அப்பா தாத்தா
வகுப்பறைக் கதைகள் – 26
– விட்டல்ராவ்
அரூரில் இராப்பள்ளிக்கூடம் படித்தபோது குமரேசன் சார் எவ்வளவோ ஒத்தாசையோடு இருந்திருக்கிறார். ராமு என்னைவிட ஐந்து வயது மூத்தவன். இ.எஸ்.எல்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே அவன் வயதை இரண்டு வருடங்கள் குறைத்துப்போட்டு ஒப்பேற்றிவிட்டார் குமரேசர்.
ராதாகிருஷ்ணனுக்கு என் சினேகம் விட்டுப்போனதும் ராமுவோடு கைகோர்க்க முயற்சி செய்து பார்த்தான். அந்த இடத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த புருஷோத்தமன் இவனுக்கு கொஞ்சமும் இடம் தரவில்லை. காலாண்டுத் தேர்வில் ராதாகிருஷ்ணன் எந்த பாடத்திலும் தேரவில்லை என்பதோடு ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தான்.
வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்து எழுதிக் கொண்டு திருப்பித் தரும் வகையில் அவனுக்கு நோட்டுப் புத்தகம் எதையும் இரவல் தர நண்பர்கள் இல்லையென்பது தெரிந்தது. மெதுவாக என் நட்பை புதுப்பித்துக் கொள்ள துடிப்பது விளங்கிற்று, மற்ற பிள்ளைகளோடு உணவு இடைவேளையின்போது எனது நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு அவர்கள் பெரிதாகச் சிரிக்கையில் இதுவரை சிறிது நாட்களாய் உம்மென்றிருந்த ராதாகிருஷ்ணன் இப்போது என்னைப் பார்க்காமல் எங்கோ பார்த்து தானும் சிரிக்கிறான்.
ராமுவைக் கொண்டு என்னோடு பேச்சை ஆரம்பிக்க முயன்றான் ராதா. என் நோட்டுப் புத்தகங்கள் அவனுக்கு அப்போதைக்கு மிகவும் அவசியமானவை. எனவே தன் கணக்குக்கு நான் அவனுக்கு இரண்டு ரூபாய் கடன் பட்டிருந்ததை தற்காலிகமாக மறந்தவனாய் நடித்தான். ராமுவுக்கும் எனக்குமிடையிலிருந்த சிறு இடைவெளியைப் பிடித்துக் கொண்டு எனது நட்பைப் புதுப்பிக்க முயன்றான். இப்போது ராதாவை வீட்டார் கண்டித்திருக்க வேண்டும்.
வாரச் சந்தையில் தூள் மிட்டாய் வியாபாரத்தை நிறுத்திவிட்டதாக சொன்னான். நான் ஒன்றும் சொல்லவில்லை. முன்போல சினிமாவுக்கும் போவதில்லை என்றான். அதற்கும் நான் எதையும் வாய் திறக்கவில்லை என்றாலும் மனதுக்குள்ளேயே, ‘‘ஏன்?’’ என்று கேட்டுக் கொண்டேன். பேசவே மாட்டியாப்பா?’’ என்று கேட்டான், நான் பலமாய்ச் சிரித்துவிட்டேன். அப்படி சிரித்தது எனது பலகீனமாயிருக்கலாம், அவன் நெருங்கிவிட்டான். அப்போதுதான் புதியதாக வெளிவந்திருக்கும் பூஞ்சோலை என்ற பத்திரிகையை எனக்கு படிக்க நீட்டினான். அவன் தம்பிக்கு அதிலெல்லாம் ஆர்வமதிகம் என்றும் அவனுடையதுதான் அந்தப் பத்திரிகையென்றும் சொல்லிக் கொண்டான்.
‘‘ஒங்கண்ணன் ராமு ஒன்னவிட எவ்ளோ வயசு பெரியவன்?’’, என்று திடீரென கேட்டான் ராதா.
‘‘ஏன்?’’ என்றேன்.
