வகுப்பறைக் கதைகள் 24:- பாட்டுப் போட்டி – விட்டல்ராவ்

வகுப்பறைக் கதைகள் 24:- பாட்டுப் போட்டி – விட்டல்ராவ்

பாட்டுப் போட்டி

வகுப்பறைக் கதைகள் – 24

– விட்டல்ராவ்

தமிழய்யா, உடற்பயிற்சியாசிரியர் சிவராமன் மற்றும் தலைமையாசிரியர் மூவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கலைந்து தத்தம் இடங்களுக்குத் திரும்பினர். ஆசிரியர்கள் அறைக்கு தமிழய்யாவும் சிவராமன் விளையாட்டறைக்கும் திரும்பினர். சிவராமன் தன் அறையைத் திறப்பதற்குள் பியூன் சற்குணம் ஓடிவந்து தலைமையாசிரியர் அழைத்து வரச் சொன்னதாகக் கூறி கையோடு அழைத்துக் கொண்டு போனார். உடற்பயிற்சியாசிரியர் சிவராமன் ஓய்ச்சல் ஒழிச்சலின்றி இயங்கவேண்டியவரானார். பள்ளி ஆண்டு விழா. அதன் ஏற்பாடு பூதாகாரமாய் எழுந்து நின்றது. தாம் எழுதியிருக்கும் புதிய சமூக நாடகம் ஒன்றை பிள்ளைகளைக் கொண்டு எளிமையாகவும் எளிதாகவும் விழாவில் நடத்திக்காட்ட ஏற்பாடு செய்யவேண்டும், தடகள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆண், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்து தலைமையாசிரியரோடு ஆலோசித்துக் கொண்டிருக்கையில் தமிழய்யா குறுக்கிட்டு சமூக நாடகமெல்லாம் புண்ணாக்கு என்று வன்மையாக எடுத்துச் சொல்லிவிட்டு தமிழின் பெருமையை எடுத்தியம்பும் வகையில் வரலாற்று நாடகம்தான் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். அதை மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்ட தலைமையாசிரியர் தம் சொந்த திருப்திக்காக ஆங்கிலத்தில் சிறு நாடகமொன்றையும் ஏற்பாடு செய்யலாமென்றார். அவருக்கு தம் கல்லூரி நாட்கள் நினைவுக்குவர, ஷேக்ஸ்பியரின் எளிய நாடகம் எதிலாவதிலிருந்து குறைந்தது சிறு பகுதியொன்றை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யவேண்டுமென்றார். அந்தப் பொறுப்பை எபினேசரிடம் தள்ளிவிடலாமென்றும் தனக்கு ஏற்கெனவே விளையாட்டுப்போட்டிகள் நடத்தவேண்டிய பொறுப்பும் தமிழ்நாடக ஏற்பாடும் தலைக்குமேலுள்ள வேலைகளென்று சிவராமன் கூறவும் சுப்பிரமண்ய செட்டியார் ஆங்கில நாடக விசயத்தை கழுவி ஊற்றி மூடினார்.

இ.எஸ்.எல்.சி. அரசாங்கத் தேர்வு எழுத ஆண்கள், பெண்கள் பதினாறு பேரை அழைத்துக் கொண்டு புறப்பட தயாரானார் குமரேசர். பதினாறு பேரும் நிச்சயம் தேறக்கூடியவர்கள், தம்மிடம் கற்றவர்கள் தோற்பது கிடையாது என்று உறுதியளித்தார் குமரேசர் சார். ராமுவும் அவரோடு தருமபுரிக்கு புறப்பட்டுப் போனான்.

ஆண்டு விழாவுக்கு முன் வேறொரு இலக்கிய விழாவை நடத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதென்று சுகவனம் சிவப்பிரகாசனார் ஒரு குண்டை எடுத்து வீசினார். தலைமையாசிரியர் தம் முன் வழுக்கையைச் சொறிந்து கொண்டு மூக்குக்கண்ணாடியை கழட்டிவிட்டு வெறும் கண்களால் தமிழய்யாவை உற்று நோக்கினார். தமிழய்யா தலைமையாசிரியின் கண்ணாடியில்லாத கண்களுக்கு இரண்டாகத் தெரிந்தார். ‘‘என்ன சொர்றீங்க?’’, என்று கேட்டார். கண்ணாடியைக் கழட்டிய நிலையில்்தலைமையாசிரியரின் கண்களுக்கு அடியில் தழும்புபோல கண்ணாடியணிந்த கரிய தழும்பு விகாரமாயிருந்தது. கண்ணாடியைக் கழட்டிய நிலையில் தமிழில் பேசவும் கண்ணாடியணிந்திருக்கையில் ஒரு கம்பீர சவடால் தோற்ற உணர்வோ என்னவோ ஆங்கிலமே அதிகப் பேச்சு வழக்காயிருக்கும்.

‘‘பாரதியார் பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஆசிரியர்களுக்கு கவிதைப் போட்டினு வைக்கணும். இது ரொம்ப முக்கியமான விழா’’, என்றார் தமிழய்யா.

‘‘என்ன அவசியம் இப்போ? என்றார் தலைமை.

பாரதி பிறந்த நாள் வருதே. நம்ம தமிழ்க் கவிஞர், தேசியக் கவி, புரட்சிக் கவிஞர்,’’ என்றார் தமிழய்யா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராய்.

‘‘அதை மத்த வூர் ஸ்கூல்களிலேயும் கொண்டாடறதுண்டா?’’

‘‘இருக்கே. இருந்து வருதே. அதனாலேதான் சொல்லறது.’’

‘‘அப்போ சரி. சிவராமன் கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன், என்ன?’’

‘‘தாராளமா கலந்தாலோசிட்டே சொல்லுங்க.’’

தமிழய்யா போனதும் சற்குணத்தையழைத்து சிவராமனுக்கு சொல்லியனுப்பினார் தலைமையாசிரியர்.

பாரதியார் நினைவு பாட்டுப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் மாணவ, மாணவியருக்கும் கவிதைப் போட்டியொன்று ஆசிரியர்களுக்குமாய் நடைபெறவிருக்கும் நாள் மற்றும் போட்டிக்கான நிபந்தனை விவரங்களைக் கொண்ட சுற்றறிக்கை சிவப்பிரகாசனாரால் தயாரிக்கப்பட்டு தலைமையாசிரியரின் கையொப்பத்தோடு தயாரானது. அதை வகுப்புகள்தோறும் சற்குணம் எடுத்துச் சென்று வகுப்பாசிரியர்களின் கையெழுத்தைப் பெற்றானதும் பள்ளியின் நோட்டீசு போர்டில் குத்தி வைத்தார். போட்டிக்கு பேர் தருபவர்கள் தமிழய்யாவிடம் பேர் தர வேண்டுமென்றிருந்தது. அதே சமயம் ஆண்டு விழாவுக்கான போட்டிகளின் திட்டமும் ஏற்பாடும் சிவராமன் மற்றும் தாமஸ் ஏட்டன் இருவரின் பொறுப்பில் தலைமையாசிரியரின் மேற்பார்வையில் செயல் வடிவம் பெற்றுவந்தன. நாடகம் தமிழய்யாவின் விருப்பப்படி அவர் எடுத்துத் தந்த குறிப்புகளைக் கொண்டு கணைக்கால் இரும்பொரையின் வரலாற்றுக் கதையை சிவராமன் நாடக வடிவாக எழுதி முடித்து சிவப்பிரகாசனாரால் மும்முறை திருத்தியமைக்கப்பட்டபோது அது வேறு ரூபம் கொண்டிவிட்டிருந்தது. நாடகப் பொறுப்பு முழுவதையுமே அவரிடமே விட்டுவிடலாமென தலைமையாசிரிடரிடம் கூறி சலிப்போடு கையை உதறப்பார்த்தார் சிவராமன். பொறுமை காக்கச் சொன்னார் தலைமையாசிரியர் சுப்பிரமணியச் செட்டியார்.

சரித்திர நாடகத்துக்கு வேண்டிய துணிமணி சில சீன் ஜோடனை சாமான்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து வர சேலத்துக்கு தாமஸ் ஏட்டனோடு போய் வருவதாக தலைமையாசிரியரிடம் சொன்னார் சிவராமன்.

‘‘சேலத்தில எங்கே கிடைக்கும்?’’, என்று கேட்டார் தலைமை.

‘‘விக்டோரியா மைதானத்துக்கிட்டே கல்லாங்குத்தம் தெருனு இருக்கு. அங்கே நாடக சம்பந்தமா வாடகைக்கு தர்ற கடைங்க லைனா இருக்கு. தெரிஞ்ச கடையிருக்கு,’’ என்றார் உடற்பயிற்சியாசிரியர் சிவராமன்.

பாரதியார் நினைவு பரிசுப் போட்டிகளும் நாள் நெருங்கவே அதற்கான ஏற்பாட்டை உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்தபடியிருந்தார் தமிழய்யா. என் பெயரை பாரதியார் பாட்டுப் போட்டிக்கு கொடுக்குமாறு பெரியசாமி சார்தான் வற்புறுத்தினார். பெயர் கொடுத்திருக்கும் விஷயத்தை வீட்டுக்கு வந்தவுடன் வசந்தாக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

‘‘இவனுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்,’’ என்றான் ஏளனமாய் ராமு அண்ணன்.

போட்டிக்கு பேர் கொடுத்தவர்கள் அனைவரும் பாரதியின் கவிதைகளிலிருந்து திரைப்படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் பாடல்களையே பாடுவதற்கு தேர்ந்தெடுத்திருந்தார்கள். சின்னஞ்சிறு கிளியேவும், நெஞ்சு பொறுக்குதில்லையேவும் ஒன்றுக்கு மேற்பட்ட உயர் வகுப்பு ஆண், பெண்களால் பாடப்படவிருந்தன. போட்டி நாளன்று ஒரே பாரதியார் சினிமா பாட்டை மூன்று உயர் வகுப்பு மாணவிகள் குரல் மாறி – லயம் மாறி, ராகம் கெட்டு- வார்த்தை மறந்துபோய் தவித்து ஒரு சொல்லுக்கு வேறொரு சொல்லை வைத்து எடுத்த எடுப்பிலேயே உச்சஸ்தாயியில் பாட்டை கிளப்பிவிட்டு போகப் போக அடுத்து உயரம் போகையில் முடியாமல் குரல் தாழ்த்தி ஸ்ருதி இறங்கி பாட்டையும் ஏட்டையும் கெடுத்த உருப்படிகள் சிறிது இருந்தன. என்முறை வந்தது. நான் பாரதியார் கவிதை எதையும் பாடுவதற்கு தேர்வு செய்திருக்கவில்லை. வசந்தாக்கா சொல்லிக் கொடுத்தபடி பாரதியின் கவித்துவத்தையும் பாட்டுக்களையும் ரசித்து புகழ்ந்து தண்டபாணி தேசிகர் இயற்றிப் பாடியிருக்கும் பாட்டொன்றை பாடுவதற்கென பயிற்சி செய்து வைத்திருந்தேன். குரலெடுத்தேன்.

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா- அவன்

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா.

கேட்டு கிறுகிறுத்து போயினேனடா- என்று நீளும் அந்த செவ்வியல் இசை ராகத்திலான பாடலைப் பாடி முடித்தேன். மேட்டூரில் நான்காம் வகுப்பு படிக்கையில் பாட்டு வாத்தியார் வாலுசுந்தரம் அவர்கள் கற்றுத் தந்த பாடல்-முற்றிலும் நிசப்தமாயிருந்தது. பாடிக் கொண்டே நாற்புறமும் கண்களைச் சுழற்றினேன். தமிழய்யா வலக்கையைச் சொடுக்கிச் சொடுக்கி தாளம் எழுப்பினபடி பாட்டை ரசிக்க, தலைமையாசிரியரின் கையும் எதோ ஒரு அதிர்வைக் கொண்டதாயிருந்தது. பெரியசாமி சார் கண்களை மூடி இசையில் ஒன்றிப்போயிருந்தார். உயர்வகுப்பில் பெண்கள் அதிகம் பாடினார்கள். தொடர்ந்து பாரதி நினைவுப் பேச்சுப்போட்டியும் கட்டுரைப் போட்டியும் உயர் வகுப்பு மாணவர்களுக்கும் கவிதைப் போட்டி ஆசிரியர்களுக்கும் நடைபெற்றன. மறுவாரம் நோட்டீஸ் போர்டில் போட்டிகளின் முடிவு அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. எனக்கு பாரதி பாட்டுப் போட்டியில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. உயர் வகுப்பு பெண்ணொருத்திக்கு இரண்டாம் பரிசு. தமிழய்யா என்னை அணைத்துக் கொண்டார். வீட்டில் சொன்னபோது எல்லோரும் பாராட்டி மகிழ்ந்தபோது ராமு குளியலறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டு நான் பாடிய தேசிகரின் பாட்டையே பாடிக் கொண்டிருந்தான். குரலில் பிசிறு தட்டியது.

தமிழய்யா சேலத்துக்குப் போய் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்க நூல்களை வாங்கி வரச் சென்றுவிட்டார். ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டிகளில் தடகள வகைகள் நடந்த வண்ணமிருந்தன. மோகனாக்கா தாண்டிக் குதித்தலிலும் ஒட்டப்பந்தயத்திலும் மூன்றாவது நிலையைக் கூட எட்ட முடியவில்லை. பாலாமணி ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் பரிசைப் பிடித்துவிட்டாள். சாக்குப் பை ஓட்டத்தில் ரெமியும் குலவனும் முதல் பரிசைத் தட்டினர். ஒருவர் காலை இன்னொருவர் காலோடு கயிற்றால் இணைத்து ஓடும் மூன்று கால் ஓட்டப் பந்தயம் சுவாரசியமானது. முருகனும் பிரபையும் இணைந்து இரண்டாம் பரிசு பெற்றனர்.

பாரதி விழா பரிசளிப்பு எளிய முறையில் காலை இறை வணக்கத்தோடு வைத்துக் கொள்ளப்பட்டது. எனக்கு பாரதி நினைவுப் பாட்டுப் போட்டியில் முதல் பரிசாக பாரதியார் எழுதிய பொன்வால் நரி என்ற சிறு நூலையும், சான்றிதழையும் தமிழய்யாவும் தலைமையாசிரியரும் சேர்ந்து அளித்தனர். அன்று மாலை பெண்களுக்கான மியூசிகல் சேர் போட்டியில் மோகனக்கா முதல் பரிசும், கோதை இரண்டாம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு பரிசு அப்போதே சிவராமன் வழங்கிவிட்டார். மற்ற பரிசுபெற்ற ஆண், பெண்களுக்கும் அன்று பரிசு வழங்கப்பட்டது. மியூசிகல் சேர் போட்டியில் வெற்றி பெற்றதற்காக முதற்பரிசு பேபி டாய் என்ற விளையாட்டு இசைக் கருவிகளை மோகனாவுக்கும் அதிலேயே சிறியதொன்றை இரண்டாம் பரிசுக்கும் அளித்தார்கள். ரயில் தண்டவாள தடத்தின் தோற்றத்தில் பல வண்ணங்களில் இணைக்கப்பட்ட அலாய் உலோகத் தகடுகள் மீது சிறு குச்சியைத் தட்டி உரச ஓசை ரம்மியமாய் எழும்பும். தனிப்பட்ட திறமைக்கேற்ப இசையை எழுப்பலாம். அன்றிரவு வீட்டில் எல்லோருமே அதையெடுத்து அவரவர் போக்கில் தட்டியும் இழுத்தும் அந்த விளையாட்டு இசைக்கருவி பேபிடாயின் ஓசையை ஓரளவுக்குமேலே நாராசாமாக காதைப் பொத்தும்படி இழுத்துத் தட்டிக் கொண்டிருந்தபோது அப்பா உஸ்ஸென்று பெருமூச்சு விட்டபடி நுழைந்தார். எல்லா ஓசையும் கப்சிப்பென்றானது. அம்மா சில்லென்று உப்பு, கறிவேப்பிலை சேர்ந்த மோரைக் கொண்டுவந்து அப்பாவுக்கு நீட்டியதும் அவருடைய இறுக்கம் பாதிக்கு குறைந்தது.

‘‘என்ன அது, கொண்டா’’ என்றார் மோகனாவை. அவள் பேபிடாய் இசைக்கருவியை தந்துவிட்டு சொன்னாள்,

‘‘எனக்கு மியூசிகல் சேர்ல பர்ஸ்ட் பிரைஸுக்கு குடுத்தது.’’

‘‘வெரிகுட்..’’ என்ற அப்பாவின் டென்ஷன் ஏகதேசம் மறைந்தே போனது.

‘‘எனக்கொரு பிரைஸ் கிடைச்சிருக்கு’’, என்றார் அப்பா, ஆனால் சிரிக்காமல், சற்று கடுமை கூடியது.

‘‘ஆபீசிலயா?’’ என்று கேட்டாள் அம்மா.

‘‘ஆமா. கிருஷ்ணகிரிக்கு ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க.’’ என்று சொன்னவர் சற்றைக்கெல்லாம் முகம் மாறி, ‘‘இந்த வூருக்கு அது எவ்வளவோ தேவலாம்’’ என்றார். கிருஷ்ணகிரிக்கு மாற்றியது குறித்து எல்லோருமே மகிழ்ச்சியும் நிம்மதியுமடைந்தார்கள்- என்னைத் தவிர. உடனே போய் வேலையில் சேர வேண்டும் என்று உத்தரவு என்றும் கூறினார். முழு ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் இரண்டே மாதங்களிருந்தன. அதன் பிறகு ஒரு மாதத்தில் இப்போதிருக்கும் சர்க்கார் வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும்.

இராப்பள்ளி வகுப்பில் இ.எஸ்.எல்.சி. அரசாங்கத் தேர்வுக்குப் படித்த மாணவ, மாணவிகள் அத்தேர்வு எழுத தர்மபுரிக்குப் புறப்படலானார்கள். ராமுவும் தயாரானான். குமரேசர் அவர்களை தம் பொறுப்பில் அழைத்துச் சென்று தேர்வெழுத வைத்து அழைத்து வருவதாயிருந்தார்.

அப்பா கிருஷ்ணகிரிக்குச் சென்று தாலுகா கச்சேரியிலேயே தங்கிக் கொண்டு வீடு தேடினார். கச்சேரி வளாகத்தில் பத்திரங்கள் முதலியன விற்கும் ஸ்டாம்ப்வெண்டாரின் வீடு ஒன்று கிருஷ்ணகிரி புதுப்பேட்டைப் பகுதியில் தவுதவுலதாபாத் என்ற இடத்தில் காலியாயிருப்பதாய் கூறி அதை வாடகைக்கு விட முன் வந்தார். நாங்கள் முழு ஆண்டு தேர்வு எழுதின கையோடு அரூரைவிட்டு கிருஷ்ணகிரிக்கு போவதாய் இருந்தோம். நானும் மோகனாக்காவும் குமரேசர் வீட்டுக்குப்போய் சொல்லிக் கொண்டு வரலாமென புறப்பட்டோம். குமரேசர் அமைதியாக நாங்கள் வேற்றூருக்குப் போக இருக்கும் தகவலைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கூறினார்.

‘‘எல்லா ஊர்லயும் எல்லா பள்ளிக்கூடங்களிலும் நல்லா சொல்லித் தர்ற ஆசிரியருங்க இருக்கவே செய்வாங்கம்மா. படிக்கணும். நல்லா படியுங்க. எழுதியெழுதிப் பாருங்க. படிக்கிற பசங்க எங்கேயும் நல்லாவேதான் படிப்பாங்க. ரெண்டு பேரும் நிச்சயம் பாஸாயிடுவீங்க.’’

நாங்கள் புறப்படுகையில் சார் மீண்டும் பேசினார்.

அடுத்த வருஷம் புஸ்தகங்க எதுவும் மாறப்போறதில்ல.

 ‘‘அதே புஸ்தகங்கதான். ஒங்க பழைய புஸ்தகங்கள எங்கிட்ட குடுத்து வைங்க. நா வித்துக் குடுக்கறேன்.’’

‘‘நாங்க கிருஷ்ணகிரிக்கு போயிடுவோமே சார்.’’

‘‘போனா என்ன, ஒங்கப்பாயிருக்கிறது தாலுகா பீசுதானே. அவரு பேரு போட்டு ஆபீசு அட்ரசுக்கு வித்த பணத்த மணியார்டர் பண்ணிடறேன்’’, என்றார் சார். சரியென்றோம்.

 சில ஆண்டு விழா போட்டிகள் முழு ஆண்டுத் தேர்வு நெருங்கும் சமயத்தில் ஒத்திப் போடவைக்கப்பட்டன. அவற்றில் பாட்டுப்போட்டி ஒன்று. நான் சொல்லாமலே என் பெயரை தமிழய்யா சேர்த்திருந்தார். எனக்கு தான் முதல் பரிசு என்பது அப்போதே தீர்மானமாகியிருந்தது. அதை இயற்கையே கொண்டாடும் விதமாய் அன்று மாலை பலத்த மழை பெய்தது. அரசாங்க லைன் வீடுகள் ஓட்டுக்கூரை வீடுகள். டப் டப் டப் டம டமவென கூரை தாள ஓசை எழுப்பிய அதே நேரம் வெட்ட வெளியாயிருந்த பின் முற்றத்தில் கூழாங்கற்கள் போன்ற பனிக்கட்டிகள் விழுந்தன.

 ‘‘ஹை, ஆணிக்கட்டி ஆணிக் கட்டி…’’, வீட்டில் எல்லோரும் கூவினர். ராமு காலி கோணிப்பை ஒன்றை தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு பாத்திரமொன்றில் ஆணிக் கட்டிகளைப் பொறுக்கிப் பொறுக்கி போட்டுக் கொண்டிருந்தான். நானும் என் பழைய சட்டையொன்றை தலைக்கு மூடிக் கொண்டு அந்தக் கொட்டும் அடை மழையில் நன்கு நனைந்தபடி ஆணிக் கட்டிகளைச் சேகரித்தேன். அம்மா சர்க்கரையைத் தூவி ஐஸ்கட்டிகளைச் சாப்பிட எல்லோருக்கும் தந்தாள். மழைவிட்டு அப்பா வந்தவர் அம்மாவைத் திட்டினார். இரவு உடம்பெல்லாம் கணகணத்தது.

 காலையில் எழுந்திருக்கவில்லை. முடியவில்லை, ஒரே வலி, ராமுவைத் தவிர எல்லாரும் தொட்டுத் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘‘கொதிக்குது,’’ என்று சொன்னார்கள். அப்பா டாக்டரிடம் காட்டிவிட்டு வர, ராமுவை குதிரை வண்டி கொண்டுவர அனுப்பினார். அவன் சலிப்போடு போய்விட்டு வெறுங்கையில் வந்து நின்றான். குதிரை வண்டி எதுவுமில்லை என்றான். வசந்தாக்காவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கச்சேரிக்கு போய்விட்டார். சமாளித்துக் கொண்டு வசந்தாவுடன் நடந்துபோய் காட்டி ஊசிபோட்டுக் கொண்டு திரும்பி வருகையில் வண்டி கிடைத்தது.

 பள்ளிக்கூடம் எங்கள் குடியிருப்புக்கு பின்புறப் பகுதியில் இரு பெரும் வயல்வெளிகளுக்கு அப்பால் இருந்தது. ஊர் நிசப்தம் காத்திருந்த மாலை நேரம் நான்கு மணியளவு. ஒலிபெருக்கியில் பாட்டுப் போட்டிக்கு பேர் தந்து பங்கேற்க இருந்தவர்களின் பெயர்கள் நிதானமாக அழைக்கப்பட்டது. தெளிவாகவே கேட்டது. ஒரு பெயர் அழைக்கப்பட்டு பாடி முடித்தவுடன் அடுத்த பெயர். ஐந்தைந்து நிமிடங்கள் ஒவ்வொருவருக்கும் பாட ஒதுக்கப்பட்டன. பாடியவர்கள் எல்லாமே வெறும் சினிமாப் பாட்டுக்களைத் தான் பாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பரிசளிப்பும் இருப்பதால் மோகனாக்கா போயிருந்தாள். பாட்டுப் போட்டியில் பங்கேற்க இருந்தவர்களின் பெயர்கள் நிதானமாக அழைக்கப்படுவதும், அடுத்து பாடி முடிப்பதும் ஒலிபெருக்கி வழியாக எங்கள் குடியிருப்பை எட்டி வந்தது. தமிழய்யாதான் பெயர்களை வாசித்து போட்டியில் பாடுவதற்கு அழைத்துக் கொண்டிருந்தார். திடீரென தமிழய்யா பிரபாகரை சைகையால் தம் அருகில் வரச் சொல்லி என் வீட்டுக்கு சைக்கிளில் போய் என்னை அழைத்துவரச் சொல்லியனுப்பினார். பிரபை தன் சைக்கிளில் படுவேகமாய் என் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது ஒலிப் பெருக்கியை, தான் வாங்கி பெயர்களை சிவராமன் வாசிக்கத் தொடங்கியிருந்தார். காரணம், தமிழய்யாவுக்கு திடீரென இருமல் நிற்காது வந்துவிட்டதால் பெயர் கூப்பிடும் பணியை சிவராமன் ஏற்றுக் கொண்டார்.

‘‘என்ன பிரபை?’’, என்றேன் மெதுவாக,

‘‘அவனுக்கு இன்னும் ஜூரம் விடல்லே,’’ என்றாள் அம்மா.

‘‘ஒம் பேரு போட்டியில இருக்கு. கிளம்பு. நான் கொண்டுபோய் வுடறேன்.’’ என்றான் பிரபை. பின்னால் ஏறிக்கொள்ள பிரபை சைக்கிளை மிதித்தான், சிறிது தூரமே பள்ளிக்கூடம் இருக்கும்போது பிரபை இறங்கச் சொன்னான்.

‘‘பஞ்சராய்டுச்சிப்பா’’ என்றான். பின் சக்கரத்தில் முள் ஏறி பஞ்சராகியிருந்தது.

என் பெயரை சிவராமன் சொல்லி கூப்பிடுவது நன்றாகவே கேட்கிறது. சைக்கிளைத் தள்ளினபடி, ‘‘போ.. போ.. ஓடிப்போ. மூணு தடவைதான் கூப்புடுவாங்க. ஓடிப்போய்டு. ஒனக்குதான் முதல் பரிசு கிடைக்கும்’’, என்றான் பிரபை.

நான் வரப்பில் ஏறியிறங்கி தடுமாறித் தடுக்கி விழுந்து எழுந்து பள்ளிக்கூட நுழைவாயிலை நெருங்கியிருப்பேன். பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பிரபையும் நெருங்கிவிட்டான். மூச்சு இரைத்தது.

சிவராமன் மூன்றாவது தடவையும் இறுதி வாய்ப்புமானதை- என் பெயரைக் கூப்பிட்டு முடித்துவிட்டு, அடுத்த பெயரை அழைக்கவாரம்பித்தார். நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிவரும்போது பெரிய கல் ஒன்றில் வலது கால் பெருவிரல் இடித்து தரையில் விழுந்து உருண்டேன்.

வாய்ப்பையிழந்து எழுந்து நிற்கையில் பெருவிரல் நகம் பெயர்ந்து இரத்தம் சொட்டிற்று. தமிழாசிரியர் முகம் வாடி என்னைப் பார்த்து வருந்தினார். சிவராமன் ஓடிவந்து என்னைத் தாங்கிச் சென்று விளையாட்டறையில் முதலுதவி பெட்டியைத் திறந்து ஆவன செய்யத் தொடங்கினார்.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *