்குமாய் குமரேசர் சார் இரவு எட்டிலிருந்து பத்துமணிவரை இரவு வகுப்பு சொல்லித் தரும் ஏற்பாட்டை தொடங்கினதும் பெற்றோரின் துணையோடு பெண்பிள்ளைகளும் சேர்ந்து படிக்க வந்தனர். முதலில் ஆஜரானவர்கள் சோளக்கொல்லை முருகனும் எங்கள் வீட்டு ராமுவும்தான். மோகனாக்காவும் நானும் பக்கத்து வீட்டு கோதைநாயகியும் கணக்குப் பாடம் சொல்லிக்கொள்ள சேர்ந்தோம். இரண்டு, மூன்று நாட்கள் போனதும் குமரேசர் மோகனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘‘இங்கிலீஷ் அப்பா சொல்லித் தர்றாராம்மா?’’

‘‘ஆமாங்க சாரா’’

‘‘ஒங்கண்ணனுக்கு இங்கிலீஷ் நல்லா வருது. அதுக்கு டியூஷனே தேவையில்லே. மத்த பாடங்க எல்லாமே நாலாங் கிளாஸ் லெவெல்லயிருந்து ஆரம்பிக்கணும்போல இருக்கு. எல்லாமே அவனுக்கு மறந்துபோச்சி’’ என்றார் சார்.

தன்னோடு இ.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராக பத்து பெண்களும் பதினைந்து பையன்களும் சேர்ந்திருப்பதாக ராமு அண்ணன் வீட்டில் சொல்லிக்கொண்டிருந்தான். பொறுப்பு வந்திருப்பதாய் தெரிகிறது என்றாள் அம்மா. எல்லா பாடங்களுக்கும் டியூஷன் படிக்க வேண்டிய பள்ளிக்கூடப் பிள்ளைகள் வரிசையில் ஒரு ஐந்து பேர் இருப்பார்கள். அவர்களில் முருகன் மூத்த குடிமகன்.

இந்த இராப் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு மூல காரணமே முருகன்தான். அவனுக்கு எல்லா பாடங்களிலும் சொல்லித்தர வேண்டும் என்பதால் மாலையில் ஓரிரு பாடங்களுக்காக மட்டுமே வருபவர்களோடு சேர்க்காமல் இரவு வகுப்பைத் தொடங்கி அதில் சொல்லித்தர திட்டமிட்ட குமரேசர் அவ்விராப்பள்ளி வகுப்பை இ.எஸ்.எல்.சி. தேர்வுக்கான வகுப்பாயும் மாற்றியிருந்தார். மாணவர்களோடு மாணவனாய் ராமுவும் அதில் இணைந்தான். அவனுக்கு படிப்பில் கவனம் ஊன்றி பொறுப்பு சேரவும் அம்மாவுக்கு அவன் மூலமான பிடுங்கல்களும் தொல்லையும் குறையத் தொடங்கியிருந்தது.

டிராயிங் மாஸ்டர் தாமஸ் ஏட்டன் ஓவியப் போட்டியை மாணவர்களுக்கு அறிவித்துவிட்டார். ஓவியப் போட்டியை முடித்துக்கொண்டு அவர் தம் திருமணத்துக்குப் பெண் பார்க்க கேரளத்துக்குப் போய்விட்டு வருவார் என்பதை அவரே வகுப்பில் அறிவித்தபோது பெண்பிள்ளைகள் அவரை ஒரு கணம் பார்ப்பதும், குனிந்து தங்களுக்குள் என்னமோ குசுகுசுத்துக்கொண்டு சிரிப்பதுமாயிருந்தனர். என்னமோ சொன்னாளென்று கன்னியம்மாவை இடுப்பில் நிமிண்டினாள் பாலாமணி. தன்னை அடக்கமாட்டாது ஓவென அலறிவிட்டாள் கலைவாணி. இத்தனைக்கும் பையன்கள் தரப்பிலிருந்து எவ்வித எதிர்வினையும் காணோம்.
‘‘ஆரானு… ஆரானு.. ஆரது?’’, என்று கேட்டுவிட்டு ‘‘சைலன்ஸ்’’ என்று தட்டினார் மாஸ்டர். பெண்கள் பகுதி கப்சிப் பென்றானது.

