ஒய்யாரி பாமாவும் கீலுகுர்ரமும்
வகுப்பறைக் கதைகள் – 24
– விட்டல்ராவ்
பஸ் அரூரின் அரசு லைன் வீடுகள், முருகன் வீட்டு சோளக்கொல்லை, தாலுகா கச்சேரி எல்லாவற்றையும் கடந்து அரூரின் மாபெரும் காட்டை அணைத்து ஓடும் தர்மபுரி நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. கடைசி தடவையாக லைன் வீடுகளையும் காட்டையும் பார்த்துக் கொண்டேன். திரும்பத் திரும்ப அரூர் போர்டு பள்ளிக்கூடமும், தோட்டமும், பாலாமணி அன்னய்யன் பிரபை குமரேசர் தமிழய்யா தாமஸ் ஏட்டன் முகங்களே நினைவுகளில் வந்துபோயின. பிரபாகருக்கும் ரெமிஜியஸ்ஸுகும் தபால் கார்டு எழுத வேண்டும்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை மலைக்கோட்டையடிவாரமும் லண்டன்பேட்டையும் பஜாரும் புளிமண்டிகளும் சேர்ந்தது.
புதுப்பேட்டைதான் தவுலதாபாத். மேட்டூருக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து கிருஷ்ணகிரியில்தான் மின்சார விளக்கைப் பார்க்கப் போகிறோம். பழையபேட்டைக்கும் தவுலதாபாத்துக்கும் இடையில்தான் பொதுமருத்துவமனைக்கு சற்று தள்ளியிருப்பது கிருஷ்ணகிரி போர்டு உயர்நிலைப் பள்ளி, ராமுவின் இ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் பதிவுத் தபாலில் அப்பாவின் அலுவலக முகவரிக்கு வந்திருந்தது. ராமு தேர்ச்சி பெற்றுவிட்டதால் எங்கள் மூவரையும் பள்ளியில் சேர்க்க அப்பா தயாராகிக் கொண்டிருந்தார். தவுலதாபாத் பகுதியில் அப்பா ஆபீஸ் பியூன் ஒருவர் மூலமாக கிருஷன் கோயிலையடுத்த ராஜு வீதியில் வீடு கிடைத்திருந்தது.
புதிய ஊர், புதிய பள்ளிக்கூடம், புதிய ஆசிரியர்கள், புதிய மாணவர்கள், இ.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களை மூன்றாம் படிவம் எனும் எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். மோகனாக்காவுக்கு நான்காம் படிவத்துக்கான எல்லா புத்தகங்களுமே மாறிவிட்டதால் அவளுக்கு எதையும் பழைய புத்தகங்களாய் அரை விலைக்கு வாங்க முடியாது. எல்லாவற்றையும் புதியதாக வாங்கியாகவேண்டும். மூன்றாம் படிவத்துக்கும் தமிழ், ஆங்கிலம், சமூகப் பாட நூல்கள் மாறியிருப்பதால் எனக்கும் ராமுவுக்கும் அவற்றை வாங்க வேண்டும். அப்பாவுக்கு மிகவும் பணநெருக்கடியாக இருந்தது. கோபம் கோபமாக வந்தது. எங்களுக்கு துணைப் பாடமாக பஞ்சதந்திரம் வைக்கப்பட்டிருந்தது. மோகனாவுக்கு எல்லாம் வக்கணையாய் நடந்தது.
ராமு ஒரு பெஞ்சிலும் நான் வேறொரு பெஞ்சிலும் தூரம் தள்ளியே அமர்ந்துகொண்டோம். முன் பெஞ்சிலிருந்து ஒரு பையன் திரும்பித் திரும்பி என்னையே பார்த்துவிட்டு ‘‘புதுசா?’’ என்்று கேட்டான். தலையையாட்டினேன். அவன் என் நட்பை விரும்புவது தெரிந்தது. ராமு புருஷோத்தமன் என்ற பையனோடு ஒட்டிக்கொண்டுவிட்டான். நாங்களிருவரும் அண்ணன் தம்பி என்பது யாருக்கும் தெரியாது. வகுப்பாசிரியர் மாதவராவால்தான் ஒரு நாள் தெரியவந்தது. அதற்கு முக்கிய காரணம் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள்.
இல்லாவிட்டால் எங்கள் சகோதர உறவு தெரிய வர இன்னும் கொஞ்சநாட்களாயிருக்கலாம்… முன் பெஞ்சுக்காரன் ‘‘நா அங்கே வந்திருட்டுமா, ஓம் பக்கத்தில்?’’ எ்ன்று கேட்டான். ‘‘வந்துக்கோ’’, என்றேன். உடனே தன் ரஃப் நோட்டுடன் எழுந்து வந்து என் பெஞ்சில் என்னருகில் அமர்ந்துகொண்டான். எல்லோருமே குறிப்பெழுதிக் கொள்ள ஒரு அனமாதேய நோட்டை ரஃப் நோட் என்ற பெயரில் வைத்திருந்தார்கள். பெரும்பாலும் சென்ற ஆண்டு எழுதாமல் மீதமிருக்கும் நோட்டுப் புத்தகங்களில் எஞ்சிய காலி காகிதங்களைப் பிய்த்து தைத்து தடிமனாக வைத்திருக்கும் குறிப்பேடு அது. ராமு சண்டைபோட்டு அப்பாவின் பைலட் பேனாவை வாங்கி வைத்துக் கொண்டான். எனக்கு அப்பா போஸ்ட்மேன் என்ற விலை மலிவான பிளாஸ்டிக் பேனாவை வாங்கித் தந்திருந்தார். அதன் கழுத்துப் பகுதியில் மைகசியும், அதைப் பிடித்து எழுதிய பின் என்னிரு விரல்களில் மை கறையாயிருக்கும். ஒருமுறை கீழே விழுந்ததில் என் போஸ்ட்மேன் பேரல் விரிசல் கண்டுவிடவே ஏகமாய் பேனா கசிந்தது. மனமில்லாமல் அப்பா ஜிவல் என்ற சற்று விலை அதிகமான ஊற்றுப் பேனாவை வாங்கித் தந்தார். இன்னும் புத்தகங்கள் உறுதி செய்யப்படவில்லை. ஆசிரியர்களும் உறுதி செய்யப்படாமல் வந்து வந்து உட்கார்ந்து விட்டுப் போனார்கள். ஒவ்வொருவரும், கேட்காமலேயே, ‘‘உங்களுக்கு நா இல்லே, வேறே வருவாங்க’’ என்று சொல்லிக் கொள்ளுவார்கள். ஒரு சிலர் சும்மா உட்கார்ந்திருக்காமல் கணிதம், ஆங்கிலத்தில் மறந்து போகாமலிருக்க நினைவூட்டும் வகையில் மீள் பார்வையாக இலக்கணம்போல எதையாவது நடத்துவதும், கரும்பலகையில் எழுதிப்போட்டு, ‘‘வேணும்னா ரஃப் நோட்ல குறிச்சி வச்சிக்கோங்க’’ என்பார்கள்.
பக்கத்தில் வந்து உட்கார்ந்த பையன் சிறிது நேரத்துக்கெல்லாம் என் ரஃப் நோட்டை கேவலமாய்ப் பார்த்தான். அவன் கண் பார்வையைக் கவனித்ததில் அவனுக்கு புருவங்களின் ரோம வளர்ச்சி மிக மிகக் குறைவென்பது தெரிந்தது.
‘‘சாணிக் கலர் காயிதம்’’ என்றான்.
‘‘அப்பா, ஆபீஸ் பேப்பர்ல தச்சித் தந்தாரு’’ என்றேன். அவன் பெயர் ராதாகிருஷ்ணன் என்பதும் அவனப்பா சிங்காரப்பேட்டை சாலையில் மளிகைக் கடை வைத்திருப்பதும் அவன் சொல்ல தெரிய வந்த விஷயம். ராதாகிருஷ்ணன், தான் நிறைய திரைப்படங்கள் பார்த்திருப்பதாயும் பெருமையோடு சொல்லிக் கொண்டான்.
‘‘நீ சினிமா பாப்பியா?’’ என்று கேட்டான்.
‘‘வீட்ல கூட்டிட்டுப் போவாங்க’’ என்றேன்
‘‘நா தனியா தானே போவேன்’’ என்றான்.
‘‘ஓஹோ’’, என்று கூறி பேச்சை வெட்டினேன்.
‘‘நல்ல சினிமா வந்தா சொல்றேன், வர்றியா, நாம்ப ரெண்டுபேரும் போலாம்’’ என்றான்.
‘‘அப்பாவக் கேக்கணும்’’
‘‘எதுக்கு?’’
‘‘பின்னே காசு?’’
‘‘நாம் போட்டுக்கறேம்பா’’
‘‘பாக்கலாம்’’
‘‘என்ன பாக்கலாம், சினிமா புடிக்காதா?’’
நான் பதிலளிக்கவில்லை.
ராதாகிருஷ்ணன் பேச்சை மாற்றும் விதமாய், ‘‘மாறாத புஸ்தகம் பழைய புஸ்தகம் நா வாங்கித் தரட்டுமா?’’ என்றான். சரியென்றேன். உயர் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றவர்களின் பழைய புத்தகங்கள் ஏதெது மாறவில்லையோ அவற்றை ராதா பலரிடமிருந்தும் பலருக்கு அரை விலைக்கு ஏஜெண்டுபோல வாங்கித் தருவான். மறுவாரத்தில் ஒரு நாள் காலையில் வகுப்பாசிரியர் வருவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். நாகேந்திரன் என்ற பையன் மங்கோலிய கண்களும் நிறமுமாயிருப்பான். அவன் சொல்லிக் கொண்டிருந்தான்,
‘‘நமக்கு க்ளாஸ் டீச்சர் மாதவராவ்தான்’’
‘‘வியாச மூர்த்தினு சொன்னாங்களே?’’ என்று சிலர் கேள்வியெழுப்பிவிட்டு அடங்கினர்.
இந்த வகுப்பில் பெண்கள் இல்லை. ஏ பிரிவில் மட்டுமே இருந்தனர். மாதவராவ் வகுப்பாசிரியர் என்று தகவல் கிடைத்த கணம் முதலே சாமாச்சார் பேரில் சிலருக்கு பக்தியும் பணியும் மரியாதையும் ஏற்பட்டதுபோலிருந்தது. பழையபேட்டை அக்கிரகாரத்தில் ஐந்தாறு ஒண்டுக் குடித்தனங்கள் கொண்ட ஆதிகால கட்டிடமொன்றில் மாதவராவ் சார் குடும்பமும் சாமாச்சாரும் அடுத்தடுத்து வசிப்பவர்கள்.
சாமாச்சாரின் அப்பா முறுக்கு, தட்டுவடை, கடலையுருண்டையெல்லாம் வீட்டில் தயாரித்து பெட்டிக்கடைகளுக்கு வினியோகம் செய்பவர் என்று ராதாகிருஷ்ணன் ஓதிவைத்தான். சாமாச்சார் நன்றாக படிப்பானாம். சாமாச்சாரை வகுப்புத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் மாதவராவிடம் அவ்வளவாக பயப்படத்தேவையிருக்காது என்று பின் பெஞ்சில் அமரும் மாணவர்கள் ரகசியமாய்ப் பேசிக் கொண்டனர். மாதவராவ் ஆங்கிலப் பாடம் ஒன்றுதான் நடத்துவார். நல்ல உயரம் மனிதர். அடர்ந்த முடியை நீண்ட குடுமியாய் வளர்த்து முடிந்து கட்டி, மேற்புறம் நெற்றியிலிருந்து பாதிக்கு சிரைத்து வைத்திருப்பார். அவரது அநியாய சிவந்த மேனிக்கு முன் தலையில் சிரைத்த பகுதி பச்சை நிறமாய்த் தோன்றும். சனிக்கிழமை எண்ணெய்க் குளியலையடுத்து குடுமியை அவிழ்த்து பரத்தி காற்றாட கோதிவிட்டபடியே வகுப்பில் நுழைவார்.
கன்னட மாத்வர் நெற்றியில் சின்ன கருப்புப் பொட்டிருக்கும். சாமாச்சாரும் கருப்புப் பொட்டு வைத்திருப்பான். அவருடைய புத்தகங்களை சுமந்துகொண்டு முதலில் சமாச்சார்தான் வகுப்பில் நுழைவான். ஆசிரியர்கள் அறையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு அவர் வகுப்புக்கு வரும் நேர அவகாசத்தில் அவர்பால் கொண்ட பயபக்தியில் பேர் பாதியை சாமாச்சார் வாங்கிக் கொண்டிருப்பான்.
‘‘இங்க்லீஷ் புக் இந்த வருஷம் மாறிவிட்டது. இண்டியன் டொமினியன் ரீடர்’’, என்று அறிவித்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த அந்த ஆங்கிலப் பாட வாசகத்தை உயரத் தூக்கி மாணவர்களுக்குக் காட்டினார். மாதவராவ். ‘‘எல்லாரும் சீக்கிரம் வாங்கிடுவாங்க’’ என்று சொல்லிவிட்டார்.
வீட்டில் அப்பா யோசித்தார். தலையில் கையைவைத்தபடி சொன்னார்.
‘‘ரெண்டு பேரும் ஒரே செக்க்ஷன்தானே, இப்போதிக்கி ஒரு புஸ்தகம் வாங்கி ரெண்டு பேரும் பாருங்க, படிங்க. அப்பறமா இன்னொண்ணு வாங்கலாம்’’ என்றார்.
‘‘நாங்க வேறே வேறே பெஞ்சிலே ஒக்காந்திருக்கோமேப்பா’’ என்றான் ராமு.
‘‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கடா, கஷ்டமாயிருக்கு’’ என்றார் கண்டிப்போடு அப்பா. தமிழ்ப் புத்தகத்தை என்னிடம் இருக்க விட்டு விட்டு ஆங்கிலப் புத்தகத்தை அவன் தன்னிடமே வைத்துக் கொண்டான். ராதாகிருஷ்ணன் தன் ஆங்கிலப் புத்தகத்தை நானும் கவனிக்கும் விதமாய் எனக்கும் அவனுக்கும் இடையில் டெஸ்கில் விரித்து வைத்துவிடுவான். எனக்கு உண்டான புத்தகங்களில் மறாத பழையதை அரை விலைக்கு வாங்கித் தந்தான் ராதா. அவனும் தங்கள் மளிகைக் கடையில் நேரமிருக்கும்போது அமர்ந்து வியாபாரத்தைக் கவனிப்பான். படிப்பைவிட வியாபாரந்தான் ராதா கிருஷ்ணனுக்கு ஆர்வமூட்டி உபப்பளித்தது. அன்று சனிக்கிழமை, மெதுவாகக் கேட்டான்.
‘‘நாயித்துக் கிழம எங்கூட சந்தைக்கு வந்து உக்கார்றியா, நா கடைபோடறேன்?’’ சரியென்று சொன்னேன்.
ராதாகிருஷ்ணன் வியாபாரம், காசு பணம் வரவு செலவு லாப நஷ்டம் என்பனவற்றில் மிகவும் சரியானவன். எதற்கெடுத்தாலும் ‘‘லெக்காச்சாரம் லெக்காச்சாரம்’’ என்ற தெலுங்குச் சொற்களை ஜெபிப்பான். பழைய பாடப் புத்தகங்களை ஒருவரிடமிருந்து பேசி வாங்கி இன்னொருவருக்கு பேசி விற்றுத் தருவதில் கமிஷன் வாங்கிக் கொள்ளுவான். ஞாயிற்றுக்கிழமைகள் சந்தை கூடும் நாட்கள். சந்தைக்குள் விரிக்கப்படும் கடைகள் பஞ்சாயத்துக்கு சுங்கம் செலுத்தியாகவேண்டும். சுங்கத்தைத் தவிர்க்கும் சிறு வியாபாரங்கள் சந்தைப் பொட்டலுக்கு வெளியில் கோணிவிரித்து கூறுகட்டி வைத்திருப்பார்கள். சுங்கம் வசூலிக்கும் சிப்பந்தி நடைபாதை வியாபாரியிடமும் ஓரிரு கூறுகளை அள்ளி தன் பையில் போட்டுக்கொண்டுதான் பல்லிளிப்பான். அதுவும் ராதாவுக்கு லெக்காச்சாரமே.
ராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கான ஆரஞ்சுமிட்டாயைக் கூறுகட்டி கூறு ஒன்று அரையணா வீதம் கூவிக் கூவி விற்பான். காலை எட்டு மணிக்கு கடை விரித்தால் மாலை சந்தை கலையும் வரை இவனும் இருந்து பார்ப்பான். அவன் மிட்டாய் கொண்டு வருவதே ஒரு தினுசானது. பழைய பேட்டையிலுள்ள பஜாருக்குப் போய் சில்லரை வியாபாரக் கடைகளில் தூள் மிட்டாய் வாங்கி வருவான். பெரிய இருபது பவுண்டு டின்களில் பல நிறங்களிலும், சுவைகளிலும் ஆரஞ்சு சுளை வடிவமிட்டாய்கள் இருக்கும். அவற்றை விற்றது போக ஒவ்வொரு டின்னிலும் இரண்டு பவுண்டுக்கு அரை- கால் மிட்டாய்களும் தூளுமாய் அடியில் தங்கிவிடும். அதை கேவலமான விலைக்குத் தருவார்கள். அதைக் கொண்டுவந்துதான் சந்தையன்று சந்தைக்கு வெளியில் கோணி விரித்து கூறுகட்டி கூவி விற்பான் ராதாகிருஷ்ணன்.
ஏழை பாழைகள் குழந்தைக் குட்டிகளோடு சந்தைக்கு வருபவர்கள் தம் குழந்தைகளுக்கு மிட்டாய் கூறுகளை வாங்கித் தந்து நடத்தியும் தோள்மீது அமர்த்தியும் ஐந்து மைல் தொலைவைக்கூட நடந்தே சென்று தம் குக்கிராமத்தை அடைவார்கள். ராதாவுக்கு நல்ல இலாபம் கிடைக்கும் என்று சொல்லுவான். என்னை காலை ஒன்பது மணிக்கு வந்தால் போதுமென்றும் நேராக சந்தைக்கே வந்துவிடும்படியும் சொல்லுவான்.
இப்போதெல்லாம் வீட்டில் என்னை, ராமுவை எங்கே போகிறாய், யாரோடு என்றெல்லாம் கேட்பதில்லை. அப்பாவுக்கு யோசனை அதிகமாகிவிட்டது. விரைவில் பணியிலிருந்து அவர் ஓய்வு பெற இருக்கிறார் என்பதால் அம்மாவும், அப்பாவும் பெருமூச்சும் யோசனையுமாயிருக்கிறார்கள், சீக்கிரம் வந்து சேர் என்று சொல்லுவதோடு சரி. சந்தை சுறுசுறுப்படைந்திருந்தது. ராதாகிருஷ்ணன், ‘‘மிட்டாய் கூறு அரையணா, கூறு அரையணா’’, என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தான். போய் நின்றதும், ‘‘உக்காரு, வியாபாரம் பாரு. போயி டிபன் பண்ணிட்டு வர்றேன், நீ டிபன் பண்ணியாச்சா?’’ என்று சொல்லியபடியே எழுந்து நின்றான். டப்பா ஒன்றில் கிடந்த சில்லரைக் காசு எல்லாவற்றையும் எடுத்து ஜேபியில் போட்டுக் கொண்டு பரப்பியுள்ள மிட்டாய்க் கூறுகளை எண்ணிப் பார்த்துக் கொண்டான்.
நா வர்றதுக்குள்ளே கூறத்தனையும் வித்துப் போயிட்டாக்கா, டின்லயிருந்து எடுத்து கூறுகட்டு. சும்மா உட்காராதே, மிட்டாய் கூறு அரையணானு சொல்லிக் கூப்புடு’’ என்று கூறிவிட்டு நிலக்கடலைப் பொட்டலம் ஒன்றை வாங்கி வந்து எனக்குத் தின்னக் கொடுத்துவிட்டு சைக்கிளில் ஏறிப் போனான். ஒரு முறை கூவிப் பார்த்தேன். ஏதோ அவமான உணர்வு ஒன்று உந்தியதால் மேற்கொண்டு கூவாமல் சும்மா உட்கார்ந்து கையில் எடுத்து வந்திருந்த கல்கண்டு இதழைப் படித்துக் கொண்டிருந்தேன். சைக்கிள் மணியோசை கேட்டு தலையைத் தூக்கினேன்.
‘‘இப்பிடி புக்கு படிச்சிகிட்டு ஒக்காந்திருந்தா எவன் வந்து வாங்குவான். நா என்ன சொல்லிட்டுப் போனேன், கூவிக் கூவி விக்கணும்னு சொன்னேனில்லயா?’’ என்றான் சற்று காரத்தோடு.
‘‘அது எனக்கு ஆவாதுப்பா. போறவன் வர்றவன் ஒரு மாதிரி பாக்கறான்’’
‘‘பாத்தா, என்ன? கொறஞ்சா போயிடும். சரி, நவுரு’’, என்று கூறிவிட்டு உட்கார்ந்தவன் சில்லரை வைக்கும் டப்பாவைத் திறந்து பார்த்தான்.
‘‘மூணு கூறுதான் வித்திச்சா?’’
‘‘ஆமா’’
ராதா கூவி விற்கத் தொடங்கிவிட்டான். நான் வீட்டுக்குப் போக எழுந்து நின்றேன்.
‘‘சாப்புட்டு வா’’ என்றான்.
பார்க்கலாமென்றேன். அவன் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டே சொன்னான்.
‘‘சாயங்காலம் தாராலே முதலாட்டம் சினிமாவுக்குப் போலாம், வா. காசு நாம் போட்டுக்கறேன்’’
‘‘என்ன படம்?’’
‘‘ஒய்யாரி பாமா’’
‘‘என்ன படம்பா?’’
‘‘தெலுங்கு. அருமையான படம். அஞ்சலி, நாகேஸ்வர ராவ் குடுத்திருக்காங்க.’’
‘‘தெலுங்கு வருமா?’’
‘‘வீட்ல பேசறதே அதான்.’’ என்றான் ராதா.
கிருஷ்ணகிரியிலும் ஓசூரைப்போல தெலுங்கர்கள் அதிகம். தாரா தியேட்டரில் ஒய்யாரி பாமாவுக்கு நல்ல கூட்டம். கடைசி வகுப்பான தரை டிக்கெட்டுக்கு முண்டியடித்து முன்னேறி இரண்டு டிக்கெட் வாங்கிவிட்டான் ராதா. ஒய்யாரி பாமாவாக அஞ்சலி தேவி சகல ஸ்திரீ சாகசங்களையும் அப்படத்தின் இயக்குனரின் வழிகாட்டலையும் மிஞ்சி மீறி நடித்திருந்தார். அவரது கவர்ச்சி நடிப்புக்கு முன்னால் நாகேசுவரராவின் யவ்வனமோ வாட் சண்டையோ பிற அஷ்டகோண உடல்மொழிகளோ உருப்படவேயில்லை. கப்பல் வருகிறது.
ஜால்ராவை வைத்துக்கொண்டு இடுப்பைக் காட்டி ஆடும் ஜிப்சி நடனமாடுகிறார் அஞ்சலி. கப்பல் விபத்து. என்னென்னமோ பாமாவின் ஒய்யாரங்களாய் படம் ஓடி முடிகிறது. சாலை முக்கில் போலீஸ்காரர் இருந்தார். இறங்கு இறங்கு என்றான் ராதா. பின்னாலிருந்து குதித்ததில் விழுந்து எழுந்து நின்றேன். வெகுதூரம் போய் ராதா என்னை வரச் சொல்லி கையசைத்தான். நொண்டி நொண்டி ஓடினேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மிட்டாய் கூறு வியாபாரத்தில் என்னை விட்டு விட்டு வீட்டுக்குப் போயிருந்தான் ராதா. நான் கூவாமல் சும்மா உட்கார்ந்திருந்தேன். தூரத்தில் மோகனாக்காவும் வசந்தாக்காவும் பைகளோடு சந்தைக்கு வந்துகொண்டிருப்பதைக் கண்ணுற்றவன் திகிலடைந்து கடையை அப்படியே விட்டு விட்டு எழுந்தோடி ஒரு சந்தில் ஒளிந்துகொண்டு கவனித்தேன்.
ஞாயிற்றுக்கிழமைகளில் உட்கார்ந்து படிக்காமல் எங்கேடா போகிறாய் என்ற கேள்வி வீட்டில் எழுகையில், கால் பந்தாடுவதாய் பள்ளிக்கூட மைதானத்திற்குப் போவதாய் சொல்லியிருக்கிறேன். சகோதரிகள் சந்தைப் பேட்டைக்குள் போனதும் சந்திலிருந்து வெளியில் வந்தேன். அதே சமயம் ராதாகிருஷ்ணனும் சைக்கிளில் வந்திறங்கினான்.
‘‘ஏன் எந்திருச்சிகிட்டே?’’ என்றான்.
‘‘அர்ஜெண்டா’’, என்று கூறி ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டிவிட்டு அவசரமாய் வீடு வரை போய்விட்டு வருவதாய்ச் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஆனால் மீண்டும் திரும்பி சந்தைக்குப் போகவில்லை. இரவு அவன் வீடு தேடி வந்தான். ஏன் வரவில்லையென கேட்டதற்கு அப்பா வீட்டிலிருந்ததால் வரமுடியவில்லை என்றேன். அன்றிரவு சினிமாவுக்கு அழைத்தான். இரவு ஆட்டத்துக்கெல்லாம் வரமுடியாதென்று சொல்லிவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து தாராவில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை எடுத்துவிட்டு உகாதியை முன்னிட்டு தெலுங்குப் படமொன்றை போட்டிருந்தார்கள்.
‘‘இது ஒய்யாரி பாமாவை விடவும் ரொம்ப நல்லாயிருக்கும்’’ என்றான் ராதா.
‘‘என்ன பேரு?’’
‘‘கீலு குர்ரம்’’
‘‘அப்படின்ன என்னா?’’
‘‘மந்திரக் குதிரை.’’
பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. மறுநாள் மாலை ஆறு மணியாட்டத்துக்கு போவதாய் முடிவு செய்தோம். கீலு குர்ரமும் அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் ஜோடி நடித்த படமென்றாலும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் அஞ்சலி இதில் அரசரின் பட்டத்து யானைகள் ஒவ்வொன்றையும் இரவில் அடித்துச் சாப்பிடும் பூதமாய் நடிக்கிறார். அழகி அஞ்சலி யானைக்கு ஆசைப்பட்டு அரசனை மயக்கி அரண்மனையிலிருந்துகொண்டு யானையைச் சாப்பிட்ட பின் இரத்தத்தை தூங்கும் மகாராணியின் வாயைச் சுற்றி பூசிவிட, முட்டாள் மன்னன் ராணிதான் யானையைத் தின்பவள் என முடிவு செய்து சிறையில் தள்ளுகிறான். பட்டத்து இளவரசன் நாகேஸ்வரராவ் காளியின் அருளால் கிட்டும் பறக்கும் மாயக் குதிரைமீது ஏறி இரவில் வலம் வருகையில் யானைப் பிளிறல் ஒலியையடுத்து அஞ்சலி பெண் பூதமாய் மாறுவதைக் காண்கிறான். பிறகு பூதத்தின் உயிர்நிலையை கண்டறிந்து தீர்த்துக் கட்டுவதாய் நம் காதில் பூ வைத்து அனுப்பப்படுகிறது. படம் முடிந்தவுடன் நான் சொன்னேன், இது ரொம்பப் பழைய படம் ராதா, நா மூணாவது படிக்கிறப்ப தர்மபுரியில பாத்த படம், மாயக் குதிரை. இதே ஆக்டருங்கதான். ஆனா தமிழ்,’’ என்றேன்.
மறு வாரம் அவன் சந்தைக்கு அழைத்தபோது வர மறுத்தேன். அவன் கோபம் மேலிட்டு, ‘‘வர்றியா, இல்லையா?’’ என்றான்.
‘‘வர முடியாது’’
‘‘அப்போ எங்காசைக் குடு’’
‘‘என்னா காசு?’’
‘‘ரெண்டு சினிமாவுக்கு கூட்டிட்டுப் போயிருக்கேனில்லே. ஒய்யாரி பாமா, கீலு குர்ரம்.’’ என்றான் ஒரு சரியான கடன்காரனின் தோரணையில்.
‘‘நானா கேட்டேன், நீ தொணைக்கி கூப்புட்டே, சரினு வந்தேன்.’’
‘‘ஓ, படம் பாக்கற ஆசையே இல்லாமதான் வந்தியோ? ஒங்கம்மா மேல சத்தியம் பண்ணு பாக்கலாம்’’
சற்று பின் வாங்கிவிட்டு மீண்டும் ஒரு பிடி பிடித்தேன்.
‘‘அப்பிடியே வச்சிகிட்டாலும் தரை டிக்கெட்டுக்கு எவ்வளவுப்பா? ரெண்டு தபா தரை டிக்கெட்டு.’’
எவ்வளவுப்பா? ரெண்டு தபா தரை டிக்கெட்டு’’
‘‘ஏன், இண்டர்வெல்ல குடிக்கிறதுக்கு கோலிபாட்டில் கலர் வாங்கிக் குடிச்சியே, யார் காசு?’’
‘‘சரி, மொத்தம் எவ்வளோ?’’
‘‘ரெண்டு ரூபா’’
‘‘அநியாயம், அவ்வளோ தர முடியாது’’
‘‘முடியாதில்லே, சரி, நா வாங்கற மாதிரி வாங்கிடறேன் பார்.’’
மறுநாள், வகுப்பில் முதல் பீரியடே ஆங்கிலம்தான். வகுப்பாசிரியர் எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டவராய் குடுமி விரிகோலமாய் வந்திருந்தார். ஒரு முறை சுற்றி பார்த்துக்கொண்டார். எல்லோரையும் அவரவர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மாதவராவ் தம் கண்ணாடியைக் கழட்டி துடைத்துப் பார்த்துக்கொண்டு கண்களில் மாட்டினார். முதல் பாடம் அன்றுதான் தொடங்க இருந்தது. இரு வாரங்களாய் இரு கவிதைகளையும் இலக்கணத்தையும் மட்டுமே போதித்து வந்த வகுப்பாசிரியர் அன்றுதான் உரைநடைப் பாடத்தை எடுத்தார்.
‘‘போர்டை நல்லா அழி’’ என்று அவர் கூறவும், சாமாச்சார் எழுந்துபோய் நேற்று கணிதம் நடத்தும் முனிசாமி சார் எழுதியிருந்ததை அழித்தான். கணிதமும் சரி, ஆங்கிலமும் சரி, முனிசாமி சார் மிகச் சிறப்பாக நடத்துவார்.
ராதாகிருஷ்ணன் தன் ஆங்கிலப் புத்தகத்தை தன் பக்கமாய் தனக்கு மட்டுமே தெரியும்படிக்கு மூடினாற்போல பாதிக்குத் திறந்தும் திறக்காதது போன்ற கோணத்தில் வைத்துக்கொண்டு வகுப்பாசிரியர் பாடம் நடத்துகையில் பார்த்தான்.
முதல் பாடமே புல்லைப் பற்றியதாயிருந்தது. ‘‘The Grass’’ என்று பாடத்தின் தலைப்பைப் படித்துவிட்டு மாதவராவ் தொடர்ந்து வாசித்தார்.
All Around us in the Meadow
Grass is Growing Green and Soft.
The Stem of the Grass is Lean and Long
The Leaves of the Grass are Long and Sharp
The Flowers of the Grass are of Many Colours.
படித்தபடியே கண்ணாடிக்கு மேலாக உயர்ந்த மாதவராவின் கண்கள் அவரையே கவனித்தபடி இருக்கும் என்னைப் பிடித்துவிட்டன.
‘‘புஸ்தகத்தைப் பாக்காம என்னையே எதுக்கு கவனிக்கறே, ஓம் புஸ்தகமெங்கே?’’ என்று கேட்டுவிட்டார்.
‘‘எனக்கு புஸ்தமில்லே சார்’’ என்றேன்.
‘‘அன்னைக்கு வச்சிருந்தியே?’’
‘‘அது எங்க அண்ணங்கிட்டேயிருக்கு. அப்பா இப்போ ரெண்டு பேருக்கும் ஒண்ணுதான் வாங்கித் தந்தார். அடுத்த மாசம் எனக்கு கிடைக்கும்’’ நான் சொல்லிவிட்டு தூரமாய் பெஞ்சிலிருக்கும் ராமுவை சுட்டிக் காட்டினேன்.
‘‘அவன் ஒனக்கு அண்ணனா? ராமு கூடப் பொறந்த அண்ணனா?’’ என்றார் ஆச்சரியத்தோடு வகுப்பாசிரியர். எல்லா மாணவர்களுமே அதே மாதிரி கேட்டு வியந்தார்கள். பல ஆண்டுகளாய் பள்ளியிலிருந்து நின்று விட்டு இ.எஸ்.எல்.சி. படித்துத் தேறி என்னோடு வகுப்பில் சேர்ந்த ராமு என்னைவிட ஏழு வயது மூத்தவன் என்பதால் அண்ணன் தம்பி என்பதை சொல்லக்கூடாதென்று எனக்கு கட்டளையிட்டிருந்தான் ராமு. மாதவராவ் உடனே, ‘‘ராமு எந்திரி, ஏய் ராதாகிருஷ்ணா, நீ ராமு இடத்துக்கு வந்து உட்கார். நீ போய்’’ஒந்தம்பி பக்கம் உக்கார்.
ரெண்டு பேரும் ஒரு புஸ்தகத்தப் பாருங்க’’ என்றார். இடமும் நபர்களும் மாறினர். ராமுவுக்கு என்னருகில் அமர துளியும் விருப்பமில்லை. வெறுப்போடு புத்தகத்தை என் பக்கம் தள்ளி வைத்து நானும் பார்க்க வைத்தான்.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