‘‘சும்மா கேட்டேன்’’ என்றேன்
சும்மா அல்ல, ஏதோ விஷயமாகத்தான் இவன் கேட்கிறான் என்று என் மனம் கூறிற்று, பதில் சொல்லாமல் அவனையே பார்த்தேன். அவனும் சிறிது நேரம் பேசாதிருந்தவன் சற்று படபடப்போடு சொன்னான்.
‘‘ராமு ஷேவ் பண்ணியிருக்கான்’’, என்றான்.
அது எனக்கும்தான் தெரியும். என்றாலும் பதிலேதும் சொல்லாமலிருந்தேன். ஒரு நாள் ராதா வகுப்பறையில் ராமுவிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தவன் அவனிடம் தமிழ்ப்பாட நோட்டை கேட்டிருக்கிறான். ராமு உடனே என்னைக் காட்டி என்னிடம் வாங்கிக்கொள்ளும்படி சொல்லிவிட்டான். அப்போது புருஷோத்தமன் முன்னால் வந்து தனது நோட்டுப் புத்தகத்தை தருவதாகக் கூறினபோது ராதா வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டான்.
புருஷோத்தcன் பக்கத்து வகுப்பான ஏ- பிரிவைக் காட்டி அங்கு போய் கேட்டு வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தான். ஏ-பிரிவு பெண்கள் நிறைந்த வகுப்பாகும். ராமுவும் பலமாய்ச் சிரித்தான். புருஷோத்தமன் ராதாகிருஷ்ணனை தொடக்கூடாத இடத்தில் தொட்டு அழுத்தி இலேசாக குத்தினான். சாமாச்சார் அதைக் கண்டு பலமாய்ச் சிரித்தபோது, ராதாகிருஷ்ணன் எல்லாவற்றையும் இடம் பொருள் ஏவல்களை புறந்தள்ளிவிட்டு சாமாச்சாரின் கன்னத்தில் ஓங்கியறைந்துவிட்டான்.
அந்த பி-பிரிவு வகுப்பே ஸ்தம்பித்துப் போய்விட்டது. பேச்சு, சிரிப்பு எல்லாம் கப்பென்னு நின்றுபோய் எல்லோரும் ஒரு வித பயத்தோடு சாமாச்சாரையும் ராதாவையுமே அடுத்து என்ன… அடுத்து என்ன என்ற கேள்வியோடு கிலி பிடித்து பார்த்தனர். அடுத்து ஓரிரு நிமிடங்கள் கழித்து ராதாகிருஷ்ணனும் இறுக்கம் குறையவும் பயம் மேலிட்டவனாய், சாமாச்சாரின் கையைப் பிடித்துக் கொண்டு மன்னித்துவிடும்படி கெஞ்சினான்.
நல்லவேளை அன்றைக்கு வகுப்பாசிரியர் மாதவராவ் இல்லை. அவரது தாயாரின் வருடாந்திர சிரார்த்தம் என்பதால் மாதவராவ் அன்றைக்கு லீவு போட்டிருந்தார். அதற்குள் சாமாச்சாரை சமாதானப்படுத்திவிடலாமென்று ராதாவுக்கு சொல்லிவைத்தான் நாகேந்திரன், பயம் உண்மையை மீறிவிடக்கூடும். உண்மை நிச்சயம் பயம் தெளிய வைக்க வல்லது. பயம் கோபமெல்லாம் தெளியும் நிலையில் உண்மை எழுந்து நின்று ஆனந்தப் பரவச நிலையை அருள்கிறது. மன்னிப்பும், மன்னிப்புக்கோரலும் அதற்கான ஆரம்பம். சாமாச்சார் எல்லோரும் பயந்தது மாதிரி வகுப்பாசிரியரிடம் ராதாவைப் பற்றி புகார் எதையும் ஓதவில்லை.
ஆனாலும் மறுநாள் பள்ளிக்கூடம் வராமல் மட்டம் போட்ட ராதா அன்று மாலை சிங்காரப்பேட்டை சாலை தொடங்குமிடத்தில் எனக்காக காத்திருந்தான். என்னைக் கண்டதும் ஆர்வத்தோடு கேட்டான்.
‘‘மாதவராவ் சார் என்னப் பத்தி எதாச்சி கேட்டாரா?’’ அப்படி எதுவுமில்லை என்றதும் தான் மறு நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு வருவதாகக் கூறியவன் என் கையைப் பிடித்துக் கொண்டு ‘‘காலேல ரெடியா இரு. சைக்கிள் மணியடிப்பேன். வந்திடு. பின்னால ஏறிக்க, ரெண்டு பேருமா ஸ்கூலுக்கு சைக்கிளில் போலாம்’’ என்றான். நான் நிராகரித்தேன்.
‘‘ஒங்கூட நா வர்லேப்பா, நா எப்பவும்போல நடந்தே போய்க்கிறேன்’’, என்றேன்.
வகுப்பறையில் புருஷோத்தமன் ராமுவை கிருஷ்ணகிரி மலைக்கோட்டைக்கு அந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் அழைத்துச் செல்லுவதாய் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கவனித்துவிட்டு ராதாகிருஷ்ணன் என்னிடம் சொன்னான்,
‘‘சையத் பாட்சா மலைமேல ஏறறது ரொம்பவே கஷ்டம்பா. வர்றியா, நாங்கூட்டிட்டுப் போறேன்’’, அந்த வாரம் வேண்டாமென்று நான் கூறவும், ராதா ‘‘உரூஸ் பண்டிகைக்குப் போய்க்கிலாம், வுடு, ஜனம் ஜாஸ்தி போவும்’’, என்றான். அதேசமயம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்து வைத்தேன்.
‘‘அப்பறம், உரூஸ் பண்டிகையப்போ சையத் பாட்சா மலைக்கோட்டைக்கு கூட்டிட்டு போனது வந்ததுக்கு செலவு இவ்வளோனு சொல்லி எடு குடு வையினு கேப்பியே,’’ என்றேன்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நாம்ப போலாம்’’, என்றான் எதிர்பாராதபடி டி.பி.பெரிய சாமி. டி.பி. பெரியசாமி பர்கூர் சாலையிலுள்ள காட்னாம்பட்டி முருகன் கோயிலுக்கு எதிர்வாடையிலுள்ள குக்கிராமம் தண்டேகுப்பத்திலுள்ள குடியானவ மாணவன். வகுப்பிலேயே உயரமானவன். படிப்பு சுத்தம்! அறுவடை சமயத்திலெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டான். மாதவராவ் அவனை டி.பி. பெரியசாமி என்பதை, ‘‘தண்டப் பிண்டம்’’, என்று சொல்லித் திட்டுவது எனக்கு மிகவும் அநியாயமாகப்படும். அதைச் சலுகையோடு தானும் திருப்பிச் சொல்லி பெரியசாமியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட சாமாச்சார் பயந்துபோய் பெரியசாமியிடமிருந்து முற்றிலும் ஒதுங்கிப் போனான்.
ஒரு நாள் பள்ளிக்கூட உணவு இடைவேளையில் மாணவ, மாணவிகள் ஓடியாடிக் கொண்டிருந்தனர். அந்த பெரிய விளையாட்டு மைதானத்தில் ஒரே கூட்டம். ஓசூர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கிருஷ்ணகிரி பள்ளி மாணவர்களுக்குமிடையே ஜூனியர் கால் பந்தாட்டப் போட்டி அன்று மாலை நடைபெறவிருந்தது. ஓசூர் டீம் மிகவும் வலுவானது என்றார்கள். ஜூனியர் கால்பந்துப் போட்டியில் கிருஷ்ணகிரி டீமில் டி.பி.பெரியசாமியை சப்ஸ்டிடூட்டாக சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
மைதானத்தில் இறங்கி ஓசூர் டீமில் எனக்கு தெரிந்தவர்களைத் தேடினேன். ஆ, கிடைத்துவிட்டார்கள். அந்த புகழ்பெற்ற ஓசூர் ஆட்டக்காரர்கள் அசாதுல்லாகானும் காணிக்கைசாமியும். காணிக்கை சாமி ஓசூர் உயர்நிலைப் பள்ளியின் ஜூனியர் கால்பந்தாட்ட அணியின் புகழ்பெற்ற கோலி. அசாதுல்லாகான் எதிரிகளால் எளிதில் தடுக்கமுடியாத செண்டர் ஃபார்வார்டு ஆட்டக்காரன். என்னைக் கண்டதும் இருவருமே ஓடிவந்து கட்டிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள்.
அவர்களுடன் ஆட்டத்தைக் கவனிக்க செல்வநாதனும் அப்துல் காதரும் வந்திருந்தார்கள். ஓசூர் நண்பர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்களுடைய உடற்பயிற்சி ஆசிரியர் அவர்களை பயிற்சியிலீடுபடுமாறு அழைத்தார். அன்று மாலை நடைபெற்ற அந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் மிக எளிதாக ஓசூர் அணி கிருஷ்ணகிரி அணியை ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்று வாகை சூடி திரும்பிச் சென்றது. ஓசூர் அணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராதபடி ஒரு பெண் குரல் என் பெயர் சொல்லி அழைக்கவும் திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்தேன்.
ஆகா, சுபத்திரா! ஓசூர் பள்ளி மாணவி. ‘‘நல்லாயிருக்கியா’’, என்று கேட்டாள் சுபத்திரா. இப்போது பாவாடை தாவணியில் உயரம் மட்டும் அதிகம் வளராது குறுக்காக வளர்ந்து வரும் சுபத்திரா. அவளுடைய அப்பாவையும் இவ்வூர் தாலுகா கச்சேரிக்கே மாற்றியிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டாள். சுபத்திராவின் அப்பாவை என் அப்பாவுக்கு அவ்வளவாய் ஆகாது. அவர் இந்தூருக்கு மாற்றியிருப்பதை அப்பா சொல்லவேயில்லை. அப்பாவுக்கு, தான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் நெருங்கி வருவதால் யோசனை அதிகம். வேறெந்த விஷயமும் அவருக்குப் பொருட்டாகயில்லை. கையில் சேமிப்பு என்று சல்லியில்லை. ஓய்வூதியம் பிச்சைக்காரத்தனமாய்த்தான் கிடைக்கும். அதுவும் இலேசில் வந்துவிடாது. நாயலை அலைந்தாக வேண்டியிருக்கும். வேறெந்த வேலையாவது செய்தாக வேண்டும்.
சிறியதாக வீடு பார்த்தாக வேண்டும். மூன்று பேருக்கு பள்ளிக்கூடச் செலவு. அப்பாவோடு அம்மாவும் யோசிப்பதில் சேர்ந்துகொண்டாள்.
ஒரு விடுமுறையன்று மாலை நேரம். தரையில் உட்கார்ந்து குப்புறக் குனிந்து கிட்டத்தட்ட படுத்தாற்போன்ற நிலையில் எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். ராமு ஜன்னலோரம் உட்கார்ந்து சத்தமாய்க் கத்தி படித்துக் கொண்டிருந்தான். எதையோ மனப்பாடம் செய்கிறான் என்று அர்த்தம். இன்னொரு கோடியில் அமர்ந்து மோகனாக்கா உரக்கக் கத்தி மனப்பாடம் செய்ய வேண்டி படித்துக் கொண்டிருந்தாள்.
மனப்பாடம் செய்ய வேண்டியது எனக்குமிருந்தது. சத்தம் போட்டு கத்திப் படித்தால்தான் எனக்கும் மனப்பாடமாகும். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இரண்டு, மூன்று பேர் கத்தி சத்தம் போட்டு படித்தால் மகா தொந்தரவு. யாருக்கும் மனப்பாடமாகாது. சண்டைதான் மிஞ்சும். ராமுவுக்கும் மோகனாக்காவுக்கும் அடி தடிகூட நடந்திருக்கிறது. ஆனால் நான் மாதவராவின் அறிவுரையைப் பின்பற்றி கத்தி சத்தம் போட்டு படிக்காமல் ஒவ்வொன்றையும் ஐந்தைந்து தடவை எழுதிப்பார்ப்பேன். எழுதியெழுதிப் பார்த்ததில் கப்பென்று மனதில் நிலைத்துவிட்டது.
அப்போது ஜன்னலில் ஒருமுகம் தோன்றியது. ராதாகிருஷ்ணன், அவனது கண்கள் வீட்டின் கூடத்தை மேய்ந்தபோது ஒரு பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த மோகனாக்காவின் ‘‘பேபி டாய்’’ அவன் கவனத்தை ஈர்த்துவிட்டது. அவன் அதையும் என்னையும் மாறி மாறி பார்த்தவன், ‘‘வரட்டுமாப்பா உள்ளே, வரட்டுமா?’’, என்று குசுகுசுவென கேட்டான். ராமுவும் மோகனாவும் என்னையும் ராதாவையும் முறைத்த முறைப்பில் ராதா உள்ளே வருவதற்கு அனுமதியில்லை என்பதை அவன் தெளிவாக புரிந்துகொண்டான். அவனை உள்ளே வராதே என்பதற்குப் பதிலாக நான் எழுந்து வெளியில் வந்து அவனை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கினேன். என்னோடு உராய்ந்தபடியே கேட்டான்.
‘‘அதென்னது பொட்டிமேலே கலர் கலரா?’’
‘‘பேபி டாய்’’
‘‘பேபி மிட்டாயா?’’
‘‘ஆமா’’
‘‘என்ன செய்யறது?’’
‘‘நீ மிட்டாய் வித்தவன்தானே, அதை என்னா செய்யறது?’’
‘‘தின்றது’’
‘‘இதுவும் தின்றதுதான்.’’
‘‘பாத்தியா பாத்தியா, சொல்லுப்பான்னா?’’
‘‘அது பேபி மிட்டாயில்லே, பேபி டாய்’’
‘‘என்னாது?’’
‘‘ஜன்னல்ல நின்னே பாரு, அதை வாசிச்சிக் காட்டறேன்.’’
‘‘வாசிக்கிறதா? வாத்தியமா அது?’’
நான் அவனை ஜன்னலில் நின்று பார்க்கச் சொல்லிவிட்டு அதைத் தட்டித் தட்டி இழுத்து உராய்சி வெவ்வேறு இசையொலிகளை எழுப்பினேன். ஜலதரங்க இசையொலி மாதிரியே கேட்பதற்கு இருந்தது.
‘‘யாரது என்னோட பேபி டாயை எடுத்து வாசிக்கிறது?’’ என்று கத்திக்கொண்டே உள்ளேயிருந்து கூடத்துக்கு வேகமாய் வந்த மோகனாக்கா அந்த விளையாட்டு இசைக் கருவியைப் பிடுங்கிக் கொண்டாள்.
‘‘தொட்டே, பிச்சிப்புடுவேன்’’, என்று எச்சரிக்கை செய்து விட்டு அதை வேறெங்கோ வைக்கப் போய்விட்டாள். நான் வெளியில் வந்தபோது ராதா தெருவில் நின்றிருந்தான்.
‘‘அந்த பேபி மிட்டாய இரவல் தர்றியாப்பா? வீட்டுக்குக் கொண்டுபோய் ஒரே ஒரு நாள் வாசிட்டு தந்திடறேன்’’ என்று கெஞ்சினான்.
‘‘அது மோகனாக்காது. அவ ராட்சசி’’, என்றேன்.
‘‘எங்கே வாங்கினது, என்னா விலை?’’
‘‘வாங்கல்ல, அது மோகனாக்கு அரூர் ஸ்கூல்ல மியூசிகல் சேர் போட்டியில் முதல் பரிசா கிடைச்சது’’
‘‘அடெ, தெரியாம எடுத்து எங்கிட்ட குடுத்திடு. ஒரே ஒரு நாள் வச்சிருந்து திருப்பிக் குடுத்திடறேன்’’
‘‘முடியாதுன்னா முடியாது.’’
‘‘சினிமா காசு ரெண்டு ரூபா தரணும் நீ?ஞாபகமிருக்கா?’’
நான் பதில் சொல்லவில்லை. அப்பா எனக்கும் ஆங்கில வாசகம் வாங்கித் தந்துவிட்டதால் எனக்கு யாருடைய தயவும் வேண்டியிருக்கவில்லை. அப்பா பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களே இருந்ததால் இரண்டு மாத கால லீவு நாட்கள் இருப்பிலிருந்ததை அவர் எடுத்தாக வேண்டியிருந்தது. ஒரு வாரம் இருவாரமென்று விடுப்பில் கழிக்கத் தொடங்கினார். எங்கும் வெளியில் போகாமல் வீட்டிலேயே இருந்தார். எங்கள் ஆங்கில வாசகங்களை கதைப் புத்தகம் படிப்பதுபோல படித்து முடித்துவிட்டு, ‘‘ஒண்ணுமேயில்லே. நாங்கெல்லாம் படிக்கிறபோது இருந்தமாதிரி இங்கிலீஷ் இப்ப இல்லவேயில்லே’’, என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எங்கள் நடமாட்டம் போக்குவரத்தை உன்னிப்பாக கவனிப்பதும் கேள்வி கேட்பதுமாயிருந்தார்.
ராதாகிருஷ்ணன் ஒரு நாள் அப்பாவைப் பார்த்துவிட்டான். அதுவரை அவன் பார்த்ததில்லை. வெளியில் வந்தவுடன் மெதுவாகக் கேட்டான்.
‘‘அது யாரு வயசான ஒருத்தரு, ஒங்கப்பாதானே?’’ ஒரு கணம் மெளனமாய் நின்றுவிட்டு கூறினேன்.
‘‘எங்க தாத்தா’’
‘‘ஒனக்கு தாத்தா இருக்கறதா இதுவரை நீ சொல்லல்லியே?’’
‘‘எல்லாஞ் சொல்லணுமா ஒனக்கு. ஒனக்கேன் சொல்லணும். அப்பிடிதான் நீ எல்லாத்தையும் எனக்கு சொல்றியா?’’
‘‘பாத்தியா… பாத்தியா, கோவிச்சிக்கறியே. சும்மா கேட்டேம்பா. அப்பா எங்கே?’’
‘‘ஆபீசில இருக்காரு,’’
‘‘தாத்தா பேரென்னா?’’
‘‘எங்கப்பா பேரு தெரியுமா?’’
‘‘தெரியாது, சொன்னாதானே’’
‘‘நீ கேக்கல்லையே. முதல்ல அப்பா பேரைக் கேளு. அப்பறமா தாத்தாபேரு கேப்பியாம்?’’
‘‘ஒங்கப்பா எப்பிடியிருப்பாரு?’’
‘‘எங்கப்பா அவங்க அப்பாமாதிரியே இருப்பாரு’’
‘‘தாத்தா யாரு போல?’’
‘‘எங்கப்பா போல’’
‘‘அதாவது…’’
‘‘எங்க அப்பா தாத்தா மாதிரி எங்கப்பா’’
‘‘ஒங்க அம்மாவுக்கும் அப்பா உண்டுதானே?’’
‘‘அது அம்மா தாத்தா. போய் சேந்துட்டாரு’’
இவன் நம் அப்பாவை ஏன் குறிவைக்கிறான். ஒரு வேளை தனக்கு நான் தர வேண்டியதாக கணக்குக் காட்டும் இரண்டு ரூபாய்க் கடனை அப்பாவிடம் தெரிவித்து அவரிடமிருந்து வாங்கிவிடலாமென்ற எண்ணமோ என்று எனக்குள் சந்தேகம் ஓடினபடியிருக்கவும்தான் என் அப்பாவை மறைத்து தாத்தா என்றேன்.
அதே சமயம் ராதாகிருஷ்ணனுக்கும் ஓர் என்னை ஓட்டம்- ‘‘நான் என் கணக்குக்கு இவன் தரவேண்டிய பணத்தை இவன் அப்பாவிடமிருந்து வாங்கி விடலாமென்று நினைக்கும்போது இவன் அப்பாவைக் காட்டாமல் தாத்தாவைக் காட்டுகிறான்’’ என யோசித்தவாறு இருந்தான்.
மேலும் அப்பாவிடம் சொல்லிவிடுவதாய் சொன்னால் இவன் பயந்து எப்படியாவது கடனைத் திருப்பித் தந்துவிட முயற்சி செய்வான் என்றும் ராதா யோசித்தான்.
அப்பாவுக்கு லீவு முடிந்தது. நாளை முதல் ஒரே ஒரு மாதந்தான் அவர் அலுவலகத்துக்குப் போவார். பிறகு அவர் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் கச்சேரிக்குப் போய்விட்டு வரும் இந்த கடைசி மாதம் நத்தை வேகத்தில் நகருகிறது. அம்மாவும் வசந்தா அக்காவும் அப்பாவைப்போலவே மெளனமாய் இனந்தெரியாத பயம் சூழ்ந்த யோசனையிலேயே ஒவ்வொரு வினாடியையும் கழிப்பதாய்ப் படுகிறது.
அட்டத்திலிருக்கும் பொருள்கள் எதையாவது காட்டி அது எனக்கு வேண்டும் என்று கேட்கும்போதெல்லாம், இரு, நான் வந்து எடுத்துத் தர்றேன் என்பாள் அம்மா. ஆனால் இப்போது இந்த இரண்டு மாதங்களில் அப்படியில்லை. நீயே போயி எடுத்துக்கோ என்கிறாள் அம்மா.
ராமு ஊர் சுத்துவது அதிகமாகிவிட்டது. அவனும் அந்த புருஷோத்தனும் பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி மட்டம் போட்டுவிட்டு மலைக்கோட்டைக்கு ஏறிப் போய்விடுகிறார்கள்.
‘‘ஏண்டா உங்க அண்ணன் ஸ்கூலுக்கு வர்லே?’’ என்று ஒவ்வொரு முறை ராமு மட்டம் போடும்போதும் வகுப்பாசிரியர் மாதவராவ் என்னிடம் கேட்பார். நான் அவனுக்காக பொய் எதையாவது சொல்லுவேன்.
ஒரு நாள் ராமுவிடம் மாதவராவ் கண்டிப்பான முறையில் ‘‘ஒங்கப்பாவை என்னை வந்து பாக்கச் சொல்லு’’ என்று சொல்லியனுப்பினார்.
அம்மாவும் வசந்தா அக்காவும் எதோ ஒருவித கலவரம் தோய்ந்த தோற்றத்தில் இருப்பது விளங்கவில்லை என்றாலும் புரியாத சஞ்சலமொன்று என்னுள்ளும் பரவியிருந்தது. என்னாச்சு, ஏன் இப்பிடியிருக்கே என்று ராதாகிருஷ்ணன்கூட என்னைக் கேட்டுவிட்டான்.
அப்பாவுக்கு கச்சேரி வாழ்க்கையில் அன்று கடைசி நாள். காலையில் அப்பா பல்துலக்கிக் கொண்டிருந்தார். அவர் தனக்கு மட்டும் பயோரியா பல்பொடியை வாங்கிவைத்திருப்பார். எங்களுக்கெல்லாம் நஞ்சன்கூடு பல்பொடிதான். அன்று அப்பா பயோரியா பல்பொடியை அழுத்தித் தேய்க்கையில் அப்பாவின் இரண்டு நாட்களாய் ஆடிக் கொண்டிருந்த கீழ்வரிசை பல் ஒன்று அவரது வலது கை ஆள்காட்டி விரலோடு வந்துவிட்டது. அப்பா வெளியில் வந்தவர் எங்களைப் பார்த்து ஈயென்று வாயை இளித்துக்காட்டினார். அன்று அவருக்கு அலுவலகப் பணியின் இறுதிநாள்- முதல் பல் உதிர்ந்து வந்துவிட்டது.
‘‘அப்பா, தாத்தா ஆயிட்டே,’’ என்றாள் மோகனா.
‘‘அப்பா தாத்தா,’’ என்றேன் நான். அவர் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றதையொட்டி கச்சேரியில் பிரிவு உபச்சாரம் நடத்தி, மாலை, பழங்கள், குடை, கைத்தடியெல்லாம் அளித்து அனுப்பி வைத்தனர். அன்றிரவு அம்மா அழுதாள்.
காலையில் என்னையழைத்துக் கொண்டு அப்பா நடந்துபோகையில் ராதாகிருஷ்ணன் எதிரில் சைக்கிளில் வந்தவன் ஒரு கணம் காலூன்றி நின்று, ‘‘அப்பா தாத்தாவா?’’ என்று கேட்டான்.
அப்பா சிரித்தார்.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