ஓவியப் போட்டிக்கு என்னையும் சேர்த்து முதற் படிவம் (ஆறாம் வகுப்பு) முதல் ஆறாம் படிவம் (பதினோறாம் வகுப்பு) வரை இருபது மாணவ, மாணவிகள் பேர் கொடுத்திருந்தனர். இரண்டு மணி நேரம் காலம் ஒதுக்கியிருந்தார்கள். தலைமையாசிரியரின் அறையை ஒட்டியிருந்த கூடத்தில் சித்திரப் பயிற்சியாசிரியரின் வழிகாட்டலோடு மாணவர்கள் தள்ளித் தள்ளியமர்ந்து படம் வரைய இருக்கை- மேசைகள் போடப்பட்டிருந்தன. மரமேடைமேல் பெரிய பிரம்பு நாற்காலியொன்று வைக்கப்பட்டிருந்தது.

மாணவ, மாணவியருக்கு பெரிய சித்திரம் வரையும் தடித்த தாள் வினியோகிக்கப்பட்டது. பென்சிலைக்கொண்டு மேடையிலுள்ள பிரம்பு நாற்காலியை நன்கு கவனித்து வழங்கப்பட்ட தாளில் வரைந்து வைக்கவேண்டும். அவரவர் பெயர், வகுப்பு பிரிவு விவரங்களை தாளின் அடியில் எழுத வேண்டும்.

‘‘அங்கே இரிக்கும் நாக்காலியக் கண்டு பேர்பாதிக்கு சின்னதாக்கி ட்ராயிங்கி போடணும்,’’ என்றார் மாஸ்டர் தாமஸ் ஏட்டன்.

அறையில் சுத்தமான மெளனம் குடிகொண்டிருந்தது. நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. நாற்காலியின் வரைபடத்தை வரைந்து முடித்துவிட்டு சுற்றுமுற்றும் பார்க்கையில் டிராயிங் மாஸ்டர் தாமஸ் ஏட்டன் கையைக் கட்டிக்கொண்டு பின்னால் வந்து நின்று என் படத்தையே கவனித்தார். பின் இளஞ்சிரிப்போடு, ‘‘ஷேடு கொடு..’’, என்று காதோடு காதாக முணுமுணுத்துவிட்டு நகர்ந்து போனார்.

கோதைநாயகி வரைவதையே பார்த்துக் கொண்டிருந்தார் மாஸ்டர். மோகனாக்கா, கோதை, நான், பிரபை நால்வரும் குமரேசர் சாரிடம் மாலையில் கணக்குப் பாடத்துக்கு டியூஷன் படிக்கப் போகிறவர்கள். கோதை மிக நன்றாக சித்திரம் வரைவாள். வீட்டு முன்னால் அவள் போடும் சிக்கல் கோலம் வகைகள் லைன் வீட்டுப் பெண்களைப் பொறாமை கொள்ள வைக்கும்.

ராமு இராப்பள்ளிக்கூடம் முடிந்து முருகனோடு சேர்ந்து வருகையில் இரவு பத்தரையாகிவிடும். முருகனும் ராமுவும் நெருங்கிய நண்பர்களாகியிருந்தனர். அப்போதும் முருகனுக்கு ஆங்கிலத்தில் இலக்கண சந்தேகங்கள் இருந்துகொண்டேயிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராமுவிடம் வந்து கேட்டுக்கொள்ளுவான்.

சில சமயம் முருகனையும் சேர்த்து எங்கள் அனைவருக்குமே அப்பா ஆங்கில இலக்கணம் சொல்லித் தருவார். ராமுவை இராப்பாள்ளிக்கூட டியூஷன் வழியாக எட்டாவது வகுப்புக்கான இ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கு தயார் செய்து வந்தார் குமரேசர் சார். அவர் இராப்பள்ளி மாணவர்களுக்கென புதியதாக பெட்ரோமாக்ஸ் விளக்கொன்றை சேலத்துக்கு போய் வாங்கி வந்தார். சைக்கிள் கடைக்காரர் கலிமுல்லாவைத் தம்மோடு அழைத்துப் போய் அவர் மூலமாக பெட்ரோமாக்ஸ் விளக்கை நன்கு சோதித்து வாங்கிக்கொண்டு வந்தார்.

அது காற்று இறங்கும்போது புஸ்ஸென்ற ஓசையுடன் அதில் எரியும் மாண்டில் வலை ஒளி குன்றி ஆரஞ்சு நிறத்துக்குப் போகையில் ‘‘காத்தடிப்பா, காத்தடிப்பா’’, என்று பதறுவார் முருகேசர், ராமு அல்லது முருகன்தான் எழுந்து ஓடி காற்றடிப்பார்கள். அவர்பேரில் அபார நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தான் ராமு. கிட்டதட்ட ஒரு பள்ளிக்கூட மாணவனாகவே தன்னை பாவித்துக்கொள்ளும்படியான மனப்பக்குவமும் மனோதிடமும் எண்ண ஓட்டமும் அவனுக்குள் எழுந்து உருவாகி உறுதியாக நிலைத்து நிற்கும்படி தயார் செய்திருந்தார் குமரேசர்.

மறுவாரத் தொடக்கமே புல்லரிக்க வைத்தது. திங்கட்கிழமை காலை பள்ளியில் இறை வணக்கம் முடிந்தவுடன் வழக்கம்போல தலைமையாசிரியர் சுப்பிரமண்ய செட்டியார் அவர்கள் தம் சிற்றுரையை ஆங்கிலமும் தமிழும் கலந்து ஆற்றினார். உரையின் அடக்கமே மாணவ, மாணவிகளின் சித்திரப் போட்டியின் முடிவு பற்றியதாக இருந்தது. கோதைநாயகிக்கு முதற் பரிசு. எல்லோரும் எதிர்பார்த்தது. கைதட்டல் சற்று சுரத்து கம்மியாகக் கேட்டது. இரண்டாம் பரிசுதான் யாரும் எதிர்பார்க்காதது. எனவே கைத்தட்டல் ஒலி காத்திரமாக இருந்தது. டிராயிங் மாஸ்டர் தாமஸ் ஏட்டன் என் கையைப் பிடித்துக் குலுக்கினார். எனக்கு இரண்டாம் பரிசு வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரையும் தலைமையாசிரியர் வெகுவாகப் பாராட்டினார்.

அன்றிரவு எட்டு மணிக்கு இராப்பள்ளி வகுப்பில் டியூஷன் முடிக்கையில் குமரேசர் சார் தம் பங்கிற்கு எங்களிருவரையும் பாராட்டிப் பேசினார்.

‘‘ரெண்டு பேரும் நம்ப டியூஷன் கிளாஸ சேர்ந்த வங்கங்கறது எனக்குத் தனிப் பெருமை,’’ என்றார். அங்கேயும் ஒரு முறை கைதட்டல் கிடைத்தது. அப்போதுதான் இராப்பள்ளி வகுப்பிற்காக அதன் பிள்ளைகள் வரத் தொடங்கியிருந்தனர். ராமுவும் முருகனும் வந்தவுடன், குமரேசர் இராப்பள்ளி மாணவர்களையும் கைதட்டச் செய்தார். ராமு மட்டும் கை தட்டாமல் சும்மா பார்த்துக் கொண்டிருந்தான்.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *